Thursday, May 2, 2019

சங்க இலக்கியத்தில் பறவைகள்


சங்க இலக்கியம் கற்போருக்குப் பறவைகள் பற்றிய குழப்பம் ஏற்பட்டால் நீக்கிக் கொள்ள வசதியாக தமிழினி பதிப்பகம் ஒரு நூல் கொண்டு வந்துள்ளதுதமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - ரத்னம் ரூ 120. 
அறிமுக உரையில் அவர் கூறும் கருத்து ஒன்று கவனத்தை ஈர்ப்பது -

'தமிழ்நாட்டில் ஒருவர் மிகுந்த முயற்சி மேற்கொண்டால் 350 பறவைகளைப் பார்க்க வாய்ப்பு உள்ளது எனப் பறவை இயலார் தெரிவித்திருப்பதோடு அவ்வாறு காணக்கூடிய பறவைகளையும் பட்டியல் இட்டுள்ளனர்....

"செவ்வியல் இலக்கியத்தில் 500 என்ற அளவில் பறவைக் குறிப்புகள் இருந்தாலும் அக்குறிப்புகள் நூற்றுக்கும் குறைவான பறவைகளைப் பற்றியனவாகவே உள்ளன"

இந்தக் குறிப்புகளிலும் மயில் கிளி பற்றிய குறிப்புகளை விட தூக்கணாங்குருவி போன்ற பறவைகளைப் பற்றிக் குறைவாகவே உள்ளன என்கிறார்அண்டங்காக்கை, அன்றில், அன்னம், ஆண்டலை, இராக்கொக்கு, இருதலைப்புள், உண்ணிக் கொக்கு, உள்ளான், ஊர்க்காக்கை, எருவை என்னும் செந்தலைக் கழுகு, எழால், கடற்காக்கை, கணந்துள், கம்புள், காரி, கானக்கோழி, கானாங்கோழி, குக்குல், குடிஞை, குயில், குருட்டுக்கொக்கு, குருவிகள், குறும்பூழ், கூகைஆந்தை, கூழைக்கடா, கொங்குதேர் தேன்சிட்டு, சாம்பல் நாரை, சிரல் மீன்கொத்தி, சுண்டாங்கோழி, செங்கால் நாரை, செந்தார்ப் பைங்கிளி, செவ்வரி நாரை, திணைக்குருவி, நத்தை கொத்தி நாரை, நீர்க்கோழி, பருந்துகள், புறாக்கள், பூ நாரை, போகில், மகன்றில், மயில், வங்கா, வானம்பாடி, வெள்ளைக் கொக்குகள் என்ற தலைப்புகளில் சங்க இலக்கிய வரிகளைத் தந்து விளக்குகிறார் ஆசிரியர்.

இதைத் தவிர பெயர் சுட்டப்படாத பறவைகள் பற்றியும், பறவைகளுடன் அன்று மக்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும், புலம் பெயர் பறவைகள் பற்றியும் நூலின் கடைப் பகுதியில் பேசுகிறார் ஆசிரியர். துணைநூற்பட்டியலும், படங்களும் இறுதிப் பகுதியாக அமைகின்றன. படங்கள் விரிவான வண்ணப் படங்கள் பறவைகள் பற்றிய நூலுக்குப் பெருந்துணை என்றாலும் தமிழ் நல்லுலகில் சிறு அறிமுக நூலில் வண்ணப்படங்கள் தருவது செலவு விற்பனை என்ற பொருந்தா வாய்ப்பாட்டில் முட்டுப்பாடாக ஆகிவிடும் என்றுதான் போலும் கோட்டோவியங்களோடு விட்டிருக்கிறார்.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் அதன் சாதாரண ஆங்கிலப் பெயர், அதன் கீழ் இலத்தீன துறைப் பெயர் என்பனவற்றையும் தந்திருக்கிறார் ஆசிரியர். அன்றைய மக்களின் வாழ்வியலோடு ஒட்டிப் பறவைகளின் இருப்பையும், அவற்றிற்கான செவ்வியல் இலக்கியக் குறிப்புகளையும் ஆசிரியர் நமக்குக் கவனப் படுத்துகிறார். உதாரணத்திற்கு உள்ளான் என்னும் வகை பறவையைப் பற்றிக் குறிப்பிடும் காலத்து, அது Common Sandpiper, Actitis hypoleucos என்று தெரிவிக்கிறார்.

புதுமைப் பித்தன் பாடல் ஒன்றில் இந்த உள்ளான் பற்றிய குறிப்பு வரும். 'உள்ளான் பிடிக்க வந்த ஊர்வசியின் உள்ளம் பிடிக்க எண்ணி உம்முடைய மச்சாவி'. இவ்வளவு தூரம் கிராமப் புறங்களில் எல்லாம் தட்டுப்படும் உள்ளானைப் பற்றிய குறிப்பே பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் இல்லை என்கிறார். திவாகர நிகண்டு கூட உள்ளான் பற்றிப் பேசவில்லை. பிங்கலந்தை, 'உள்ளல் என்பது உள்ளான் ஆகும்' என்கிறது.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் இமயமலைக்கு அப்பால் இருந்து உள்ளான் குடும்பத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பறவைகள் தென்னிந்தியாவிற்கு வலசை வருகின்றன என்று சொல்லும் ஆசிரியர் இவற்றைப் பற்றிக் குறிப்புகளே இல்லாமல் இருப்பது ஏன் என்று ஆச்சரியப் படுகிறார். குளிர்காலம், பனிமூட்டம் என்பது கவியின் கண்களையும் கூட மறைக்கும் போலும். ஆதவன் ஒளியில் திகழ்பவை கண்ணை ஈர்க்கின்றன. 152 பக்கங்களில் அதிகமான பறவைச் செய்திகளை செவ்விலக்கிய வாயிலாகக் காட்டும் நூல் பறவை இயலுக்கு என்பதை விட சங்க இலக்கியம் கற்பாருக்கு நல்லதொரு துணை நூல் என்பதில் ஐயமில்லை. நூல் - தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள், ரத்னம், 25- , தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாஸா, 769, அண்ணா சாலை, சென்னை - 2, தொலைபேசி - 044-28490027.

*** 

No comments:

Post a Comment