இப்படி நான் உற்சாகத்தில் ஓசைப்படாமல் கூவியது ஒரு சமயத்தில். ஏன் ஓசைப்படாமல்? அங்கு காது கிடையாது. நண்பன் 1920 களின் ஆசாமி.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி ரொமென் ரொலாந் என்பவர் எழுதிய நூலை நீங்கள் படித்திருப்பீர்களோ தெரியாது. ஆனால் ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தை எப்படி எழுத வேண்டும் என்று ஆதர்சம் காட்டும் நூல். அந்த நூலில் அந்த ரொமென் ரொலாந் தமக்கு எப்படி ஸ்ரீராமகிருஷ்ணரிடமும் விவேகாநந்தரிடமும் ஈடுபாடு வந்தது என்று சொல்லும் போது தன்கோபால் முகர்ஜி என்பவர் எழுதிய ஸ்ரீராமகிருஷ்ண சரித நூலான The Face of Silence என்பதைப் படித்துத்தான் ஆழ்ந்த ஈடுபாடும் ஆர்வமும் ஒருங்கே உண்டானதாகக் கூறுகிறார். அன்றிலிருந்து அந்த தன்கோபால் என்பவரின் நூலை எப்படியாவது படித்துவிட வேண்டும், வாங்கிவிட வேண்டும் என்று உள்ளே நமநமத்துக்கொண்டு இருந்தது. சரி எப்படியும் சந்திக்காமலா போய்விடுவோம் என்று கொஞ்சம் நம்பிக்கை. அவ்வப்பொழுது என்னடா இது அது ஒன்று மிச்சம் இருக்கிறதே... என்று தோன்றும்.
பார்த்தால் ஒரு நாள் கிரி ட்ரேடிங் கடையில் போனால் பொத்தினால் போல் இந்த நூல் புது அச்சாகி உட்கார்ந்து கொண்டிருந்தது. அடப்பாவி.... என்று சைலண்டாகக் கூவியபடி அந்த நூலை பில்லச் சொல்லிவிட்டேன். ஜய்கோ கம்பெனி போட்டிருக்கிறது. கூடவே நூலின் பின் பகுதியாக சுவாமி நிகிலாநந்தா எழுதிய ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கைச் சுருக்கமும் கூடவே சேர்த்துப் போட்டிருக்கிறார்கள்.
தன்கோபாலின் எழுத்தைப் படிக்கும் போதுதான் ஏன் அவருடைய எழுத்து ப்ரெஞ்சு எழுத்தாளரான ரொமென் ரொலாந் கருத்தைக் கவர்ந்தது என்பது புலனாகிறது. என்ன எழுத்து! தேவலை இப்படி எழுதக்கூடியவர்களும் இந்தியாவில் பிறந்து மேலைநாட்டில் போய் தங்கி விட்டார்கள். சுவாமி விவேகாநந்தரின் My Master நூலை விட்டால், மாக்ஸ் முல்லரின் நூலைத் தவிர்த்து, ரொமென் ரொலாந் நூல் வரும் வரை இந்த தன்கோபால் நூல்தான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஆங்கில நூல் மேலை நாட்டினர் பலரும் இந்த நூலின் மூலமாகவே தக்ஷிணேஸ்வரத்து ஆன்மிக ஒளியை அறிய வந்தனர்.
இந்திய-ஆங்கில இலக்கியத்துறைக்கு அருமையான வரவு இந்த ஆங்கில நூல். எத்தனை இந்தியர்களை ஊக்கமும் எழுச்சியும் ஊட்டி உருவாக வழிவகுத்திருப்பார் 'ம' என்னும் திரு மகேந்திரநாத குப்தர் என்பது ஆச்சரியம்தான். அவர்தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மொழியமுதத்தைப் பதிவு செய்த வியாசர். அவரிடம் கொண்ட ஊக்கத்தால் திலீப் குமார் ராய் எழுதிய அற்புதமான நூல் Among the Great என்னும் நூல். ஸ்ரீஅரவிந்தர், மகாத்மா காந்தி, ஸ்ரீ ரவீந்திரநாத தாகூர், பெட்ராண்ட் ரஸ்ஸல் போன்ற பெரியோர்களை அண்டிப் பல உரையாடல்களை எழுப்பி அவற்றைப் பதிவு செய்துள்ளார் திலீப்.
நமது தன்கோபால் 'ம' அவர்களைச் சந்தித்துத் தாம் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்ட போது, 'நீ அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?' என்று கேட்கிறார் 'ம'. அப்படியென்றால்?
'I mean, do you seek the Ramakrishna history, or the Ramakrishna legend?'
தன் கோபால் தயங்கித் தயங்கி,
'I seek just enough facts to enable me to gather all the trustworthy legends together.'
'Good' shouted my host with joy. என்று எழுதுகிறார் தன் கோபால்.
சரித்திரக் கட்டடத் தகவல்களைத் தாம் பதிவு செய்துள்ளதாக அடக்கத்துடன் 'ம' கூறுகிறார். ஆனால் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின் யாரோ ஒரு பெரும் கவிஞன் எழுந்து வந்து தாம் அளித்த தகவல்களின் அடிப்படையில் Ramakrishna legend என்பதைக் காவியமாக வடித்தால் அன்றுதான் தம் பணி நிறைவு எய்தும் என்கிறார் தெய்வப் பேச்சின் பதிவாளர். ஸ்ரீராமகிருஷ்ணர் முதன்முதல் கடவுள் தரிசனம் அடைந்த அன்று அவரது முகம் எப்படி ஒளிர்ந்தது என்பதை நேரில் கண்டவர்களில் இருவர் முதுமை எய்திய நிலையில் இன்னும் உயிரோடு இருக்கின்றனர். முதலில் ஓடு. அவர்கள் மறையும் முன்னே அவர்களது லெஜண்டுகளைப் பதிவு செய் என்று தன்கோபாலை விரட்டுகிறார் 1920களில்.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி 'ம' நினைவு கூறுகிறார்:
Whenever he spoke of God a light unknown on earth would come on his face; then if he touched anyone with his hand or foot, that person would see the whole world bathed in radiance and Anandha(Bliss) for at least three to four days.
தன் கோபால் அப்பொழுது தாம் கண்ட 'ம' வின் தோற்றம் பற்றி எழுதுவது --
The Pundit stopped. The memory of his first spiritual experience filled his face with radiance. His eyes were filled with tears that shone like gems.
நூல் விவரம் - Sri Ramakrishna, The Face of Silence
Swami Nikhilananda, Dhan Gopal Mukerji, Jaico Publishing House, 2011
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
No comments:
Post a Comment