Thursday, May 2, 2019

நிச்சலதாசரும் தஞ்சாவூரும்

ரோஹ்டக் மாவட்டத்தின் கிரோஹ்லி என்னும் இடத்தில் 1791 ஆம் ஆண்டு பிறந்தார் நிச்சல தாஸர் என்னும் மகான். ஜாட் இனத்தைச் சேர்ந்த தஹியா கோத்ரத்து ஜாட் அவர். 14 வயது முதல் 70 வயதுவரையில் படிப்பிலேயே தமது காலத்தையெல்லாம் கழித்த மகான். அவர் பார்க்காத சாத்திர நூல்கள் இல்லை எனலாம். ஆதிசங்கரருக்கும் முன்னிருந்து அப்பைய தீக்ஷிதர்வரையிலுமான அத்வைத நூல்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்ந்து அவற்றின் சாராம்சங்களை ஒரு நூலாக்கி அவர் அளித்தது விசார சாகரம் என்னும் நூல். விசார சாகரம் எழுந்ததும் ஹிந்தி பாஷைகாரர்களே பண்டிதர் ஆகிவிட்டார்கள் என்று சொல்லுவதும் உண்டு. அனைத்து நூல்களையும் அறியும் முயற்சியின் பயன் அவரது ஒரு நூலால் எய்தலாகும் என்பதோடல்லாமல் தெளிவான முடிவுகளும் கூடுதல் பரிசாய் கிடைக்கும் போது என்ன சொல்வதுவிசார சாகரம் சொல்லும் ஒரு கருத்தை the Universality of Vedanta என்ற நூலின் ஆசிரியர் சுவாமி பிரகாசாநந்தா குறிப்பிட்டுக் காட்டுகிறார். அதனைத் தமிழில் உரைக்குமிடத்து

'சத்தியம் உணர்ந்தோர் அதனில் ஒன்றிய நிலை அடைந்தோர். அவர் உரைப்பன யாவும் வேதங்கள் ஆகுமாம், சாத்திரங்கள் ஆகுமாம். வடமொழியில் உரைப்பினும் வேறு எம்மொழியில் உரைப்பினும் நம்முள்ளத்தின் ஐயங்களை அவர் வாய்மொழிகள் நீக்கிவிடும்'

புந்தீ என்னும் இடத்து ராஜாவாகிய ராமசிம்ஹன் என்னும் அரசர் அவரைப் பெரிதும் போற்றிவந்தனர். நிச்சல்தாசரால் அந்த அரசன் வித்வான் என்று பண்டித சமுதாயத்தால் கொண்டாடப்படும் அளவிற்கு மிக்க கல்வி நலம் வாய்ந்தவராக ஆகிவிட்டார்அந்த அரசர் நிச்சலதாசரிடம் ஹிந்துஸ்தானியில் மாபெரும் நூல் ஒன்று பொருள்களை அறுதியிட்டு உரைக்கும் வகையில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கேற்ப நிச்சலதாசர் எழுதிய நூல் விருத்திப் பிரபாகரம் என்னும் நூல்அத்வைத சாத்திரத்தின் படி பிரம்மமே நான் என்னும் வடிவினதான மனத்தின் விருத்தி, மற்ற எண்ண விருத்திகளை ஒடுக்கி மெய்ஞ்ஞானம் தரவல்ல பெற்றியைப் பெரும் நூல்களின் கடைந்த சான்றுகளால் நிறுவும் நூல் விருத்திப் பிரபாகரம். பெரும் பண்டிதர்களும் விருத்திப் பிரபாகரத்தை ரகசியமாகப் படித்துத் தத்தம் விருப்பமான வடமொழி நூல்களில் தெளிவு பெறுவர் என்று சொல்லப்படும் கருத்து அந்த நூலின் பெருமையைப் புலப்படுத்தும்.

காசியில் தாம் கற்கும் காலத்து நிச்சல தாசர் துளஸிதாசர் ராமாயண கதா பிரசங்கத்தில் அமர்ந்து கேட்கும் காலத்து, துளஸிதாசர் இறைவன் மறைப்பு என்பதைச் செய்வதில்லை. விக்ஷேபம் ஆகிய விளக்கம் மட்டுமே செய்வன் என்று கூற நிச்சலதாஸர் இறைவன் இரண்டையும் செய்வதில்லை என்று கூறினார் என்று ஒரு கதை கூறுவர். அதன் உண்மை எப்படியாயினும், நிச்சலதாசரின் அத்வைத நிஷ்டையை அஃது புலப்படுத்தும். நிச்சலதாசர் விருத்திப் பிரபாகரம் எழுதி முடித்து 1863ல் காலம் ஆனார்

இனி தஞ்சை மாநகரத்திற்கு வருவோம். நிச்சலதாசரின் விசார சாகரம், விருத்திப் பிரபாகரம் என்னும் இருநூல்களையும் 1890 தொடங்கியே தமிழில் தஞ்சைமாநகரம் வெ குப்புசாமி ராஜு என்பார் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். விருத்திப் பிரபாகரம் 1901 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. திரு சை சிவசங்கரச் செட்டியார் பி என்பவரால் மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டு வந்திருக்கிறது. சுமார் 700 பக்கங்கள்

சத்திய ஞானா நந்தத் தனிப்பெருஞ் சுடரே மேலாந்
தத்துவ முணர்த்து மாறு சங்கரா சார்ய னென்னு
மெய்த்தனிப் பெயர்பூண் டிந்த மேதினி தன்னில் வந்த
தத்தகு பொருளை யாமு மநுதினஞ் சிந்தை செய்வாம்.
என்னும் மங்கல வாழ்த்தோடு தொடங்குகிறது நூல்.
பெருத்த மாயை யழியவெய்தும் பேரின் பமியான் பிரமமெனும்
விருத்தி யதனாற் பெறுவதென வேதம் விளம்பு மதனாலவ்
விருத்தி ஹேது பயன்யாதென் வினாவின் விடையாத் தமிழ்மொழியில்
விருத்திப் பிரபா கரமெனுநூல் விளம்பப் படுமால் விளக்கமுற

என்ற நூல் வரலாறு கூறித் தொடங்குகிறது

ஆசிரியர் பிறந்தது கிரோஹ்லி, ர்ரொஹ்டக். கல்வி கற்றது காசி. நூல் இயற்றியது புந்தீ ராஜாவான ராமசிம்ஹன் சொல்லி. நிச்சலதாசர் மறைந்தது 1863ல். அவரது விசார சாகரம், விருத்திப் பிரபாகரம் என்னும் இரு பெரு நூல்களும் தமிழில் 1890 தொடக்கம் வந்திருக்கின்றனயார் சொன்னது தமிழ்நாடு என்றும் எந்த முயற்சியிலும் பின்தங்கிற்று என்று? என்றும் முன்னணியில் இருந்ததுதான் வரலாறு. அது பத்தாம் நூற்றாண்டாய் இருக்கட்டும் அல்லது இருபதாம் நூற்றாண்டாய் இருக்கட்டும்.

*** 

No comments:

Post a Comment