Thursday, May 2, 2019

முத்கலரின் கதை - (மகாபாரதத்தில் வருவது)

ஸ்ரீ மஹாபாரதம் என்பது ஒரு பெரும் கதைக்கடல். அதில் கண்ணில் பட்ட அருமையான ஓர் கதை இந்த முத்கலரின் கதை. மஹாபாரதக் கதையைப் பெரிதும் தழுவி இதை எழுதுகிறேன். முக்கியமாக பெரும் பெரும் சுகங்களையும் நிலையற்றவை என்று உணர்ந்து அவற்றில் பற்றை அறச்செய்யும் வைராக்கியம் என்பதையும், அழியாத மிக உயர்ந்த நிலை எது என்பதையும் பற்றிக் கவன ஈர்ப்பு செய்யும் விதத்திலும் இந்தக் கதை அமைந்துள்ளது.

*
காட்டில் இருந்த காலத்தில் ஒரு நாள் யுதிஷ்டிரர் வியாசரிடம் கேள்வி ஒன்று கேட்கிறார். அருமையான கேள்வி. அன்று சொன்ன பதில்கள் ஒரு புறம் இருந்தாலும் இன்றும் யோசிக்க வைக்கும் கேள்வி. 

'மகாமுனிவரே! உடலை வருத்திக் கடும் முயற்சியால் செய்யத்தக்க தவம், அதுபோல் தானதர்மங்கள், இந்த இரண்டில் எந்த ஒன்று மறுமை சுகமான சொர்க்க சுகத்திற்கு மிகவும் சிறந்த வழியாக அமைவது?'

அதற்கு வியாசரின் பதில்: 'யுதிஷ்டிரா! புவியில் தானம் என்பதை விடச் செய்ய முடியாதது என்பது எதுவும் இல்லை. ஏனென்றால் மக்களுக்குப் பொருளில் ஆசை என்பது மிகவும் பெரியது. காரணம் பொருள் என்பது மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் அடையப் படுகிறது.

பார்! இந்தப் பொருளுக்காகப் பிரியமான உயிரையே பணயம் வைத்தும் போர் செய்கிறார்கள். அப்படியே பெரும் கடலையும் கூட பொருளாசையினால் கடக்கிறார்கள். ஆழ்ந்த காடுகளையும் தாண்டுகிறார்கள். பசுக்காத்தல், மிகுந்த உழைப்பு உடைய வேளாண்மை எல்லாம் பொருளுக்காக அன்றோ மக்கள் செய்கிறார்கள். சிலரோவெனில் பொருளுக்காக வேண்டி பிறருக்கு அடிமையாக ஆகிறார்கள். எனவே எப்படிப் பார்த்தாலும் கஷ்டத்தால் தேடப்பட்ட பொருளை விடுவது என்பது யாராலும் எவ்விதத்திலும் முடியாதது என்றே தோன்றுகிறது. ஆகையால் அந்தப் பொருளை விடுதல், தியாகம் செய்தல் என்பதாகிய தானம் என்பது மிகவும் அரியது என்றுதான் தோன்றுகிறது.

இதிலும் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தானம் செய்யும் போது நியாயமான வழியில் சம்பாதிக்கப்பட்ட பொருளை ஒருவர் தக்க சமயத்திலும், தக்க இடத்திலும், தகுந்த மனிதருக்கும், ஐயோ பிரிகிறோமே என்ற மனத்துயரம் இன்றி, உள்ளத் தூய்மையுடன் தானம் செய்தால்தான் அந்தத் தானமானது செய்தவரை மகாபயத்தினின்றும் காப்பாற்றுகிறது. அப்படி இல்லையேல் வெறும் பொருள் தானத்தால் பலன் இல்லை. எனவே சிரத்தையுடனும், உரிய அறத் தெளிவுடனும் செய்யப்படும் தானம் நேரே மிக உயர்ந்த சொர்க்க லோகத்திற்கு வழி என்பது பழங்காலம் தொட்டே அறிஞர்களால் அறியப்பட்டு இருக்கிறது. முத்கலர் வெறும் பதக்கு நெல்லை உரிய முறையில் தானம் செய்த காரணத்தால் கிடைத்தற்கரிய சிறந்த சொர்க்க பதவி கிடைக்கப் பெற்றார் என்ற பழமையான வார்த்தையை கேட்டிருப்பாயே!' என்றார் வியாசர்.

யுதிஷ்டிரருக்கு ஆர்வம். அது என்ன முத்கலரின் பதக்கு நெல் தானக் கதை?

'ஐயா! அது என்ன பதக்கு நெல் தானம் செய்தாரா? முதகலர் செய்த அந்த தானம் எவ்விதம் செய்யப்பட்டது? அவர் அடைந்த பலன் என்ன? கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. சொல்லுங்கள்!' என்று கேட்டார் யுதிஷ்டிரர்.

