Friday, May 3, 2019

வினோதமான தபால்நிலையம்


கூரத்தாழ்வானுக்கு பால்ய சிநேகிதனாக இருப்பார் ஒரு நண்பருக்கு நெடுங்காலம் பிள்ளை இல்லாமல் இருந்து பிறகு பிள்ளை பிறந்தது. அந்தச் சந்தோஷச் செய்தியை அந்த நண்பர் ஆழ்வானுக்கு வந்து சொன்னார். கேட்டதும் ஆழ்வான் நம்பெருமாள் சந்நிதிக்குச் சென்று அந்தக் குழந்தைக்கு வேண்டிய நன்மைகள் விளையும் படி பெரிய பெருமாளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வந்தார்.

அதன்பிறகு அந்த நண்பர் இருக்கும் கிராமத்திலிருந்து வருவோர் போவோரையெல்லாம் அந்தக் குழந்தையின் நலத்தையும், அது எப்படி வளர்ந்து வருகிறது, என்ன செய்கிறது, என்ன படிக்கிறது, அதனுடைய மனப்போக்கு எப்படி வெளிப்படுகிறது என்றெல்லாம் விரிவாகக் கேட்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மனைவியான ஆண்டாள் என்பவர், 'இது என்ன அர்த்தம் நீர் செய்வதற்குப் பொருள் புரியவில்லையே! நீரோ அங்கு போய் குழந்தையைக் காணவில்லை. இங்கிருந்தபடியே கோயிலுக்குச் சென்று பிரார்த்தித்துவிட்டு வந்து விட்டீர்கள். அப்புறம் அந்தக் குழந்தையைக் குறித்து இப்படி வளருகிறதா அப்படி வளருகிறதா என்று குறிப்பாக விசாரிக்கிறீர்கள். என்ன அர்த்தம் இதற்கு?' என்றார்.

அதற்கு கூரத்தாழ்வான் கூறிய பதில் வினோதமாக இருக்கிறது:

"ஒருவனை ராஜா விலங்கிட்டுச் சிறையில் தள்ளினால் அவன் விடுதலை உற வேண்டும் என்று அவனுக்கு இதத்தை விரும்பும் அவனுக்கு நன்மை விரும்பும் உறவினரோ அல்லது நண்பரோ, அவனைப் போய் அடிக்கடி பார்த்து வருவார்களா அல்லது அவனைச் சிறையில் இட்ட அரசனைச் சென்று அடிக்கடி பார்த்துப் பலவிதத்திலும் ராஜா மனம் கனியும்படி பிரார்த்தித்து வருவார்களா, சொல்! அவனைச் சிறையிலினின்றும் மீட்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள், ராஜாவைத்தானே அடிக்கடி கண்டு வருவார்கள். அது போன்று நானும் அந்தக் குழந்தைக்கு ஹிதம் செய்ய வேண்டி, அது இந்த உலகியல் வாழ்விலிருந்து விடுதலை பெற வெண்டும் என்று பெரிய பெருமாளிடம் பிரார்த்தித்து வந்தேன். அந்தக் குழந்தைக்கோ அதனுடைய கர்ம வினைப்பயன்களின் காரணமாகப் பிறவி அமைந்துள்ளது. அது விடுதலை பெற வேண்டும் என்றால் அதற்கு பெரிய பெருமாள் அன்றோ மனம் கனிய வேண்டும்! எனவேதான் அப்படிச் செய்தேன்" என்றார்.

சொல்லி வைத்தாற்போல் அந்தப் பிள்ளை வளர்ந்து சாத்திரங்களைக் கற்கும் பருவம் வந்ததும் நேராக ஆழ்வானைத் தேடிக் கொண்டு திருவரங்கமே வந்து சேர்ந்து விட்டது.

இது என்ன ஒரு வினோதமான தபால் நிலையம் என்று புரியவில்லை!

(குறிப்பு - வார்த்தாமாலை)

***


No comments:

Post a Comment