தமிழில் தத்வார்த்தங்களை வெளிப்படுத்தமுடியும் என்பதை 2000 ஆண்டுகளுக்கும் மேலான மெய்ஞானவியல் சொல்லாடல்கள் நிறுவிவந்திருக்கின்றன. ஓரளவிற்கு தாராளமாகவே வடமொழிச் சொற்களை பயன்கொண்டு மீயியல் நுண்மைகளை மொழிப்படுத்தி வந்திருக்கின்றனர் நமது முன்னோர். ஒரு மதம், ஒரு வாதம், ஒரு தத்துவம் என்று இன்றி பொதுவாகவே அனைத்துத் தரப்பையும் சேர்ந்த கருத்தியலாளர்கள் வடமொழி சொற்தொகையை அதிக பட்ச கருத்துச்செறிவுடைய சொல்லுருவாக்கத்தை வேண்டி தங்கள் மொழியாடல் அமைப்பில் கைக்கொண்டனர். நேரடி தமிழ்ச் சொற்களை உருவாக்க முயன்றவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் 18, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாதவ சிவஞான யோகிகள். இவருடைய சிவஞான போத மாபாடியம் சைவ சித்தாந்தத்திற்கு பெருஞ்செல்வம் மட்டுமின்றி தமிழில் வேதாந்த அணுகுமுறைக்கான சொல்லாடல்களை முனைந்த பெருமுயற்சி என்ற கவனத்தையும் உடையது.
இதைப்போலவே சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் ஸ்ரீஞானவாசிட்டம் எனப்படும் யோகவாசிஷ்டம், அதாவது வசிஷ்டர் இராமருக்கு தத்துவ ஞானம் போதிப்பதாக ஆரம்பித்து அத்வைதபரமான வேதாந்தத்தை ஒரு நுண்ணிய ரீதியில் கொண்டு செல்லும் நூல் இது. வடமொழியில் மஹாயோக வாசிஷ்டம் என்று பெருகியமைந்த நூலைச் சுருக்கி ஸ்ரீகாஷ்மீர பண்டிதர் லகுயோக வாசிஷ்டம் என்று ஒரு நூலைச் செய்தார். இதனை ஸ்ரீகவிராஜ பண்டிதர் குமாரர் வீரை ஸ்ரீஆளவந்தான் முனிவர் தமிழ்ச் செய்யுள் வடிவமாய் மொழிபெயர்த்தார். வடமொழி மூலத்திற்கு அமைந்த ஸம்ஸார தரணி என்னும் உரையை ஸ்ரீநித்தியானந்தர் தமிழில் 1870களில் சமுசார தரணி என்று மொழிபெயர்த்து வைத்திருந்தார். ஸ்ரீசுப்பைய ஞானதேசிகேந்திரர் பல வடமொழிநூல்களை ஆராய்ந்து ஸ்ரீவீரசேகரம் என்னும் உரையை இயற்றினார். மேலும், தமிழ்ச்செய்யுள், சமுசார தரணி, தம்முடைய ஸ்ரீவீரசேகரம் அனைத்தையும் சேர்த்து 1800 பக்கங்களில் பெரிய அளவு நூலாக 1928ல்(இரண்டாம் பதிப்பா ஒன்றாக்கிய பதிப்பா தெரியவில்லை ) சென்னை ஆனந்த போதினி அச்சுக்கூடத்தில் வெளியிட்டார்கள். அச்சு சின்னஎழுத்து.
இந்த நூல் ஸ்ரீரமண மஹரிஷியால் தம் கருத்துக்கு ஆதரவாக எடுத்துக்காட்டப்பட்ட நூல். 'நான் யார்?' என்ற விசாரத்திலேயே தத்துவம், வழி, தேட்டம், பயன் என்ற அனைத்தையும் அடக்கியவர் ரமணர். அவர் கருத்துக்கு ஆதரவாக ஒரு பாடல் ஸ்ரீஞானவாசிட்டத்தில், உபசமப்பிரகரணத்தில் 12வது பாடல்,
அகம் அகம்என்று அனைத்துயிரினிடத்தும் இருந்து
அனவரதம் உரைப்பதாகி
நிகழ் ஒளியாய் ஆன்ம தத்துவமான சொரூபத்தை
நினைத்தல் செய்வாம்.
திகழ் இதயக் குகை உறையும் தேவதையை விட்டு
அயலே தெய்வம் தேடேல்.
மிக அரிய கௌத்துவத்தை எறிந்து சிறுமணி
தேடும் வேட்கை போல் ஆம்.
