Thursday, May 2, 2019

யோகசித்தியில் ஒரு விளக்கம்

பாரதியார் யோக சித்தி என்று ஒரு பாட்டு பாடியிருக்கிறார். 'விண்ணும் மண்ணும் தனியாளும் எங்கள் வீரை சத்தி நினதருளே' அப்படியென்று ஆரம்பிக்கும். அதில் பல வரங்களைக் கேட்கிறார். அப்படிக் கேட்டுக்கொண்டு வருகிறவர் 8ஆவது கண்ணியில் தான் இந்த நாட்டில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்கிறார்.

கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் - என
விந்தை தோன்றிடவிந் நாட்டை - நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை

என்றெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.

கல்லை வயிர மணி ஆக்குதல் என்றால் வெறும் கல்லை வைரமாக மாற்றுவதா? சரி செம்பு என்பதைக் கட்டித் தங்கமாக மாற்றுவது என்றால் ரசவாதமா? அப்புறம் புல்லை நெல் எனப் புரிதல் என்கிறார். சரி இதெல்லாம் ஒரு வழியில் பார்த்தால் கனிம வளம், உழவு என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று பார்த்தால், அடுத்தது பன்றிப் போத்தைச் சிங்க ஏறாக ஆக்க வேண்டும் என்கிறார். யோசித்துப் பாருங்கள்  பன்றி என்பது ஓர் உயிர்வகை. அது போல் பல உயிர்வகைகள். ஏன் ஓர் உயிர்வகையை அதுவும் பன்றியை சிங்க ஏறாக ஆக்க வேண்டும்? அதனால் என்ன லாபம்? பன்றிகளையெல்லாம் சிங்க ஏறாக ஆக்கிவிட்டால் அப்புறம் மனிதர் எப்படி நாட்டில் குடியிருப்பது? இல்லை இல்லை உருவகமாகச் சொல்கிறார். அப்படியே பொருள் கொள்ளக் கூடாது என்றால் இந்த வரி மட்டும் உருவகமா? அல்லது முன் பின் பல வரிகளும்தானா? அப்ப கல் வயிரம், புல் நெல், எல்லாம் என்ன? உருவகங்களின் பொருள் யாதோ?

சரி இது இப்படி என்றால் அடுத்த வரி - மண்ணை வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் - என்கிறார். மண்ணுக்கு வெல்லத்து இனிப்பு வரச் செய்தால் என்ன பயன்? ஒரே எறும்பாகத்தானே மொய்க்கும்? அப்புறம் எப்படி குடிவாழ்வது?

என்ன சொல்ல வருகிறார் பாரதி? அல்லது என்ன சொல்லாமல் இருக்கிறார்? மேலும் இந்தக் கண்ணியே எழுவாய் பயனிலை செயற்படுபொருள் என்ற பொருத்தம் இன்றி 'வீரம் அறிவாண்மை' என்று நடுவில் முடிந்துவிட்டுத் தொடர்ச்சி இல்லாதது போல் தோன்றுகிறது. பொருந்தி வருமாறு எப்படி மாற்றிப் படிப்பது? இல்லை ஏதேனும் வரி விட்டுப் போயிற்றா?


பாரதியார் இந்த 'யோக சித்தி' என்னும் பாடலை எழுதிய கால கட்டமான 1913ல் முன்னரும் பின்னருமாகச் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். மது, கண்ணன் என் தாய், ஒளியும் இருளும் புதிய ஆத்திசூடி போன்ற கவிதைகளைப் பாடியிருக்கிறார். ஏப்ரல் 1913 தொடங்கியே ஈசாவாஸ்ய உபநிஷத்து, கேந உபநிஷத்து போன்ற உபநிஷதக் கருத்துகளில் ஆழ்ந்து மனம் சென்றிருக்கிறது. ஏப்ரல் 1913ல் எழுதிய ஈசாவாஸ்ய உபநிஷத்தில் மொழிபெயர்க்கும் வரிகளிலேயே தம்முடைய மனப் பாங்கைக் காட்டுகிறார். உலகில் வாழ்ந்துகொண்டே உள்ளத் துறவுடன் நல்ல அறவழியான இன்பங்களை மனிதர் இகழாமல் துய்த்துப் பூரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதாக அவர் கருத்து. இதையேதான் மது என்னும் பாடலிலும் போகி, யோகி, ஞானி என்று மூன்று பேர்களின் வாயிலாக ஒரு அபிப்ராய வாதத்தை முன் வைக்கிறார். உலக இன்பம்தான் எல்லாம் என்று சொல்கிறன் போகி. இல்லை, யோக நிலையில் இன்பம் அதுதான் வேண்டும். உலகம் தனை இகழ் என்கிறான் யோகி. இந்த இருவேறு அபிப்ராயங்களில் ஒரு முழுமையைக் காட்டிப் பேசும் ஞானியின் வாக்காகத் தமது கருத்தை வெளியிடுகிறார் பாரதி. மேலும் சின்ன சங்கரன்கதை என்பதெல்லாம் இந்தக் காலப் பகுதியில்தான் எழுதுகிறார் பாரதி. அதுவும் கண்ணன் என் தாய் என்ற பாடலும், இந்த யோக சித்தி என்ற பாடலும் ஒன்றிற்கொன்று மிகவும் ஒத்த மனப்பான்மை உள்ளதுவாய் அமைந்திருக்கிறது. தனக்குக் கண்ணன் என்னும் தாய் தந்திருக்கும் நன்மைகள் என்ன என்று ஒரு பாடலில் காட்டுகிறார் என்றால், யோக சித்தி என்னும் பாடலில் அந்த மூல சத்தியிடம் தாம் வேண்டும் மாற்றங்கள் என்ன என்று விண்ணப்பிக்கிறார். உரிமையால் அடம் பிடிக்கிறார். இதையெல்லாம்   வைத்துப் பார்க்கும் போது பாரதியின் மனம் எத்தகைய பாவத்தில் இருந்திருக்கும் என்பது நமக்கு ஓரளவு யூகிக்க முடிகிறது. அந்த விதத்தில் பார்த்தால் இந்த வரிகளுக்கு என்ன பொருளாக இருக்கும் என்பதையும், இந்தப் பாடல் பகுதி முன் பின் பாடல்களுடன் எப்படித் தொடர்புடன் இருக்கிறது என்பதையும் சொல்கிறேன்.

