Thursday, May 2, 2019

கப்பல் கோவை

சாதாரணமாக, பண்டைய செய்யுள் வகைகளைப் பற்றிக் கேள்விப் பட்டவர்கள், சிற்றிலக்கிய வகைகளை அறிந்தவர்களுக்குக் கோவை என்றால் என்ன என்று தெரிந்திருக்கும்கோவை என்றால் ஒன்றும் குழப்பம் இல்லீங்க. கோக்கப்படுவது கோவை. ஆந்தாலஜி, கலக்ஷன் என்று சொல்லலாம். ஆனால் வெறுமனே எதையாவது கோத்ததா என்றால் இல்லை. தொல்காப்பியத்தில் அகத்துறைச் செய்திகள் கைக்கிளை தொடங்கி, காட்சி நலம் உரைத்தல் ஆரம்பமாக பல நிலைகள். ஆமாம். ஆண், பெண் இருவரும் வாழ்க்கையில் ஏதோ காரணமே இல்லாம ஒருவரை ஒருவர் நேருறக் கண்டு, என்ன காரணமோ தெரியவில்லை, அந்தப் பயபுள்ள இல்லாம வாழவே முடியாது, அவன் இல்லாமல் வாழ்வில்லை என்று இரண்டு பேரும் உயிருக்கு உயிராகக் காதல் பூண்டு விடுவதைத்தான் சங்கப் புலவர் ஆழ்ந்து ஆய்ந்து நோக்கி ஓர் இயலாகவே ஆக்கி வைத்துள்ளனர், அகத்திணை என்று.

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? தமிழ், தமிழ் என்றால் இனிமை என்று சொல்கிறோம் அல்லவா? என்ன இனிமை? ஏன் ஃப்ரெஞ்சு பேசிப் பாருங்க, இல்லை ஸ்பானிஷ் பேசிப் பாருங்க; இனிமை இல்லியா? அது இல்லை இனிமை என்றால் இங்க வேறஅதாவது வாழ்க்கையையே இனிமை ஆக்கும் விஷயம் எது? தன் உள்ளம் கவர்ந்த காதல், ஏன் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் உயிர்க்காதல், இதுதான் இந்த மற்றபடி பல கஷ்டங்கள் சோகங்கள் நிறைந்த மனித வாழ்வை 'இனிமை' என்று ஆக்குவதே.

இந்த இனிமைக்கு ஓர் இயல் என்று சொன்னால், உலக இலக்கியங்கள் எங்கும் தேடிப் பாருங்கள். ஆணும் பெண்ணும் உள்ளம் கலந்து அவர்க்கு இடையிலான இலட்சியக் காதலை அன்பின் ஐந்திணையாக, ஆருயிர்க் காதலுக்கு இலக்கணமாக, அகத்திணை என்று இயலே இருக்கு என்றால் அது ஒன் அண்ட் ஒன்லி மொழி தமிழ். அதனால்தான் தமிழ் என்பதற்கே அகத்திணை என்றே பொருள். இப்பொழுது புரிகிறதா ஏன் தமிழ் என்பதற்கு இனிமை என்று ஏன் பெயர் வந்தது என்பதுஇதை நான் கற்பனையாகச் சொல்லவில்லை. ஆதாரம் கையில் வைத்துத்தான் சொல்கிறேன். இறையனார் களவியல் உரையில் எடுத்துப் பாருங்கள், "இந்நூல் என் நுதிலிற்றோ எனின் தமிழ் நுதலியதென்பது" என்று வரும். அகத்திணை இலக்கணம் சொல்ல வந்த ஒரு நூலை உரை இந்த நூல் தமிழ் நுதலிற்று என்று 5-6ஆம் நூற் இல் அறிமுகப் படுத்துகிறது.