*
வியாசர் கூறுகிறார்: 
'அரசனே! முன்னாளில் முத்கலர் என்னும் முனிவர் மிகவும் எளிய வாழ்க்கையை மேற்கொண்டவராய் இருந்தார். வயல்களில் விழுந்த நெற்கதிர்களைத் திரட்டி வந்து அன்றைய உணவை ஆக்கிக் கொள்வது ஆகிய சிலவ்ருத்தி என்னும் வழியாலும், கீழே விழுந்த தானிய மணிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வந்து சேமித்து அன்றைய பசியைத் தீர்த்துக் கொள்வது என்ற உஞ்சவிருத்தி என்னும் வழியாலுமே வாழ்ந்தார் என்று கூறுவர். எப்பொழுதும் அறம் என்ற வழியை விட்டு விலகாத மனமும், பொறிகளை நன்கு அடக்கி அமைதியான சித்தமும், உண்மையும், பொறாமையற்ற எண்ணமும் கொண்டு வாழ்ந்தார் முத்கலர். தாம் அதிகப் பொருளுக்காக ஆசைப்பட்டு முயன்றால் தம் வாழ்க்கை தவத்திற்கான அமைதியின்றி அலைக்கழிக்கப்படும் என்று பயந்து அவரால் இத்தகைய வாழ்க்கை கைக்கொள்ளப்பட்டது. தாம் சேகரித்த தானியங்கள் பதக்கு அளவு ஆனதும் தம்மளவில் நிறைவான யாகங்கள் செய்து, தெய்வங்கள், முன்னோர், முனிவர்கள், வாயிலா ஜீவன்கள், மனிதர்கள் ஆகியோருக்கு ஈந்தது போக மிச்சத்தைப் புசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கூட சமயத்தில் ஆகும் போதிய அளவு தானியங்கள் சேருவதற்கு. ஆயினும் அந்தக் கடுமையான வாழ்க்கை முறையில் அவர் சலிப்பு எய்தவில்லை. அவருடைய பெருமையைக் கேள்விப்பட்டு பலரும் அவர் செய்யும் தூய பூஜையில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்த வண்ணம் இருந்தனர். அவரும் மிக்க மகிழ்ச்சியுடன் தம் வழியில் தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

இதைக் கேள்வியுற்று முத்கலரைப் பரிட்சை செய்ய வேண்டி துர்வாசர் என்னும் முனிவர் இவரைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார். துர்வாசர் பெரும் முன்கோபி என்பது யாவரும் அறிந்த விஷயமாய் இருந்தாலும் முத்கலர் அதைக் கண்டு எல்லாம் சிறிதும் தளரவில்லை. துர்வாசரும் அவர் உணவு தயார் செய்ததும் சரியான நேரத்திற்கு வந்து நின்று அத்தனை உணவையும் உண்டு சென்றுவிடுவார். பொறுமையுடன் முத்கலர் சலிப்பே இன்றி மீண்டும் தம் வழியில் தொடர்வார். இப்படிப் பல தடவைகள் நடந்தும் முத்கலரின் மனத்தில் சிறிதும் கொதிப்பு இல்லை என்பதை அறிந்த துர்வாசர் தாமே மிகவும் வியந்து மிக உயர்ந்த சொர்க்க உலகத்தின் சுகம் முத்கலரை வந்து அடையும் என்று வாழ்த்தி விட்டுப் போனார்.

அவர் அகன்ற மறுவினாடியே தேவ தூதன் ஒருவன் அன்னப் பட்சிகளால் ஓட்டப்படும் விசித்திரமானதும், மிகுந்த தெய்விக மணம் உள்ளதுமான விமானம் ஒன்றுடன் வந்து சேர்ந்தான். முத்கலரைப் பார்த்து, 'முனிவரே! நீர் செய்த உள்ளத் தூய்மையுடன் கூடிய தான தர்மமானது ஜெயித்தது. எத்தனையோ முனிவர்கள் பலகாலம் தவம் செய்தும் எய்தற்கு அரிதான உயர்ந்த சொர்க்க லோகம் உங்களுக்கு அழைப்பு விடுத்து இந்த அற்புத விமானத்தையும் தாங்கள் ஏறிவர அனுப்பியிருக்கிறது. வாரும்.' என்றான்.

முத்கலரோ அவன் சொல்வதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல் அவனை வீட்டிற்கு வந்த விருந்தினர் போல உபசரித்து, 'ஐயா பாவம்! நீண்ட தூரம் வந்திருப்பீர். என்ன அருந்துகிறீர். உணவு என்ன செய்யட்டும்?' என்று கேட்டார். தேவ தூதன் சிரித்து விட்டான்.

'ஐயா! நான் தேவ தூதன். எங்கள் நாட்டில் பசி, தாகம், வருத்தம், இல்லாமை, பொருள் தேவை முதலியன கிடையா. உங்களுக்குத் தெரியாதா?' என்றான்.

