Thursday, May 2, 2019

குருதேவர் வாக்கியம்

குருதேவர் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரைக் குறிக்கும். அவரது சீடர்கள், பக்தர்கள் கூப்பிட்டதால் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அவரைப் பற்றிய நூல்களில் இந்தப் பெயர் அமைந்து போய் விட்டது. ஆனால் அவரிடம் போய் யாராவது நீங்கள் குரு என்று சொன்னாலே அதை மறுத்துத் தமக்கு எதுவும் தெரியாது; எல்லாம் அன்னை காளியின் செயல்தான்; தாம் குரு இல்லை என்று சொல்லி விடுவார் அவர் வாழ்நாட்களில். எத்தனையோ பேர் அவருடைய உபதேச மொழிகளை அவர் வாழ்நாளிலேயே கூடத் தொகுத்தனர். ஆனால் அத்தனைத் தொகுப்புகளிலும் இல்லாத ஓர் ஏற்றம் ஒரு சின்ன நூலுக்கு ஏற்பட்டது. அதுதான் அவரது ஞானபுத்திரன் என்று கொண்டாடப்பட்ட சுவாமி பிரும்மானந்தர் என்பவர் தொகுத்தது. சுவாமி பிரம்மானந்தரின் இயற்பெயர் ராக்கால் என்பதாகும்.

ஏன் என்ன சிறப்பு ராக்கால் என்னும் பிரம்மானந்தர் தொகுத்ததில் மட்டும்? எல்லாம் பொன்மொழிகள் தொகுப்புதானே? என்றால், குருதேவரின் வார்த்தைகளை அவற்றின் சொல்லப்பட்ட விவரம் நழுவாமல் நன்கு பலநாள் தியானம் செய்து நினைவில் கொணர்ந்து தொகுத்தவை 'குருதேவர் வாக்கியம்' என்பதாகும். மற்ற தொகுப்புகளிலும், இவரது தொகுப்பிலும் உள்ள மொழிகளின் உட்கருத்து ஒன்றுதான் என்றாலும், தாம் ஸ்ரீராமகிருஷ்ணரோடு இடைவிடாமல் நீண்ட காலம் கூடவே இருந்தமையால் சொல்லப்பட்ட விதங்களைக் குறித்து மிகச்சரியான படிவம் என்பது பிரம்மானந்தரின் நினைவுகளுக்குச் சொல்ல முடியும். இதைப் பல வார்த்தைகளைப் படிக்கும் போது, கூடவே மற்றவர்களின் நினைவு கூறலோடு ஒப்பிடும் போது தெரிகிறது.

இன்றைய உலகம் எதையாவது பிடித்துக் கொண்டு மனிதருக்கு மனிதர் பிரிவினை உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்டு போவதைப் பார்க்கிறோம். அன்றைய நாட்களில் சொல்லப்பட்ட இந்த உபதேசங்கள் இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமான உபதேசங்களாக அமைந்து இருக்கின்றன.

”உன்னை நீ யார் என்று அறிந்து கொள். அவ்வாறு அறிந்து கொண்டால் கடவுள் யார் என்பது உனக்குப் புரியும். 'நான்' என்பது எது? என்னுடைய கையா?, காலா, தசையா, இரத்தமா அல்லது உடல் அங்கம் வெறு ஏதாவதா? நன்கு ஆழ்ந்து சிந்தித்துப் பார். நான் என்று சொல்லக் கூடிய பொருள் ஒன்று இல்லை என்பது நன்கு விளங்கும். வெங்காயத்தின் தோலை உரித்துக் கொண்டே போனால் மேலும் மேலும் தோல்தான் உரியும். அடிப்படையான பொருள் ஒன்றும் புலப்படாது. அது போல 'நான் என்பது எது?' என்று ஆராய்ந்தால், கடைசியாக நான் என்பதே இல்லாமல் போகும். எஞ்சி நிற்பது ஆன்மா. அதுவே சைதன்யம். 'நான்' என்னும் அகங்காரம் அழிந்துவிடும் போது கடவுள் தோன்றுகிறார்.”

