தான் ஆத்மா என்பது ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த அக அனுபவமாய் அன்றாடமும் இருப்பது. ஏனேனில் நனவு நிலையில் மனிதன் தான் எது எதுவாகக் கருதி புழங்குகிறானோ அது அனைத்தும் மாறிப் போய்விடும் நிலையில்தான் அவன் தூக்க நிலையே அமைகிறது. நனவு நேரத்துத் தான் என்ற நிஜத்திற்கு மனிதன் முற்றிலும் இறந்தவனாகத் தினமும் ஆகிறான் என்பதுதான் அவனது தினசரி தூக்கமே. அப்பொழுது தூக்கம், நனவு, கனவு என்ற இந்த நிலை மாற்றங்களுக்கு அடிப்படையாக மாறாமல் இருக்கும் சைதன்ய வஸ்துதான் ஆத்மாவாகிய தான் என்ற தன்னியல்பாகிய ஓர் உணர்வு நம்மை அறியாமலேயே ஆழத்தில் போய்க் கொண்டிருப்பதால்தான் நமது நனவு, துயில், கனவு என்ற நிலை வேறுபாடுகள் கொண்ட வாழ்க்கையே நடந்துகொண்டிருக்கிறது.
ஹிந்து மதத்தைப் புரிந்துகொள்ள ஏதாவது ஒரு கருத்தைத் தொடக்க முதலே நன்கு தெளிவாக மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அது இந்தக் கருத்துதான் என்பேன். மனிதன் என்பவன் உண்மையில் ஆத்மா என்ற தெளிவின் அடிப்படையில் புரியக் கூடிய அனைத்து கருத்துகளையும் நாம் அந்த அடிப்படை ஆத்ம ஞானம் இல்லாமலேயே புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் அத்தனை குழப்பங்களுக்கும், திரிபுகளுக்கும் காரணம். ஆனால் என்ன செய்வது? உலக வாழ்க்கையின் அமைப்பே அறியாமையிலிருந்து அறிவை நோக்கிச் செல்லுதல் என்றபடிதான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைவதற்கான ஆத்ம சாதனத்தின் முக்கிய அம்சமாக இருப்பவை ஆத்ம குணங்கள்.
வாழ்க்கையில் எவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் ஆத்ம குணங்கள் எனப்படும் எட்டும் ஒருவரிடம் இல்லையென்றால் அவர் ஒரு சிறப்பும் எய்துவதில்லை என்று கௌதம தர்ம ஸூத்ரம் கூறுகிறது. எட்டு ஆத்ம குணங்கள் வாய்க்கவில்லையேல் அனைத்தும் வீணாகிவிடும் என்ற இந்தக் கருத்தை ஆகமங்களும் உரைக்கின்றன. எட்டு ஆத்ம குணங்களை எட்டு மலர்களாய் உருவகப்படுத்தி அகவயமான பூஜையில் தெய்வ சந்நிதியில் இடும் எண்மலர்களாய்க் கூறுவது வழக்கம். அந்த ஆத்ம குணங்கள் என்ன என்ன?
ஆத்ம குணங்கள் எட்டு --
தயை (மற்ற உயிர்கள்பால் புரிந்துணர்வோடு கூடிய இரக்க உள்ளம்),
பொறுமை (க்ஷாந்தி),
பொறாமையற்றிருத்தல் (அநஸூயை),
முக்கரணங்களாலும் தூய்மை (சௌசம்),
வருத்தமடையாத தன்மை (அநாயாஸம்),
மங்களம் (சுபமான சொற்கள், செயல்கள்,
நினைவுகளையே போற்றுதல்),
அகார்ப்பண்யம் (பொருள்பற்று கொண்டு எவர்க்கும் எக்காலத்தும் எதுவும் உதவாதிருக்கும் கார்ப்பண்யம் இல்லாதிருத்தல்),
அஸ்ப்ருஹம் (கிடைத்தவற்றில் பற்றும், கிடைக்காத பொருட்களில் நசையும் இல்லாதிருத்தல்).
ஆகிய இந்த எட்டும் ஆத்ம குணங்கள்.
’யஸ்யைதே சத்வாரிம்சத் ஸம்ஸ்காரா: ந ச அஷ்டாவாத்ம குணா: ந ஸ ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் ஸாலோக்யம் கச்சதி ’
"எவர்க்குப் பலவிதமான சம்ஸ்காரங்கள் இருந்தும் இந்த எட்டு ஆத்ம குணங்கள் இல்லையோ, அவர்கள் இறைவன்பால் ஒன்றுவதும் இல்லை, இறைவனின் உலகம் புகுவதும் இல்லை" -- என்பது கௌதம தர்ம ஸூத்ரத்தில் காணும் முடிவு. பெரும் அருளாளர்களும், முனிவர்களும் கண்ட முடிவு ஹிந்து மதத்தின் ஸாரமான கருத்துகளில் ஒன்றாக இருக்கிறது. அதாவது மதம் என்பதன் மொத்த நடவடிக்கையின் உள்நோக்கம் மனிதனாகப் பிறந்து இவ்வுடல் சார்ந்த உணர்ச்சிகளே வாழ்வு என்று முடிந்துவிடாமல், ஆத்ம குணங்களைப் பெற்று மேலும் மேலும் ஆத்ம ஞானத்தில் வளரச் செய்வதுவே ஆகும்.
ஆத்ம ஞானம் ஏற்பட்டவருக்குத்தான் மதம், ஆன்மிகம், கடவுள் என்ற பேச்சு எல்லாமுமே. ஆத்ம ஞானம் ஏற்பட்டவருக்குத்தான் பரமாத்மா என்பதைப் பற்றியும் புரியும். தான் இந்த உடலன்று; இந்த மனமன்று; இந்த ப்ராணனோ, பொறி புலன்களோ எதுவும் அன்று; தான் ஆத்மாவே என்ற அடிப்படை உணர்வின் தெளிவு என்பதற்கு மேல்தான் தெய்விக வாழ்வு என்பதே எழுகிறது. ஏனெனில் ஆத்ம ஞானத்தின் பின்னர்தான் உண்மையில் மதம் என்பதே ஆரம்பிக்கின்றது.
இந்த ஆத்ம ஞானத்தை வளர்க்கத்தான் அத்தனை யோக நெறிகளும், கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்னும் எல்லாம் வழிமுறைகளாய் இருக்கின்றன. கருவுயிர்த்து, பிறந்து, வளர்ந்து பல அனுபவங்களை அடையும் ஜீவன், தான் இந்த உடலேதான் என்ற 'உடலை ஆத்மாவாகக் கருதுதல்' (தேக ஆத்ம அபிமானம்) என்பதைச் சுலபத்தில் விடமுடியாது. அன்றாடம் நனவு, துயில், கனவு என்ற நிலை வேறுபாடுகள் அன்றாட அனுபவத்திலேயே நடந்துகொண்டிருந்தாலும் உடலோடு ஒன்றி உணர்வது என்பது ஜீவனோடு அவ்வளவு ஊறிப்போன விஷயம் ஆகும். இந்த உடல் உணர்ச்சிகளால் ஆன தன்னைப் பற்றிய வடிவம் தன்னுடைய உண்மையான சுயம் இல்லை என்று பிரித்தறிதலே ஆத்ம ஞானத்தின் ஆரம்பமாகும். அவ்வாறு தேகமே தான் என்ற உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கும் மனத்தைப் பயிற்றி, தான் உண்மையில் ஆத்மா என்ற உணர்வு விளக்கம் பெறுவதற்கான அடிப்படை ஆத்ம குணங்களைப் பயில்வதாகும்.
***
No comments:
Post a Comment