Tuesday, May 7, 2019

சங்க இலக்கியத்தில் சில காட்சிகள்

அறம் செய்வது என்பது வியாபாரமா? அல்லது வழிவழி வழக்கமா? அல்லது அதுவே பயனாகச் செய்யும் மகிழ்செயலாபலருக்கு அது ஒரு வித வியாபாரம்தான். இன்னிக்குச் செய்தால் மறுமைக்கு ஆகும் இல்லையா என்ற நினைப்பு. பின்ன இருக்காதா? ஏனய்யா ஒருவர் ஒன்று செய்கிறார் என்றால் அதுக்குப் பிரதிபலன் இல்லாம செய்வாரா? என்ன பைத்தியமாஅப்படி இல்லைன்னாலும் சரி எங்கப்பா செஞ்ச்சாரு, அவரு தாத்தா செஞ்சாரு..அதுனால நானும் ஏதோ என்னால ஆனதைச் செய்யறேன்.. அப்படியாவது இருக்கணும்

அப்படியெல்லாம் இல்லாம அறம் செய்வதே ஒரு மகிழ்ச்சி. அதற்குப் பிரதிபல்ன் என்று ஒன்றும் வேண்டாம். மறுமையே கிடையாதுய்யான்னாலும் கவலை இல்லை. யார் செஞ்சாங்க எங்க முன்னோர்கள் என்ன செஞ்சாங்க எல்லாம் கவலை இல்லை. எனக்கு அறம் செய்வதில் அவ்வளவு மகிழ்ச்சி. அவ்வளவுதான். அதோட முடிஞ்சது. இப்படி இருக்கும் மனிதரைப் பார்த்ததுண்டாபார்த்திருப்போம். ஆனால் அதையெல்லாம் ரொம்ப சீரியஸா எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம். வியாபார உலகில் இந்த மாதிரியான ஆட்கள் எல்லாம் பிறழ்ச்சிகளாய்த்தான் கருதப்படுவார்கள்

இப்படி ஓர் ஆள் புறநானூறு காலத்துலயும் இருந்தார். அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடினார். அவனுடைய பெயர் ஆய் அண்டிரன்நான்கு வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் கூறுகிறார் முடமோசியார், முடமாகாத நறுந்தமிழில்

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் 
அறவிலை வணிகன் ஆய் அலன்; பிறரும் 
சான்றோர் சென்ற நெறியென 
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே. (134) 

ஆய் அண்டிரன் அறவிலை வணிகன் அன்று. மற்றவர்கள், சான்றோர் எல்லாம் செய்தார்கள் என்ற காரணத்தால் ஆங்கு அவன் அறத்தைச் செய்யவில்லை. Just அது அவனுடைய கைவண்மை அவ்வளவுதான்
சாதாரணமாக பட்டன்று என்றால் சங்கத் தமிழின்படி பட்டது என்ற நேர்ப் பொருள்தான் வரும். ஆனால் இங்கு பட்டதன்று என்பது பட்டன்று என்று விகாரமாகக் கொள்ள வேண்டும். ‘போய்விட்டது நடுவில்

*** 

முதுமை 

என்ன பெரியவரே! பொய்கைக் கரையில் நின்றுகொண்டு இவ்வளவு பெருமூச்சு விடுறீரு

என்ன அப்பனே! ஒன்றுமில்லை. கழிந்தகால இரக்கம்

என்ன ஃப்ளாஷ் பேக்கா? சும்மா சொல்லுமே பார்ப்போம்

உனக்கு எதுக்கப்பா?... உனக்கு ஒன்று சொல்கிறேன் கேளு. வயசுக் காலத்துல எல்லாத்தையும் அனுபவிச்சுடு..இன்னா... 

அது இருக்கட்டும்....என்ன இரக்கம்? அதைச் சொல்லும்

இந்தப் பொய்கையில என்ன கொட்டம் அடிச்சிருக்கம் தெரியுமா

ம்..ம்... 

