Thursday, May 2, 2019

சாதுகை மாந்தர்


தமிழில் மிகவும் அருகிய பயன்பாடுடைய சில சொற்களை ஆண்டுவிடுவர் கவிகள். பின்னர் அந்தச் சொற்களின் சரிதம் புதிரடைந்து நிற்கும். 'உரிஞு' என்றொரு சொல் சங்க இலக்கியத்தில். ஞு கொண்டு முடியும் ஒற்றைத் தமிழ்ச் சொல். மிக அருகிய பயன்பாடு. ஏன் இதைப் பயன்படுத்தினர்? இந்தச் சொல்லின் சரிதம் என்ன? என்பதெல்லாம் சரிவரத் தெரிந்தபாடில்லை

இத்தகைய ஒரு பயன்பாடு 'சாதுகை மாந்தர்' என்னும் சொற்கோவை. இந்தச் சொற்கோவை பயன்படும் இடம் கம்பராமாயணம். அயோத்தியா காண்டத்திலும், யுத்த காண்டத்திலும் இந்தச் சொல்லின் பயன்பாடு தெரியவருகிறது. கம்பருக்கு முன் யாரும் இந்தச் சொற்கோவையைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. அவர் காலத்திற்குப் பின் பயன்பட்டிருக்கலாம்

கம்பர் செய்த சொற்கோவை உருவாக்கம் இது என்று சொல்லலாமா தெரியவில்லை. காரணம் இதில் 'மாந்தர்' என்பது பொருள் தெரிந்தது. மனிதர், மக்கள் என்ற பொருளில் பயன்பாடு. ஆனால் சாதுகை என்பது என்ன

பார்த்தால் சாதுவாக இருக்கும் இந்தச் சொல் சில நாட்களாக என்னைப் படுத்துகிறது. முன்னரே இந்த ப்ரச்சனையைப் பற்றி செந்தமிழ் இதழ்களில் படித்தபோது குடைச்சல் இருந்தது. சரி பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று விட்டது இப்பொழுது நினைவில் எங்கிருந்தோ தலை தூக்கிவிட்டது. இதைப் பற்றிச் செந்தமிழ்ப் பத்திரிக்கையில் 1922-1923 ஆண்டுகளில் பல அறிஞர்கள் விவாதம் செய்துள்ளனர். திரு இராமய்யங்கார், திரு கே ஜி சேஷய்யர், திரு அப்பனையங்கார் முதலியோர். (செந்தமிழ், தொகுதி 21, 1922-1923). அப்பொழுதே இவர்தம் வாதங்களைத் தொகுத்து பேராசிரியர் திரு வையாபுரிப்பிள்ளை அவர்கள் செந்தமிழிலேயே கட்டுரை ஒன்றும் வரைந்திருக்கிறார். (திரு வையாபுரிப் பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி 2, 1989). 

முடிவு என்னவெனில் 'சாதுகை' என்ற சொல் அப்படியே எடுத்துக்கொண்டால் சரிப்படவில்லை. கொஞ்சம் வேற வடிவமாய் இருக்கலாம் என்று கொண்டால்தான், அதாவது சாதகை, சாதுதை, சாதுவாம் என்றபடியான பாட பேதங்களாய்க் கொண்டு பொருள் கண்டு பிடிக்கத்தான் முனைந்திருக்கின்றனர். தொகுத்துரைத்த திரு வையாபுரிப்பிள்ளையின் பரிந்துரையும் 'ஸாதுதா' என்னும் வடமொழிப் பதத்தின் தமிழ் வடிவமாகிய சாதுதை என்பதாக இருக்கிறது. என்பதில் முடியும் வடமொழிச் சொற்கள் தமிழ் வடிவத்தில் என்று முடிந்துவரும். (. கா) அம்பா - அம்பை, கங்கா - கங்கை முதலியன

பின்வந்த பல பத்தாண்டுகளில் திரு டி கே சி போன்றவர்கள் சாதனை மாந்தர் என்று இருக்க வேண்டும் எனவும், இன்னும் பலர் ஆழ்வார் பாடல்களிலிருந்து 'சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்'(திருமழிசையாழ்வார், நான்முகன் திருவந்தாதி, பாசுரம் 68) என்ற இடத்தை மேற்கோள் காட்டிச் சாதுவ மாந்தர் என்று இருக்க வேண்டும் என்றும் பலபட எழுதிவந்துள்ளனர்