*

ஆம். நாம் பொதுவாக 'நான்' என்பதைப் பிடித்துக் கொண்டுதான் கடவுள் யார் என்பதைப் பற்றி விசாரம் செய்கிறோம். ஆனால் 'நான்' என்பது ஒன்றும் இல்லை என்று நிதர்சனம் ஆன பிற்பாடுதான் கடவுள் என்னும் தத்துவமே புரியவருகிறது. அதுவரை அடிப்படையற்ற அடையாளங்களையே நான் நான் என்று கருதிக் கொள்ளும் போது, முதலில் கடவுள் என்பது என்ன என்று அறிவதற்கு முன்னால், அவ்வாறு அறிய விரும்பும் ஆள் யார் என்பதை முதலில் தெளிவாக்கிக் கொண்டால்தானே அடுத்த தத்துவம் புரியும். அதுவும் அந்தத் தத்துவமோ இந்தத் தெளிவு ஏற்பட்டாலொழிய தோன்றுவது கிடையாது. அப்படி என்றால் நான் உண்மையில் கடவுள் என்பதை அறிய விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? 'நான்' என்பது ஒன்று உண்டா? அல்லது அதன் உண்மை என்ன? என்பதை மிகக்கவனமாகச் சிந்தனை செய்தேன் என்றால் நான் சரியான வழியில் முயற்சி செய்கிறேன். அதை விடுத்து 'நான்' என்றால் இதுதான் இதுதான் என்று எதை எதையோ குத்துமதிப்பாக வைத்துக்கொண்டு, அந்த அடிப்படையில் கடவுள் யார் என்று நான் பார்க்கப் போனால் நிச்சயம் தெரியப் போவது கடவுள் கிடையாது அல்லவா?

‘நீர்நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை உன்னுமின்’ என்பது நம்மாழ்வாரின் உபதேசம். ஏன் பிறந்தது முதற்கொண்டே இந்த 'நான்' என்பது அற்றுப்போய் ஆத்மா என்பதுவே சுத்த சைதன்யமாக இருந்து விடக் கூடாதா? ஏன் இப்படி இதுதான் நான் அதுதான் நான் என்று தொட்டதையெல்லாம் தானாக ஒன்றிப்போய், பிறகு வாட்டர் வாஷ் செய்தாலும் கழுவிவிட முடியாமல் மலப்பிண்டமாக ஆகி நின்று..... ஏன் இந்த அவஸ்தை ! இத்தனைக்கும் ஆதியிலிருந்து தொடர்ந்து ஆத்மா மாறாமல் அப்படியே சுத்த சைதன்ய வஸ்துவாக இருந்துகொண்டே இருக்கிறது.

*

சுவாமி பிரம்மாநந்தர் தொகுத்தளித்த இந்தச் சிறு நூலுக்கு முன்னுரை எழுதியவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் இன்னுமொரு நேரடி சிஷ்யரான சுவாமி சாரதாநந்தர் என்பவர். அவருக்கு இயற்பெயர் சரத் என்பதாகும். முன்னுரையில் கூறுமிடத்து சுவாமி சாரதாநந்தர் கூறுகிறார். -

For the only motive which has moved the author to compile these selected sayings of the Master is to present them to the public, as nearly as possible, in the form in which they were originally uttered.

என்று கூறுகிறார். அது மட்டுமின்றி குருதேவரின் உபதேசங்கள் அவை சொன்னவண்ணம் பரவாமல் ஆளுக்காள் இஷ்டத்திற்கு கவனம் இன்றிக் கையாண்டு அவற்றின் வடிவமே மாறுகிறது என்றும் வருத்தம் தெரிவிக்கிறார். 'his invaluable words are becoming roughly handled, deformed and distorted nowadays, at the hands of many.

இந்தத் தொகுப்பு பெங்காலியில்தான் முதலில் தொகுப்பாக ஆயிற்று என்றும், ஸ்ரீயுத ஜ்நாநேந்த்ர நாத் முகர்ஜி மற்றும் எஃப் ஜே அலக்ஸாண்டர் ஆகியோரின் உதவியால் ஆங்கிலத்தில் வருகிறது என்றும் உத்போதன் வெளியீடாக வந்த முதல் பதிப்பில் கூறுகிறார். அநேகமாக 1927க்கு முந்தைய ஆண்டுகளில் முதல் வெளியீடு வந்திருக்க வேண்டும். 1927ஆம் ஆண்டு சுவாமி சாரதாநந்தர் சமாதியெய்தி விடுகிறார். இந்த நூலின் மகத்துவம் பற்றி எனக்கு முதன்முதலில் என் தந்தையார் சொல்லித்தான் தெரியும். பிறகு இந்த நூலைத் தேடி வாங்கிப் பார்த்தேன் பின்னாட்களில். அப்பொழுது, என் தந்தையார் எவ்வளவு துல்லியமாக நூல்களைக் கணிக்கக் கூடியவர் என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.