'ஓ! அப்படியா?' என்ற முத்கலர், அவனிடம் ’உங்கள் தேவ லோகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை முறை என்ன? குணங்கள் என்ன? அங்கு வாழ்வது சுகமா? துக்கமா? அந்த லோகத்தின் குணமென்ன? தோஷம் என்ன? இதெல்லாம் ஒன்றுவிடாமல் எனக்குச் சொல்ல வேண்டும். உம்மை ஒரு நண்பனைப் போல் கேட்கிறேன். நீர் தான் சரியான ஆள் சொல்வதற்கு. எனக்கு எதையும் மூடு மறைவு இன்றி உண்மையாக என்ன விஷயம் என்று சொல்ல வேண்டும். ஏமாற்றிவிடாதீர்.' என்றார்.தேவ தூதன் அடக்க முடியாமல் நெடு நேரம் சிரித்து ஓய்ந்து பின் கூறலுற்றான்.... 

*
'ஐயா! பெரியவரே! அவரவர்கள் சொர்க்கம் கிடைக்காதா என்று ஆலாய்ப் பறக்கிறார்கள். நீர் என்னவென்றால் வலிய வந்து நிற்கும் வான் இன்பத்தைக் குணம் நாடிக் குற்றமும் நாடி என்று ஆராய்கிறீர். என்னத்தைச் சொல்ல? 

சொர்க்க லோகம் என்பது எல்லா உலகங்களினும் மேம்பட்டது ஐயா! விமானம் வேறு கிடைத்தது என்றால் வேறு என்ன வேண்டும்? அடிக்கடி பயணம் அங்கும் இங்கும் போய் வருவதே பெரும் சுகம் ஆயிற்றே! அந்த உலகத்திற்குப் போக வேண்டும் என்றால் தவம் வேண்டும். பெரும் யாகங்கள் செய்த பலம் வேண்டும். பொய்யர்களும், நாத்திகரும் அங்கு போவதில்லை. அறத்தின் சிந்தையும், அமைதியும், புலனடக்கம் மிக்கவர்களும், பொறாமை அற்றவர்களும், தானதர்மத்தில் நோக்கம் உள்ளவர்களும் மட்டுமே அங்கு செல்ல முடியும். சூரர்கள், குணங்களால் புகழ் அடைந்தவர்கள் அங்கு போகிறார்கள்.

அந்த உலகம் எப்படிப் பட்டது என்று கேட்கிறீரா? தேவர்கள், ஸாத்தியர்கள், விச்வேதேவர்கள், மஹரிஷிகள், யாமர்கள், தாமர்கள், கந்தருவர், அப்ஸரஸுகள் என்று பெருமை படைத்த பல கூட்டங்கள் அங்கு உண்டு. அவர்களுடைய ஆலயங்களும், அதற்கான உலகங்களும் தனித்தனி. அனைத்தும் ஒளிகொண்டு திகழ்வன. விரும்பிய பொருள் எல்லாம் உள்ளன. பொன் மயமான மலைகள். சுடர் விடுக்கும் நந்தவனங்கள். உண்டதும் ஒளியூட்டும் அருமையான பழங்கள், மரங்கள், சதா விளையாட்டு இடங்கள்.

ஐயா! அங்கே பசி தாகம், வாட்டம், அதிகக் குளிர், அதிக வெப்பம் எதுவும் இல்லை. பயம் என்பதே கிடையாது. அதைப் போல் அருவருக்கத்தக்க அழுக்குகளும், மாசும் கிடையாது. அங்கு அமங்களமான பொருள் எதையும் நீர் பார்க்க முடியாது. நோய் என்பது என்ன என்று அங்கு நீர் அறிய முடியாது. வெறும் இரைச்சல், கூச்சல் போன்ற சத்தங்கள் அங்கு இல்லை. எப்பொழுதும் இனிமையான ரம்மியமான இசை மெதுவாகப் பரந்து, வழியும். சோகம் இல்லை; முதுமை இல்லை; அயர்வு, அழுகை எதுவும் இல்லை.

முனிவரே! அந்த இடத்தில் நீர் அடைவதெல்லாம் விதியினால் ஏதோ யதேச்சையாய் நேரும் சம்பவங்கள் அன்று. உம்முடைய வினைப் பயனால் நீர் அடையும் அற்புதமான பலன். எனவே உமக்கு என்ன நேருமோ என்று எதிர்கால பயமே இல்லை. என்ன என்ன நீங்கள் அனுபவிப்பீர்கள் என்பதை முன்னரே நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியும். ஆனால் துன்பம் எதுவும் நிகழாது; இன்பம் மட்டுமே நிகழும்; என்ன என்ன இன்பம் எப்பொழுது நிகழும் என்பதும் நன்கு தெரியும். அட்டவணைப் படிதான் அவை அவை அடுத்து அடுத்து அனுபவிக்க வரும். இதை விட ஒரு மனிதருக்கு வேறு என்ன சொர்க்கம் வேண்டும்? சொல்லுங்கள்.

