Thursday, May 2, 2019

சும்மா கற்பனை - சைபர்வெளியில் டான் க்யுஜ்ஷோ

சைபர் ஸ்பேஸில் டான் குய்ஸ்ஷோ அதாவது டான் க்விக்ஸாட்--விண்டர்நெட்போல் தீவிரமாகத் தேடுகிறது!!!! 

சார்ஜ் சார்ஜ் சார்ஜ்.....மக்களே நகருங்கள். வீர சாகஸ ப்ரபு வருகிறார். பல நாளாய் டேக்கா கொடுக்கும் பகைவனை அறப்போர் வழியில் முடித்துக்கட்ட, கௌரவ வீரர வருகிறார்! என்று சொல்லியபடியே குட்டைக் காலும் குட்டைக் கையுமாக சான்க்ஹோ பான்ஸா டி லா மான்சா ஓடி வருகிறார். எங்கனயோ பார்த்திருக்கமுல்ல இந்த முஞ்சிய..... 

எலே இருப்பா....எங்கன ஓடுற.... 

தடுத்த என் கையின் அக்குளுள் புகுந்து அந்தத் தெரிந்தும் தெரியாத குள்ளன் தலை தெறிக்க ஓடினான். இவனை எப்படி மடக்குவது? கந்தன் கடையில் எப்பொழுதும் உட்கார்ந்தபடி அரட்டை அடிக்கும் என் சிறுவயதுத் தோழன் ஹூக்லி உப்பிலி அந்த நேரம் பார்த்து என்னைப் பார்க்க நான் ஒரு சைகை காண்பித்தேன். அவன் 'சித்தப்பாவை' சூ என்று ஏவிவிட அடிவயிர்றிலிருந்து நாதம் எடுத்து வாசிக்கும் கலை மேதையைப் போல் அது தன் உடல் குலுங்க குரைத்துக் கொண்டே வந்தது. ஹூக்லி உப்பிலியின் சித்தப்பா பயங்கர எரிஞ்சு விழற பேர்வழி. அவனுக்கோ எரிச்சல். சூடாவாத்து நாய் முதலில் பஞ்சு மெத்தையில் படுத்து பின்னர் மிகவும் சலுகை எடுத்துக்கொண்டு கண்ட இடத்தில் மூச்சா போனதால் சூடா கிழவி துரத்திவிட பின் தெருவாசம், பாட்டியாத்துக் குறட்டு வாசம். நாங்கள் அவ்வப்பொழுது போடும் பிஸ்கட், பொரை இந்த உன்னத நட்பு.உப்பிலி அதை 'சித்தப்பா' என்று கூப்பிட்டுக் கோபத்தைத் தீர்த்துக் கொண்டான். எதிரில் வந்த நாயைக் கண்டு யார் பயந்தார்களோ இல்லையோ சாங்க்ஹோ மிகவும் அலறிப் புடைத்துக் கொண்டு, எதிரிகளின் படை வருகிறது. மக்களே பாரா உஷார். மாவீர சாகஸ ப்ரபு வந்து உங்களுக்குப் பாதுகாப்பு தருவார் -- என்று கூவிய வண்ணம் திரும்ப ஓடிவந்த சாங்க்ஹோவை நேரே குறுக்க போய் நின்னு, 

'ஓய் அப்படிப் போனா இன்னும் ஒரு எதிரி படை திரட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறான் -- என்றதும் தான் நின்றார். 

நிர்கதி நேசத்தை வளர்க்கும். நான் அவரைத் தேற்றவே கலீஜ் கதிரேசன் டீ ஸ்டாலில் தேநீர் குடித்தோம். பிறகு மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். சர்வாண்டெஸ் யார் என்று உனக்குத் தெரிந்திருக்குமே? -- என்றேன். கேள்விப் பட்டதில்லை என்றான். எங்கே இவ்வளவு தூரம் அதுவும் இவ்வளவு காலம் கழித்து? விண்ணுலகம் போனோம். பிரபு தன் குதிரையும் கூட வந்தால்தான் உள்ளே வருவேன் என்று சொல்லிவிட்டார். அது எங்கயோ ஆவி உலகத்துள் புகுந்து கொண்டு கண்ணிற்கே படமாட்டேன் என்று ஒளிகிறது. விடுவாரா நம் மேன்மை தங்கிய வீரபராக்கிரம, சூர ரணதீர, சுக்குப்பொடிக் கஷாய சூமந்திரக் காளி மாயாவல்லப, வட்டத்திகிரியை அடக்கிய விறல் நைட் விக்டரேசுரராகிய டான் க்யூஜ்ஷோ.....அவர்கள் பல உலகங்களிலும் தேடிப் பார்த்து இப்பொழுது இங்கே வருகை தர உள்ளார். உண்மையான வீரதீரம் வரவேற்பை விரும்பாது ஆகையாலே யாரையும் அது பற்றிக் கேட்கவில்லை. யாரேனும் முனைந்து செய்தால் அவர்கள் மனம் கோணும் படி வேண்டாம் என்று சொல்லற்க என்பது ஆணை. 