”இரண்டு அகங்காரங்கள் இருக்கின்றன. ஒன்று பக்கா (பழுத்தது). இன்னொன்று காம்சா (பழுக்காதது). "இது என் வீடு, இது என் அறை, இது என் குழந்தை" என்றெல்லாம் நினைக்கும் அகங்காரம் பழுக்காத அகங்காரம். ஆனால் பழுத்த அகங்காரமோ - "நான் கடவுளின் தொண்டன்; நான் கடவுளின் குழந்தை; நான் எப்பொழுதும் பந்தமற்ற முத்தன்; எல்லையற்ற ஞானமயமானவன் - இவ்வாறெல்லாம் கருதுவது பழுத்த அகங்காரம்.”

*
அகங்காரத்தை விட்டால் கடவுள் தோன்றுவார் என்றால், அகங்காரத்திலேயே இரண்டு உண்டு, பழுத்தது, பழுக்காதது என்றும் கூறுகிறார். பழுத்த அகங்காரம் பாதகம் செய்யாதோ? பழுக்காத அகங்காரமே தீங்கு செய்யும் போலும். மேலும் உடனேயே நான் அற்ற நிலைக்கும் போய்விட முடியுமா என்று யோசிக்கும் நமக்கு இப்படி ஒரு வசதியும் நடுவில் துணையாக இருக்கிறது என்றால் கொஞ்சம் நிம்மதிதான். ஆனால் உலக பந்தங்களை வைத்து எழும் அகங்காரம் மிக இயல்பாக, கேட்பதற்கு முன்னால் தோன்றிவிடுகிறது. ஆனால் பழுத்த அகங்காரம் என்பது தன்னைப் போல் நமக்கு ஏற்படக் கூடியது அல்ல போலும்? அப்படியென்றால் என்ன செய்வது?

இனி வரப்போகும் பொன்மொழி என்னைக் கலங்க அடிக்கும் ஒன்று. கொஞ்சம் சர்வ மன அலற்றல் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, அதாவது அதிகப்ரசங்கித்தனம், ரொம்ப புரிந்தால்போல் காட்டிக் கொள்வது எல்லாம் செய்யாமல் நான் வாசிக்கும் போது ஆளைச் சிதற அடித்து விடுகிறது.
விட்டால் விடு. கேட்டால் கேள். இதுதான் உண்மை. எப்பொழுது புரிந்து கொள்கிறாயோ புரிந்து கொள். அதுவரை செக்குமாடு மாதிரி சுற்றிவா.

”ஸ்ரீராமகிருஷ்ணரை அணுகி ஒருவர் கேட்டார். "ஐயா! ஒரே வார்த்தையில் எனக்கு உபதேசம் செய்யுங்கள். பரம ஞானம் என்ன என்பதை?" அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில், "பிரம்மம் ஒன்றுதான் ஒரே உண்மை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உண்மையேயில்லை". இதை நன்கு உணர். பேசாமல் அமைதியாக உட்கார்ந்துகொள்.”

அமைதியாக ஒவ்வொரு அட்சரமும் என்ன பொருள் என்று யோசித்தால், கடவுள் ஒன்றுதான் உண்மை, இந்த உலகம் முழுவதும் பொய் - என்றால்? உண்மையென்றால் என்ன? பொய் என்றால் என்ன? இந்த உலகம் இருக்கிறதே, இதோ கண்ணுக்குத் தெரிகிறதே, நான் தான் கீபோர்டில் டைப் அடிக்கிறேனே, தெருவில் வண்டிகள் போகின்றனவே, பசிக்கிறது என்று இப்பொழுதுதானே வெளியில் போய் வரும் போது, ஒருவாய் காப்பி அருந்திவிட்டு வந்தேன். நாளை ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குப் போனால் அங்கும் சந்நிதி இருக்கும். அங்கு இருக்கும் குழாயைத் திருகினாலும் தண்ணீர் கொட்டும். எதற்குச் சொல்கிறேன் என்றால் எல்லாம் இருக்கிறதே! இதோ ஒரு போன் வருகிறது. எடுப்பதற்குள் நின்று விட்டது. உண்மையில்லாமலா இத்தனையும்? ஆனால் பரமரஹஸ்யத்தை அந்தப் பரமஹம்ஸம் காரணம் இல்லாமலா, உண்மை இல்லாமலா அப்படிப் பட்டுக் கத்தரித்தால்போல் சொல்லும்!