நெசமாத்தான்....அதையெல்லாம் இப்ப நினைச்சா இனி நினைந்து இரக்கமாகின்றது... ஹி ஹி ஹி வயசுப் பொண்ணுக எல்லாம்...

இனிநினைந்து இரக்கமாகின்று 

அடப்பெரிசு....நேத்தி நடந்தா மாதிரியில்ல வெக்கப் படுதீரு... பார்றா அசடு வழியறதை.... 

அட சும்மா இருப்பா.... மூடு கெடுதுல்லா....

சரி...சரி... 

வயசுப் பொண்ணுக எல்லாம்... மண்ணைச் சேர்த்துக் குழைச்சிப் பாவை மாதிரி செய்வாங்க....அதுக்கு வைக்கப் புது பூவா யாரு கொய்து வந்து கொடுக்கறாங்கன்னு எங்களுக்குள்ள ஒரு போட்டி.... நிமிஷத்துல ஒரு எகிறு எகிறிக் கிளையைப் பிடிச்சேன்னா உச்சில இருக்கிற பூவைக் கூடப் பரிச்சிக் கொண்டாந்து கொடுத்துட்ய்வேன்.... 

கொண்டாந்து... பூவை பூவை தலையில் வைப்பீரா? இல்லை பாவைத் தலைக்கு அந்தப் பொண்ணு வைக்கக் கொடுப்பீரா

அட சும்மா இருப்பா.. நீ வேற பழைய ந்யாவகத்தை எல்லாம் கிண்டுற....

திணிமணல் செய்வுறு 
பாவைக்குக் 
கொய் பூத் தைஇ... 


அப்புறம் என்ன... கையைக் கோத்துக்கிட்டுக் குளிர்ந்த தண்ணியில மகளிரொடு ஆடுறதும், தாவறதும், மூழ்கறதும்..அப்படீ தழுவுறா மாதிரி தழுவுறது....தண்ணியில் தொங்கறா மாதிரி மிதக்கறது... எல்லாம்.. அது ஒரு காலம்.... ஒன்றும் ஒளிவு மறைவுங்கறது எல்லாம் கிடையாது... ஒரே கும்மாளத்துல.....அதெல்லாம் ஒளிஞ்சு செய்யணும்னு எல்லாம் தோண்ரது இல்ல... உலகமே நம்மளதுதான்.... 

தண்கயமாடு மகளிரொடு 
கைபிணைந்து
தழுவுவழித் தழீஇ
தூங்கு வழித் தூங்கி
மறை எனல் அறியா 
மாயம் இல் ஆயமொடு 

அவங்கள்ளாம் இன்னும் இருககங்களா... எப்பனாச்சும் பாப்பீங்களா.... 

அங்ங் ....எல்லாம் என்ன மாதிரியே கிழமா ஆயிருக்கும்..... பெரிய மருத மரம்..அதுன் கிளையில...அப்படி தண்ணிக்குக் கிட்ட இருக்கற கிளையைப் பிடிச்சு சர்சர என்று ஏறிக்கிட்டு உச்சிக் கிளைக்குப் போயி...சும்ம.. அங்கிருந்து தண்ணில துடும்...னு விழறது.... அப்படியே எல்லா பெண்களும் ஓன்னு அலறுவாங்க....கரையில் இருக்கறவங்க. அப்படியே கலங்கிடுவாங்க... சும்மா அப்படி விழுந்தா அந்தத் தண்ணி அலை அப்படியே நாலாப் பக்கமும் பிதிரும்... நல்ல ஆழம் வைச்சுக்க.... உள்ள போயி அடி மண்ணை எடுத்துக் கொண்டாந்து காண்பிக்கணும்... அது ஒரு போட்டி... எல்லாம் படிக்காத சின்ன வயசு......இளமை முறுக்கு....