அங்கு உம்முடைய உடலுக்கு முதுமை இல்லை. இளம் வயது முழுமையான காலமும். அதுமட்டுமில்லை. உடல் எப்பொழுதும் ஒளிபடைத்த உடல். இங்கு உங்கள் உலகத்தில் ஒரு சிறிது இன்பம் துய்த்தாலும் சோர்ந்து போய், ஒளி மங்கி, முகம் இருண்டு...இந்தத் துயரமெல்லாம் அங்கு கிடையாது ஐயா! உங்கள் உடலும் யாரோ தாய் தந்தை என்பவர்கள் உண்டு பண்ணுவது அன்று. உங்கள் வினைப் பயனாலேயே உங்களுக்கு ஏற்பட்ட அற்புத சரீரம். அதாவது நீங்கள் யாருக்கும் கடன் பட்டவர்கள் எதற்கும் இல்லை. உங்கள் பலனை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள். யாரையும் நம்பி நீங்கள் இல்லை. அந்த உடல்களில் ஆயாசமோ, வேர்வையோ, துர்கந்தமோ, பழுதோ ஒரு நாளும் வருவது இல்லை. அந்தச் சொர்க்க உலகத்தில் போய் விட்டால் பொறாமை, சோகம், வாட்டம், மோகம், பொறாமை என்று அனைத்தும் நீங்கி சுகமான வாசம்.

சொர்க்கமே அப்படி என்றால், அந்த உலகத்திற்கும் மேலே அதைக் காட்டிலும் மிகச் சிறந்த தன்மைகள் கொண்டதாய் விளங்குவது இந்திரனின் உலகம். அதைக் காட்டிலும் பல மடங்கு சிறந்தது பிரம்ம தேவனின் உலகம். அந்த பிரம்ம உலகத்திற்கு நல்வினைகளால் தூய ரிஷிகள் செல்லுகிறார்கள். அந்த உலகத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது ஐயா! அங்கு தேவர்களுக்கும் தேவர்கள் என்று சொல்லப்படும் சிலர் இருக்கின்றனர். அவர்கள்தாம் தேவர்களால் தொழப்படும் தேவர்கள் என்று சொல்லலாம். அவர்களின் பெயர் ரிபுக்கள். அவர்களின் உலகங்கள் மிக்க புகழ் உடையன. அவர்களுக்கு எந்தத் தேவைகளும் இல்லை. அமுதமும் அவர்களுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட திவ்வியமான தேகம் உடையவர்கள். அவர்களுக்கு முடிவற்ற சுகம். கல்பங்கள் மாறும் போதும் அவர்களுக்கு அழிவில்லை. அந்த உலகங்களை அடைய தேவர்களே மிகவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் கிடைத்தற்கரியன அந்த உலகங்கள். இப்படிப்பட்ட உலகங்கள் முப்பத்து மூன்று. இவையெல்லாம் உமக்கு உம்முடைய தூய மனத்துடன் கூடிய உண்மையான தானம் ஆகிய சிறப்பால் உமக்கு வலிய வந்திருக்கிறது. நீர் அடையும் இதுதான் சொர்க்கத்தின் மிக உயர்ந்த சுகம். தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கள்.'

ஓஓ அப்படியா? ஆமாம் நண்பரே! அந்த லோகங்களின் குணங்களைச் சொன்னீர்கள். நன்று. மிகுந்த ஆர்வத்தை ஏற்படுதுகிறது உம்முடைய சொல். ஆனாலும் அவற்றின் தோஷங்களை நீர் என்ன என்று சொல்லவில்லையே இன்னும். எதையும் மறைக்காமல் எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும் ஐயா. ஒரு நண்பன் என்று கருதி நீர் உரைக்க வேண்டும்.

*
தேவ தூதன் சற்றே முகம் வாடியவனாய்க் காணப்பட்டான். 'இவ்வளவு சொல்லியும் நீர் விடமாட்டேன் என்கிறீரே! ஆமாம். அந்த சொர்க்க உலகங்களிலும் ஒரு பெரிய தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அந்த தோஷத்தை நினைத்தால் அதன் சுகங்கள் மனத்தை விட்டு அகன்று விடுகின்றன.'

மிகவும் ஆர்வமாகக் காதை தீட்டிக் கொண்டார் முதகலர். தேவ தூதன் ஏதோ தன்னுள் ஒரு துயர சம்பவத்தை நினைவுற்றவன் போலும் சிறிது தலையைத் தாழ்த்திக் கொண்டு நிமிர்ந்தான். பாவம் மண்ணின் மகன் என்றால் சிறிது கண்ணை மூடித் திறப்பான். விண்ணின் குடிமகனுக்கு அழக்கூடக் கொடுத்து வைக்கவில்லை.

'ஐயா! நான் நெடுங்காலமாக இப்படி வந்து தகுந்த சத்பாத்ரங்களைத் தேடி சொர்க்கத்துக்கு அழைத்துப் போகும் பணியில் இருக்கிறேன். பலப்பல உயிர்களைக் கொண்டு சென்றிருக்கிறேன். அவை பலவிதமான உயர்ந்த புண்ணியங்களைச் செய்து பெரும் ஒளி ரூபத்துடன் விமானத்தில் ஏறும் காட்சியைப் பார்க்கும் பொழுது எனக்கு உள்ளத்தில் என்னவோ கலக்கம் ஏற்படும். அதை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது நாங்கள்.

