Thursday, May 2, 2019

சங்கத்தமிழில் என் கவிதை முயற்சி நெய்தல் திணையில்

இது நெய்தல் திணையில் நான் பாடிய சங்கத் தமிழ்க் கவிதை. 

நெய்தல் அளி நெஞ்சம் 

கடலலைச் சேர்ப்ப கழிந்துபடு பாணாள் 
வளையுதிர்ப் பசலை பொங்கு நுரை பூப்ப 
அளைஇ ஆர்வமொடு கானலங் குருகும் 
தலைப்படு பிள்ளைச் செத்தென தனாஅது 
மீன்மறப் புண்ணும் மென்னடை அசைஇ 
கானன் மாலைக் காமர் நெஞ்சம் 
துயர்படத் தோன்றும் தொல்லிருள் ஒல்லென 
பயிற்றினிர் பான்மைப் பளிங்குடை நுண்கண் 
குயிற்றிய சில்கதிர்ப் படிமைய காட்டி 
நிலவு குவித்தன்ன நீனிற நெடுங்கடல் 
புலவு நாறும் புன்னையம் வெண்மணல் 
கலவி நீத்தன்ன கன்னியின் பசந்து 
நாவாய் மையிடைப் பிரிந்தநம் 
மேவா துறைவன் பாற்படு நெஞ்சே. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 

பாட்டின் உரை -- 

இந்தப் பாட்டின் திணை நெய்தல். நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும். அதாவது பாட்டின் Topos. உரிப்பொருள் -- இரங்கலும், இரங்கல் நிமித்தமும். அது என்ன உரிப்பொருள்? That is the Mood of the poem.

கருப்பொருள் -- ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பான அம்சங்கள் உண்டு. மரம், நீர், பறவை, விலங்கு, தொழில், மனிதர், தெய்வம் என்று இப்படி இப்படி.

இவற்றையெல்லாம் கல்யாணச் சாமான்கள் ஜாபிதா மாதிரி கையில் வைத்துக்கொண்டு எல்லாம் சரியாக வந்து சேர்ந்ததா என்று கணக்கு பண்ண வேண்டிய தேவையில்லை. அந்தந்தப் பாடலில் கவிஞனின் மனோ சஞ்சாரப்படி வந்தது வரலாம். ஆனால் கடற்கரை என்று சொல்லிவிட்டு மலை, சிகரம், வயல்வெளி என்று வந்தால் அப்பொழுது திணை மயக்கம். ஒரு திணையின் விஷயம் வேறு ஒரு திணையில் வந்து மயங்குகிறது. இந்தக் கருப்பொருள் என்பது என்ன? அதாவது உலகப் பொருட்களின் சூழல். கவிஞன் தான் கூற நினைக்கும் பொருள் மிகுதியை நேரடியாகக் கூறாமல் இந்தக் கருப்பொருள்கள் தலையில் கட்டிவைத்து விடலாம். அதாவது Karupporul are the resonators of the poet's intentions.

இந்தப் பாடலுக்கு வருவோம். திணை -- நெய்தல். துறை -- பிரிந்த தலைவனுக்கு இரங்கித் தன் நெஞ்சைப் பற்றித் தோழர்க்குரைத்தது. இங்கு நெய்தல் 1,2,3, என்று வரிசையாகப் பளிங்குடை நுண்கண் குயிற்றிய சில்கதிர்ப் பான்மைப் படிமைய காட்டிப் பயிற்றினிர் என்று Photo lens sophistication மூலமாகப் பல படங்களைக் காட்டிய கண்ணன் போல்வாரைப் பயிற்றினிர் என்று விளித்தது. காமிரா என்ன செய்கிறது? பளிங்குடை நுண்கண். Fine eyes of the lenses அல்லவா! 
இந்த நுண்கண் கதிர்களைக் குவித்துக் குயிற்றிய படிமைய தானே இந்த அரும்படங்கள்! எனவே பாட்டில் விளி நடுவில் இருக்கிறது. இப்பொழுது பொருளுக்கு ஏற்ப வரிகளை அடுக்கி வைத்துக் கொள்வோம்.

