Thursday, May 2, 2019

’தொண்டு’ என்ன ஆயிற்று?

தொண்டு என்பது தெய்வப் பணிவிடை, அடிமை என்னும் பொருள் சாதாரணமாக நாம் அறிந்தது. தொண்டுக்கே அடிமை பூண்ட குலம் தொண்டக்குலம்.

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலத்தில் சேருமாறு அழைக்கிறார் பெரியாழ்வார்.

ஆனால் தொல்காப்பியர் காலத்தை ஒட்டியும், அவருக்கு முன்னும் ‘தொண்டு’  என்னும் சொல்லுக்கு 9 என்னும் எண்ணும் பொருளாக இருந்திருக்கிறது.

மலைபடு கடாம் 21ஆம் வரி கூறுகிறது -- தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் -- ஒன்பது வார்க்கட்டு என்பதை தொண்டு படு திவவு என்னும் சொல் குறிப்பதாக டாக்டர் உ வே சா அவர்கள் குறிப்பு காட்டுகிறார்.

தொல்காப்பியரும் 9 என்னும் எண் கடைசியில் வந்து முடிந்த ஒரு பேரெண்ணைக் குறிக்கும் போது

‘தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்றொன்பஃது’ என்று கூறுகிறார்.
(செய்யுளியல் 406 )


தலையிட்ட -- கூட்டிய

மூன்று தலையிட்ட முப்பது = 30+3
இரண்டு தலையிட்ட இருபஃது = 20+2

வடமொழியிலும்

த்வா விம்சதி = 22, சதுர் விமசதி என்று கூட்டும் கடையெண்ணை முதலில் சொல்லி முழு எண்ணைப் பின்பு கூறுதல் ஒப்பு நோக்கத்தக்கது.

ஆக, தொண்டு என்பது 9 என்ற எண்ணைக் குறித்த பழைய பயன்பாடு என்பது உரைக்காரர்களும், மூல நூல் ஆசிரியனாகிய தொல்காப்பியரும், மலைபடுகடாத்து பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாரும் காட்டும் பயன்பாடுகளில் தெரியவருகிறது.

இப்பொழுது 9, 90, 900, 9000 என்ற டெசிமல் பெருக்கத்துக்கு வருவோம்.

இதற்குப் பெயர்கள் முறையே ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஒன்பதினாயிரம் என்பன.

8, 80, 800, 8000 என்னும் எட்டின் டெசிமல் பெருக்கம் எட்டு, எட்டு பஃது = எண்பது, எட்டு நூறு = எண்ணூறு, எட்ட் ஆயிரம் எண்ணாயிரம் என்று வருகின்றன. அதைப் போலவே மற்ற எண்களுக்கும்.

ஆனால் ஒன்பதுக்கு மட்டும் பத்தாம் இடத்தைக் குறிக்கும் சொல்லான ஒன்பது ஒன்றாம் இடத்தில் நிற்கும் ஒற்றை எண்ணான 9 க்கு ஆகிவருகிறது. தொண்ணூறு என்று நூறாம் இடத்தின் பெயர் பத்தாம் இடத்தில் நிற்கும் 90 என்பதுக்கு ஆகிவருகிறது. தொள்ளாயிரம் என்று ஆயிரத்து இடப்பெயர் நூறாம் இடத்து 900 என்பதற்கு ஆகிவருகிறது.
ஏன் இந்த இடப்பெயர்வு?

அதாவது முதலாம் இடத்தில் முற்காலத்தில் இருந்த 9க்கு நேர் பெயரான தொண்டு என்பது வழக்கு ஒழிய அதன் மேல் அடுக்கிய பத்தாம் இடப்பெயர், நூறாம் இடப்பெயர், ஆயிரத்தாம் இடப்பெயர் ஆகியன எல்லாம் முதலாம் இடத்தை நோக்கி நகர்ந்து விட்டன போன்ற காட்சி தென்படுகிறது.