ஆக, சாதுகை என்னும் வடிவில் இந்தச் சொல் குடைச்சல் கொடுத்த வண்ணமாய் இருந்துவந்துள்ளது. பாட பேதங்கள் காட்டிப் பதிப்பித்தோரும் இந்தச் 'சாதுகை மாந்தர்' என்ற வடிவமே பெரும்பாலான பிரதிகளில் இருந்ததைக் கணக்கில் கொண்டும், அறிஞர்கள், கம்பராமாயணப் புலவர்களின் வழிவழிப் பயன்பாடு கருதியும், இந்தச் 'சாதுகை மாந்தர்' என்ற வடிவத்தையே படலங்களுள் முக்கிய பாடமாகப் பெய்து வைத்துள்ளனர். மற்றைய பாட பேதங்களை அடிக்குறிப்பில்தான் காட்டுகின்றனர்

இப்பொழுது இந்தச் 'சாதுகை மாந்தர்' என்ற பயன்பாட்டை மீள் பார்வைக்கு நான் எடுத்துக்கொண்ட நோக்கம் இதை அறுதியாகத் தீர்த்து வைக்கப் புறப்பட்டுவிட்டேன் என்பது அன்று. ஆனால் இந்தச் சொற்கோவையானது உள்ளபடியே, கம்ப ராமாயணம், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஆகிய இரண்டும் உதவும் காவியச் சூழல்களின் விவர நுணுக்கங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால் பொருந்தி வருகிறது என்னும் கருத்தை முன்வைக்கத்தான்

எனவே நமது நோக்கத்திற்கு முதன் முன்னம் உதவுவது இரு மொழி ராமாயணங்களும் தருகின்ற விவரணைகள் என்ற காரணத்தால், முதலில் இந்தச் சொற்கோவையை நேரே முதலில் கையாண்டிருக்கும் கம்ப ராமாயணத்தில் அயோத்தியா காண்டம், யுத்த காண்டம் என்னும் இரண்டு இடங்களின் விவரணைகளையும், அவற்றையொத்த இடங்களில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் காணும் விவரணைகளையும் முதலில் பார்ப்போம். ஏன் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தையும் காண வேண்டும் எனில், வால்மீகியைத் தான் முழுவதும் அடியொற்றுவதாகக் கம்பன் உரைத்திருப்பதும் ஒரு காரணம்

அயோத்தியா காண்டத்தில், கைகேயி சூழ்வினைப் படலத்தில், பாடல் 1560, 

மாதர்கள் கற்பின் மிக்கார்
கோசலை மனத்தை ஒத்தார்;​
வேதியர் வசிட்டன் ஒத்தார்;​
வேறுள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்;​ அன்னாள்
திருவினை ஒத்தாள்;​ அவ்வூர்ச்
சாதுகை மாந்தர் எல்லாம்
தன் தன்னை ஒத்தார்​.
இதில் சாதுகை மாந்தருக்கு ஒப்பு தயரதன் என்பதாகக் கவியின் கூற்று வருகிறது. ஏன் தயரதனை ஒப்பாகச் சொல்ல வேண்டும்? ஸ்ரீராமனுக்கு முடிசூட்டுவிழா என்று முடிவெடுத்ததும் தயரதன் மனநிலை எப்படி இருந்ததோ அந்த மன நிலையில் இருந்தனர் சாதுகை மாந்தர் என்பது கம்பர் தரும் விவரணை

மாதர்கள், மகளிர் என்று இரண்டு வகையைக் காட்டுகிறார் கம்பர். இல்லறத்தில் நன்கு பயின்றவர்களை மாதர்கள் என்றும், புதிதாக இல்லறம் பேணும் தசையில் இருப்பவர்களை மகளிர் என்றும் பிரித்துக் காட்டுகிறார். அங்கு உள்ள மாதர்கள் அனைவருக்கும் பொது விவரணையாக கற்பின் மிக்கார் என்று காட்டி, அப்படிப்பட்ட மாதர்கள் கோசலையை ஒத்திருக்கிறார்கள் என்று கூட கூறாமல், கோசலை மனத்தை ஒத்தவர்கள் என்று கூறுகிறார். இங்கு ஏன் கற்பின் மிக்கார் என்று கூற வேண்டும்? கோசலை மனத்திற்கும், கற்பிற்கும் என்ன தொடர்பு? தன்னையும் கேட்காமல் தன் மகனைக் காடேகப் பணித்த கணவனை எந்தக் கேள்வியும் கேட்காது மன்னவன் முடிவு அது என்றால் அதற்கு கீழ்ப்படிதலைச் சிந்தை செய்யும் தகைமையுள்ள மனம் கோசலை மனம்