உயர்சினை மருதத்து 
உறையுறத் தாழ்ந்து 
நீர்நணிப் படிக்கோடு ஏறிச் 
சீர்மிகக் 
கரையவர் மருளத் 
திரையகம் பிதிர 
நெடுநீர்க் குட்டத்துத் 
துடும் எனப் பாய்ந்து 
குளித்து மணல் கொண்ட 
கல்லா இளமை

அந்த இளமைக் காலம்...அதை நினைச்சா இப்ப இரக்கம்தான் வருது.. வேற என்ன பண்றது.... எங்க போச்சு அந்த இளமிக் காலம் எல்லாம்.... அதுக்குத்தான் சொல்லுதேன்... சும்மா இப்படி தத்துவம் ஆன்மிகம்னு பொளுதைக் கழிக்காத.... இளமை இருக்கச்சொல்லவே அனுபவிச்சிடு.... அந்த இளமை 

அளிதோ தானே... 
யாண்டுண்டு கொல்லோ... 
...... 

இப்பப் பாரு....பூண் வைச்ச பெரியக் கோலை ன்றிக்கிட்டு....நடுங்குது கைகால் எல்லாம்.. இருமலு கிடந்து பொலுபொலுங்குது... இருமலுக்கு நடுவுல சில சொல்லு அதான் பேச்சு....

தொடித்தலை விழுத்தண்டு 
ஊன்று நடுக்குற்று 
இருமிடை மிடைந்த சில சொல் 
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே... 
இனி நினைந்து இரக்கமாகின்று... 
(புறநானூறு 243) 


நிச்சயமா இருக்காது. இருக்க முடியாது....அவனையாவது யாராவது வீழ்த்தவாவது

மனத்திற்குள்ளே வஞ்சம் வைத்து அவனை வீழ்த்தலாம் என்றால் அது முடியாது. ஒருவர்க்கு ஒன்று தோன்றுமுன் அவனுக்கு அது தெரிந்துவிடும்

செற்று ஒருவன் அவனை வீழ்த்த முனைந்து உய்தல் என்பது இல்லை

அல்லது வெளிப்படையாகப் போரிட்டு ஒருவன் உய்தல் என்பது இல்லை என்பது சொல்லவே வேண்டாம்

செயிர்த்து அன்றாயினும் முடியாது

சரி. உற்றவர் போல அடுத்துக் கெடுக்கலாம் என்று நினைத்தாலும் நடக்காது. அவனை வீழ்த்த நினைக்கும் கயவர் ஒருநாளும் அவனுடைய பக்கல் இருப்பதும் முடியாத செயல்

உற்றன்றாயினும் உய்வின்று மாதோ 

மூன்று வழியாலும் முடியாது கிள்ளி வளவ்னை வீழ்த்துதல் என்பது. பின் எப்படித்தான் இந்த மரணம் என்பது சோழன் கிள்ளி வளவனை வீழ்த்தியிருக்கும்

மாறோக்கத்து நப்பசலையாரின் கவலை நியாய்ம்தான்

அவன் பொன்னாலான மாலை அணிந்திருக்கின்றான். ஏன் தெரியுமா? பொன் மாலை வாடுவது இல்லை. தன்மை மாறுவதும் இல்லை. தன் மதிப்பில் என்றும் இழிவதும் இல்லை. அதைப் போன்றது அவனுடைய மனம். அதன் மலர்ச்சி என்றும் மாறாத தன்மையது பொன்னைப் போன்று

அவனுடைய போர்களில் அவன் ஏதோ மனம் மிக வருந்தி எதிரிகளை முறியடிக்கிறான் என்பதை விட திரண்டு வரும் போர்களைத் தாம் போகிற போக்கில் கடக்கும் வல்லமையும், தேர்ந்த வெற்றிப் பழக்கமும் கொண்டு விளங்குகின்றன அவனுடைய தானையும், தேருமே கூடமனத்தையும் வெற்றி கொண்டவன்; மாற்றாரையும் வெற்றி கொண்டவன் கிள்ளி வளவன் 