அனவரதம் உரைப்பதாகி
நிகழ் ஒளியாய் ஆன்ம தத்துவமான சொரூபத்தை
நினைத்தல் செய்வாம்.
திகழ் இதயக் குகை உறையும் தேவதையை விட்டு
அயலே தெய்வம் தேடேல்.
மிக அரிய கௌத்துவத்தை எறிந்து சிறுமணி
தேடும் வேட்கை போல் ஆம்.
மொழியை இயல்பாக தத்துவ நுண்கருத்திற்கு முறுக்கியிருக்கும் அழகைப் பார்க்கலாம். இந்த நூல் என்னிடம் இல்லை. 1928ஆம் வருடப்பதிப்பான இந்த நூலை யாரேனும் மீண்டும் அச்சிட்டார்களா தெரியவில்லை.
1928 ஆம் ஆண்டு வெளியிட்ட வீரசேகர ஸ்ரீ சுப்பய்ய ஞானதேசிகேந்திர ஸ்வாமிகள், அவரது சிஷ்யர் ஸ்ரீ அநந்தாநந்த ஸ்வாமிகள் சமுசார தரணி என்னும் தமிழாக்கமுற்ற உரையைப் பற்றி ஒரு தகவலைத் தெரிவிக்கின்றார்கள். ஸ்ரீ நித்தியநந்த ஸ்வாமிகள் என்பவர் அற்றைக்கு, அதாவது 1928க்கு 60 வருஷங்களுக்கு முன்னரே அந்தத் தமிழாக்கத்தைச் செய்து வைத்து அந்த 60 ஆண்டுகளாக அந்த உரை பாடம் கேட்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது என்கிறார்.
அப்படி என்றால் 1868ஆம் ஆண்டு, அதன் முன்னரும் தமிழில் அத்வைத சாத்திரங்களைப் பாடம் கேட்கும் முறை இருந்து வந்திருக்கிறது. வீரை ஆளவந்தார் முனிவர் ஞான வாசிட்டத்தை அழகிய விருத்தப்பாக்களால் தமிழாக்கியது 18 ஆம் நூற். தாயுமானவரின் சொல்லாட்சிகளும், கருத்துகளும், ஸ்ரீஅருணகிரிநாதரின் சொல்லாட்சிகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது எப்படியும் 16 ஆம் நூற் இருந்து அதவைத சாத்திரம் தமிழ் நூல்கள் அல்லது தமிழ் மொழியின் மூலம் ஆன்மிக சாதகர்களால் பயிலப்பட்டு வந்திருக்கிறது.
தமிழ் மொழியில் நெடுங்காலமாகவே வேதாந்தம் என்னும் துறை பெருகி வந்திருக்கிறது. சுந்தர பாண்டியன் என்பவர் இயற்றிய சில வேதாந்த சுலோகங்களை பெரும் அத்வைத வேதாந்த ஆசாரியரான ஸ்ரீ பகவத்பாத ஆதிசங்கரரே மேற்கோள் காட்டுகிறார் என்னும் போது தமிழும் வேதாந்தமும் காதல் புரியத் தொடங்கியது எப்போது என்று யாரறிவார்?
விசிட்டாத்வைத வேதாந்தம் என்னும் வேதாந்த விழுப்பொருளின் விழுமிய விளக்காக திருவாய்மொழி திகழ்கிறது. அதனாலேயே அதற்கு விரிந்த வியாக்கியானப் பரப்புகள் தமிழும் வடமொழியும் கலந்த மணிமிடைப்பவள நடையில் தோன்றியுள்ளன.
துவைதம் என்னும் வேதாந்தத் துறைக்கு அவ்வாறு தமிழில் ஆக்கங்கள் எழுந்துள்ளனவா பழங்காலத்தில் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்ரீமத்வாசாரியர் அவர்களது சிறு நூல்கள் சிலவற்றுக்கு 20 நூற்றாண்டின் முதல் பகுதிகளில் தமிழாக்கங்கள் தோன்றியுள்ளன.