இங்கு ஒரு காண்ட்ராஸ்ட் வைக்கின்றார் கம்பர். தன் மகனுக்கு மணிமுடி, மூத்தவள் மகனுக்குக் காடு என்று கேட்டுத் தன் விதவை நிலையை ஈட்டிக்கொண்ட கைகேயி ஒரு புறம். தன்னையும் கேளாமல் தன் மகனைக் காடேகப் பணித்த மன்னவன் சொல்லுக்கு மனத்தாலும் மாறு நினையா சிந்தையளாய்க் கோசலை என்றபடிப் பகைப்புலம் காட்டி நிறுத்துகிறார் கவி. அப்படிக் கூறிவரும் காலத்தில் அவர் தயரதனின் மனநிலையைச் சாதுகை மாந்தருக்கு உவமையாக்குகிறார். இது அயோத்தியா காண்டத்தின் விவரணை

இனி யுத்த காண்டத்திற்கு வருவோம். மீட்சிப் படலத்தில் போர் முடிந்து பிராட்டியை மீண்டும் பிரான் அடையும் கட்டத்தில், நெடியவனாகிய ஸ்ரீராமபிரான் விபீஷணனைப் பார்த்து, 'வீடண! சென்று தா, நம தேவியை, சீரொடும்' என்று பணிக்க, வீடணன் சீதையை அழைத்து வருகின்றான். வான மடந்தையரும், உண்டை வானரரும், ஒள்வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓடுகின்றனர் அந்த அரிய காட்சியைப் பார்ப்பதற்கு. இப்புறத்து இமையவர், முனிவர் ஏழையர், விஞ்சைத் தோகையர், முப்புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் ஒப்புறக் குவிந்தனர். அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் அனைவரும். மருங்கு, பின், முன் செல்வதற்கு வழியே இல்லை என்னும் படி நெருங்கினார்கள். நெருங்குழி, நிருதர் ஓச்சலால், கரும் கடல் முழக்கு என்னப் பிறந்தது கம்பலை ஆகிய இரைச்சல்

இவ்வொலி யாவது? என்று இயம்பினான் இராகவன். கவ்வை இல்லாத முனிவர்கள் இவ்வாறு என்று விளக்கினார்கள்

முனிவர்கள் சொல்லி முடிப்பதற்கு முன் அண்ணல் கோபத்தால் பெரிதாக நகைத்து, வீடணனை நோக்கி, 'புனித நூல்களை எல்லாம் கற்று உணரும் புத்தி உள்ளவனே ! நீ தகாது செய்யலாமா? உவகையின் அடைகின்றார்களைக் கடிந்திட யார் சொன்னார்? நூல் வல்லவனே ! நீ இதைக் கருது. பார்வதியின்றி பரசுடைக் கடவுளா? திருமகள் இன்றி திருமாலா? கலைவாணியின்றி நான்முகனா? இவர்கள் அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ? கரை காணாத அரிய தேவர்கள், ஏனையோர் எல்லாம், கலந்து காணும் இந்த அரிய சேர்த்தி உற்சவத்தைக் காண விரசுறின், விலக்குவார்களா? இதில் வேறுள யார்க்கு என்ன அதிகாரம்? யார் வழங்கியது?' என்றெல்லாம் கேட்டுவிட்டுக் கூறுவான் -- 

யுத்த காண்டம் 37. 54, மீட்சிப் படலம் 

ஆதலான் அரக்கர் கோவே 
அடுப்பதன் றுனக்கும் இன்னே 
சாதுகை மாந்தர் தம்மைத் 
தடுப்பது என்றருளி, செங்கண் 
வேதநாயகந்தான் நிற்ப
வெய்துயிர்த் தலக்கண் எய்தி 
கோதிலா மனனும் மெய்யும் 
குலைந்தனன் குணங்கள் தூயோன்

இங்கும் உவகையின் அடைகின்றார்களை விலக்குதல் கூடாது என்னும் இராகவன், 'சாதுகை மாந்தர் தம்மைத் தடுப்பது அடுப்பது அன்று உனக்கு' என்று வீடணனிடம் கூறுகிறார் என்று கம்பர் காட்டுகிறார். அயோத்தியா காண்டத்தில் வந்த அதே 'சாதுகை மாந்தர்' என்ற சொற்கோவை இங்கு யுத்த காண்டத்திலும் மீட்சிப் படலத்தில் பயன்படுத்தப்படுகிறது