பொலம் தார், மண்டு அமர் கடக்கும் தானைத் திண் தேர் 
வளவன் 

அவனைக் கொண்ட கூற்றம் எப்படித்தான் அவனைக் கொண்டிருக்கும்புரியாமல் விழித்த நப்பசலையாருக்கு ஒன்று உதித்தது மனத்தில்ஆஹா! அவனை கூற்றம் வீழ்த்தப் புலவர்களாகிய நாமே அல்லவா காரணம் ஆகிவிட்டோம்ஆம். அவன் புலவர்களின் பாடல்களில் மிகுதியாக மனம் ஈடுபட்டு, யார் புலவர்கள் வந்து என்ன கேட்டாலும் உவந்து ஈயும் இயல்பினன் என்பதைத் தெரிந்த இந்தச் சிறிதும் நயம் அற்ற கூற்றம் இருக்கிறதே, அது என்ன செய்திருக்க வேண்டும்....புலவர் மாதிரி வேடம் அணிந்து சென்று, வளவனைப் பாடி, அவனை மகிழ்வித்து, அவன் மனம் நெகிழ்ந்து என்ன பரிசில் வேண்டும் என்று உவந்து கேட்ட போது, ‘ஐயா! நான் கூற்றம். உங்கள் உயிரை எடுக்க முடியாமல் திண்டாடுகிறேன். மனம் ரீதியாகவோ, புறம் ரீதியாகவோ மரணத்திற்கான அத்தனை வாயில்களையும் தாங்கள் அடைத்துவிட்டீர்கள். எனவே தாங்களே மனம் உவந்து உயிரை ஈந்தால் அதுவே பரிசில்!’ என்று இரந்திருக்கும் இந்தக் கூற்றம்! அதுதான் உவந்து அதையும் அளித்துச் சென்று விட்டான்

பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி 
இரந்தன்றாகல் வேண்டும் பொலம் தார் 
மண்டு அமர் கடக்கும் தானைத் 
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே

சோழன் குளமுற்றத்தில் துஞ்சியிருக்கலாம். ஆனால் அவனை நம் உள முற்றத்தில் துஞ்சாமல் நிறுத்துகின்றன மாறோக்கத்து நப்பசலையாரின் பாடல். இப்பொழுது கூற்றம் என்ன செய்யும்? கூற்றம் குதித்தலும் கைகூடும் - கவிதையால்! என்பதைப் புலவர் காட்டிவிட்டாரே

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும் 
உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோ 
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி 
இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலம் தார் 
மண்டு அமர் கடக்கும் தானைத் 
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே

 *  
எங்கள் அரசனுக்குத் தெரியாதது! 

மடமை என்றால் என்ன? வித்யாசம் தெரியவேணாம்! நல்லது கெட்டது, பகை நட்பு, ஆவது போவது இப்படி எவ்வளவு வித்யாசம் இருக்கு. இதெல்லாம் தெரியவில்லை என்றால் அப்புறம் அது மடமைதானே

ஆனால் வையாவிக்கோ பெரும் பேகனுக்கு இந்த மாதிரி மடமை எல்லாம் கிடையாது. அறிவிலே மிக்கோன்

எத்தனை படைகள் வந்தாலும், எத்தனை சூழ்ச்சிகள் சூழ்ந்தாலும், ராஜ தந்திரம் என்பதில் நன்கு தேர்ந்தவன். உள் மனத்துள் இருக்கும் வர்மத்தை முகத்தின் சில சதை அசைவுகளை வைத்தே கண்டு பிடித்துவிடுவான்

ஆழம் என்பது பெண்பிள்ளை மனசுதான், கண்டு பிடிக்கறது கஷ்டம் என்கிறார்களே, அதெல்லாம் பேகனிடம் நடக்காது. மயங்கிட்டான் என்று நினைப்பார்கள்; ஆனால் ஒளிவு மறைவைப் பிட்டு வைத்து விடுவான்

அரசியல், பொருளாதாரம், தொழில் சிறப்பு, பல நாட்டுகளின் பாணிகள், நாகரிகம் எதிலும் அவன் அறியாத சூட்சுமம் இல்லை

