Friday, May 3, 2019

இப்படியும் பொருள் சொல்லிப் பார்க்கலாமோ?

காலையில் ரயில் பயணத்தின் போது ஒரு சுவையான சம்பாஷணை. நண்பர் ஒருவர் கேட்டார்

ஏன் சார்! ‘ஒன்றும் மறந்தறியென் ஓதநீர்வண்ணனை யான் இன்று மறப்பனோ ஏழைகாள்! கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசைஎன்னும் பாட்டு யார் சார் பாடியது?’ 

முதலாழ்வார் சார்!’ என்றேன். பிறகு அதன் உள்ளர்த்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கும் போது ஓர் அர்த்தம் புலனாகியது. உடனே மனத்தில் கட்டிலா உவகை. அவர் இந்தப் பாசுரத்தைப் பற்றிக் கேட்கப் போய்த் தானே இந்த உள்ளர்த்தம் நமக்கு உதித்தது என்று அவரிடம் ஒரு பெரும் நன்றியுணர்வுஎன்ன விஷயம் என்றால் முதலாழ்வார் என்ன சொல்கிறார்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனையான்

இன்று மறப்பனோ ஏழைகாள் 

இரண்டாவது வரியில் இன்று மறப்பனோ என்று இருப்பதற்கேற்ப முதல் வரியில் என்ன இருக்க வேண்டும்? அன்றும் மறந்தறியேன் என்று இருந்தால் அன்று மறக்கவில்லை. இன்றா மறப்பேன் என்று கூறுகிறார் என்று சொல்லலாம். ஆனால் ஆழ்வார் கூறுவது என்ன? ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை யான். அப்பொழுது மறப்பது மறக்காமல் இருப்பது என்பதில்தான் அழுத்தம். அன்றா இன்றா என்பதன்று பிரச்சனை

அது மட்டுமன்று. ஆழ்வார் கூறுவது என்ன என்றால்கருவரங்கத்துள் கிடக்கும் போதே யான் திருவரங்கமேயான் திசையைக் கண்டு கைதொழுதேன். எனவே அன்றும், இன்றும், என்றும் ஓதநீர்வண்ணனை யான் ஒன்றும் மறந்தறியேன்என்று நிர்த்தாரணமாகச் சொல்கிறார்

மற்றை ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கும் அங்க அங்கி பாவம் உண்டு. அதாவது நம்மாழ்வாரின் திருவாய்மொழி அங்கி - உடல் என்றால், மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் அந்த உடலுக்கு அங்கம் போன்றவைகள். அது போல் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை விளக்கும் துணை நூல்கள்தாம் மற்றை ஆழ்வார்களின் பாசுரங்கள். அதாவது நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு மற்றை ஆழ்வார்களின் பாசுரங்கள் உபபிரும்ஹணங்கள் (விளக்கங்கள்). அதாவது மற்றைய ஆழ்வார்களின் பாசுரங்களில் தேரும் கருத்தைக் கொண்டு திருவாய்மொழியில் நம்மாழ்வாரின் திருவுள்ளம் இன்னதுதான் என்று முடிவு செய்யலாம் என்பது வைணவ சம்பிரதாயத்தில் ஏற்கப்படும் ஒரு விளக்க நியதிஇந்த நியதியைப் பயன்படுத்தி முதலாழ்வரின் பாசுரத்தில் தேர்ந்த அர்த்தம் எப்படி திருவாய்மொழியில் ஒரு பாட்டை இன்னும் சுவை பொலியச் செய்கிறது என்பதைக் காட்டுவோம்

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து அறியாமாமயத்து அடியேனை வைத்தாயால்என்று திருவாய்மொழிப் பாசுரத்தில் ஒரு வரி. நம்மாழ்வார் பகவானிடம் மிகவும் உவகை பொங்க அவன் தமக்குச் செய்த ஆதரவுகளை நெகிழ்ந்து சொல்லிக் கொண்டு வரும்போது, பகவான் தம்மைஅறியாக் காலத்திலேயேதன்னுடைய கைங்கரியத்தில் அன்பு பூண வைத்துவிட்டான். பிறகு அறியாமாமாயம் ஆகிய ஸம்ஸாரத்தில் வைத்து விட்டான் என்று உவகையும், மனத்தாங்கலுமாய் ஆழ்வார் சொல்கிறார், அதாவது அவனைப் பற்றிய ஞானத்தையும் தொடக்கத்திலேயே தந்துவிட்டு, பின்னர் அந்த ஞானத்தை மறைக்கக் கடவதான தேகத்தோடு சேர்க்கை என்பதையும் தந்துவிட்டான் என்று எம்பெருமானாருக்கு முந்தைய ஆசாரியர்களில் திருமாலையாண்டான் போன்றோர் இந்த வரிக்குப் பொருள் கொண்டார்கள். ஆனால் எம்பெருமானாரோ எனில், ‘அப்படி மனத்தாங்கல் தோன்றும் படி ஆழ்வார் இங்கு சொல்வதற்கு முன் பின் பாசுரச் சூழ்நிலை இடம் தராது. முன் பாசுரமும், இந்த வரி வரும் பாசுரத்திற்குப் பின் பாசுரமும் உவகை பூண்டு நடவா நிற்க இந்தப் பாசுரம் மட்டும் மனத்தாங்கல் தொனிக்க இருப்பது சுவாரஸ்யம் இல்லைஎன்று கருதி வேறு வகையாக அர்த்தம் செய்தார்