பொதுவாக அவரது ஆத்திசூடியை வைத்துப் பார்த்தால் இரும்பைப் பொன்னாக மாற்றுவது, ரஸவாதம், குளிகை போன்றவற்றில் நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சோதிடம்தனை இகழ் என்று பாடுகிறார். ஆனாலும் சித்தர்களின் பாஷையைக் கருத்துகளைச் சொல்வதற்கு ஓர் உத்தியாகவும் கையாள்கிறார். மது என்னும் பாடலில் - பச்சை முந்திரி யன்னதுலகம்,  பாட்டுப் பாடல் சிவக்களி யெய்தல் - என்று யோகி பாடுவது போல் காட்டி, ஞானியின் மூலமாக முழுமையான வாழ்வே சரியானது என்ற கருத்தை வைக்கிறார். மேலும் ஆத்திசூடியில், எண்ணுவது உயர்வு, ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி, ஏறு போல் நட, கூடித் தொழில் செய், ஞாயிறு போற்று, தன்னை இழவேல், கைத்தொழில் போற்று, ஞமலிபோல் வாழேல், தாழ்ந்து நடவேல், திருவினை வென்று வாழ், தெய்வம் நீ என்றுணர், தவத்தினை நிதம் புரி, நன்று கருது, நூலினைப் பகுத்துணர், பணத்தினைப் பெருக்கு, பிணத்தினைப் போற்றேல், மிடிமையில் அழிந்திடேல், மௌட்டியம் தனைக் கொல், யவனர்போல் முயற்சி கொள், ராஜஸம் பயில், ரேகையில் கனி கொள், வேதம் புதுமை செய் - என்றெல்லாம் அவர் இளைஞர் முதல் அனைவருக்கும் தமது மனப்பாங்கைத் தெளிவாக இன்னது என்று காட்டிவிடுகிறார். அநேகமாக அவரது ஆத்திசூடி பல இடங்களுக்குச் சாவியாகப் பயன்படக் கூடியது. குறிப்பிட்ட பாடலை நாம் கொஞ்சம் முன் பின் மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி?

இந் நாட்டை - நான்
கல்லை வயிரமணி யாக்கல் - செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல் - மண்ணை 
வெல்லத் தினிப்புவரச் செய்தல் என

உயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரமறி வாண்மை 
விந்தை தோன்றிட தொல்லை தீர்த்து

என்று மாற்றி வைத்துக்கொண்டு அடுத்த பாட்டான

கூடும் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளும் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்குவினை செய்து

 - இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்

- கலி
சாடும் திறன் எனக்குத் தருவாய்

- அடி
தாயே உனக்கு அரியதுண்டோ? - மதி
மூடும் பொய்மை இரு ளெல்லாம் - எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
என்ற வரிகளோடு போய்க் கூட்ட வேண்டும்.

அதாவது என்ன பாடுகிறார்? உயர்வு, கல்வி, வெற்றி சூழும் வீரம், அறிவு, ஆண்மை ஆகிய இந்த மகத்தான அருங்குணங்கள் எப்படி விந்தைபோல் தோன்றி நாட்டு மக்களின் வாழ்வுத் தன்மையை அடியோடு மாற்றுகிறதாம்?

கல்லை வயிர மணியாக்கல் போன்று விந்தை, செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்யும் ரசவாதம் போன்ற விந்தை, வெறும் புல்லை நெல்லெனப் புரிதலைப் போன்ற விந்தை, பன்றிப் போத்தை சிங்க ஏறாக ஆக்குதல் போன்ற விந்தை, மண்ணை வெல்லத்து இனிப்புவரச் செய்கின்றது போன்ற விந்தை - இப்படி உவமையாகக் காட்டப்பட்ட விந்தையெல்லாம் எங்கு நிகழ்கிறது.?

இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையிலும், குணங்களிலும், செயலிலும், கூடித் தொழில் செய்யும் நேர்த்தியிலும் எண்ணத்தால் உயர்வு, கல்வியால் முழு மாற்றம், அறிவாலும் வெற்றி சூழும் வீரத்தாலும் அபாரமான விளைச்சல், அறிவாலும், எண்ணத்தின் உயர்வாலும், ஆண்மையாலும் மனத் தாழ்ச்சி நீங்கி தெய்வம் தாம் என்று உணரும் பெற்றி, பன்றிப் போத்து சிங்க ஏறாக மாறினது போன்று, ஏறு போல் நடை - இவ்வாறெல்லாம் மக்களின் நிலைமையில் அக நிலைமையில், புற நிலைமையில், சமுதாய மாற்றத்தில், கூட்டு வாழ்க்கையின் மேம்பாட்டில், தொழில் வளத்தின் பெருமையில் விந்தைகள் தோன்றிட வினை செய்து, இந்த நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க, இன்றிருக்கும் கீழ்மையான கலியைச் சாடும் திறன் எனக்குத் தருவாய்! மதி மூடும் பொய்மை இருள் எல்லாம் எனை முற்றும் விட்டகல வேண்டும் - என்பது பாரதி பாடலின் உட்பொருள். 

***



No comments:

Post a Comment