Friday, May 3, 2019

வைஷ்ணவ குணாதிசயம்

வைணவ ஆசாரியர்களின் பெருமை மிகுந்த வரலாற்றில் ஸ்ரீபராசர பட்டருக்கு என்று சிறப்பான இடம் உண்டு. அவருடைய மேதைமை மட்டும் அதற்குக் காரணம் இல்லை. கூரத்தாழ்வானின் மகனார் என்பதுதான் தனக்குச் சிறப்பு என்று அவரே ஒரு சுலோகத்தில் கூறுகிறார் என்றாலும் அவருடைய ரசிகத்தன்மை மிகுந்த நெகிழ்ச்சியான விதந்த அருளுணர்வும், அதைக் கண்டாரும் கேட்டாரும் பிணிப்புண்ணும் படியான வாக்கின் விலாசமும் முக்கிய காரணம் ஆகும். அநந்தாழ்வான் சொல்லுவராம்: ‘எல்லாரும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அழகியமணவாளன் என்று அழைக்கலாம். ஆனால் ஸ்ரீபராசர பட்டர் அந்த நாமத்தால் விளித்துக் கூப்பிடும் போது அதில் தோன்றும் பாவ கனிவு வேறு யார் கூப்பிட்டாலும் ஏற்படுவது அரிது’ என்று சொல்வார் என்கிறது வார்த்தாமாலை. அநந்தாழ்வானின் பெருமையும் மிக்கது. வைணவம் மிகவும் கொடுத்து வைத்தது. நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் பரியந்தம் சுமார் 400 ஆண்டுகளாக மிகச் சிறந்த அருளாளர்களும் ஆன்ற பெரியோர்களும் நிறைந்து பொலிந்து திகழ்கிறார்கள்.

ஸ்ரீபராசர பட்டரிடம் ஒருவர் அத்யந்த சீடராகப் பயின்று வந்தார். ஒரு நாள் வைணவர் என்றால் யார்? அதாவது வைணவ இலக்கணம் என்ன? என்று ஸ்ரீபராசர பட்டரைக் கேட்டிருக்கிறார். சரி. கேட்டார் என்றால் பேசாமல் சாத்திரங்களைக் காட்டி இதோ இலக்கணம் கூறியிருக்கிறது பார் என்று சொல்லக் கூடாதோ? இல்லை அவ்வாறு சொல்லவில்லை. உடனே அந்தச் சீடரைத் திருமலைக்குச் சென்று அநந்தாழ்வானிடம் கேட்டு வருமாறு அனுப்பிவிட்டார். பாருங்கள். ஒரு கேள்விக்காகப் பதிலைத் தேடித் திருமலைப் பயணம். இந்தக் காலம் போல் பேருந்தா இருந்தது? இருந்தாலும் சீடர் ஆர்வமுடன் கிளம்புகிறார். அதாவது வைணவம் என்பது சடங்காக ஆகிவிடாமல் ஆன்மிகத் தேட்டமாக இருந்த காலம் அது என்பதைத்தான் இது காட்டுகிறது.

அங்கு போனால் பெரும் அடியார் குழாத்தின் விருந்து பரிமாறலே நடந்து கொண்டிருக்கிறது. வந்தவரை எல்லாம் ஆதுரத்துடன் உபசரித்தவண்ணம் இருக்கிறார் அநந்தாழ்வான். நெடுநேரம் ஆயிற்று. அப்புறம்தான் தமக்காக ஒருவர் காத்திருக்கிறார் என்று கவனிக்க முடிந்திருக்கிறது அவருக்கு. ‘ஐயோ! நீங்கள் நெடும் போது உண்ணாமல் எனக்காகக் காத்திருக்கிறீர்களே! அமருங்கள் என்று வந்த அடியாருக்கு அமுது செய்வித்து மிஞ்சியதைத் தம்பதிகளாய்த் தாமும் உண்டு வந்து விசாரிக்கிறார். ‘எங்கு வந்தீர்கள்? யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?’

சீடர் சொல்கிறார்: ஸ்ரீபராசர பட்டர் அனுப்பினார் தங்களிடம். வைணவன் என்றால் எப்படி இருப்பார்? என்று வைணவ இலக்கணம் அறிந்துவரத் தங்களிடம் அனுப்பியிருக்கிறார். அதுதான் வந்தேன். வந்த இடத்தில் விசேஷம் என்பதால் பொறுத்திருந்து பின்னர் தங்களிடம் வினவக் காத்திருந்தேன்.’ என்றார்.

