Thursday, May 2, 2019

இன்றைய விளக்கும் பழைய இருளும்

ஆயிரம் காலத்திற்கு முந்தைய இருள் என்றால் ஆயிரம் காலத்துக்கு முந்தைய ஒளிதான் அதை விரட்டுமா? இன்று ஏற்றிய தீபம் அதை விரட்டும் அல்லவா? 
அதைப் போல்தான் நம் காலத்தில் நன்கு தெரிந்து நடக்கும் சில நிகழ்ச்சிகள் பழைய காலத்தில் புரியாமல் இருக்கும் சில அம்சங்களை விளக்கக்கூடும். 
ஆனால் இதிலும் ஓர் இடர்ப்பாடு உண்டு. பழைய காலத்தை இன்றைய காரணிகள் வைத்துப் புரிந்து கொள்ள முயன்றால் சில சமயம் மயக்கமும் குழப்பமும்தான் மிஞ்சுகிறது. 

ஒன்றுமில்லை. பழங்காலத்தில் ஒருவர் ஒரு புத்தகத்தை இராப்பகலாக விழுந்துவிழுந்து படித்தார் என்ற வாக்கியத்தைச் சொல்ல முடியாது. ஏனெனில் ஒளி சாதனங்களின் கண்டுபிடிப்பால் நம் காலத்தில்தான் இரவு பகல் என்ற பெரிய வேறுபாட்டை இல்லையாக்கிவிட்டோம். அன்றோ ஒளி என்றால் பிரதானமாக பகல் தான். ஏதோ ஓரளவிற்கு தீவட்டிகளின் துணையுடன் இரவு எழுத்து, படிப்பு, உபந்யாஸம், இல்லையென்றால் கலை, கேளிக்கை. இதில் காலத்துக்குக் காலம் மாற்றம் காணக் கூடியது எது, எல்லாக் காலத்தும் இயன்றிருக்கக் கூடியது எது என்ற விவேகம் நமக்குத்தான் வேண்டும். யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்குக் குர்ரம் அன்று. 

மொழி இயல் பற்றி ஆங்கில நூலான Outline History of English Language by Frederick T Wood 1961 படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கில மொழியின் சொற்கள் எந்தெந்த விதங்களில் உருவாயின என்று ஆசிரியர் கூறுகிறார். மிக வினோதமாக இருக்கிறது. நாம் சங்க காலத்துச் சொற்களையே ஏதோ எப்படி உண்டாயிற்று என்று நிச்சயமாகத் தெரிந்தது போல் கூறுகிறோம். அநேகமாக வுட் அவர்களின் நூலைக் கற்றால் ஒரு தடவைக்கு பல தடவை கிளவியாக்கமும், அதன் வரத்தும் பற்றிய முடிபுகளில் தயக்கம் ஏற்படும். கைச்சரக்காக பல போலி எடிமாலஜியை அவிழ்த்துவிடும் பழக்கம் நின்று போகும் என்று தோன்றுகிறது. 

உதாரணத்திற்கு, foot என்பது ஒருமை. இதன் பன்மை s சேர்த்து foots என்றுதானே வரவேண்டும். ஏன் feet என்று வருகிறது? அதைப் போலவே goose ---> geese ? gooses என்று வருவதில்லை. strong man என்று சொல்கிறோம். ஆனால் strength என்று சொல்லாக்கம் வருகிறது. இதனுடைய காரணம் நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்தக் காரணத்திற்குப் பெயர் i--mutation என்று பெயர். i-mutation or j-mutation. அதாவது ஒரு syllableல் a E O U போன்ற உயிரகள் இருந்தால் வரும் syllable ல் i அல்லது j இருந்தால் அது முதல் ஸிலபிளில் இருக்கும் உயிர் ஓசைகளை மாற்றிவிடும். 

உதாரணத்திற்கு mus என்பது பழைய ஆங்கிலத்தில் ஓர் எலி என்ற ஒருமையைக் குறிக்கும் சொல். அதனுடைய பன்மை பழைய ஆங்கிலத்தில் musiz என்பதாகும். இதில் இரண்டு ஸிலபிள்கள்; mu + siz. இரண்டாவது ஸிலபிளில் i வருகிறது. எனவே முதல் ஸிலபிளில் இருக்கும் u ஆனது மாற்றம் அடையும். எப்படி? y ஓசையாக மாறும். எனவேதான் மூஸிஸ் என்னும் ஓசை மாறி மைஸ் mys என்ற ஸ்பெல்லிங்கோடு இருந்தது கால வட்டத்தில் mice என்ற தற்கால ஸ்பெல்லிங்கிக்கு வந்து சேர்ந்தது. 

அதேபோல் cow என்பதன் பழைய ஆங்கில வடிவம் cu என்பதாகும். பன்மை cusiz. இரண்டாம் ஸிலபிளில் i வருகிறதா? அப்பொழுது என்ன ஆகும்? cusiz என்பது பசுக்கள் என்ற பன்மை cy என்றாகி, தற்கால c k இரண்டும் க என்னும் ஓசையைக் குறிக்கும் என்பதால் c பதிலாக k என்னும் எழுத்தைப் பெற்று ky என்று வந்து, பிறகு இந்த ky என்பதே ஒருமைபோல் கருதப்பட்டு அதனோடு en என்ற பன்மை விகுதியும் சேர்ந்து ky + en == kine என்ற பசுக்குலத்தைக் குறிக்கும் வார்த்தையாகி வருகிறது. இதெல்லாம் ஆங்கில சொல்லாக்கமாய் இருக்கலாம். தமிழில் என்ன? என்கிறீர்களா? அவர் பன்மை. அவர் + கள் என்பது என்ன? ஒரு + அடி ; இரண்டாவது சொல்லில் இருக்கும் அ என்பது ஏன் முதல் சொல்லில் இருக்கும் ஒ என்னும் எழுத்தை நீட்டுகிறது? 

இதுவும் அதுவும் ஒன்றல்ல. ஆனால் மொழி இயலின் விதிகளின் இயக்கம் ஒப்பிடத்தக்கதாய் இருக்கின்றன. மொழி இயலின் விதிகள் பற்றிய ஒப்பாய்வு நமக்கு நல்ல நிதானத்தை அளித்து நம் மொழியைப் பற்றிய புரிதலை செப்பமுடையதாக ஆக்கவல்லது.

***

No comments:

Post a Comment