தொல்காப்பியம் இந்த மனித வாழ்வின் இன்பம் ஆகிய அகத்திணை என்னும் தமிழைப் பல்துறைகளால் வகுத்து வைத்தது. ஆயினும் அஃது இலக்கணம். சூத்திரம். நூற்பா உணர்த்தும் கருத்தை உள்ளவாறு புரிந்து கொண்டாலும் கற்றலும் துய்த்தலும் ஒருங்கே நடைபெற வேண்டும் என்று விழையும் ஓர் ஆசிரியன் அந்தத் துறைகளை எல்லாம் ஒருங்கு படுத்தி ஓர் உள இயல் மாற்றத்து படிநிலை எழுச்சியாக அமைத்து சுமார் 400 கட்டளைக் கலித்துறைகளால் ஆனதாக அமைத்தான். அதுவே கோவை ஆனது.

வச்சணந்தி மாலை இதனை, 'ஆய்ந்த கலித்துறைதான் நானூ றகப்பொருண்மேல் வாய்ந்த நற்கோவை மற்றுரைப்பின்' என்று வெளிப்படுத்தும்பன்னிருபாட்டியலோ, 'கோவை என்பது கூறுங்காலை, மேவிய கற்பு களவெனுங் கிளவி, ஐந்திணை திரிய, அகப்பொருள் தழீஇ, முந்திய கலித்துறை நானூறென்ப.' என்று கூறும்.

இவ்வாறு புலவர்கள் அகப்பொருள் துறைகளை, முதலில் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் காணும் வாய்ப்பு தொடங்கி பின்னர் மணப்பேறு வரை பல துறைகளாகப் பாடுவது அக்காலத்து செய்யுள் மரபில் அமைந்த காதல் புதினம் என்று நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே காதல் பொருள் அமைந்த நாவல் என்பது ஒரு வகையில் தமிழில் மிகப்பழைய விஷயமே என்றும் சொல்லலாம். இன்று உரைநடையில் நவீன யுகத்தில் நாம் அதையே மிகப் பெருகிய சமுதாய உணர்வுடன் மீட்டடைந்தோம் என்றும் கூறலாம்.

இந்தக் கோவை நூல்கள் அநேகமாக திருச்சிற்றம்பலக் கோவையார் தொடக்கமாகத் தமிழில் எழுந்ததா அல்லது வேறு தொடக்கமா என்பது ஆய்வாளர்களுக்கு விட்டுவிடுவோம். திருக்கோவையாரில் நூலுக்கே கோவை என்று திருத்தமுறப் பெயரே அமைந்து விட்டது. இது அந்த வகை பிரபந்தங்கள் நன்கு அமைந்த பின்னரே ஒரு நூலுக்குக் கோவையார் என்ற பெயர் அமைய முடியும். நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம் கோவை இலக்கணம் கொண்டது எனினும் பெயர் அவ்விதம அமையவில்லை. இது இருக்கட்டும்தெய்வங்களைக் குறித்து கோவைகள் பாடப்பட்டது ஒரு வகை என்றால் நல்ல குணங்கள் பொருந்திய இறையாண்மை கொண்ட மனிதர்களைக் குறித்தும் கோவைகள் பாடப்பட்டன. இதில் பாண்டிக் கோவை பழமை மிக்கது என்பர்இந்தக் கோவை இலக்கணமே மேலும் நன்கு செவ்வை உற்று களவியல், வரைவியல், கற்பியல் என்று தெள்ளெனப் பகுப்புண்டு அமைந்த வகையை நாம் தஞ்சைவாணன் கோவை, அம்பிகாபதிக் கோவை ஆகிய கோவை நூல்களில் காணலாம்நான் சொல்ல வந்தது இவ்விதம் மிகத் திருத்தமான வடிவை அடையாத கோவை இலக்கணம் கொண்டு பாடப்பட்ட, மனிதரைப் பாடிய கோவை நூல் ஒன்று. பழம் கோவை நூல்கள் என்ற கணக்கில் சேருவது. 13ஆம் நூற் ஐச் சேர்ந்தது. கப்பல் கோவை என்னும் பெயரினது. அது என்ன கப்பல்?

இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கருமாணிக்கன் என்னும் பெயரினன். பாண்டி மண்டலத்தில் ஒரு பகுதியாய் இருந்ததும், இப்பொழுது புதுக்கோட்டையைச் சேர்ந்ததுமான கப்பலூர், துவரங்குறிச்சி ஆகிய ஊர்கள் கொண்ட பரப்பை ஆண்டவன். குறுநில மன்னன். பாண்டிநாட்டு படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்து, கல்வி கேள்விகளிலும், அருங்கலைகளிலும் மிக்க கீர்த்தி கொண்டவன். யாதவர் குலச்செம்மல். வைணவ சமயத்தினன். துளவம், முல்லை, குவளை ஆகியவற்றைத் தன் குல மாலையாகவும், போர் மாலையாகவும் கொண்டவன். திருமாலின் அவதாரச் செயல்கள் பலவற்றை இந்த நூல் இக்குறுநில மன்னனுக்கு ஏற்றிப் பாடுகிறது. தென்னிந்திய சாஸனம் வால்யூம் 4,112 இவனை, 'முத்தூர்க் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர்க் கருமாணிக்காழ்வான்' என்று குறிப்பிடுகிறது. ஜடாவர்ம சுந்தரபாண்டியன், ஜடாவர்ம வீரபாண்டியன், மாறவர்ம குலசேகரன் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் இருந்தவன் இவன்.

700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவை நூல். பாடப்பட்டவரின் பெயர் தெரிந்தாலும், பாடியவர் யார் என்று தெரியாமல் போனது வருத்தத்திற்குரியது. ஆனாலும் நூலின் ஆசிரியர் பண்டைத் தமிழ் நூல்களில் துறை போய ஞானம் மிக்கவர் என்பது தெள்ளிய இன்பம் மிக்க அவர்தம் பாடல்களில் தெற்றெனப் புலனாகிறது. இந்த அரும் நூலைக் கிடைத்த சில பிரதிகள் கொண்டும், டாக்டர் வே சா அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் கொண்டும், மேலும் பல ஆய்வுகள் செய்தும் திரு எல் ஸ்ரீநிவாசய்யர் என்பார் பதிப்பாசிரியராக மெட்ராஸ் கவர்ன்மெண்டு ஓரியண்டல் சீரீஸ் 1958ல் கொண்டு வந்துள்ளது.
கப்பல் கோவை என்னும் இந்நூல் 30 துறைகளில் காதலம் வாழ்வின் எழுச்சியை அமைக்கிறது.

கைக்கிளை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கிமதியுடன்பாடு, பாங்கியிற்கூட்டம், ஒருசார் பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறி இடையீடு, வரைதல் வேட்கை, வரைவுகடாதல், ஒருவழித்தணத்தல், வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல், வரைவு மலிவு, அறத்தொடுநிற்றல், உடன்போக்கு, கற்பொடுபுணர்ந்த கவ்வை, மீட்சி, தன்மனைவரைதல், உடன்போக்கு இடையீடு, வரைதல், இல்வாழ்க்கை, பரத்தையிற்பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, பகைதணி வினைப்பிரிவு, உற்றுழிப்பிரிவு, பொருள்வயிற்பிரிவு, துறவறம்இந்தக் காலத்தில் சினிமாவிற்கு கதை எழுதினால் சினி ட்ரீட்மெண்ட் என்று ஒன்று எழுதுவார்கள். அதாவது எந்தக் காட்சிக்குப் பின்னர் எந்தக் காட்சி எவ்விதம் அமைய வேண்டும் என்று அடக்கச் சித்திரமாக ஒரு பிரதி தயார் செய்வார்கள். அதைப் போன்றது இந்தக் கோவை பிரபந்த அமைப்பு.

