Thursday, May 2, 2019

சதாபிஷேகம்

நூறாண்டு முடிந்த வைபவத்தைக் கொண்டாடுவதை இந்த சதாபிஷேகம் என்பது குறிக்கிறது. ஆண்டுகள் நூறு எண்ணி, அதுவரை இல்லை என்றாலும் 80 வயதையே 100 ஆனதாகக் கொண்டும் இந்த வைபவம் நடக்கிறது. ஆனால் ஒருவருக்கு, இந்த மாதிரி உலக வாழ்க்கை ஆண்டுக்கணக்கில் எண்ணிக் கொண்டாடுவது உசிதமாகப் படவில்லை. என்ன செய்தார்? நூறு முறை திருவாய்மொழிக்குப் பொருள் சொன்னார். அதன் நிறைவை சதாபிஷேகமாகக் கொண்டாடிக் கொண்டார். ஆம் ஆழ்வார் வாக்கும் என்ன சொல்கிறது? 

அன்றுநான் பிறந்திலேன். 
பிறந்தபின் மறந்திலேன். 

உலகில் பிறந்த நாள் நான் பிறந்த நாளா? இல்லை இல்லை. என் ஆத்மாவின் இயல்பு மறந்த நாள் அன்றோ அது! என்று என் ஆத்ம ஸ்வரூபம் எனக்கு உணர்வில் மீண்டதோ அன்றுதான் நான் பிறந்ததாக அர்த்தம். அவன் அருளால் அதற்குப்பின் மறக்கவில்லை. ஆழ்வாரின் இந்த மனோபாவத்தைக் கொண்டு சதாபிஷேகம் செய்த அந்த ஆசாரியர் நஞ்சீயர் என்பர். 

மேல்கோட் பிராந்தியத்தில் ஆறு தர்சனங்களுக்கும் ஆறு ஆசனங்கள் இட்டு அதன் மேல் அமரும் விருது படைத்திருந்த மஹாவித்வான் மாதவ வேதாந்தி என்று பூர்வாச்ரமத்தில் திகழ்ந்த நஞ்சீயர். பராசர பட்டர் தடுத்தாட்கொண்டபின் துறவறம் பூண்டு ஸ்ரீரங்க வாசமே கதியாய், பராசர பட்டருக்குத் தொண்டு புரிதலே தம் வாழ்வின் நெறியாய் வாழ்ந்தார். 

சதாபிஷேகம் கோவிந்த நரஸிம்ஹாச்சாரியார் என்று ஒரு மகத்தான வித்வான். வியாகரணம், நியாயம், வேதாந்தம் ஆகியவற்றில் கரைகண்டவர். 
கரைகண்டவர் என்றால் ஏதோ வார்த்தைக்காக அன்று. கசடறக் கற்று என்று சொல்வார்கள். எந்த வித ஐயமும் பின்னொரு காலத்திலும் தோன்றுவதற்கு இடமில்லாதபடிக் கற்பது. அப்படிக் கற்றவர் சதாபிஷேகம் ஸ்வாமி. ஆனால் எப்பொழுதும் கற்றுக்கொள்ளும் மன நிலையை விடாமல் கைக்கொண்டிருந்தார். அதுதான் ஆச்சரியம். பொறுமையாக, அமைதியாக எடுத்து விளக்குவார். அலகு அலகாக அலசி அவர் எடுத்து வைக்கும் அழகே தனி. ஆனால் வெள்ளம் போல் கொட்டுகின்ற வேளுக்குடி வரதாச்சாரியார் ஸ்வாமியின் வாக் வேகத்தில் பழகியவர்கள் இவருடைய பாணியில் பொருந்திக் கேட்க முடியாமல் சிரமப் படுவார்கள். ஆனால் கற்பவர்கள், மாணவர்கள் ஆகியோருக்குப் பெரும் நிதி சதாபிஷேகம் ஸ்வாமி. 

ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் அஷ்டாத்யாயி, வ்ருத்தி, பாஷ்யம் என்று பார்த்தால் மட்டும் அனைத்து உள் மர்மங்களும் புரிந்துவிடாது. இதைப் போன்ற ஆசிரியர்கள் அந்த மர்மங்களை எடுத்துச் சொல்லி விளக்கும் போதுதான் ஏன் எதற்கு என்று புரியவரும். அவ்வாறு வியாகரணம், நியாயம் ஆகிய துறைகளில் உள் சூட்சுமங்கள் அனைத்தும் நன்கு வல்லவர்கள் நம் காலங்களில் மிகக் குறைவு. அப்படிக் குறைந்த பேர்களில் ஒருவராக இருந்தவர் சதாபிஷேகம் ஸ்வாமி. 