"பயிற்றினிர் பான்மைப் பளிங்குடை நுண்கண் 
குயிற்றிய சில்கதிர்ப் படிமைய காட்டி "

அதாவது -- பளிங்குடை நுண்கண் குயிற்றிய சில்கதிர்ப் பான்மை படிமைய காட்டிப் பயிற்றினிர்!

”நிலவு குவித்தன்ன நீனிற நெடுங்கடல் 
புலவு நாறும் புன்னையம் வெண்மணல் 
கலவி நீத்தன்ன கன்னியின் பசந்து 
நாவாய் மையிடைப் பிரிந்தநம் 
மேவா துறைவன் பாற்படு நெஞ்சே." 

நீல நிற நெடுங்கடலின் கரையில் இருக்கும் வெண்மணல் என்னென்னவெல்லாம் கதை சொல்லும்! நம் துறைவன் இருந்த பொழுது நிலவு குவித்தது போல் இருந்த மணல், இப்பொழுது புலவு நாறும் தோற்றத்ததாய் இருக்கிறது.

l

உள்ளம் உரை உடல் என அனைத்தும் தம்முள் முயங்க ஒன்றியிருந்த காதலர் பிரியப் பசந்த களவில் கன்னியின் பிரிவேக்கம் போல் வெண்மணலானது காணப்படுகிறது. பசலை பொன் பூக்கும் என்பார்கள். அது போல் நால் கழிந்துபட, இன்னும் முழுதும் தலைப்படாத இருள் தொலைவில் இருக்கவும், மாலைக்கு முன் நடவா நின்ற எற்பாட்டில் மணலில் பூசிய பொற்கதிர் பசலையின் பொன் போல் காட்சியளிக்கிறது. நாவாயில் பிரிந்த குற்றமற்ற நம் துறைவன், இப்பொழுதோ நா வாய்மையில் பிரிந்தவனாக அன்றோ நம்மை வருத்துகிறான். அவன் பிரிவுக்கு இரங்கும் நெஞ்சு, ---

" கடலலைச் சேர்ப்ப கழிந்துபடு பாணாள் 
வளையுதிர்ப் பசலை பொங்கு நுரை பூப்ப 
அளைஇ ஆர்வமொடு கானலங் குருகும் 
தலைப்படு பிள்ளைச் செத்தென தனாஅது 
மீன்மறப் புண்ணும் மென்னடை அசைஇ 
கானன் மாலைக் காமர் நெஞ்சம் " 

கடலின் அலை கரையில் மோதி மோதி கரையை அழிப்பது போன்றும், அலையானது பொங்கி வடிந்து, பொங்கி வடிந்து ஓயாமல் குமுறுவது போன்றும் இன்றைய நாள் பாழாகக் கழிந்து கொண்டிருக்கிறது. ஊறும் பசலையோ கை வளையை உதிர்த்துவிட்டது. அதோ அங்கு கடலில் போங்கும் நுரை போல் இந்தப் பசலைதான் மிகுகிறது. 

வழக்கமாக கானலிலும், கரையிலும் இரையைத் தேடித் தேடி அளையும் அழகிய குருகானது, தலைப்பிள்ளைக் கருவுற்றதைப் போன்று அலுங்காமல், வழக்கமாகத் தான் விரும்பும் மீனையும் மறந்து மென்னடையில் நகர்கின்றது. அதுபோல் துறைவனைப் பற்றிய ஏக்கமே கருக்கொண்ட நெஞ்சம் உள்ளும் போகாது வெளியிலும் போகாது தயங்கித் தயங்கித் தொய்ந்து கிடக்கிறது இந்தக் கானல் என்னும் கடற்கரை சோலையில். இந்த நெஞ்சம்தான் எவ்வளவு அழகாக இருந்தது ஒருகாலத்தில். கணத்திற்குக் கணம் இதன் ஒயிலையும், எழிலையும் கண்டு நானே எவ்வளவு வியந்திருக்கிறேன்! ஆனால் இன்று அந்த 'தலைப்படு பிள்ளைச் செத்தென தனாஅது மீன் மறப்புண்ணும் மென்னடை அசைஇ' என்பது போல் அல்லவா இருக்கிறது. 