முதலில் கைக்கிளை என்பதை எடுத்துக் கொள்வோம். கை என்றால் சிறிய என்று பொருள். கிளை என்றால் உறவு. அது என்ன சிறிய உறவு. அதாவது பெருமை, நிறைவு என்பன அற்ற சிறுமையான உறவு. இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து மனம் கலந்து பழகும் உறவுதான் உள்ளபடியான அன்பு. அதற்கு முன்னர் ஒருவர் தம் காதலியைக் கண்டு மனம் பறிகொடுக்கிறார்; ஆனால் அந்தக் காதலிக்கு அவர் யார் என்றே தெரியாது; சந்திக்கவில்லை; இனித்தான் நேருறக் காணப் போகின்றனர்; நெஞ்சும் மாறிப்புக்கப் போகின்றனர் என்றால் காதலர்பால் உள்ளது கைக்கிளை.

கைக்கிளையின் போது என்ன உணர்ச்சிகள் இருக்கும். காட்சியை வியப்பார்; ஐயம் கொள்வார் - இப்படி ஓர் அழகும் இருக்க முடியுமா? பிறகு இல்லை இல்லை கண்டது மாயம் இல்லை; உண்மைதான் என்ற துணிவு; தலைவிக்குத் தன்பால் வேட்கை இருக்கிறதா என்று குறிப்பறிவார். இந்த மனநிலைகளைத்தான் கைக்கிளை என்னும் துறை பாடும். இது போல் மற்ற துறைகள்முதலில் கண்டவர் பாடுகிறார்காட்சி

சீர்தங்கு பங்கயம் கொண்டல்
பொற்கோங்கு அலர்
செங்குமுதம்
கூர்தங்கு முல்லை
குமிழ்நெய்தல் பூத்து
ஒரு கொம்புசெம்பொன்
கார்தங்கு செங்கரத்தான்
கருமாணிக்கன் கப்பல்
என்னும் ஊர்தங்கு சோலையின்கண்
ஒருகாலத்து
ஒளிர்கின்றதே.

பார்த்தாச்சு. ஆனால் ஐயம். இந்த ஊர்தானா? இல்லை இந்த வானத்தில் வரும் விச்சாதரர் என்கிறார்களே அல்லது வான அரம்பையர் என்கிறார்களே.... இல்லை...இந்த ஊரில்...இந்த மாதிரியான.... பேரழகு... எப்படி... மண்ணின் மகள்தானா....?

பொருப்போ?
கருங்கடலோ?
பொழிலோ?
உயர்பொன்னுலகோ?
விருப்பொடு பன்னக மேவுலகோ?
விரைநாண்மலரோ?
சுருப்பொடு மேவுதண் தார்த்
தொண்டைமான் கப்பல் சூழ்
சிலம்பின் மருப்போ?
எனும் தனவல்லி,
அன்னாருக்கு வாழ்பதியே!

இப்படியெல்லாம் கண்டு ஐயுற்றுப் பின் பழகி ஒருவரை ஒருவர் அறிந்து அவள் மறுபடியும் பார்ப்போம் என்று போகும் பொழுது காதலன் மனம் அவளைப் பெற்றவரை வாழ்த்தும் அல்லவா -- 'ஊதாக் கலரு ரிப்பன், உனக்கு எவண்டி அப்பன்' என்று இன்றைய சினிமா பாடினாலும், அன்றைய காதலன் பாடுகிறான்

கந்தார் கட களிற்றான்
கருமாணிக்கன் கப்பல் வெற்பில்
வந்து ஆவி பெற்று
மகிழும் நெஞ்சே!
வளமாய் உனக்குச் சிந்தாமணியைத்
தெவிட்டா அமுதைத்
திருவை
இங்ஙன் தந்தார் இருக்க
என்னோ சலராசி
தவம் பெற்றதே.