அத்யு சரி. ஆனா அவௌரு பேரு டான் க்விக்ஸாட்டுன்னா? அப்படித்தான் மூக்குப்பொடி சுந்தரவரத வாத்யார் சொல்லிக் கொடுத்தாரு. 

ஓ அவர் இங்கதான் இருக்காரா? அவர் மீது பிரபு மஹா கோபமாய் இருக்கிறார். 

ஏன்? 

அடாடா சான்ஹோ! அந்த வாத்தியாரு போயி பல நாள் ஆச்சுது. 

சரி உங்க ப்ரபு வருகிறார் என்றாயே? எங்கே? 

அதோ ஆகாயக் கப்பல். டான் சாதாரணமானவர் இல்லையாக்கும். விண்வெளிக் கப்பலிலேயே வந்து விட்டார் பாருங்கள்! ஏதோ ஒரு தட்டு எதிர்விட்டு மாடி போர்ஷனிலிருந்து, குடும்பச் சண்டையில் கிளம்பி, மேலே சிறிது தூரம் சென்று பின் திரும்பி அந்த மாடியை நோக்கியே சென்று கொண்டிருந்தது. 

ஏனய்யா? எவர்சில்வர் தட்டு எல்லாம் விண்கலமா? 

இல்லை இல்லை மெய்யாலுமே ஒரு விண் தட்டு பார்த்தேன். கொஞ்சம் பொறுங்கள். வந்து விடுவார். 

ஆனால் தலையில் கொம்பு முளைத்த இரண்டு டாக்டர்கள் எங்களை நோக்கித் தயங்கியபடியே வந்தனர். 

என்னை மேலும் கீழும் பார்த்து முறைத்துக் கொண்டே, தமக்குள், 

'பாவம். இவன் கண்ணுக்கு நாம் தெரியமாட்டோம். ' 

'ஆனால் அவன் கூர்ந்து நம்மைக் கவனிப்பதைப் பார்த்தால் அவன் கண்ணுக்கு நாம் தெரிகிறோமா என்ன?' 

'இருக்காது வெற்றிடத்தை உத்துப் பார்த்தல் என்பது அறிவு ஜீவிகளின் சுபாவம். இவன் நிச்சயம் ஓர் அறிவு ஜீவிதான்' 

இல்லை இல்லை..தாம் பார்க்காதவற்றையும் நன்கு பார்ப்பதுபோல் அபிநயம் பிடிப்பதில் வல்லவர்கள். 

'ஐயன்மீர்! நீங்கள் இருப்பதும் தெரிகிறது. பேசுவதும் புரிகிறது. ஆமாம் நீங்கள் யார்?' 

நாங்கள் விண்டர்நெட்போல் காவலர்கள். எப்படி நீங்கள் எங்களைக் காணவும் கேட்கவும் முடிகிறது? கலிகாலம் சுவாமி. எல்லாம் எதுவேணுமின்னாலும் நடக்கும். உதாரணத்துக்கு நீங்களே கிரீடம், பாசக்கயிறு பீதாம்பரம், ஆடம்பரம் எல்லாம் விட்டு டாக்டர்கள் போல் இருக்கவில்லையா? சரி என்ன விஷயம்? இந்த சான்ஹோவைத் தெரியுமா? அதற்குள் பாஞ்சா அவர்கள் கொண்டுவந்த கைப்பைக்குள் எல்லாம் நைஸாக கைவிட்டு நோண்டிக்கொண்டிருந்தார். காரியத்தில் கண். ஏய் முட்டாள் -- என்று உதறிவிட்டார்கள் அப்பொழுதுதான் உணர்ச்சிவந்தவர்களாய். 

சரி என்ன விஷயம்? என்ன தேடுகிறீர்கள்? இந்தக் குள்ளனைத் தொடரக் காரணமென்ன? 

இல்லை இல்லை இவனும் எங்களுக்கு உதவியாய் நியமிக்கப் பட்டிருக்கிறான். இவன் பிரபுவைக் காணவில்லை. 