தயரதன் தன்னை ஒத்த சாதுகை மாந்தர் அயோத்தியா காண்டத்தில்

உவகையின் அடைகின்ற சாதுகை மாந்தர் இங்கு யுத்த காண்டம் மீட்சிப் படலத்தில்

இந்தச் சாதுகை மாந்தர் என்பது யாரைக் குறிக்கிறது

யுத்த காண்டத்தின்படி வானவர், முனிவர் ஏழையர், விஞ்சைத் தோகையர், முப்புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் ஆகிய உவகையின் அடைகின்ற சாதுகை மாந்தர்

அயோத்தியா காண்டத்தின்படி, மாதர்கள், வேதியர், மகளிர் ஆகியோருக்கு அடுத்துச் சொல்லப்படும் 'அவ்வூர்ச் சாதுகை மாந்தர்'. 

இந்த இடத்தில் 'சாதுகை' என்பதற்குப் பொருள் தேட வேண்டி, அந்தச் சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு சாதுவானவர்கள், நல்லவர்கள், அமைதியானவர்கள் என்ற பொருள் வரும்படியான சாதுவர், சாதுக்கள், சாத்விகர் என்றெல்லாம் மாற்றிப் பார்த்தாலும் விவரணைகளுக்கும் அவற்றிற்கும் பொருந்தவில்லை. செந்தமிழில் அன்றைய அறிஞர்கள் செய்ததுபோல் சாதகை என்றோ, அல்லது திரு வையாபுரிப்பிள்ளை செய்ததுபோல் ஸாதுதா என்பதன் தமிழ் வடிவம் என்று கொண்டு சாதுதை என்றோ ஆக்கிப் பார்த்தாலும் விவரணைகளுக்கும் அவற்றிற்கும் பொருத்தப்பாடு இல்லை

இது இப்படியென்றால், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் காட்டும் விவரணைகள் என்ன என்று பார்ப்போம்

இதே யுத்த காண்டத்தில் சீதை மீட்புக் கட்டத்தில், ஸ்ரீராகவன் 'புண்யாத்மாவும் எப்பொழுதும் எனது வெற்றியில் அசஞ்சலப் பற்றுடையவனுமாகிய அரக்கமன்னா! ஜானகி எனது சமீபத்திற்கு விரைவாய் வந்து சேரட்டும்' என்று விபீஷணனிடம் கூறியதும், விபீஷணன் சென்று சீதாதேவியை அழைத்துவருகிறான்

'அப்பொழுது சட்டைகளையும், தலைப்பாகைகளையும் அணிந்தவர்களும், பிரம்பைப் பிடித்துத் தழும்புகொண்ட கைகள் உற்றவர்களுமான புருஷர்கள் நாற்புறத்திலும் விலக்குபவர்களாய்ச் சஞ்சரித்தார்கள். அப்பொழுது எப்புறமும் கரடிகளுடையவும், வானரர்களுடையவும், அரக்கர்களுடையவும் விலக்கப்படும் கூட்டங்கள் தூரத்தில் விலகிக்கொண்டன.' விலக்கி ஒதுக்கப்படும் அந்த ஓசையைக் கேட்டதும், ஸ்ரீராமர் நாற்புறமும் விலக்கப்படும் அவர்களை பரபரப்புள்ளவர்களாய்க் கண்டு அவர்கள்பால் உள்ள பிரியத்தாலும், விபீஷணரிடம் கோபத்தாலும் அதைத் தடுக்கலுற்றார்

"என்னிடம் மரியாதையால் ஏற்படும் பயத்தை விட்டொழித்து இந்த ஜனமானது ஏன் உன்னால் துன்புறுத்தப்படுகிறது? இந்தக் காரியத்தைத் தடுப்பாயாக. இந்த ஜனமானது எனது சொந்த ஜனம். ஒரு மங்கைக்கு காவல் நல்லொழுக்கமே. வீடுகளல்ல, வஸ்திரங்கள் அல்ல, மதில்களும், திரைகளும் அல்ல, இப்படிப்பட்ட ராஜ்ய மரியாதைகளும் அல்ல. ஒரு ஸ்த்ரீயைப் பார்த்தலானது ஆபத்துக்களில் குற்றமாகாது. கஷ்டங்களில் குற்றமாகாது. யுத்தங்களிலும், ஸ்வயம்வரத்திலும் குற்றமாகாது. யாகத்திலும் குற்றமாகாது. விவாஹத்திலும் குற்றமாகாது. அந்த இவளோ போர்த்தலத்தை அடைந்தவளாய் பெரும் கஷ்டத்திலும் இருக்கின்றாள். இவளை அதிலும் விசேஷமாய் எனதருகில் காணுவதில் குற்றமே ஆகாது." 