அப்படி என்றால் கடவுள்தான் உண்மை என்றால், இந்த வியவஹாரங்கள்! இவை என்ன சலனம் இருந்தாலும் முழுப்பொய் என்றால், அப்பொழுது உண்மை என்பதையே இதுவரை நான் உணர்ந்ததே இல்லை என்றுதானே சொல்ல வேண்டும்? அப்படியும் இல்லை. அன்றும் இன்றும் இனியும் அந்தக் கடவுள்தான் இருந்திருக்கிறது, இருக்கிறது, இருந்துகொண்டும் இருக்கும் என்றால் நான் அறிந்த எல்லாவற்றையும் விட எனக்கு முன்னாலேயே பழக்கமானது, பரிச்சயமானது, தான் இருப்பதாலேயே மற்ற பொருட்களை அனுபவத்திற்குக் காட்டுவது என்பதுவே அந்தக் கடவுள்தானே! அப்பொழுது அத்தனைக்கும் முன்னமேயே எனக்கு முன்னமேயே எனக்குப் பரிச்சயமான ஒன்று அதுவே உண்மை. அதை மறந்து நான் என்பதும் அது புழங்கும் இந்த உலகம் என்பதும் முழுப்பொய் - புரியவில்லை; இல்லை நன்கு புரிகிறது; சொல்லத் தெரியவில்லை; இல்லை சொல்லத் தெரியும் ஆனால் சொல்லில் வரவில்லை; சொல்லில் வந்து விடுகிறது; ஆனால் சொல்லைக் கடந்தும் போய் விடுகிறது. இதை உணர்ந்தால் அப்புறம் என்ன வேலை? சும்மா இரு - அவ்வளவே. ஒரு வேளை அதுதான் பரம உத்தமமான வேலையோ? ஒன்று தெரிகிறது - இனிமேல் யாரிடமும் போய் ஒற்றை வரியில் உபதேசம் செய் என்று கேட்டு விடக் கூடாது.!

*
அகங்காரம் என்பதுதான் முற்றிலும் அகன்று விடுகிறதா? தேகம் உள்ளவரையில் அகங்காரம் இல்லாமல் இருக்குமா? அதாவது அகங்காரம் என்பது வலிமை இழந்து, தன்மை மாறி இருக்கும் என்று சொல்லலாம்.

”சரீரம் உள்ளவரையில் ஒருவரை விட்டு அகங்காரம் விலகுவதில்லை. அதன் ஏதோ ஒரு மிச்சம் எஞ்சி இருக்கிறது. தென்னம்மட்டை விழுந்தபின் தென்னை மரத்தில் அதன் வடு எஞ்சி இருக்கும். அது போகாது. அது போல் அகங்காரம் இல்லாமல் போனாலும் அதன் ஒரு மிச்சம் தேகம் உள்ளவரையில் இருக்கும். ஆனால் விடுதலை பெற்ற முக்தர்களை இந்த மிச்சம் உள்ள அகங்காரத்தால் பந்தப்படுத்த முடியாது.”