ஏனெனில் அந்த உயிர்கள் அங்கு போனதும் மிகுந்த ஆனந்தத்தில் திளைக்கும். தம்முடைய நல்வினைகளைத் தாமே சிறிதும் மிச்சமின்றிக் கணக்கு தீர்த்துத் துய்க்கப் போகிறோம். யார் தயவும் தேவையில்லை என்னும் போது அந்த உயிர்களுக்கு என்று ஒரு தன்னிச்சையான பெருமிதம், சுய கர்வம் பிறக்கும். அப்பொழுது பார்க்க மிகவும் நன்றாய் இருக்கும். ஐயோ இவை இப்படியே நித்தியமாக இருந்துவிடக் கூடாதா என்று என் இதயம் அடித்துக் கொள்ளும்.

காரணம் அங்கு அனுபவம் தொடங்கிய கணத்திலிருந்து அவற்றின் புண்ணியம் கரையத் தொடங்கிவிடும். அவ்வாறு கரையத் தொடங்குகிறது என்பது அந்த உயிர்களுக்குத் தெரியாமல் போய்த் தொலைந்தாலும் பரவாயில்லை. ஆனால் அங்குதான் முழு கணக்கும் அவரவர் கையில்தானே. கணக்கு குறைய குறைய அந்த உயிர்கள் பித்து பிடித்தால் போல் பரபரப்பு கொள்ளும். புது வினைகள் செய்து புண்ணியத்தை அங்கு ஈட்ட முடியாது. சேர்த்து வைத்த புண்ணியத்தைக் கரைக்க மட்டுமே தாங்கள் வந்துள்ளோம். இனி அது தீரும் வரை அதிலிருந்து மீளவும் முடியாது என்பதை அந்த உயிர்கள் உணரத் தொடங்கும் வினாடி கொடுமையிலும் கொடுமை.

ஏனெனில் அவற்றால் அப்படி உணர்ந்தாலும் அந்தத் துயரத்தையும் வெளிப்படையாக அனுபவிக்க முடியாது. அங்கு துயரம் உயிர்களை அண்டாது. அப்படித் துயரம் அடைய வழியிருந்தால்கூட அவற்றுக்கு ஒரு கழுவாய் இருக்கும் என்று சொல்லலாம். அனுபவத்திலும் வராமல் உணர்விலும் இருந்து கொண்டு படுத்தும் துயரம், அதைவிட நரகம் வேறு இல்லை. அந்த வடிவில்லாத துயரமே, அனுபவிக்கப்படாமல் பெரும் பயமாக மாறும். அந்த பயத்தையும் அவை அனுபவிக்க முடியாது. போகப் போக திக்கு திசையற்ற ஜந்துக்கள் போல் அவை பிரமை பிடித்தால் போல் அலையும். அப்பொழுதும் மேலும் மேலும் இன்பம் இன்பம் என்று ஏக்கம் பிடித்து ஆத்திரம் கொள்ளும். ஆனால் எந்த உணர்ச்சிகளையுமே அவற்றால் அனுபவம் ஆக்க முடியாத காரணத்தால் வெகு விரைவில் தங்களுடைய புண்ணியம் முடிவுக்கு வரப் போகிறது. தாங்கள் கீழே விழப் போகிறோம் என்ற இனம் புரியாத பீதி அவற்றைப் படுத்தும் ஊமை வாட்டு...அந்தோ கொடுமை...இதற்குப் போய் சொர்க்கம் என்று பெயர் வைத்தார்களே என்று எவ்வளவோ முறை எனக்கே தோன்றியதுண்டு.'

ஏன்? அந்த உயிர்கள் அதற்கும் மேல் உலகங்கள், பிரம்ம உலகம் இவற்றுக்குப் போகலாமே.....

இல்லை ஐயா... அங்கும் இதே கதிதான். புண்ணியம் முடிந்ததும் மீண்டு வாராத உலகங்களே இல்லை. புண்ணியம் பற்றில் இருக்கும் வரைதான் இருக்கும் அளவிற்குத்தான் அங்கு அனுபவம். தீர்ந்ததும் கீழே விழ வேண்டும். ஒளி அகன்று, சோர்ந்து, சாம்பிப் போய், எந்தப் பிறவி வாய்க்குமோ, எப்பொழுது வாய்க்குமோ என்று பெரும் பீதியுடன்.

ம்..ம் பெரிதும் யோசிக்க வைக்கின்றது உங்களின் வார்த்தைகள் நண்பரே!

அது மட்டுமில்லை ஐயா! அப்படி விழும் உயிர்கள் பெரும்பாலும் மனிதப் பிறவிகளில்தான் விழுகின்றன. ஏனெனில் புதிய வினைகளைச் செய்து புண்ணியம் ஈட்ட வேண்டும் என்ற வெறி அவற்றை அதற்குத் தகுந்த மனிதப் பிறவிகளில் கொண்டு வந்து போடுகிறது. ஆனால் அங்குதான் பெரும் வேதனை இருக்கிறது.

ஏன்? என்ன?