ஆனால் ஒரு மடம்தான் அவனிடம் இருக்கிறது என்று கவலை கொள்கிறார் பரணர்

என்ன மடம்

கொடை தரும் போது இன்னார் இனையார், அதிகம் கற்றவர், குறைவாகக் கற்றவர், ஆண் பெண், கலைஞர், பொது மக்கள் என்று தன்னிடம் வருவோரிடம் கொடை அளிக்கும் போது வித்யாசம் தெரிய வேண்டாமோ? இன்னாருக்கு அதிகம், இன்னாருக்கு அடுத்தபடி, அடுத்து இப்படிப் பட்டவர்க்கு என்று வரிசை பார்க்க வேண்டாமோ? பேகனிடம் அந்த பிரிவினை பற்றிய அறிவுடைமை இல்லை. கொடை விஷயத்தில் மடம் இருக்கிறது. அப்படிக் கொடை மடம் படுதலில் இவனும் மழையும் ஒன்று

மழை என்ன செய்கிறது? அற்றுப் போன குளம், அகன்ற வயல், வெற்று உவர் நிலம் என்று நோக்காது, பெய்யும் பொழுது வேண்டியவர் வேண்டாதவர், ஆண் பெண், கடவுள் சிலை, பொது மக்கள், துறவி, யாசகர், கலைஞர், எளிய மக்கள் என்று எந்த வித்யாசமும் பார்க்காது அனைவருக்கும் பொதுப்பட வழங்குதல் போன்று பேகனும் கொடை மடம் உள்ளவன். பிரிவினை பார்க்காமல் வாரி வழங்குபவன், மாரி போல. அதற்கும் வரையா மரபு; இவனும் வழிவழியாக வரிசை நோக்காது தரும் வள்ளல் மரபைச் சார்ந்தவன்.

அறுகுளத்து உகுத்து 
அகல்வயல் பொழிந்தும் 
உறுமிடத்து உதவாது 
உவர்நிலம் ஊட்டியும் 
வரையா மரபின் 
மாரி போலக் 
கடாஅ யானைக் 
கழல்கால் பேகன் 
கொடைமடம் படுதல் அல்லது 
படைமடம் படான் 
பிறர்படை மயக்குறினே.

குழந்தை...சாக்கிரதை! 

குழந்தையைத் தொலைத்தவர்கள் எத்தனை பேர்! அசாக்கிரதையாக இருக்கப் போய்க் காணாமல் போனது, மரித்துப் போனது, பல்லடுக்கு வளாகத்தில் பேசிக்கொண்டே அந்தக் கவனத்தில் ஒட்டுச் சுவரில் குழந்தை தாவ.... அன்றிலிருந்து நடைப்பிணம் ஆன தாய் தந்தையர் எத்தனை எத்தனை

நரிவெரூஉத் தலையாருக்கும் இப்படி ஒரு குழந்தை கவலை..! யாரைப் பார்த்தாலும் குழந்தை சாக்கிரதை! குழந்தை சாக்கிரதை! என்று எச்சரித்தவண்ணம் இருக்கிறார்சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெரும் சேரல் இரும்பொறை நல்லவன் தான். நல்ல நாடு அவனுடையது. காட்டினால் சூழப்படும் நாட்டிற்கே ஒரு தனி காப்பு உண்டு. வளமும் மிகுதியாக உண்டு. காடு ஒரு பெரிய அரண் போலும். ஒரு பெரும் படையே காட்டினுள் நுழைந்தால் திசை தவறிக் கெடவும் கூடும். விஷ அம்புகள் தைத்த பின் தான் தெரியும். யார் எங்கிருந்து என்று ஒன்றும் தெரியாது. ஒளி, காலம் எல்லாம் மயங்கிவிடும். அப்படிப்பட்ட காட்டில் பசுமாட்டுக் கூட்டம் கணக்காக மந்தை மந்தையாக யானைக் கூட்டம் மேய்கிறது என்றால் என்ன வளம் இருக்க வேண்டும்! அந்த யானைகள் தம் அரிப்பைத் தேய்த்து அகற்றிக்கொள்ள பாறைகள் அங்கங்கே எருமை மாதிரி

எருமை அன்ன 
கருங்கல் இடைதோறு 
ஆனில் பரக்கும் 
யானைய முன்பில் 
கானக நாடனை
நீயோ பெரும

என்று சேரலிரும்பொறையை விளித்துக் கூறுகிறார் நரிவெரூஉத் தலையார்நீயாக இருக்கக் கொண்டு ஒன்று சொல்கிறேன். கேள். (இப்படி எத்தனை பேரிடம் இவர் சொல்லியிருக்கிறாரோ, பாவம்!) 