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்களே அது போல தொலைவில் நிற்கும் இருள் என்னைக் குறி வைத்துவிட்டது. என் காமர் நெஞ்சம் துயர்படத் தொல்லிருள் ஒல்லெனத் தோன்றும். என்ன விரைவு! என் நெஞ்சத்தைத் துயர் படச் செய்வதில் இந்த இருளுக்கு என்ன இவ்வளவு ஆத்திரம்! தான் வந்து சேர்வதற்குள் ஒரு வேளை துறைவன் தூரக் கலத்தில் வந்து, அவன் வருவதும் தெரிந்துவிட்டால், அதோ நிற்கிறாளே அந்தக் கானன் மாலைக் காமர் நெஞ்சம், நா வாய்மையில் பிரிந்த துறைவன்பாற் படு நெஞ்சம், அவன் வருகிறான், அவன் இதோ வந்துவிடுவான் என்று ஆற்றியிருக்கக் கானன் மாலைக் காமர் நெஞ்சத்திற்குச் சிறிதேனும் அவகாசம் தந்துவிடக்கூடாது என்று எவ்வளவு விரைவாக வருகிறது! 

ஸ்வாபதேச வ்யாக்யானம் 

நெய்தல் 1, நெய்தல் 2, நெய்தல்3 என்று இப்படி 9 படங்களை வரிசையாகப் பார்த்தபொழுது ஓர் எண்ணம். நெய்தலுக்கு ஒரு சங்கப் பாடல் எழுத வேண்டும் என்று. நினைத்துப் பாடலை எழுதி முடிக்க ஏறத்தாழ 10 நிமிடங்கள். ஆனால் அதற்கு உரை என்று எழுதும் போது எத்தனை நீள்கிறது! இந்த எண்ணங்கள் எல்லாம் அந்தக் கணத்தில் mute understanding ஆக இருந்தவைதாம். ஆனால் உரைநடையில் விநியோகிக்கும் போது நீள்கிறது. காழித் தாண்டவராய ஸ்வாமிகள் திருவாசகத்தைத் திருவருள் விநியோகம் என்றுதான் குறிப்பிடுகிறார். எனவே ஒரு கணத்தின் நிகழ்வு விநியோகிக்க விரியும் என்றால், விரிந்தவை அந்த ஒரு கணத்துள் இல்லையென்று யாங்ஙனே மொழிகம்? உரையைத் தொடர்வோம்.

நெய்தலுக்கு உரிய நிலம் கடற்கரை; நெய்தல் நிலத்து மரம் புன்னை; நெய்தல் நிலத்துச் சோலை கானல்; முதற்பொருளில் ஒன்றான காலம் பிற்பகலுக்கு அடுத்ததும், மாலைக்கு முற்பட்டதுமான பொழுதாகிய எற்பாடு. தலைமக்கள் பெயர் சேர்ப்பன், துறைவன் என்று வரும். இங்கு பாடல் என்ன சொல்கிறது? பச்சைத் தமிழுக்கு வருவோம்.