இதுதான் ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் காணப்படும் யுத்தகாண்டத்து வர்ணனை

இந்தக் கட்டத்தை தமிழில் உரைநடையாக மொழிபெயர்த்த ஸ்ரீ வே ஸீ ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார் அவர்களின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், தமிழ் வசனம், பாகம் 2, லிஃப்கோ பதிப்பு, 1984, பக் 433ல் கண்டபடி விவரணம் கூடுதல் விவரங்களுடனும் பொருட்சாயைகளுடனும் இருக்கிறது

"அந்தப்புர உத்யோகஸ்தர்கள் பிரம்புகளால் அங்கிருந்த ராக்ஷஸர்களையும், கரடிகளையும், வானரர்களையும் தூரத்தில் ஒதுக்கினார்கள். அப்பொழுது ஸமுத்ரத்தில் பெருங்காற்றுக் கிளம்புவது போல் பெருங்கூச்சல் உண்டாயிற்று. அதைக்கண்டு ராமன், வானரர்களிடத்திலுள்ள விசேஷ ஸ்நேஹத்தால் அதைப் பொறுக்காமல், அவர்களைத் தடுத்து, மஹா புத்திமானான விபீஷணனை நெருப்புப் பொறிபறக்கும் கண்களால் எரித்துவிடுகிறவரைப்போல் கோபத்துடன் பார்த்து, நான் இருப்பதைக் கொஞ்சம் கூட லக்ஷ்யம் செய்யாமல் இவர்களை இப்படி உபத்திரவிக்கத் துணிந்தாயல்லவா? போதும் நிறுத்து; இவர்களை யாரென்று நினைத்தாய்? என்னைச் சேர்ந்தவர்கள்; என் உயிருக்கு ஸமானர்கள்." என்று கூறத்தொடங்கி, "இவர்களெல்லோரும் இவ்வளவு கஷ்டப்பட்டதும், வீடு வாசல்களை விட்டு இங்கே வந்ததும், கோரமான ராக்ஷஸர்களால் அடிபட்டு மடிந்ததும் எதற்காக? இவளுடைய கஷ்டத்தை நிவர்த்தி செய்து இவளுக்குப் பிராணதானம் செய்வதற்கல்லவா? அப்படிப்பட்டவர்கள் இவளுக்குப் பிதாக்களல்லவா? தகப்பன் பெண்ணைப் பார்ப்பதில் தோஷமென்ன?" என்று கூறுவதாக ஸ்ரீ ஸீ ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார் மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது. முன்னுரையிலேயே ஸ்ரீ ஸீ ஆர் ஸ்ரீநிவாஸய்யங்கார் அவர்கள் கூறுகிறார்கள், தாம் மூலத்தை அப்படியே பதத்திற்குப் பதம் என்று மொழிபெயர்க்காமல், பழைய வியாக்க்கியானங்களில் காணப்படும் செய்திகளையும் தேவையானவற்றை உள்ளடக்கியே மொழிபெயர்த்திருப்பதாய்க் கூறுகின்றார்

ஆக, ஸ்ரீமத் வால்மீகி ராமாயண ரீதியாகப் பார்த்தால் நிருத சேவகர்களால் விலக்கப்பட்டவர்கள் வானவர்களோ, வித்யாதரர்களோ, முனிவர் ஏழையரோ அல்ல. சாதாரணமான கரடிக் கூட்டங்கள், வானரக் கூட்டங்கள் அதாவது பொது ஜனங்கள் அல்லது சாதாரணப் போர்வீரர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும்தான். ஆனால் இந்தக் கட்டத்தைக் கம்பர் காவியத்தில் கூறும்பொழுது வானவர், முனிவர் ஏழையர், விஞ்சைத் தோகையர், வானரர் ஆகியோர் அடங்கிய எண்ணிறந்த மக்களைப் பற்றிய வர்ணனையாகக் கூறிச் சாதுகை மாந்தர் என்று இத்தகைய மக்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்