நீயோராகலின் இன்னொன்று மொழிவல்

அவரவர்கள் ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொருவரிடம் பாசமும் நேசமும் காட்டுவார்கள். எல்லாம் காரியம் ஆக வேண்டியும் இருக்கும். தன்னிடம் பழகுவோரிடம், தன்னால் உதவி பெற்றுப் புரக்கப் படுவோரிடம் சிலருக்கு ஒட்டுதல் இருக்கும். அதிலும் சிலர் வேண்டியவர், சிலர் வேண்டாதவர்ஆனால் ஓருயிர் துயர் படுகிறது என்ற காரணமாகவே அதன்பால் கொள்வது இருக்கிறதே அதற்குப் பெயர் அருள்தம்மால் புரக்கபடுவாரிடம் ஒப்ப நிகழும் காதல் என்பது அன்பு

இத்தகைய அருளும், அன்பும் ஆகிய இரு பண்புகளை பிரிவினை எண்ணங்கள், பேத உணர்ச்சிகள், காழ்ப்புகள் ஆகியன கொண்டு இந்த அருளையும், அன்பையும் கைவிட்டுவிட்டால் அவர்கள் கொள்வது என்னவோ நீங்காத நரகமே ஆகும். அப்படிப்பட்டவர்களுடன் நீ ஒன்றாகி விடாதே சேரமானே

அருளும் அன்பும் நீக்கி 
நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது 

பின் என்ன செய்ய வேண்டும் நீ என்று கேட்கிறாயா? நீ செய்கின்றாயே காவல், நாட்டை...அதை ஏதோ பெருமிதத்திற்கு என்றோ, டம்பத்திற்கு என்றோ, படாடோபத்திற்குக் காட்டிக் கொள்ளவோ செய்யாமல், தாயானவள் தன் குழந்தையைப் பாதுகாப்பாகக் காவல் செய்வதைப் போன்று, தந்தை தம் மக்களின் நலனே இரவும் பகலும் கவலையாக இருப்பது போன்று, ஏன் வயிற்றிலே கர்ப்பம் கொண்ட தாய் குழந்தைக்காகத் தன்னை மிகவும் எச்சரிக்கையாகப் பேணுவதைப் போன்று நீ உன் நாட்டின் காவலைப் பேணுவாயாக

காவல், குழவி கொள்பவரின் ஓம்புமதி! 

அளி என்ற மிக உயர்ந்த கடவுட் குணம் மொத்தமும் அதுதான்ஆனால் அதன் பெருமையை உனக்குக் கூறுகிறேன். பலருக்கும் கூறினேன். யார் காதில் விழுந்ததோ... யார் செய்வார்களோ...அத்தகைய உயர்ந்த அந்த அருட்காரியமாகிய அந்த அளி என்னும் சிறப்பு இருக்கிறதே அது பெறுவதற்கு மிகவும் அருமைப்பாடு உடையது என்பது எனக்கும் தெரியும்இருந்தாலும் மனசு கேட்கவில்லை. உள்ளம் அடித்துக் கொள்கிறது. இந்த நாடாகிய குழந்தையைக் கவனமாகப் பேணிக் காக்கும் தாயாக, தந்தையாக எந்த அரசனாவது இருக்க மாட்டானா என்று

அளிதோ தானே அது! பெறல் அருங்கு உரைத்தே

எருமையன்ன கருங்கல் இடைதோறு 
ஆனில்பரக்கும் யானைய முன்பில் 
கானக நாடனை! நீயோ பெரும
நீயோராகலின் இன்னொன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா 
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல் 
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறலருங்கு உரைத்தே

*

No comments:

Post a Comment