இல்லை. மனிதப் பிறவிகளில் வந்து சேர்ந்த ஜீவன்கள் தம்முடைய சுக நாட்ட வெறியால், நெடுங்காலம் சுகத்திற்கே அடிமையாய் இருந்த வாசனையால், அதை இழந்த ஆத்திரத்தால், அறம், நன்மை, தீமை என்று எதையும் கருதாமல் இங்கேயே கிடைத்தது வாய்ப்பு என்று சுகம் இன்பம் என்று அதிலேயே போய் ஆத்திரத்துடன் விழும். தங்களுக்கு நெடுங்காலம் சென்ற பின்னர் கிடைத்த அருமையான விமோசனம் மனிதப் பிறவி என்பதையே மறந்து போகும். அறிவு தலை தூக்கினாலும் அது இன்ப நாட்டத்திற்குப் பெருந்தடை என்று நினைத்து அறிவே இல்லாத சுகமே அனுபவிக்கும் ஓருயிர் ஈருயிர்ப் பிறவிகளில் போய் தம்முடைய வெறியால் தாமே போய்ச் சேரும். பிறகு அங்கிருந்து அவை அந்த வாசனைகள் எல்லாம் அகன்று படிப்படியாகத் தேரி வர நெடுங்காலம் ஆகிவிடும். மீண்டும் நன்கு உணர்வு வாய்ந்த மனிதப் பிறவி வந்ததும், பெரும் தான தர்மங்கள், தவங்கள் எல்லாம் செய்து சொர்க்க சுகம் கிடைக்கும் பொழுது மீண்டும் இதே கதை.....

ஐயோ...!

ஆமாம் ஐயா இதுவரை எத்தனை உயிர்களின் அலறலை, துக்கக் கதறலை நான் கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்திருக்கிறேன். ஐயோ அது கொடுமை....போதைப் பொருளுக்கு அடிமை ஆகும் உயிர்களைப் போல் கடுமையில் ஆயிரம் மடங்கு.

அப்படியென்றால்...கீழே விழுதல் இல்லாத, மீண்டு வருதல் என்பது இல்லாத, நித்தியமான உலகம் என்பது எதுவும் இல்லையா...? சொல் நண்பரே!.....ஏன் தயங்குகிறீர்?

அது.....சொல்வதற்கு.....

நீர் என் நண்பர் என்று நான் வரித்து உம்மைக் கேட்டேன் அன்றோ. நீர் இப்படித் தயங்கலாமா? தயவு செய்து உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.....

அப்படி இல்லை ஐயா.....நான் சொல்லி நீங்கள் கேட்டு பின்னரும் சொர்க்கம் வருவதற்கு முடிவெடுத்தால் அது மிகவும் உங்களை அல்லல் படுத்தும். அதுதான்....

இல்லை..பரவாயில்லை சொல்லும். எதுவாய் இருந்தாலும் நான் கேட்டபின் முடிவெடுப்பேன். உமக்கு எந்தக் குற்றமும் இல்லை.

நீண்ட பெருமூச்சுக்குப் பின் சொல்லத் தொடங்கினான் தேவ தூதன்.

*
'ஐயா! உங்களுடையது கர்ம பூமி. சொர்க்கமோ பல பூமி. இங்கு கர்மம் செய்யலாம். வினைப் பயன் ஈட்டலாம். வினைப் பயனையும் துய்க்கலாம். புதிய வினையும் சேரும். புண்ணியம் பாபம் எல்லாம் கழியவும் செய்யும். புதிதாகச் சேரவும் செய்யும். சேர்ந்த வினை சஞ்சிதம். கழியத் தொடங்கிய வினை பிராரப்தம். புதிதாகச் சேரும் வினை ஆகாமியம். ஆனால் சொர்க்கத்தில் நீங்கள் கொண்டு செல்லும் மூட்டையோ முற்றிலும் சஞ்சிதமான புண்ணிய கர்மம் மட்டுமே. அது தீரும் வரை அங்கு உங்கள் வாசம். ஆனால் சொர்க்க பூமி எதுவாயினும், புண்ணியம் உள்ளவரை இருக்கும், பின் முடியும். மீண்டும் கீழே விழத்தான் வேண்டும். புண்ணிய வினை சிறிது உள்ளவரை கூட அங்கிருந்து நீங்கள் மீள முடியாது. புண்ணியம் முடிந்தால் அப்புறம் ஒரு வினாடி கூடப் போனால் போகிறதென்று அங்கு தங்க விடாது. தள்ளிவிடும். அதுதான் கர்ம கதி.

கர்ம கதியில் சிக்கிய ஜீவன்கள் போவதும் வருவதுமாய் உள்ளவைதான் இந்த லோகங்கள். இவ்வாறு மீண்டும் திரும்பியே வராத உலகம் உண்டா என்று கேட்டீர் ஐயனே! உம்மிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. அப்படி ஓர் நிலை இருக்கிறது. அதை மிகப் பழைய நிலை என்று சொல்கிறார்கள். அதை தூய்மையே வடிவான நிலை என்கிறார்கள். சிறந்த ஒளி அது மட்டுமே. அதைத்தான் மிகப் பெரியது, பிரம்மம் என்று சொல்கிறார்கள். பிரம்ம லோகம் கூட அதை எட்ட மாட்டாது. அதைத்தான் விஷ்ணுவின் மூன்றாவதான மிக உயர்ந்த பரமம் பதம் என்று ரிக்குகள் கூறுகின்றன.'