அயோத்தியா காண்டத்திலோ மாதர்கள், மகளிர், வேதியர் என்போர்களைக் குறிப்பிட்டுவிட்டு அவ்வூர்ச் சாதுகை மாந்தர் தயரதன் தன்னை ஒத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். யுத்த காண்டத்தில் சாதுகை மாந்தர் திரண்ட சாதாரண பொது ஜனங்களைக் குறிக்கக் கம்பரால் பயன்படுத்தப்படுகிறது. அயோத்தியா காண்டத்திலோ அயோத்தி நகரத்துச் சாதுகை மாந்தர் தயரதன் தன்னை ஒத்தவர்களாய் ஸ்ரீராமனுக்கு முடிசூட்டு விழா நடக்கும் தருவாயில் குறிப்பிடப்படுகின்றனர்

சாதுகை மாந்தர் என்பது கம்பருக்கு முன்னால் யாராலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஸ்ரீநிவாஸய்யங்கார் மொழிபெயர்ப்பிலோ யுத்த காண்டத்தில் ஸ்ரீராமன் தங்களுக்காக உயிரையும் கொடுத்து உழைத்த அந்த எளிய பொதுஜனங்களைத் தந்தைக்குச் சமானமானவர்கள் என்ரு கருதும் குறிப்பு வருகிறது. மேலும் தசரதனோ, ஸ்ரீராமனோ 'ராஜ்யம் உபாஸித்வா' என்று தாம் வெறுமனே அரசாட்சி புரியாமல் தம் ராஜ்யத்தையே தவம் போல் உபாஸித்தவர்கள் என்றும் ராமாயணம் கூறுகிறது

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது, என் கருத்து யாதெனில் சாதுகை மாந்தர் என்பது சாதாரண மக்களை, பொது ஜனங்களைக் குறிப்பிட கம்பர் உண்டாக்கிய சொல்லாட்சி என்று தோன்றுகிறது

சாதாரணமான எளிய மக்கள் என்ற பொருள் சாதுகை மாந்தர் என்பதில் இயல்பாகவும் கிடைக்க வழியிருக்கிறது. சாது+கை மாந்தர் என்று பிரித்துப் பொருள் கண்டால், சாதாரண, எளிய மக்கள் என்பது பொருளாகத் தேரும் வாய்ப்பு இருக்கிறது. கைக்கிளை என்னும் சொல்லில் கை என்பது சிறிய, எளிய, குறைந்த என்னும் பொருளைத் தரக்காணலாம். கைக்கிளை என்பதற்கு தமது தொல்காப்பியம் பொருளதிகார உரையில் இளம்பூரணர் கூறும் பொருள் பற்றிய கருத்து ஈண்டு நோக்குதற்குரியது:-- 

" கைக்கிளை என்ற பொருண்மை யாதோ எனின், கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள்செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமகக்ள் உறவு என்றவாறு; கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கை வாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாதலின்."
(தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், ஜூலை 1956)

எனவே சாது கை மாந்தர் என்பது சாதாரண எளிய மக்கள் என்ற பொருள் தரத்தக்கதாய்க் கம்பர் உண்டாக்கிய சொற்கோவை என்று தோன்றுகிறது. இதுதான் இதற்குப் பொருள் என்று அறுதியிட்டுவிட முடியாது எனினும் பொருத்தப்பாடு வர்ணனைகளை வைத்துப் பார்க்கும் பொழுது இதற்கு மிக்கிருப்பதை உணரலாம்

இந்தச் சாதாரண எளிய பொது ஜனங்களைத் தகையாதே வீடணா ! இவர்கள் தம் உயிரை ஈந்தும் எம் துயரை நீக்கப் பாடுபட்டவர்கள் ஆகையாலே தந்தை போன்று மதிக்கத் தகுந்தவர்கள் என்று யுத்த காண்டத்தில் ஸ்ரீராமன் கூறுவதும், அயோத்யா காண்டத்தில் மாதர்கள் கற்பின் மிக்கவர்கள்; கோசலை மனத்தை ஒத்தவர்கள்; வேதியர் வசிட்டனை ஒத்தவர்கள்; மகளிர் சீதையை ஒத்தவர்கள்; சீதை அந்தத் திருவையே ஒத்தவள்; அவ்வூரைச் சேர்ந்த சாதாரண எளிய மக்களோ என்றால் தயரதன் தன்னையே ஒத்தவர்கள், தந்தையைப் போல ஸ்ரீராமனின் நலத்தையே உயிரை ஈந்தேனும் காப்பதில் ஒப்புமை உடைமையாலே என்று பொருத்திப் பார்க்கும் பொழுது கம்பரின் கவி மாட்சி நன்கு விளங்குமன்றோ

*** 

No comments:

Post a Comment