நெடும் விளக்கங்கள் வரப் போகின்றன என்று காத்திருந்த சீடருக்கு ஆர்வம் தாங்கவில்லை. ஆனால் அநந்தாழ்வானோ ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். ‘உம்மைப் போல் இருப்பான் என்று சொல்லும்.’ சீடரோ ஒன்றும் புரியாமல் பார்க்கிறார். அநந்தாழ்வான், ‘ஆமாம் ஐயா. வைணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழியைப் போல் இருப்பான்; உப்பைப் போல் இருப்பான்; உம்மைப் போல் இருப்பான். சொன்னதை அப்படியே ஸ்ரீபட்டரிடம் சொல்லிவிடும்.’ என்றார். அதற்கு மேல் விளக்கம் கேட்க வேண்டும் என்று ஆசை சீடருக்கு. ஆனால் அநந்தாழ்வான் கூறிய தொனியிலேயே விஷயம் முடிந்துவிட்டது என்பது போன்ற தொனி. சீடரும் மிகுந்த பக்குவி ஆகையாலே நிர்பந்தித்துக் கேட்கவும் தயக்கம். மேலும் அப்பொழுதுதான் நெடும் வேலை முடிந்து உணவு முடித்து ஓய்வு வேளை. சரி. ஸ்ரீபட்டரிடம் அப்படியே சொல்லிவிடுவோம் என்று கிளம்பி விட்டார்.

ஸ்ரீபராசர பட்டர் அதற்கு என்ன விளக்கம் கொடுத்தார் என்பதை விளக்கமாக யாரும் பதியவில்லை. குருபரம்பரை பிரபாவம் என்னும் நூலிலும், வார்த்தாமாலை என்னும் நூலிலும் இந்த விருத்தாந்தம் பேசப்படுகிறது. வார்த்தாமாலையை அருமையாகப் பதிப்பித்த ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம் உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்களும் இதற்கு விளக்கம் ஓரளவு எழுதியிருக்கிறார். ஆனால் அந்த விளக்கம் என் யோசனைக்குப் போதவில்லை. அவர்களையெல்லாம் விட நான் வல்லவனா என்பது பொருட்டு அன்று. ஆயினும் அனுப்பியவரின் ஆளுமை, பதில் சொன்னவரின் ஆளுமை, கேட்ட கேள்வி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது இதற்குப் பெரும் பொருள் இருப்பதாக எனக்குப் படுகிறது. அதை எழுதுகிறேன். ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் எழுதியவற்றைப் பயன் கொண்டே இதை எழுதுகிறேன். அவர் சொன்னதிலிருந்து மாறும் இடங்கள் எனது விளக்கம்.

கொக்கு என்பது நீர்நிலைகளில் மீனைப் பிடிக்கும் போது வருகின்ற ஏதாவது ஒரு மீனைப் பிடித்துக்கொண்டு விடாது. தனக்கு ஏற்ற உறுமீன் வருகின்ற அளவும் வாடி இருக்கும் என்பது உண்மையில் எப்படியோ இலக்கியங்களில் பயிலும் செய்தி. அதைப் போல் வைணவர் என்போர் சாத்திரங்களைப் பயின்று பெரியோரிடம் கேட்டு ஏதோ மனத்திற்குப் பிடித்த ஓர் அர்த்தத்தைக் கைகொண்டு திருப்தி கொள்பவர்கள் அல்லர். வைணவன் என்பவன் தன்னுடைய ஆன்மாவின் இயல்பு என்னும் சேஷத்வத்திற்கு (பகவானையே முற்றிலும் சார்ந்த தத்துவமாக இருத்தல்) பொருத்தமான அர்த்தங்கள் கிடைக்கின்ற வரையில் பொறுமையாக ஆராய்பவன். அத்தகைய அர்த்தம் கிட்டும் போது அதி விரைவில் அந்த அர்த்தத்தைத் தன் உள்ளத்தில் நன்கு இருத்திக் கொள்பவன். எனவே சாதாரண உவமையிட்டு இதைக் கூறினால் கொக்கு போல் இருப்பான் என்று கூறலாம்.