என்னவெனில், நம்மாழ்வார் என்ன சொல்கிறார்: “அறியா மாமாயமாகிய ஸம்ஸாரத்தில் நீ என்னை எப்படி இருத்தி வைத்திருக்கிறாய்? உன் கைங்கர்யத்தில் சிறிதும் மாறாத மறையாத அன்பும், வேட்கையும் எனக்கு அறிவு நடையாடாத குழந்தைப் பருவம் முதலாகவே பூரணமாகத் திகழ்ந்திருக்கும் படியாக அன்றோ இந்த உலகில் என்னை வைத்திருக்கிறாய்! என்ன கருணை இது! - என்று மிகவும் இன்புற்று நெகிழ்ந்து சொல்கிறார். -- என்பது எம்பெருமானார் சொன்ன அர்த்தம்

முதலாழ்வார்ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர்வண்ணனை யான்என்ற பாட்டில், கருவில் கிடந்த போதும் திருவரங்கத்தைத் தாம் தொழுத காரணத்தால் என்றுமே பகவானைப் பற்றிய ஞானம் சிறிதும் மங்காத நிலையில், சிறிதும் மறந்தறியாத நிலையில்தான் தம்மை பகவான் வைத்திருப்பதாகச் சொல்லுகிறார். அதை நம்மாழ்வாரின் நிலையாகவும் நாம் கொள்ளலாம். அதற்கு திருவாய்மொழியின் விளக்கத் துணைகள் மற்றைய திவ்வியப் பிரபந்தங்கள் என்னும் விளக்க இயல் நியதி வலுவு சேர்க்கிறது

இவ்வாறு முதலாழ்வாரின் பாசுரத்தைத் துணைகொண்டு நாம் பார்த்தால் நம்மாழ்வாரின் வரிகளில் இயல்பான வரிசைக் கிரமத்திலேயெ சொற்கள் உவகை மீதூரும் அர்த்தத்தைத் தருவனவாக அமைந்துவிடுகின்றன. எம்பெருமானார் விரும்பிய உவகைப் பொருளும், சொற்களின் முன் பின் வரிசையை மாற்றாமலேயே இருந்த படியே ஏற்பட்டு விடுகிறது

எப்படிநம்மாழ்வார் என்ன சொல்கிறார்

அறியாக் காலத்துள்ளே பகவான் தம்மை தன்னுடைய அடிமைக்கண் அன்பு செய்வித்தான்

அதாவது வெளி உலகம் அறியாத கருவில் இருக்கும் காலத்திலேயே

(ஒப்பிடுக: முதலாழ்வாரின்கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்’) 

கருவில் கிடந்த காலத்திலேயே அவனைப் பற்றியும், ஜீவனான தன்னைப் பற்றியும், அவனுக்கும் தமக்கும் உள்ள உறவு பற்றியும், தாம் பெற வேண்டிய உயர்ந்த பேறு பற்றியும் என்று ஆத்மிக ஞானம் அனைத்தையும், ஓத நீர் வண்ணனைப் பற்றிய ஒன்றையும் மறந்தறியாத மாமாயத்து அவன் என்னை வைத்துள்ளானே! என்ன ஆச்சரியம் (ஆல்இந்த இடத்தில்அறியா மாமாயத்துஎன்பதில்ஓத நீர் வண்ணனை யான் ஒன்றும் மறந்தறியாத மாமாயத்துஎன்று முதலாழ்வார் பாசுரத்திலிருந்து பொருளையும் சொல்லையும் வருவித்துக் கொண்டு படிக்க வேண்டும்மாயம் என்பதற்கு ஆச்சரியம், வினோதம், ஞானம் என்ற பொருள்களும் உண்டு

உலகில் இருப்போர் பகவானை மறந்துவிட்டு அவனை எப்படி நினைப்பது, மனம் கொள்வது என்று தெரியாமல் தடமாடுகின்றனர். ஆனால் என் விஷயத்திலோவெனில் என்ன ஆச்சரியம் அவனைச் சிறிதும் மறந்தறியாத மாமாயத்து அல்லவோ அவன் என்னை வைத்துள்ளான்! ‘மயர்வற மதிநலம் அருளினன் யாவன்? அவன் அல்லனோ!’ என்பது நம்மாழ்வாரின் திருவுள்ளம் என்று முதலாழ்வாரின் பாசுரத் துணைகொண்டு புரிந்துகொண்டால் எப்படிச் சுவை மிகுந்து காண்கிறது! எம்பெருமானார் கருதியது போலவே உவகை மீதூரத் தோன்றும் பொருளும் தன்னடையே சித்திக்கிறதே

*** 



No comments:

Post a Comment