அதை அடைவது எப்படி?

புலன்களால் அனுபவிக்கப்படும் விஷயங்களில் மனத்தைச் செலுத்துவதால், அது சொர்க்கமே ஆயினும், அந்த பரமம் பதத்தை அடைய முடியாது. டம்பம், பேராசை, கோபம், மோகம், துரோகம் ஆகியவைகளால் பீடிக்கப்பட்டவர்களால் அந்த லோகத்தை அடைய முடியாது. மரணத்தைத் தாண்டி மரணமிலாப் பெருநிலையை அடைந்தால்தான் அந்த லோகத்தை அடைய முடியும்.

என்ன சொல்கிறீர்? எங்கு சென்றால் நித்தியமாக இருக்கலாம் என்று கேட்டால், மரணத்தைத் தாண்டியபின் தான் அந்த லோகத்திற்கே போக முடியும் என்கிறீரே! அப்படி என்றால் மரணத்தை எப்படித் தாண்டுவது?

ஐயா! முதலில் மரணம் என்றால் என்ன என்று தெரிந்தால் அதைத் தாண்டுவதும் எப்படி என்று புலப்படும்.

மரணம் என்றால்....

ஆம் ஐயா. மரணம் என்பது இரண்டு சொற்களால் ஆனது. அதைக் கடந்தால் மரணமற்ற நிலை.

என்ன அந்த இரண்டு சொற்கள்?

'நான்' என்னும் அகங்காரம். என்னுடையது, 'மம' என்னும் மமகாரம். அஹம், மம என்னும் இரண்டு சொற்களால் ஆனது மரணம். அதை எவன் கடக்கிறானோ அவனே அந்தப் பெரும் நிலையான, மீண்டும் வராத நித்திய நிலையான விஷ்ணுவின் பதம் எனப்படும் லோகத்தை அடைகிறான். அப்படி அடைந்து காலம், தேசம், மாற்றம், சுழற்சி என்னும் இவைகளை எல்லாம் கடந்துவிடுகிறான். நான் எனது அற்றவர்கள் சுகம் துக்கம் என்று எந்த இரட்டையிலும் சிக்குவதில்லை. இந்திரியங்கள் நன்கு அடங்கியவர்களாய் அவர்கள் இயல்பாகவே தியான யோகத்தில் பற்றுதல் கொண்டு அதன் மூலம் அங்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு நீர் செல்ல வேண்டும் என்றால் மிகவும் அரிதில் நீர் ஈட்டிய இந்த இணையற்ற புண்ணியம் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். நான் எனது என்பதே அற்றபின் இவைக்கு இடமும் இல்லை. அடையப்படும் அனுபவங்கள் யாதாயினும் நீர் உம்முடையது இல்லை என்று கைவிட வேண்டும். எவ்வளவோ ஜன்மங்கள் முயன்று ஈட்டிய புண்ணியத்தை யார் விடுவார்கள் சொல்லும்? நீர் மிகவும் வருத்திக் கேட்டதால் இதை உரைத்தேன். வாரும் ஏற்கனவே மிகவும் தாமதம் ஆகிவிட்டது.

முத்கலர் வெறித்த கண் வெறித்தபடியே நிலைகுத்தியவராய் தம்முள் ஆழ்ந்தவராய் இருந்தார். கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. வீண் வீண் வீண் என்று அவர் மனம் அலறியதை இதழ்கள் தந்தி அடித்தன. தத் விஷ்ணோ பரமம் பதம் - அந்த விஷ்ணுவின் உயர்வற உயர்ந்த நிலை - என்று ரிக்கு அவர் வாயில் முணுமுணுத்தது.

'ஐயா! நெடுநேரம் சொர்க்கத்தின் விமானம் மண்ணில் நிற்காது. சீக்கிரம் தயவு செய்து' என்றான் தேவ தூதன்.

அவனை மலங்க விழித்தார் முத்கலர்.

*
முத்கலர் தட்டுத் தடுமாறி வார்த்தைகளைச் சொன்னார். 'தேவ தூதனே! என்னால் தாமதம் ஆக வேண்டாம். நீ செல். ஒரு நண்பனுக்குச் செய்ய வேண்டிய மிகப் பெரும் உதவியைச் செய்தாய். மிக்க நன்றி அப்பா. விழுதலையே முடிவாகக் கொண்ட சொர்க்கத்தில் நான் கொடூரமான துக்கத்தைக் காண்கிறேனே அன்றிச் சுகத்தைக் காணவில்லை. நான் மிகப்பெரிய பேறு என்று நினைத்தது எவ்வளவு வீண்! நல்ல வேளை எதையும் குணம் தோஷம் இரண்டையும் நன்கு சீர்தூக்கி எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்று பெரியவர்கள் உரைத்து வைத்தது எவ்வளவு உதவியாய்ப் போயிற்று! அந்த சொர்க்கத்தையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது கர்ம பூமியாகிய இந்த எங்கள் உலகமே எவ்வளவு இனிமையான உலகமாகத் தெரிகிறது. நிறைய தவறுகள் நடக்கின்றன. ஆனால் எல்லாத் தவறுக்கும் திருத்தங்கள் செய்து கொள்ள முடியும். பழைய கர்மங்களை மாற்ற புதிய கர்மங்கள் செய்ய முடியும். ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் முயற்சியால் முன்னேற முடியும். அறியாததைப் புதிதாக அறிந்து கொள்ள முடியும். மனித வாழ்க்கை தப்புகளாலும் தவறுகளாலும் ஆனதுதான். ஆனால் மகத்தானது என்பதை உணர்கிறேன்.