விடுதலை அடைந்தாலும் தேகம் உள்ளவரையில் ஓர் ஒப்புக்கு அகங்காரம் என்று ஒன்று வேண்டும் போலும். முன்னால் அகங்காரம் அறும்வரையில் பழுத்த அகங்காரம் என்று ஒன்று இருந்தால் தீமை இல்லை. அதனால் பக்திதான் விளையும் என்று பார்த்தோம். இங்கு விடுதலை உற்ற ஆத்மா தேகம் உள்ள நாள்வரையில் ஒப்பேத்த ஓர் அகங்காரம், கெடுதல் செய்யாத, பந்தம் செய்ய வலிமை இல்லாத அகங்காரம் ஒன்று இருப்பதாகவும் சொல்கிறார். ஒரு வேளை இரண்டும் ஒன்றோ தெரியவில்லை. முக்தி, கடவுள் காட்சி என்பது நான் அற்ற இடம். ஆனால் அதுவரையில் பழுத்த அகங்காரம் தீங்கு செய்யாது. அது மட்டுமன்று. முக்தர்களுக்கும் தேகம் உள்ளவரையில் அகங்காரம் அடையாளம் போன்று ஒன்று இருக்கும். ஆனால் அதனால் பந்தம் ஏற்படுத்த முடியாது. அப்படியென்றால் மனத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் தியானம், ஆன்ம சாதனம் என்பது யார் செய்ய வேண்டும்? எதுவரை செய்ய வேண்டும்? அதற்கு ஒரு முடிவு கிடையாதா?

”நாங்டா என்று அழைக்கப்பட்ட தோதாபுரி என்னும் மகானிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் இந்தக் கேள்வியைக் கேட்டார்: "நீங்களோ மிகவும் உயர்ந்த நிலையை அடைந்த மகான். நீங்களும் ஏன் தினமும் தியானம் பழக வேண்டும்?" அதற்கு தோதாபுரி பதில் சொன்னார், பித்தளை பாத்திரத்தைத் தினமும் கழுவாமல் போனால் அதன் ஒளி மங்கிப் போய்விடும். அதுபோல் தினமும் தியானம் பழகாவிட்டால் மனமும் தூய்மையாக இருக்காது என்று. அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார், பாத்திரம் தங்கத்தால் ஆனதாக இருந்தால் அழுக்கடையும் என்ற பிரச்சனை இல்லை அல்லவா? என்று. அதாவது கடவுளை அறிந்தவருக்குப் பக்தி சாதனங்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும் என்பது இல்லை என்று அர்த்தம்.”

நாம் பார்த்து வந்ததில் மனத்தைத் தூய்மை ஆக்குவது, தியானத்தால் சித்த சுத்தி ஏற்படுவது என்ற விஷயம் அடிக்கடி வருகிறது. இன்னும் பல உபதேசங்கள், பலருடைய உபதேசங்களிலும் மனத்தூய்மை, சித்த சுத்தி என்ற பிரயோகம் வருகிறது. அப்படியென்றால் மனம், சித்தம் என்பதில் அழுக்கு ஒன்று ஏற்படுகிறது. அந்த மன அழுக்கு, சித்த அசுத்தி என்பது என்ன? என்ற இந்தக் கேள்வி நெடுநாளாக எனக்கு இருந்து வந்தது. காம குரோத லோபங்கள், சிறுமை எண்ணங்கள், தவறான மனக் கற்பனைகள் என்று அநேகம் சொல்லலாம் என் போன்றார் விஷயத்தில். ஆனால் பெரும் நிலை அடைந்தவர்களும் இந்தச் சித்த சுத்தி, மனத் தூய்மை என்று பேசும் போது இந்தக் கேள்வி எழுகிறது. இதை ஒருவர் எனக்குத் தீர்த்து வைத்தார். அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அற்புதம் என்று விவேகாநந்தர் கூறிய சுவாமி அத்புதாநந்தரே ஆவார். ஒரு முறை யாரோ சித்தத்தின் அசுத்தி என்பது என்ன? என்று கேட்கும் போது அவர் கூறியது: 'அகங்காரமே சித்தத்தின் அசுத்தி’ என்பதாகும். பெரும் ஜப தப ஹோமங்கள், தவம் செய்யலாம். ஆனால் அது அகங்காரம் அடிப்படையாக இருந்தால் வீண். ஆனால் அகங்காரம் அற்று வெறும் ஏதோ சாதாரண வேலையைச் செய்து கொண்டிருந்தாலும் அதுவே ஆன்மிகச் சிறப்பு வாய்ந்தது என்று மிகச்சிலரே தெளிவாக்ச் சொல்லியுள்ளார்கள்.*