எப்படி இது நேர்ந்திருக்கலாம், அப்படி ஒரு வேளை இப்படி நேர்ந்திருக்குமானால்?

ஒரு யூகம் செய்வோம். யூகம் தான். சான்றாண்மை மிக்க முடிபு என்று கொள்ள முடியாது.

தொல்காப்பியரின் காலத்துக்கு முன் தொண்டு என்னும் 9ன் பெயரின் அடிப்படையிலேயே பத்தின் பெருக்கம் இருந்தது என்று கொள்வோம்.

அதாவது 9, 90, 900, 9000 என்பனவற்றிற்கு முறையே தொண்டு, தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று.

இப்பொழுது 9க்கு தொண்டு என்னும் அரிய பயன்பாடு வழக்கு ஒழிந்ததும் தொண்பது என்று 90ஐக் குறித்த பெயர் முதலிடத்தை நோக்கி நகர்ந்து 9ஐக் குறிக்க புழக்கத்தில் அமைந்துவிட்டது. தொண்பது என்பது ஒன்பது என்று சொல்வழக்கில் வந்துவிட்டது.

அதேபோல் தொண்ணூறு என்று 900 என்பதைக் குறித்த பெயர் பத்தாம் இடத்தை நோக்கி நகர்ந்து 90ஐக் குறிக்க புழக்கத்தில் வந்துவிட்டது.

9000 என்பதைக் குறித்த தொள்ளாயிரம் என்பது 900 என்பதைக் குறிக்க நகர்ந்தது.

9000 என்பது எப்படிக் குறிக்கப்படும். அமைந்துவிட்ட வழக்கத்தின்படி?

ஒன்பது ஆயிரம் என்று குறிக்கப்படல் வேண்டும். நூற்பாவின்படி இன் ஒன்று சேர்ந்து ஒன்பதின் ஆயிரம் = ஒன்பதினாயிரம் என்று ஆனது.

இது பதிப்பாசிரியரான திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டுகின்ற யூகம். ஆனால் சிந்தனைக்குரிய யூகம்.

ஏன் சிந்தனைக்குரியது என்பது ஒன்பது என்னும் சொல்லுக்கான நூற்பாவையும், அதன் உரையையும் காணும் போது புலப்படும்.

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.
(எழுத்து 445)

இந்த நூற்பா எண்ணுப் பெயரொடு பத்து சேருங்கால் எப்படி வரும் என்று விவரிக்கும் இடத்தில் ஒன்பதோடு பத்து சேரும் போது என்ன ஆகும் என்று நூற்பா விவரிக்கிறது.

ஒன்பது என்னும் சொல்லில் உள்ள ஒகரத்தின் முன் தகர ஒற்று தோன்றி நிற்கும். ஏற்கனவே இருக்கும் ன் என்னும் ஒற்று ணகாரமாய் இரட்டிக்கும். இப்பொழுது ஒன் என்பது தொண் என்று ஆயிற்றா? வருமொழியாகிய பஃது என்பதில் உள்ள பகரமும் ஆய்தமும் கெட்டுப் போக ஊகாரக் கிளவி நிற்றலை ஆசிரியன் விரும்பும். அப்பொழுது தொண்+ஊ ஆயிற்று.

பஃது என்பதில் ப, ஃ இரண்டும் போய்விட்டது. மிச்சம் து என்பதுதான். இந்த து என்பதில் த்+உ இதில் உள்ள உகரம் கெடாது நிற்கும். தகரம் றகரமாக ஆகிவிடும். தொண்+ஊ+ற்+உ = தொண்ணூறு என்ற சொல் கிடைக்கும்.

உள்ளபடியே பார்த்தால் தம் காலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்ட தொண்ணூறு என்னும் சொல்லை நூற்பா விவரிக்க முயற்சி செய்கிறதேவொழிய சொல்லுக்கான நியாயமோ, விளக்கமோ, அமைதியோ இருப்பதாகத் தோன்றுகிறதா?