அப்பொழுதுதான் சர்வைலென்ஸ் பறவை ஒன்று வந்து இறங்கியது. என்னை உற்றுப் பார்த்து இரண்டு முறை காஹ்ர்ர்ர்ர்ர் காஹ்ர்ர்ர்ர்ர் என்று அவர்களிடம் ஏதோ கேட்டது. 

'எங்களுக்கே ஒன்றும் தெரியல்லை. அவருக்கு நம்மைக் கண்ணுக்குத் தெரிகிறது. கேட்கவும் செய்கிறது. பரவாயில்லை. அவருக்கு முன்னால் விஷயத்தைச் சொல். நம்பித்தான் ஆகவேண்டும்' 

பறவை -- தற்போதையத் தகவல் -- டான் க்யூஸ்ஷோ என்னும் டான் க்விக்ஸாட் இணைய உலகில் புகுந்து மறைந்துவிட்டாராம். அதுமட்டுமின்றி அவர் ஏதோ சித்து வேலையெல்லாம் கற்றுக்கொண்டு ஒரே சமயத்தில் பல உடல்களில் கூடுவிட்டு கூடுமாறுதல் என்ற முறையில் இணையத்தில் இருக்கும் பலருக்குள்ளும் இருந்து இயங்கி வருகிறாராம். அதனால்தான் சைபர் ஸ்பேஸில் ஒழுங்காக அமைதியாய் இருக்கும் பேர்வழிகள் திடீரென்று ஏதோ கற்பனை எதிரிகளைக் கண்ணால் கண்டு, கையில் உருவிய வாளுடன் (23 ஆம் புலிகேசியின் ஆஸ்தான கொல்லன் செய்தவை) யார் மீதாவது 'உலக நன்மைக்காகப்' பாய்ந்துவிடுகின்றார்களாம். 
இல்லையென்றால் யாராவது சாதாரணமாக ஏதாவது கேட்டுவிட்டால் அது ப்ரபு குலத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் என்று தாமே கற்பனையாகச் செய்துகொண்ட அநீதி அவமானம், சூழ்ச்சி, எதிரிகளின் உளவுவேலை என்று கோபமாகி ட்யுஷும் ட்யுஷும் என்று வெட்டிச் சண்டை தொடங்கிவிடுகிறார்களாம். டான் க்யூஸ்ஷோ எனும் Don Quixote எப்பொழுது யாரிடம் எப்படி வெளிப்படுவார் என்பது புரியாததினால் நாம் தேடிப் பலனில்லை. மேலிடத்திடம் சொல்லி Hi Tech Reinforcements கொண்டுவந்தால்தான் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும். அதற்குள் ரக்த பீஜன் போல் இவர் புதிது புதிதான ஆட்களிடம் பரவிப் பெருகக் கூடியவர். ----- 

.......

பெரிய புடுங்கி மாதிரி தனக்குத் தானே பில்டப் கொடுத்துக்கறது. திடுதிப்புன்னு நட்டுக்கிட்டு பேசறது. யாராவது ஏதாவது சாதாரணமா சொல்லிட்டாலும் உடனே வாள் நுனியால் இரண்டு மூணு கீறி காயப்படுத்தறது. எங்கோ எதிரிப்படை திரள்கிறது என்று நட்டு கழண்டு போய் தன் அணி எதிர் அணி என்று ரத கஜ துரக பதாதி என்று படை சேர்க்கிறது. இல்லை தன் வீர தீர சாகசங்களைப் போட்டு அறோ அறுன்னு அறுக்கறது. இல்லை திடுதிப்புனு கோச்சுக்கினு போய் ஏதாவது சமாதான வெள்ளைக்கொடி காட்டணும்ங்கறது. -- இதெல்லாம் சொல்கிறீர்களா? 

ஆ நீங்கள் அவரைப் பார்த்தீர்களா? 

இல்லை அடிக்கடி இப்படி நடக்கும் போது என்னடா இது எங்கயோ தெரிஞ்ச ஆவேசமா இருக்கேன்னு யோசிச்சேன். என்ன ப்ராப்ளம்னா ஆண் பெண் இருபாலாரிடமும் இந்த டான் க்விக்ஸாட் ஆவேசம் ஏற்படுகிறது. 

சரி ஐயா நாங்கள் கிளம்புகிறோம். இந்த பாஞ்சா என்ன பண்ணப் போகிறார்? 

ஆளைக் காணவில்லை. மாயம். 

என் யூகம் இணைய உலகிற்குள் புகுந்திருப்பார் என்று.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 


***


No comments:

Post a Comment