கோழி என்பது பொதுவாக முட்டையிட்டு அதை அடை காக்கும் தாயின் அக்கறைக்கான சித்திரமாகச் சொல்வதுண்டு. அது மட்டுமின்றி, குப்பைகளைக் கிளறி தனக்கு வேண்டிய குந்து மணிகளைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளும். மேலும் விடியல் நேரத்தை மற்ற உயிரினங்களுக்கு அறியும் வண்ணம் முன் கூட்டியே கூவித் தெரியப் படுத்துவதும் சேவல்தான் என்ற இலக்கிய வழக்கும் உண்டு. அது போல் வைணவன் தன்னுடைய உபதேசத்தால் சாதாரண மனிதர் ஒருவரை வைணவராகப் புதுப் பிறவி எடுக்க வைத்து, அவர் அந்த வைணவத்தில் நன்கு நிலைபெற வேண்டி, தானே தன்னுடைய தாயினும் ஆயின அன்பினால் கோழி அடைகாக்கும் செய்கை போல் சீடரின் ஆன்ம நலனை அனவரதமும் பேணுபவன். சாத்திர ஆய்வுகளின் மூலம் தான் நெடும் கஷ்டங்கள்,குழப்பங்கள் பட்டு, அதனால் உதய கால கதிரவன் போல் நிச்சயமாகிய ஸ்ரீமந் நாராயணனே உயிர்களுக்கு உற்ற இலட்சியமாகவும், அந்த இலட்சியத்தை உயிர்கள் அடைவதற்கு உரிய அடைவிக்கும் வழியாகவும் இருப்பவன், அவனுக்கு ஆட்படுதலே உயிர் பிறந்ததன் பயன் என்னும் நிச்சயமான ஆன்மிக ஞானமாகிய உதயத்தை மூடி மறைக்காமல் உயிர்கள் அனைத்துக்கும் தானே வலிய சென்றாவது தெரிவிப்பவன் வைணவன். (சேவல் உதயத்தை உணர்த்த கூவுவதைப் போல) (திருப்பாவை பாடிய ஆண்டாள் உதாரணம்)

உப்பு என்பது உணவுப் பொருட்களில் சிறப்பு உடையது. காரணம் உப்புதான் உணவைச் சுவையுடையதாக ஆக்குகிறது. ஆனால் அந்த உப்போ தான் தனிப்பட உணவாக ஆவது கிடையாது. அனைத்து உணவுகளிலும் தான் உள் கலந்து உறுசுவை ஆக்குகிறது. அதாவது உணவு என்பதற்குத் தன்னை அழிய மாறி பெருமையை விளைவிக்கிறது உப்பு. அது போலே வைணவன் என்பவன் தான் என்ற அஹங்காரம் அழிந்து ஆன்மாவிற்கு ஆன்மாவாய் இருக்கும் திருமாலுக்கே தன்னை முற்றிலும் சேஷத்துவம் பூண்டவனாக ஆக்கி, தன் சொல் செயல் எண்ணம் மூன்றாலும் திருமாலுக்கே பெருமை விளையும்படி வாழ்பவன். தனக்கு என்று தனிப்பட்ட பெருமையை விரும்பாதவன். தான் வாழ்கின்ற விதத்தால் அனைவரும் திருமாலின்பால் ஈர்க்கப்படும் வண்ணம் தன்னை முற்றிலும் இறைவன்பால் கரைத்துக் கொள்பவன், அது மட்டுமின்றி அடியார் என்பவர் திருமாலின் சிறப்பான முதிர்ந்த வடிவம் ஆகையாலே அடியார்களின் சேவையில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்பவனே வைணவன். இந்த விதத்தில் அவன் உப்பைப் போல் இருக்கிறான்.

இவ்வளவும் ஏன் இந்த குணாதிசயங்கள் எல்லாம் நிறையப் பெற்ற ஸ்ரீபராசர பட்டரைப் போல் இருப்பான் வைணவன் என்பதைக் குறிக்க ‘உம்மைப் போல் இருப்பான்’ என்று அநந்தாழ்வான் சொல்லிவிட்டதாகவும் பொருள் சொல்லலாம். அல்லது இந்த ஒரு கேள்விக்காக அவ்வளவு தொலைவு ஆர்வமுடன் வந்து, வந்த இடத்தில் நெடுநேரம் காக்க வேண்டி வந்தும் சிறிதும் முகம் மாறாமல் பொறுமையுடன் தன்னுடைய கேள்வி கேட்கும் நேரம் வரும் அளவும் காத்திருந்து ஆர்த்தியுடன் உட்பொருளைக் கேட்ட சீடராகிய உம்மைப் போல் இருப்பான் என்றும் சொல்லியதாகப் பொருள் கொள்ளலாம்.

*** 

No comments:

Post a Comment