பக்கங்கள் மொத்தம் 36 + . எதைப்பற்றி? சைவ சித்தாந்தம் பற்றி. 'சிவமாந்தன்மைப் பெருவாழ்வு' என்ற இந்த நூலை இயற்றியவர் முனைவர் ர வையாபுரி. எம் ஏ பி எச் டி. இந்த மாதிரி பெரும் பல்கலைக் கழகப் பட்டங்கள் ஒட்டிக்கொண்டிருந்தால் ஏதோ இருக்கும் என்று எண்ணத் தோன்றும். ஆனால் மனிதர் உண்மையிலேயே படித்தவர். அது மட்டுமன்று. ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள் இயற்றிய சிவஞான போதம் திராவிட மாபாடியம் கூறும் கருத்துக்களை முக்கிய அம்சங்கள் எதுவும் விடுபடாமல் சுருக்கமாக, நிறைவாக, நல்ல தமிழில், பிழையற்ற தமிழில் ஒரு சித்தாந்த வித்யாநிதி தருகிறார் என்றால் அதற்கு எவ்வளவு சிறப்பு இருக்க வேண்டும்? படித்தவுடன் நிறைவைத் தந்த நூல் இது. சைவ சித்தாந்தம் பற்றி இதைவிட முழுமையாக சுருக்கமாக 36 பக்கங்களில் கையேட்டில் வடித்துத் தரமுடியாதென்றே நினைக்கின்றேன். ஆனால் இந்த ரத்தினச் சுருக்க நூலில் தந்திருப்பவை நன்கு புரிந்து கொள்ளப்பட மாபாடியம் இன்றியமையாதது.
உடனேயே போனில் தொடர்பு கொண்டு என் வியப்பையும் நன்றியையும் சொல்லிக் கொண்டேன். நல்ல ஓய்வு பெற்ற வாழ்வு. நிறைவான சிந்தனை வாக்கில் தெரிந்தது. சில கருத்துகளில் ஐயங்கள் அதையும் தெரிவித்துக் கொண்டேன். முனைவர் அவர்கள் பக்கம் 21ல் சகலர், பிரளயாகலர், விஞ்ஞான கலர் என்ற பாகுபாடுகள் ஆணவ மலப் பிணிப்பின் அடிப்படையில் மிகமிக அதிகமான பிணிப்புடையன, அதனில் குறைந்த பிணிப்புடையன, அதனினும் குறைந்த -- வாசனை அளவில்-- பிணிப்புடையன என மூவகையாகப் பிரிக்கும் வழக்கத்தால் ஏற்படுவனவாய் எழுதுகிறார். சாதாரணமாக மாபாடியத்தையோ, சைவ சித்தாந்த நூல்களையோ படிக்குங்கால் மூன்று மலங்களும் உள்ளவர் சகலர் என்றும், கன்மம் நீங்கியவர் பிரளயாகலர் என்றும், மாயையும் நீங்கி ஆணவ மலம் ஒன்றே உள்ளவர் விஞ்ஞான கலர் என்றும் புரிந்துகொள்ளக் கிடைக்கும். ஆனால்
தீக்கையின் உபகாரம் என்ற பகுதியில் சிவஞான முனிவர் 'தத்தமக்கேற்ற சோபான முறையால் அறிவு விளங்குதலுடைய மூவகை ஆன்மாக்கண் மாட்டும் விரவி நிற்கும் மூலமலமாகிய அறியாமைப் பொருள் ஒன்றேயாயினும் அவ்வான்மாக்களது பக்குவ அபக்குவ தாரதம்மியங்கட்கேற்பப் பலவேறுவகைப்படப் பிணிக்கும் மல சத்திகள் சூக்கும, தூல, தூல தர வேறுபாட்டால் பலவேறு வகையவாகலின், அவற்றின் விஞ்ஞானாகலர்க்குப் பிணிப்பாகிய மலசத்தி சூக்குமம், பிரளாயாகலர்க்குப் பிணிப்பாகிய மலசத்தி தூலம், சகலர்க்குப் பிணிப்பாகிய மலசத்தி தூலதரமாம். ' என்று (சூ. ௮, அதி. ௨) கூறுகிறார்.
பொதுவாக மும்மலம் உள்ளவர் சகலர், கன்மம் அற்ற்வர் பிரளயாகலர், மாயை, கன்மம் இரண்டும் அற்றவர் விஞ்ஞானாகலர் என வகைப் படுத்தும் பொது கருத்து சாலும் ஆயினும் பின் அனுட்டானத்தில் முக்கியப் படும் சத்தி நிபாதத்தின் வகைப்பாடுகள், தீக்கை வகைப்பாடுகள் எல்லாம் நோக்க முனைவர் காட்டிய ஆணவ மல பிணிப்பின் வலிமை மென்மை தாரதம்மியங்கள் என்ற நுணுக்கம் முக்கியமானது. அந்த நுணுக்கத்தை 36 பக்கச் சுருக்க நூலிலேயே அறிமுகம் செய்த பெற்றி முனைவரின் அறிவு கொளுத்தும் அக்கறையைத் தெற்றெனக் காட்டுகிறது.
எதற்கு இத்தனையும் கூறுகின்றேன் என்றால் ஒரு சிறு கையடக்க நூலில் அறிமுக நிலையிலேயே அனைத்து முக்கிய அம்சங்களையும் பொதிந்து எழுதுதல் கற்றுத் துறை போகிய பண்டைக்காலத்து பொறுப்பு மிகுந்த அணுகுமுறையாம். அது அபூர்வமாகவே இற்றைக்காலத்து அறிஞர்களிடத்தில் இருக்கக் காண்கிறோம். அத்தகைய ஒரு முனைவர் சித்தாந்த வித்யாநிதி எழுதிய நூல் சிறிதாயினும் பெருமையில் மாணப் பெரிது அன்றோ!
நூல் விவரம்:-- சிவமாந்தன்மைப் பெருவாழ்வு, முனைவர் ர வையாபுரி, எம் ஏ பி எச் டி கோவை, நூல் கிடைக்குமிடம் : புலவர் இரா மீனாட்சி எம் ஏ பி எட்., சித்தம் அழகியார் வழிபாட்டுக் குழு, F--66 பெரியார் நகர், ஈரோடு -- 1, போன் 2255295. விலை ரூ 20 மட்டுமே.
No comments:
Post a Comment