எனக்கு இவருடன் வினோதமான பரிச்சயம். திருவல்லிக்கேணி கீதாசார்யன் டாக்டர் எம் ஏ வேங்கடகிருஷ்ணன் வீட்டில்தான் முதலில் நேரடிப் பழக்கம். அவர் வந்திருந்தார். அவருக்கு முன்னால் போய் நானும் உட்கார்ந்தேன். காரப்பங்காடு ஸ்வாமியின் குமாரர் திரு வரதராஜனும் இருந்தார். என் தோற்றம் ஸ்ரீவைஷ்ணவ அடையாளங்கள் எதுவுமில்லாத அலுவலகத் தோற்றம். கொஞ்சம் 'யாரடா இவன்?' என்று நினைத்திருப்பார் போல. பேசும் பொழுது துறைவேறு இடுவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் வார்த்தையைப் பற்றி வந்தது. யூயம் யூயம் வயம் வயம் என்று ஆரம்பிக்கும் ச்லோகமொன்று. நினைவில் சட்டென்று வராமல் கொஞ்சம் சிரமப்பட்டார். இதுதானோ என்று எடுத்துக் கொடுத்தேன். ஆங் என்று முழுதும் சொல்லிவிட்டு ஆச்சர்யத்துடன் என்பக்கம் திரும்பினார். 

'என்னப்பா? நீ பார்க்க ஒன்றும் தெரியவில்லையே. ஆனால் இதையெல்லாம் எப்படிச் சொல்லுகிறாய்? யாரிடம் காலக்ஷேபம்? ' என்று கேட்டார். 

ஓர் ஆர்வத்தில் நானாக நுழைந்தது என்று சொல்லிவைத்தேன். அன்றுமுதல் பழக்கம் அதிகமாகியது. பின்னர் ஸ்ரீபாஷ்யத்தில் ஜீவ அநுப்ரவேசம் சம்பந்தமாக ஒரு சர்ச்சை. கிட்டத்தட்ட ஒரு வாரம் அவரோடு பல நூல்களைக் கொண்டு போய் விவாதம், சந்தேகம் தெளிதல், மாலை 6 தொடங்கி இரவு 11 மணி வரையில். அது ஒரு காலம். அப்பொழுது ஆழ்வார் திருநகரி கைங்கர்யம் எடுத்துச் செய்துகொண்டிருந்தார். 

பின்னர் ஸ்ரீரங்கத்தில் நோவு சாத்தியிருந்ததாகக் கேள்விப்பட்டு, ஆபீஸுக்கு லீவு சொல்லிவிட்டுப் போய் பார்த்தேன். அதுவரையில் பேசாமல் கொள்ளாமல் ஆஸ்பத்திரியில் இருந்தவர் என்னைப் பார்த்ததும், 'எங்கடா வந்த?' என்றார். 

'கேள்விப்பட்டேன். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.' 

'ஆபீஸ் வேலையா வந்தியா?' 

'இல்லை. ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு வந்தேன்' 

உடனே எழுந்து உட்கார்ந்துவிட்டார். தழுதழுத்தபடி, இந்த ஆகாத காலத்தில் எனக்காக என்று லீவு போட்டுப் பார்க்க வேண்டுமென்று வந்தாயே என்று சொல்லிச் சொல்லி நெகிழ்ந்தார். உபயலிங்காதிகரணம் பற்றி ஸ்ரீபிரம்ம ஸூத்திரத்தில் ஒரு சந்தேகம் கேட்டேன். 'இவரும் என்ன சொல்லிவிடப் போகிறார்?' என்று சின்ன நினைவு. ஆனால் சுமார் இரண்டு மணி நேரம் அவர் அன்று கொடுத்த விளக்கம் வேறு எங்கும் நான் காணாதது. 

மாமியோ வாயடைத்துப் போனபடி இருந்தார். 'என்ன மாமி?' என்றேன். 

'இல்லை. நேற்று எல்லாம் பேச்சு மூச்சு இல்லை. மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இன்று உங்களைப் பார்த்ததும் இப்படி ஸ்வஸ்தமாகப் பேச்சும் செய்கையும்...என்னது இது?' 

ஆம். அந்தக் காலத்து விதவான்களுக்கு உயிர்நிலையே அவர்கள் தோய்ந்த கல்வியில் இருந்தது. இது தழைத்தால் அது தழைக்கும் என்றபடி. அவர்கள் எல்லாம் போன பின்பு ஆட்களே இல்லாமல் வெறிச்சொடிப் போய்விட்டது. ஏதாவது நுட்பங்கள் கேட்க என்றால் என்ன செய்வது? இவ்வளவு வறட்சி கூடாது. என்ன செய்வது? குளிர்ந்த தூய ஜலத்தின் அருமை கோடை காயும் போதுதான் உறைக்கிறது. 

வாசுதேவ தருச்சாயா தான் கொஞ்சம் மனசு வைக்கவேண்டும். 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

No comments:

Post a Comment