"படங்களையெல்லாம் சூப்பர் கேமிராவில பிடிச்சுக் காட்ற தோழர்களே! 
நான் எப்படி இவற்றையெல்லாம் பார்த்துப் பாராட்டுவேன். ஏனெனில் நெஞ்சு என்வசம் இல்லையே! நாவாயில் பிரிந்தான் என் தலைவன். அவன் குற்றம் என்பதே இல்லாதவன். அவனை நாவாய்மை என்னும் புகழ் பெற்ற வேதம் என்ன சொல்கிறது? நிர்மலன், அமலன், விமலன். தான் குற்றம் அற்றவன் என்பது அப்புறம் இருக்கட்டும். தன்னை நினைந்தாரின் குற்றங்கள் அனைத்தும் இல்லையாக்கும் தூயன். அவனைப் பிரிந்து இந்த உயிர் அவதிப்படுவதாய் நாவாய் மொழிதரும் வேதம் உரைக்கிறதே. அந்த நாவாயில் பிரிந்த நம் துறைவன்பால் நெஞ்சு படுகாடு கிடக்கிறது. அவன் இருந்த வரையில் இந்தக் கரைமணல் மண்ணாகவா இருந்தது? நிலவு குவித்தன்ன இருந்தது. மனமோகன சந்த்ரன் விளையாடுவதற்கு ஏற்ற மைதானம் நிலவுக் குவியல்தானே என்று சொல்லும்படி இருந்தது.

பரம்பொருளுடன் ஒன்றி நிற்கும் போது இந்த உயிர்க்கு உலகமே கிரீடா ஸ்தலம். கல் மண் எல்லாம் சுத்த சைதன்ய விக்ரகம். அவனைப் பிரிந்தாலோ இதே உலகம் வெறும் செத்த உடலம் நாறும் வெள்ளை மணல் பரப்பு. யார் கண்டார்? அந்த மணலும் அவனைப் பிரிந்துதான் அப்படி ஆனதோ? ஒவ்வொரு நாளும் என்னை என்ன கிண்டல் செய்தபடிப் போகிறது! 

காலையில் இன்று வருவார் என்று ஓர் ஊக்கம் கொடுக்கிறது. நடுப்பகல் வந்துகொண்டிருப்பார் என்று ஓர் உற்சாகம். பிறகு எற்பாட்டில் என்ன ஏளனம்! ஊக்கம், உற்சாகம், ஏளனம் என்று அலை பொங்கி பொங்கி வடிவது போல் இந்த நாளும் அல்லவா அபிநயிக்கிறது. என் தாங்கும் திறனாகிய கரையை இந்த நாள் ஒவ்வொன்றும் அந்த அலைகள் மோதி மோதிக் கரையை அழிப்பதுபோல் அழிக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு தருணமும் ஒரு நாளுக்குச் சமம். ஒவ்வொரு தருணமும் இதோ பரம்பொருள் வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துப் பின் சென்று விடுகிறது. Anytime He may come; everytime the Realisation is post-poned. இதுதான் வாடிக்கை. வாழ்வே நெய்தலாகத்தான் காட்சி அளிக்கிறது. சம்சார சாகரத்தின் கரையில் நம்பிக்கை என்னும் கானல் சோலையில் காத்திருக்கும் தலைவியாகத்தான் நம் நிலைமை. அவனாவது சொன்னவண்ணம் செய்த பெருமாளாக வந்துவிடத்தான் கூடாதா? இல்லையேல் இந்த நெஞ்சம்தான் அவனைச் சுற்றிச் சுற்றிச் செல்வதை விடுத்து இந்தக் கடல் கரையில் கிடக்கும், சிப்பி, கிளிஞ்சல், சங்கு வளை இதையெல்லாம் தேடித்தேடிப் போட்டு மகிழக் கூடாதா? அவன் தான் கடலில் பிரிந்தான் என்றால் இந்த நெஞ்சம் தானே ஒரு கடலாகி அன்றோ இரைகிறது.

சரி அவன் இதோ கடைசி நேரத்தில் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையின் பின்மாலைப் பொழுதின் ஒளியில் கொஞ்சம் நிம்மதி அடையலாம் என்றால், இந்தத் தொல்லிருளுக்குப் பொறுக்கவில்லையே! உயிருக்குப் போராடும் நாவில் கொண்டு சாய்த்த நீர்க்கரகத்தைத் தட்டிவிடுவாரைப் போலன்றோ இஃது Last glimmer of hope என்பதையும் இல்லையாக்க தான் முந்துறுகிறது.

இது என்ன ? இதற்கு ஸ்வாபதேச வ்யாக்கியானம் என்று கூறலாமா. 

*** 

No comments:

Post a Comment