பக்தி ஆவது என்ன? பகவானைத் தான் முனைந்து உபாஸிப்பது. உபாஸனை என்பது எப்பொழுதும் செய்ய வேண்டிய ஒன்று. இலட்சியத்தை அடையும் வரையில் அனுஷ்டிக்க வேண்டிய ஒன்று. ஏதோ ஒரு தடவை பக்தி செய்தோம் என்று விடுவதன்று. பக்தி என்பதன் கிளவியாக்கத்தின் (சொல்லாக்கத்தின்) இலக்கணத்தைப் பார்த்தால் அது உபாஸி என்பதன் அடிப்படையாகத்தான் இருக்கிறது. பக்தி என்றால் ஒருவரைக் குறித்துச் செய்கிறோம். பகவானைக் குறித்து பக்தி செய்கிறோம். இன்ன பலனுக்காக என்று பக்தி செய்கிறோம். அந்தப் பலனைத் தருவது பகவான். அவரிடமிருந்து அந்தப் பலனைப் பெற நாம் கைக்கொள்ளும் சாதனம் பக்தி. எல்லாம் உபாஸனை என்பதில் உள்ளது போலவேதான். ஒருவரிடமிருந்து ஒரு பலனைப் பெற வேண்டி, அவரைக் குறித்து நாம் மேற்கொள்ளும் வழிமுறை. வழிமுறை வேறு; பலன் தருகின்றவர் வேறு; பலன் வேறு. இது பக்தி.
ஆனால் ப்ரபத்தி என்பதில் சொல்லமைப்பே முற்றிலும் வேறுபடுகிறது என்கிறார் வேதாந்த தேசிகர். விடுவது, ஒப்படைத்து விடுவது, சரணடைவது என்னும் பொருளில் வரும் ப்ரபதனம் என்பதுதான் ப்ரபத்திக்கு அடிப்படை. ஒருவரைக் குறித்து ஓர் உபாயத்தைக் கைக்கொள்ளுவது பக்திக்கு வேர் என்றால், தன்னுடைய திரத்தில் எதுவும் இல்லை என்று உபாயம் என்பதையே விட்டுவிட்டு அனைத்துப் பொறுப்புகளையும் அவரிடமே போட்டு விடுவது என்பது ப்ரபதனம் என்பதன் வேர்க்கருத்து. அதாவது ப்ரபத்தி என்பது உபாயம் என்பதன் சிறு அமசம் கூட சம்பந்தமே இல்லாதது என்பதுதான் ப்ரபத்திக்கும் பக்திக்கும் உண்டான அடிப்படை வேறுபாடு. இதை ஸ்ரீ ந்யாஸ திலகத்தில் ஒரு சுலோகத்தில் அழகாக விளக்குகிறார் சுவாமி தேசிகன்.
ஹேதுர் வைதே விமர்சே பஜவதிதரத்
கிம் த்வநுஷ்ட்டாந காலே
வேத்ய த்வத்ரூப பேதோ விவித இஹ ஸ து
உபாயதாSந்யாநபேக்ஷா |
ரங்கிந் ப்ராரப்த பங்காத் பலமதிகமநா
வ்ருத்தி ருக்தேஷ்டிவத் ஸ்யாத்
நாநாசப்தாநி பேதாத் ப்ரபதந பஜநே
ஸூசிதே ஸூத்ரகாரை: ||
திருவரங்கநகரத்து
எம்பெருமானே! விதி என்ற நோக்கில் விமர்சித்தாலோ பக்தியோகம் போன்றே ப்ரபத்தியும் உபாயம் போல் தோன்றி நிற்கும், ஒரு பலனுக்குச் சாதனம் என்ற கணக்கில். ஆனால் இரண்டையும் அநுஷ்டானம் செய்யும் போதுதான் ஒவ்வொன்றிலும் நினைக்கப்பட வேண்டியதான உன்னுடைய ரூபம் முற்றிலும் வேறுபடுகிறது என்பது புரிகிறது. பக்தி யோகத்தை அனுஷ்டிக்கும் போது அந்தந்த உபாஸனத்திற்குத் தகுந்தபடி நினைக்கப்ப்பட வேண்டிய நினது ரூபம் வேறு வேறானது. ஆனால் ப்ரபத்தியிலோ உன்னுடைய ரூபமானது வேறொன்றையும் எதிர்பார்க்காத உபாயம் என்றே அமைந்து விடுகிறது. பக்தியால் போகும் கர்மங்களோ ப்ராரப்தம் தவிர எஞ்சியவைதான். ஆனால் ப்ரபத்தியால் ப்ராரப்தம் உள்பட அழியக் கூடும். பலனோ அளவிறந்தது. ப்ரபத்தி ஒரு முறையே அனுஷ்டிக்கப்பட வேண்டியது என்று சாத்திரம் கூறுவது எதைப் போல என்றால் யாகத்தில் பலனை உத்தேசித்து யக்ஞம் ஒரு முறையே செய்யப்பட வேண்டும் என்று கூறுவதை ஒத்தது. (பக்தியோ ஆயுஷ்பர்யந்தம் செய்யப்பட வேண்டியது) ப்ரஹ்ம ஸூத்ரங்களைச் செய்த வியாசரும் வினைச்சொல், தாது வேறுபாட்டால் பக்தியும், ப்ரபத்தியும் வேறு வேறு என்று ஸூசிப்பித்தார் அன்றோ! (நாநா சப்தாதி பேதாத் என்ற ஸூத்திரத்தில்).
***
No comments:
Post a Comment