இந்த நூற்பாவிற்கு அடிக்குறிப்பில் திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டியிருக்கும் யூகக் கருத்தைத்தான் முதலில் விவரித்தேன். இந்த யூகத்திற்குத் தொண்டு என்பது 9ஐக் குறிக்கும் என்று தொல்காப்பியரும், மலைபடுகடாத்துப் புலவரும் காட்டும் சான்று பக்க பலம். தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற வழக்குகள் கெடாமல் வந்துள்ளமை ஒரு பலம். ஆனால் ஒரு கேள்வி இந்த யூகத்திலும் எழாமல் இல்லை. என்ன? யூகம் கூறும் பண்டைய முறையில் 90 என்பதைக் குறித்த தொண்பது வழக்கில் மாறி தொண்டு என்னும் சொல் பொருள் வழக்கு வீழ, ஒன்பது என்று ஆகிவிட்டது என்றால், ஏன் தொண்ணூறு என்பதும், தொள்ளாயிரம் என்பதும் தகரம் மறைந்துபடாமல் அப்படியே வந்தது என்னும் கேள்வியும் எழும். ஆனால் இந்த யூகம் கண்மூடித்தனமான யூகம் இல்லை என்பதும், சிந்தனைக்குரியது என்பதும் சரிதானே?

ஒன்பது என்பது பத்தில் ஒன்று குறைந்தது என்பதைச் சுட்டும் சொல் என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. எனில் தொண்ணூறு என்பது நூறில் எவ்வளவு குறைந்தது என்பதைக் காட்டுகிறது? தொள்ளாயிரம்?

ஆக மொத்தம் 9க்கு உரிய பழம் பெயரான தொண்டு என்பதன் சிறப்பு அரிய/அறிய சிறப்பன்றோ!

***
( ஒன்பது + பஃது என்பதற்கு எப்படித் தொண்ணூறு என்று வரும் என்று மிகவும்  ஜிம்னாஸ்டிக்ஸ் எல்லாம் செய்துதான் நூற்பாவும், உரையும் கொண்டுவர முயல்கின்றன. இது படிக்கும் போதே தெரியாமல் போகாது.

இருக்கலாம் being only descriptive is also a part of the grammatical exercise of the grammarians. ஆனால் இது மிகவும் அதிகம் என்றுதான் எனக்கும் படுகிறது. ஒன்பதில் இருக்கும் பது என்ன ஆச்சு என்று நானும் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு வேளை விடுபட்ட ஓலையோ? :-)

எப்படியாயினும் இங்கு திரு ஞா தேவநேயப் பாவாணரின் யூகம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருடைய யூகத்திற்குப் பக்க பலம் இரண்டு கருத்து.

1) தொண்டு = 9,

2) தொண்ணூறு, தொள்ளாயிரம் முதலிய வழக்காறுகளின் உண்மை.

ஆனாலும் ஒன்று குறைந்த பத்து, பத்து குறைந்த நூறு, நூறு குறைந்த ஆயிரம்  என்று கணக்கிடும் முறை இருந்ததா? அதற்கு முழு எண்ணின் குறை என்பதைச் சுட்ட தொள் அல்லது தொண் பயன்பட்டதா? என்று யோசித்தால் பாவாணர் சொல்லுவது போல், ஒன்பது என்றால் ஒன்று குறைந்த பத்து என்றால், தொண்ணூறு = பத்து குறைந்த நூறு என்று சொல்லவும், தொள்ளாயிரம் = நூறு குறைந்த ஆயிரம் என்று சொல்லவும் என்ன அடிப்படை இருந்திருக்கிறது?

உலக கணக்கியல் முறைகளின் பின்னணியில் வைத்துதான் இதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. வெறுமனே மொழி இலக்கணத் துறைகள் மட்டும் போதாதோ என்றும் படுகிறது.)

***

No comments:

Post a Comment