Friday, May 3, 2019

இலக்கியமும், வாசகர்களும்

ண் திணிந்த நிலன் மனித உரு அடைந்து திகழ்ந்த உயிர்ப்பொலிவில் பிறந்தவை மனமும், மொழியும். அவை இருமுகம் கொண்ட ஓரகம். விசும்பைத் தன்னுள் வளைந்து வனைந்து கொண்ட மண், விண்ணிற்க்கு அனுப்பிய தூது வாக்கு. திறனும், ஒளியும், தன்மையும், விரிவும் தம்முள் கரந்து உள் கசிந்து, கனிந்த சுக போதம் சொல்லில் விரியும் காட்சி. கண் தரும் காட்சியோ, ஒளி என்ற அளவு மானியின் மருங்கில் பயில்வது. சொற்கள் தரும் சுடர்க்காட்சியோ, சைதன்யத்தின் வரம்பிற்குள் பல அளவு மானிகளின் மருங்குகள் புணர்ந்து நிற்பது. 

சொல்லொணா நிலை ஒன்று உண்டு என்ற சூழ்ச்சியைத் தானே களித்து விளையாடி, தான் கவிந்ததனைத்தையும், தன்னுள் கரந்ததனைத்தையும் கருத்தின் குவிக்கண்ணில் நிலைபொருத்திப் பார்க்கும் மனம், அவற்றைச் சொல்லால் வடிவு துலக்குங்கால், அஃது கவிதையாகவோ, கட்டுரையாகவோ, நாடகமாகவோ, நடைச் சித்திரமாகவோ சமைந்து நிற்கிறது. மனத்திற்கும், மொழிக்கும் இடையில் வாசி தீரக் காசு நல்கும் திறனாளர்கள்தாம் இலக்கிய கர்த்தாக்கள்

............................
சிருஷ்டி என்பது ஏதோ ஒருகாலத்தில் எப்பொழுதோ, ஏதோ ஒரு வைர ஊசியின் குத்துமுனை ஒளிப்புள்ளி போன்ற நிலையிலிருந்து தொடங்கி, வரவரப் பெரிதாகி, புகையும், ஒலியும் கக்கி, நம்மை நோக்கி நகர்ந்து, நம்மைக் கடந்து, நம்மை விட்டு எங்கோ செல்லும் புகைவண்டி போன்றதொரு நிகழ்வன்று. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தளத்தில் ஒவ்வொரு உயிர்ப்புள்ளியின் ஊடாகவும், உருப்பொலிந்து, கரந்து சுழலும் கணக்கற்ற பிரபஞ்சங்களைக் கருத்துக்குள் கொண்டுவர முயலும் ஒரு வசதியான எல்லைக்கோடுதான் சிருஷ்டி. 

பல தளங்களில் பல புள்ளிகளில் பிறங்கிவரும் பிரபஞ்சங்களிலிருந்து நம் கருத்தின் பார்வைக்குச் சில நிகழ்வுக் கோவைகளை நகர்த்தி வைப்பதுதான் இலக்கிய கர்த்தாக்களின் வேலை. இவர்கள் வேலை காரியப்படும் தளமாக இருப்பவர்கள்தாம் படிப்பவர்கள். இலக்கிய கர்த்தாக்களின் ஊற்றுக்கண் ஒன்று. ஆனால் படிப்பவர்களின் நுகர்புலன்கள் அநந்தம். படிப்பவர்களின் நுகர்பசியும், பல தளங்களில், பல்வித உணவுகளை வேட்டு நிற்பது. இவர்தம் திறந்த வாயும், ஓயாப்புலனும், தவித்த வயிறும் சேரச் சமைந்ததுதான் இலக்கிய உலகின் சந்தை. 

இந்தச் சந்தையில் பெரும்பாலான மக்களுக்கு வேண்டியது திரித்தலும், தவறான செய்தியும் இன்றி, இலக்கிய சமய எண்ணங்களை, எளிமையான நடையில், சில எண்ணங்களையேனும் கொண்டு சேர்க்கும் நடையில், குறுகிய காலத்தில் படித்து முடித்துவிடும்படியாகத் தரப்படும் நூல்கள்தாம். வாய்ப்பும் விருப்பமும் கூடித்தரும் ஒரு சில மணித்துளிகளே கொண்ட வாசகர்களுக்கு, சில கருத்துகளையாவது வாழ்க்கையின் செலாவணியாக்கித் தருவது, இன்றைய இலக்கியம் செய்வாருக்கு விடப்படும் சவாலாக இருக்கிறது..................... 
 
(ஜூன் 2001ல் திருமதி சௌந்தரா கைலாசம் அம்மையார் எழுதிய எண்ண விமானத்தில் என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு அணிந்துரை எழுதியிருந்தேன். அதில் முக்கியமாக நான் முன்வைத்த கருத்து சந்தை எப்படி இலக்கியவாதிகளுக்குச் சவால் விடுகிறது? என்னும் கருத்தேயாகும். அது தொடர்பான பகுதி என் அணிந்துரையிலிருந்து ------------- )

No comments:

Post a Comment