முக்கியமாக துக்கம் என்றால், துயரம் என்றால் உட்கார்ந்து அழுதாவது ஆற்றிக் கொள்ள முடியும். இது சரி இது தவறு என்று தெரிந்து கொள்ள பல வழிகள் இருக்கின்றன. பல சாத்திரங்களைக் கற்க முடியும். வாழ்க்கை வசதிக்கு, அறிவின் மேம்பாட்டிற்கு. மோக்ஷம் பெறும் வழியில் செல்வதற்கு. கர்மம் என்ற அற்புதமான காமதேனு எங்கள் உலகத்தில்தான் அற்புதமாக சஞ்சரித்து விளையாடுகிறாள். வேண்டியது அனைத்தையும் தருகிறாள். வேண்டாம் என்றால் அதையும் மாற்ற உதவி புரிகிறாள். பார் நீ ஒரு வார்த்தை சொன்னாயே! மரணம் என்பது இரு சொற்களால் ஆனது. அஹம் மம என்று. அந்த மரணமான அஹங்கார மமகாரங்களைத் துறந்து, கர்மங்களை நான் செய்கிறேன் என்னும் அபிமானத்தைத் துறந்து, கர்மங்களின் பலன்களில் வேட்கை, எதிர்பார்ப்பு என்ற பற்றுதலைத் துறந்து அனைத்து வினைகளையும் கர்ம யோகமாக இயற்றும் அற்புதமான வாய்ப்பு வேறு எந்த உலகத்தில் கைகூடும்? உண்மையில் பிரம்ம லோகத்தை விட மிகச் சிறந்ததாக இந்த பூமா தேவியைத்தான் நான் பார்க்கிறேன் அப்பா. அவளுக்குத்தான் என்ன கருணை தன் மக்களிடம்! அவளுடைய நோக்கம் என்ன? தன்னில் பிறக்கின்ற உயிர்கள் எல்லாம் அந்த அழியாத மிக உயர்ந்த, அஹம் மம என்னும் மரணம் கடந்த அகண்ட நிலையாகிய பிரம்மத்தை, விஷ்ணுவின் பரமம் பதத்தை அடைய வேண்டும் என்பதுதானே! அப்படி உயிர்கள் அடையும் போதுதானே பூமி மனம் குளிர்ந்து தான் ஈன்றது வீண்போகவில்லை என்று மகிழ்கிறாள்.

ஐயா இனி என் இலட்சியமே அந்த விஷ்ணுவின் பரமம் பதம் அதுதான். மிக்க நன்றி ஐயனே! உன்னை விமானத்துடன் அனுப்பிய அந்த புண்ணிய புருஷர்களுக்கு என் வந்தனத்தையும் நன்றியையும் தெரிவித்துவிடு. உனக்கு என்னுடைய விசேஷ நன்றிகள் உரித்தாகுக. கண்ணைத் திறந்தாய் நீ அல்லவா!’ என்று விடை கொடுத்து அனுப்பினார் தேவ தூதனை.

சிலவிருத்தி, உஞ்ச விருத்தி எல்லாவற்றையும் விட்டார். புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டையும் சமம் எனக் கொண்டார். மண்ணாங்கட்டியும், பொன்னும் சமம் என்னும் மனநிலை அடைந்தார். சித்த சுத்தியில் நிலைத்தார். சுத்தமான ஞான யோகத்தால் எப்பொழுதும் பிரம்ம தியானத்தில் நிலைபெற்றார். இந்திரியங்களை அடக்கி மனத்தில் சேர்த்தார். மனத்தை ஜீவாத்மாவில் சேர்த்தார். ஜீவனை பரமாத்மாவிடம் சமர்ப்பித்தார். தியான யோகத்தால் வலிமையை அடைந்து சிறந்த புத்தி யோகத்தைப் பெற்றார். அழிவற்றதும் நிர்வாணம் என்று சொலப்படுவதுமான விஷ்ணுவின் பரமம் பதத்தை அடைந்தார் முத்கலர்.

குந்தீ நந்தனா! ஆதலாம் நீயும் சோகத்தைப் பாராட்ட வேண்டாம். தவமே சிறந்த தனமும் அரசும் ஆகும் ‘ என்றார் வியாசர்.

***

No comments:

Post a Comment