இந்த ஆழிசூழ் உலகு என்னய்யா தவம் பண்ணிச்சு? இப்படிப்பட்ட பெற்றோர் இருக்கப் பெறுவதற்கு? இந்தப் பெரும் அழகியை, என் ஆவியை யான் பெற உலகில் தந்த இவர்கள் இருப்பதற்கு இந்த உலகம் என்ன தவம் பண்ணியது!
காதல் மிக்கு வளர்ந்து இடையிட்டுப் பல நாட்கள் காத்து, பின்னர் என்ன என்னவோ ஆகிவிட்டது? கலியாணம் குறிக்கும் நாள் ஏனோ குறித்தும் தள்ளிப் போய்விட்டது. உடன்போக்கிற்குத் தலைவன் கேட்ட நாள் போக இப்பொழுது தலைவியின் சார்பாக பாங்கி தலைவனை உடன்போக்கிற்கு உடன்பட வைத்து இருவரும் அருஞ்சுரம் வழியே வீட்டை விட்டு அகன்று சென்றுவிட்டனர். அவர்களைத் தேடி செவிலித்தாய் அலைகிறாள்.

கலித்தொகை காட்டும் காட்சி போன்று வழியில் முக்கோல் பகவர்களைப் பார்க்கிறாள். திரிதண்டம் தாங்கி, முந்நூல் அணிந்து, செம்மை ஆடையும், திருமால் நெறியும் மிக்கார் எதிர்வரக் கேட்கிறாள்

செவிலி: ஐயா! வெற்பில் விடையும் புணர்துணையும் வந்ததோ இந்த வெஞ்சுரத்தே?
அதற்கு அவர்கள் உலக இயல்பைச் சொல்லி அவளைத் தெருட்டுகிறார்கள். ஏனம்மா நீ பெண் பெற்றாய் என்றால் அவள் உன்னுடையவள் காலத்திற்கும் என்று எப்படி எண்ணலாம். ஆனால் அது அப்படியா? நீயும் பெண்ணாய்ப் பிறந்தவள்தானே? உனக்குத் தெரியாதா?

குடையும் கரகமும்
தோலும் முந்நூலும்
முக்கோலும் செம்மை உடையும் தரித்து
ஒல்கி முன்வருவீர்!
கடல் உள் அமையக் கடையும்
புயல் தொண்டைமான் கருமாணிக்கன்
கப்பல் வெற்பில்
விடையும் புணர்துணையும் வந்ததோ
இந்த வெஞ்சுரத்தே?
கற்று ஆயரில் வளர்ந்தோன்
கருமாணிக்கன் கப்பல் மன்னன்
பொற்றாள் முளரி பொருந்தலர் போலப்
புகை எழும் தீ வற்றாத
வெஞ்சுரம் வந்தது நீ மடவாய்!
மகவைப் பெற்றாயும் இல்லைப்
பிறந்தாயும் இல்லை
ஓர் பெண் வயிற்றே!

பாடல் 391ல் ஒரு சரித்திரச் செய்தி உள்ளதாகக் கூறுகிறார் திரு ஸ்ரீநிவாசய்யர். திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடத்தைச் சேர்ந்த ஒரு முனிவரை கப்பலூரில் வந்து வதியுமாறு வேண்டி, அவர் வந்து தங்க அனைத்து வாய்ப்பும் செய்தனன் கப்பலூர்த் தலைவனான கருமாணிக்கன் என்பதை பாடல் தெரிவிப்பதாக அவர் கூறும் பாடல்

கோவல் அமர் முனி
கொண்டு வந்து ஏத்தும்
முத்தூர்த் துவரைக் காவலன்
எண் எண் கலைக் கருமாணிக்கன்
கப்பலன்னீர்
மேவலர் தம் வினைமேல் பிரிந்தோர்
இன்று மீண்டனர்
நம் மா அலர் சோலை மறுகு எங்கும்
ஆர்க்கும் வலம்புரியே.

மொத்தம் 398 பாடல்கள். நறுந்தேன் அனைத்தும் தமிழைக் காதலிப்பார்க்கு. எப்படிக் காதலிப்பது? அதைச் சொல்லிக் கொடுக்கும் இலக்கணமும் தமிழே அறியும். தமிழ் அறியும் பெருமாளா நீங்கள்.? அப்படி என்றால் கப்பல் கோவை உங்களுக்கான அரும் நூல்.

*** 

No comments:

Post a Comment