இந்தியாவே என்ன பூமி சார்! முழுக்க அதீந்திர்யமான விஷயம் - அதைப் பற்றி எவ்வளவு கஷ்டப்பட்டு அதற்கு என்று ஒரு தத்துவ மொழியாடலை வளர்த்து, அதனுடைய செறிவு, விரிவு இதைக்கொண்டு அடுத்து வருபவர்கள் படிப்படியாக ஏறி வரும்படியாக ஒரு சௌகரியத்தை உண்டாக்கி - நினைத்தால் பிரமிப்பும், அழுகையும்தான் மிஞ்சுகிறது.
இல்லையென்றால் என்னிக்கு உலக வாழ்வின் அஞ்ஞானம் போகும், என்னிக்கு இதைப் பற்றிப் பிரக்ஞையாவது ஏற்படும்! இந்தியாவில் பிறந்தும் சத்சங்கம், விசாரம், ஆன்ம சாதனை என்பதை நாம் இழந்தால் நம்மை விட முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதில் ஒரு ருசியை உண்டாக்க வேணும் என்றாலும் அந்த ஸ்ரீகிருஷ்ணனின் அருள்தான்.! ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ண !


ஸ்ரீரமணரின் உரையாடல்களில் வருவதாக ஒரு வரி படித்தேன்.

It is by God's grace that you think of God.

என்ன சத்யமான வார்த்தை! நிச்சயம் உலக வாழ்க்கை என்பதன் கடக்கலாகாத் தன்மையை நினைத்துப் பார்த்தால் ஒரு நிமிஷமாவது எப்படி இதையெல்லாம் கடந்து கடவுள் என்ற ஓர் எண்ணம் ஏற்பட முடியும்? நாம் ஏதோ விளையாட்டாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆத்மார்த்தமாகக் கடவுளிடத்தில் அழுது இரங்கி 'உன்னைப் பற்றி எனக்கு எதுவும் புரியவில்லை. மக்களின் தூஷணைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு உன்னைப் பற்றிப் புரிய வை' என்று ப்ரார்த்தனையோடு கடவுள் நினைவுகள் தோன்றுமேயானால் நிச்சயம் அவருடைய கிருபையால் மட்டுமேயல்லவா அந்த ஆதங்கமும் நம் இதயத்தில் எழப்பண்ணியிருக்கிறது !

'ஆஹா! அவர் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர் ஆயிற்றே!' என்று ஆயிரம் பேர்களால் புகழப் படுவதைவிட, 'ஐய்யய்ய.. அந்த ஆளா.... சும்மா ஆன்மிகம் என்று புத்தி கெட்டவர் அல்லவா!' என்று நான்கு பேர்களால் இகழப்படுதல் எவ்வளவோ மேல்.
காரணம் எந்த மயக்கத்திலும் தப்பித்துக் கொண்டாலும், புகழ்ச்சி என்னும் மயக்கு பொல்லாதது. குழி தோண்டிப் புதைப்பது. மீளா நரகம் என்றால் புகழ்ச்சி மயக்கம் என்பதைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் இகழ்ச்சியோ மிகவும் நல்லது. பேருதவி செய்யும் தன்மை வாய்ந்தது. நம்மிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் அகங்காரம், படாடோபம், தலைகனம் எல்லாவற்றையும் அடித்து வெளியில் எறிந்துவிடக் கூடியது. ஆன்மிகத்திற்காகப் பிறரால் இகழப்படுவதற்கு ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

நஞ்சீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ மஹாசார்யரை ஒருவர் கேட்டார்: 'ஐயா! நாம் அறிந்த வைஷ்ணவம் வைஷ்ணவமா? அல்லது பிறரறிந்த வைஷ்ணவம் வைஷ்ணவமா?' என்று. அதற்கு நஞ்சீயர் சொன்னார் : 'நாம் அறிந்ததும் அன்று. பிறர் அறிந்ததும் அன்று. அவன் அறிந்த வைஷ்ணவமே உண்மையில் வைஷ்ணவம்'

ஓர் உபந்யாசத்தில் ஸ்ரீகிருஷ்ண ப்ரேமி சொல்கிறார்: 'தெருவோட போகும் போது வேடிக்கை பார்க்கும் மக்கள் சிலர் 'டேய்! அங்க பாருடா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போறது' என்று நையாண்டி பேசினால் அப்பொழுதுதான் நம்மைப் பற்றி நிச்சயம் ஏற்படுகிறது, பாகவதர்கள் என்று.’

***

No comments:

Post a Comment