அத்வைத வேதாந்தம் தமிழில் பல நூல்களைத் தோற்றுவித்துள்ளது. முன்னரே ஞானவாசிட்டத்தைப் பற்றிய தமிழாக்கம் குறித்து எழுதியுள்ளேன். இதைப் போல சில நூல்கள் வேதாந்தத்தின் பல துறைகளைப் பற்றியதாகவோ, வேதாந்தக் கருத்துகளை விளக்கும் வழியிலோ அமைந்து பல காலங்களில் தோன்றியிருக்கலாம். அவற்றைப் பற்றிய செய்திகளையோ, கருத்துகளையோ நாம் தேடிக் காண வேண்டும். அத்வைதம், விசிடாத்வைதம், துவைதம், சுத்தாத்வைதம், பேதாபேதம் என்று வேதாந்த வகைகள் எதைப்பற்றியும் தமிழில் வந்த நூல்கள், கருத்துகள், பாட்டுகள் பற்றிய விவரங்களையோ, கருத்துகளையோ, குறிப்புகளையோ ஓரிடத்தில் ஒருங்குறக் காணும் ஆர்வம் மிக்க நண்பர்கள் ஊக்கமுடன் இதில் ஈடுபட்டால் நன்று. இத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒரு நூல் கண்ணில் பட்டது.
ஸ்ரீகுமாரதேவர் அருளிய சாஸ்திரக் கோவை. நூல் மிகச் சிறிய கையடக்கப் பதிப்பு. பக்கங்கள் 184. வெளிவந்த ஆண்டு 1923. சென்னை குயப்பேட்டை வித்யாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் பி ஆறுமுகமுதலியார் அ வர்கள். இவர் ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளின் மாணக்கர். ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் ஆதீனத்தைச் சார்ந்தவர். இவை நூல் முகப்பில் போடப்பட்டிருக்கும் செய்திகள். இந்தத் தகவல்களின் மேலதிக விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. இந்திரபீடம் என்று ஏன் பெயர் வைத்தார்கள்? திருத்துருத்தியில் இவ்வாறு ஆதீனங்கள் அமைய அங்கு என்ன மாதிரியான வேதாந்த சமய ஆகம ஈடுபாடுகள் மக்கள் மத்தியில் துலங்கின? அவை என்ன ஆயிற்று? இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் அறிந்தவர்கள் சொன்னால் நல்ல சேமிப்பாக இருக்கும்.
ஆதீன வரலாறு என்று ஒரு நிரல் தந்துள்ளனர் -
துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள், பேறையூர் சாந்தலிங்க சுவாமிகள், ஸ்ரீ குமாரதேவர், சிதம்பர சுவாமிகள், ரெட்டி சிதம்பர சுவாமிகள், பழனி சுவாமிகள், கூவாலத்து சுவாமிகள், புலியூர்ச் சுவாமிகள், குழந்தைவேல் சுவாமிகள், முத்தைய சுவாமிகள் என்று. துறையூராரின் அடுத்த காலத்தில் வருபவர்தான் இந்த ஸ்ரீகுமாரதேவர் என்பவர். இவரைப் பற்றி ஸ்ரீசிதம்பர சுவாமிகள் பாடிய குமாரதேவர் நெஞ்சுவிடுதூதும், குமாரதேவர் பதிகமும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. துறையூரார் வழி என்பது பொதுவாக வீரசைவ வழி. ஸ்ரீகுமாரதேவர் வாழ்விலும் ஒரு சம்பவம். அவரைப் பார்த்து இரண்டு சைவர்கள் 'வீரசைவமருளைப் பார்த்தாயோ!' என்று தமக்குள் நகையாடினார்களாம். அதாவது வீரசைவம் + அருளைப் பார்த்தாயோ என்றும், வீர சைவ மருளைப் பார்த்தாயோ என்றும் இரண்டு பொருள்படக் கேலிக் குறிப்பு வரும்படிப் பேசினார்கள். அவர்களது பிழையான கருத்தை நீக்கினார் என்று வருகிறது. எனவே ஸ்ரீகுமாரதேவரும் வீரசைவம் என்பதுதான். ஆனாலும் அவர் பாடியிருக்கும் சில பிரபந்தங்கள், செய்திருக்கும் சில சிறிய நூல்கள் அருமையான வேதாந்த வரவுகளாய் அமைந்துள்ளன தமிழுக்கு.
மஹாராஜா துறவு, சுத்த சாதகம், விஞ்ஞானசாரம், அத்துவித உண்மை, பிரமானுபூதி விளக்கம், ஞானவம்மானை, வேதாந்த தசாவத்தைக் கட்டளைச் சுருக்கம், வேதாந்த தசகாரியக் கட்டளை, சகச நிட்டை, உபதேச சித்தாந்த கட்டளை, பிரமசித்தியகவல், சிவதரிசன அகவல், ஆகநெறியகவல், வேத நெறியகவல், பிரமானுபவ அகவல், சிவசமரசவாத அகவல், பெரியநாயகியம்மன் பதிகம் போன்ற அருமையான ஆக்கங்கள் நிறைந்து இச்சிறுநூல் விளங்குகிறது. இதில் குறிப்பாக என்னை மிகவும் கவர்ந்தவை வேதாந்த தசாவத்தைக் கட்டளைச் சுருக்கம், வேதாந்த தசகாரிய கட்டளை, சகச நிட்டை, உபதேச சித்தாந்த கட்டளை. எவ்வளவு சுருக்கமாக வேதாந்த உபதேச ஆன்ம சாதக நெறியை விளக்கிவிடுகிறார் ஸ்ரீகுமாரதேவர் என்பது நினைக்குங்கால் வியப்பீனும்.
*
உதாரணத்திற்கு வேதாந்த தசாவத்தைக் கட்டளைச் சுருக்கம் என்னும் சிறிய நூல் ஒன்றைச் செய்துள்ளார் ஸ்ரீகுமாரதேவர். மிக அருமையான இந்த நூல் மொத்தமே 32 வரிகள்தாம். ஆனால் எவ்வளவு கருத்துகளை அவரால் இப்படிப் பொதிந்து வைத்துவிட முடிகிறது! அவர் எழுதிய வண்ணமே முதலில் பகுதி பகுதியாக தந்து அவ்வப்பகுதியில் எளிமையான இன்றைய தமிழ் நடையிலும் கூடவே தருகிறேன்.
*
வேதாந்த தசாவத்தைக் கட்டளைச் சுருக்கம்
மோக்ஷமுண்டென்கிற வெம்மார்க்கத்துக்கும் உபக்கிரமத்திற் பந்தமும், உபசங்காரத்தின் முக்தியும், சித்தாந்த மாகையினாலே இம்மார்க்கத்தினுடைய பந்தமுக்தி வியவகாரஞ் சுருக்கமாக சொல்லப்படாநின்ற தெப்படியெனில்: -- சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தமென்னும் இலக்கணத்தையுடைய சுயம்பிரகாசமாகிய பரவத்துவின் கண்ணின்று வாசகஞ்செயவொணாத பின்னாசத்திதோன்றும்; அதினின்று மாயை தோன்றும்; அதில் ஊத்தமாயையினின்றும் பரதத்துவந் தோன்றும்; அதினின்றும் வியோமந்தோன்றும்; அதிற்கால பரந்தோன்றும்; அதோமாயையினின்றும் புருடன்றோன்றும்; அதின் மூலப்பகுதி தோன்றும்; அதின் மான்தோன்றும்; அதிலாங்காரந் தோன்றும்; அந்தவாங்காரந் திரிகுணமாகவிரியும்; அவையிற் சாத்து விதாங்காரத்தின் மனமும், ஞானேந்திரியங்களைந்தும் தோன்றும்; இராசதவாங்காரத்தில் கன்மேந்திரியங்களைந்துந் தோன்றும்; தாமதவாங்காரத்தில் சத்தாதிகளைந்தும் தோன்றும்; இந்த சத்தாதியைந்தையும் ஒவ்வொன்றை இரண்டு கூறு செய்து அவையில் ஒரு கூற்றில் ஒவ்வொன்றை நன்னான்கு கூறாகச் செய்து தனது கூறல்லாத நாலினுங் கூட்டப் பஞ்சீகரண தூல பூதமாம்; உபக்கிரமம் முற்றும்.
*
(எளிய நடையாக்கம்)
உலகில் மார்க்கங்கள் பல. அநேகமாக அனைத்து மார்க்கங்களும் மோக்ஷம் என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புகின்றன. அவ்வாறு மோக்ஷத்தை இருக்கிறது என்று இசைந்தால் அதன் அடிப்படையாகச் சில கருத்துகளை அவசியமாக எந்த மார்க்கமும் ஒப்பித்தான் ஆகவேண்டும். அந்தக் கருத்துகள் யாவை?
ஆரம்ப நிலையில் இருப்பது பந்தம். முடிந்த நிலையில் இருப்பது முத்தி. இவ்வாறு சொல்வதுதான் சித்தாந்தமாவது. இவ்வழியில் நோக்கினால் நாம் சொல்லும் மார்க்கத்தின் பந்தம் முக்தி ஆகிய கருத்துகள் எவ்வகை என்பதை இப்பொழுது உரைக்கின்றோம்.
சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் இலக்கணத்தை உடையது பரவத்து. அது சுயம் பிரகாசம் உடையது. அந்தப் பரவத்துவிலிருந்து இவ்வண்ணம் என்று சொல்ல முடியாத பின்னாசத்தி தோன்றும். அந்த சத்தியினின்றும் மாயை தோன்றும். அந்த மாயையில் ஊர்த்துவ மாயை என்பதிலிருந்து பரதத்துவம் தோன்றும். அதிலிருந்து வியோமம் தோன்றும். அந்த வியோமத்தினின்றும் காலபரம் தோன்றும்.
அதோமாயையிலிருந்து புருடன் தோன்றும். புருடனிலிருந்து மூலப்பகுதி தோன்றும். அந்த மூலப்பகுதியினின்றும் மஹான் எனப்படும் மான் தோன்றும்.
மஹானிலிருந்து அஹங்காரம் தோன்றும். அந்த அஹங்காரம் திரிகுணமாக விரியும்.
திரிகுணங்களில் சாத்துவித அஹங்காரத்திலிருந்து மனமும், ஞான இந்திரியங்கள் ஐந்தும் தோன்றும்.
இராசத அஹங்காரத்திலிருந்து கன்ம இந்திரியங்கள் ஐந்தும் தோன்றும்.
தாமத அஹங்காரத்திலிருந்து சப்தம், ரஸம், ரூபம், கந்தம், ஸ்பர்சம் என்னும் ஐந்தும் தோன்றும்.
இந்த ஐந்தையும் ஒவ்வொன்றையும் இரண்டு கூறாகச் செய்து, அவையில் ஒவ்வொரு கூற்றையும் நான்கு துணைக் கூறுகளாய் ஆக்கி, ஒவ்வொன்றையும் தனது கூறல்லாத மற்ற நாலினும் கூட்ட், பஞ்சீகரணம் செய்யப்பட்ட தூல பூதம் என்பது கிடைக்கும். இது உபக்கிரமம் என்னும் தொடக்கம்.
*
இனி தத்துவங்களுடைய வகை எப்படியென்னில்: -- பஞ்சீகரண தூல பூதம் ஐந்து, சப்தாதி ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணங்கள் நாலு, புருடன், காலபரம், வியோமம், பரம், ஆகத் தத்துவம் இருபத்தெட்டுமேல் மாயை ஒன்று, பின்னாசத்தி ஒன்று ஆக 30. இவையே பந்தம். இனி இவை முப்பது நீங்கி மேல் சுயம்பிரகாசத்தை அடைதலே உபசங்காரம். இதற்கு மார்க்கம் ஏதென்னில்: -
தூல பூதம் ஐந்து, சூக்ஷ்ம பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஆக இருபதும் சீவ சாக்கிரம். இதில் திரோதாயி நீங்கும்.
மனம் புத்தி ஆங்காரம் மூன்றும் சீவ சொற்பனம்; பிரகிருதி, சீவசுழுத்தி, புருடன், பரசாக்கிரம்: இதில் பிரகிருதி நீங்கும்.
காலபரம் பரசொற்பனம். இதில் அசுத்தமாயை நீங்கும். வியோமம், பரசுழுத்தி, பரம் சிவ சாக்கிரம். மாயை விசுவக்கிராசம். இதில் கன்மம் நீங்கும்.
பின்னாசத்தி உபசாந்தம். இதில் சுத்தமாயை நீங்கும்.
சுயம்பிரகாசமே குருதுரியம். இதில் ஆணவம் நீங்கும்.
ஆக அவத்தை பத்து; இதுவே முத்தி; இவ்வொழுங்கில் ஞானாசாரியர் கைகாட்டுப் படிக்குச் சமாதியிலிருந்து அநுபவம் பண்ணிக்கொள்ள வேண்டியது.
வேதாந்த தசாவத்தைக் கட்டளைச் சுருக்கம் முற்றிற்று.
*
எளிய விளக்கக் குறிப்புகள்:
பத்து அவத்தைகள் என்ன என்ன என்பதில் தெளிவு படுத்திக் கொள்வோம்.
1)தூல பூதம் ஐந்து, சூக்ஷ்ம பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஆக இருபதும் சீவ சாக்கிரம்
2) மனம் புத்தி ஆங்காரம் மூன்றும் சீவ சொற்பனம்
3) பிரகிருதி, சீவசுழுத்தி,
4) புருடன், பரசாக்கிரம்
5) காலபரம் பரசொற்பனம்
6) வியோமம், பரசுழுத்தி
7) பரம் சிவ சாக்கிரம்
8) மாயை விசுவக்கிராசம்
9) பின்னாசத்தி உபசாந்தம்
10) சுயம்பிரகாசமே குருதுரியம்
ஆக அவத்தை பத்து.
***
No comments:
Post a Comment