Friday, May 3, 2019

வெறுக்காமல் இருந்தால் போதாதோ?

கடவுள் இருக்கிறதா? யாருக்குத் தெரியும். அப்படி என்று சொல்கிறார்கள்
கடவுள் பற்றிக் கூறும் பெரும் சாத்திரங்களையெல்லாம் படிக்கக் கூடாதா? அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு? அதுவுமில்லாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்சரி ஒரே மாதிரியாகச் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொண்டு விடுவோமா என்றால் ஏகப்பட்ட கேள்விகள், அதற்குப் பதில்கள் வந்தால் அதிலிருந்தே பல கேள்விகள், இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும்என்னது? இவ்வளவு அசிரத்தை இருந்தால் அப்புறம் கடவுள் என்ற தத்துவம் எப்படிப் புரியும்? மனத்தில்தான் எப்படிப் பதியும்அது என்னவோ, வாழ்க்கையில் நேரடியாக இருக்கிறது என்ற பொருள்களையே சரியாகப் புரிந்து கொள்ள நேரமில்லை. கடவுள் என்று கற்பனை, யூகம், நம்பிக்கை இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் கவனமாக ஆழ்ந்து சிந்தை செய்வது என்பது ஏது நேரம் ஐயா வாழ்க்கையில்?

இப்படிச் சொல்லும் ஒருவரைச் சில ஆண்டுகள் கழித்து மிகுந்த ஆன்மிக ஊற்றம் நிறைந்த தத்துவ விசாரம் நிறைந்த அறிவுப்பசி உள்ளவராக அலைவதை வாழ்க்கையில் பார்த்திருப்போம். அது என்னது? அந்த மனிதர்தான் கடவுள் என்ற பிரச்சனையே தேவையில்லை என்றுதானே சொல்லிக் கொண்டிருந்தார். அப்புறம் எங்கு அவருக்கு இது போல் திடீரென்று பீறிட்டுக் கொண்டது? இதெல்லாம் துப்பு துலக்கிக் கொண்டே போனால் கடைசியில் ஏதோ ஒரு பேச்சு, ஏதோ ஒரு பஜனை, ஏதோ ஒரு ஆன்மிக நூல் இதையெல்லாம் கண்டு முகம் சுளிக்காமல் தனக்கு ஓய்ந்த போது காதில் விழுந்திருக்கும், படித்துப்பாரேன் என்று கொடுத்ததைக் குப்பைத் தொட்டியில் போடாமல் கொஞ்சம் ஓட்டியிருப்பார். பக்கத்தாத்தில் பஜனை என்றால் கார்ப்பரேஷனில் சென்று கம்ப்ளெய்ண்ட் கொடுக்கப் போகிறேன் என்று மிரட்டாமல் சரி ஏதோ ஆர்வத்தில் அவர்கள் செய்கிறார்கள், அவர்களுடைய ஆனந்தத்தில் நாம் குறுக்கிடுவானேன்? அனுபவித்துக்கொண்டு போகிறார்கள். என்று தாம் பாட்டுக்குத் தேமே என்று இருந்திருப்பார். இதுதான் இவர் செய்த சுகிருதமாக இருந்திருக்கும். மற்றவை எல்லாம் அவன் செய்தவை.

அப்படி என்ன செய்து விட்டார் இவர், இப்படி ஒரு கிருபை இவர் மேல் அவன் பொழிவதற்கு? ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியர்கள் கேட்கிறார்கள் என்ன தான் இவன் செய்து விட முடியும் அவன் கிருபையை இவன் பெறுவதற்கு? என்று. ஒன்றும் இல்லைஇவன் பக்கல் எந்தக் காரணமும் இன்றித்தான் அவனுடைய கிருபை ஜீவன் மேல் பொழிகிறது. ஒரு ஹேதுவை முன்னிட்டு அருள் பொழிவதில்லை. அருள் என்றும் பாய்ந்து கொண்டிருக்கிறது. நீ உன் சன்னலைச் சாத்தாமல் திறந்து வை. அப்படி இல்லையா? மற்றவர்கள் திறந்து வைத்தால் மெனக்கெட்டு முகத்தில் வெறுப்புமிழ்ந்து போய்ச் சாத்திவிட்டு வராதே. அதுதான் நீ செய்ய வேண்டியதே. மற்றது எல்லாம் அவன் தன்னுடைய சொத்துக்கு அவன் செய்து கொள்ளும் பாதுகாப்பு. அதில் உனக்கென்ன உரிமையோ, குரலோ இருக்கிறது என்கிறார்கள் அந்த பிரபன்ன குல திலகர்கள்.

ஜீவனுக்கு வேண்டியது வெறுப்பின்மையும், விலக்காமையுமே வேண்டுவது என்கிறார்கள் அந்தப் பெரியவர்கள்(இங்கு இவன், ஜீவன் என்று ஆண்பால் விகுதியில் முடிவதால் இது ஆண்கள் சமாசாரம் என்று ஜெண்டர் பயஸ் என்று ஐயம் கொள்ள வேண்டாம். ஜீவன் என்றால் ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைத்துப் பொது என்றுதான் இங்கு பொருள், சாத்திரங்களிலேயே.) நாம் செய்வது காதைப் பொத்திக் கொள்ளாமல் இருப்பதுதான். கடுகடு என்று பகவானின் நாமங்களின் பெருமை காதில் விழுந்தால் கடுவன் பூனையாகி முகத்தை விகாரமாக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் ஜீவன் செய்யத்தக்க குறைந்த பட்சம்.

'வாசல் பெருக்க வந்தேன். என்னை வேத நுட்பங்கள் விளங்கிடச் செய்தான் கண்ணன்' என்று கூறுகிறார் பாரதியார்.

இதையே பூதத்தாழ்வாரும், அவருக்கு உரை எழுதிய நம்பிள்ளையும் (எம் வெ பதிப்பு) என்ன சொல்கிறார்கள் பாருங்கள்ஜீவனுக்கும், பகவானுக்கும் யார் யாருக்கு என்ன என்ன இயல்பு என்று கூறு பிரித்துக் கொடுத்தார்களாம். அதாவது ஜீவனின் இயல்பு என்ன, பகவானின் இயல்பு என்ன என்று நிர்ணயம் ஆயிற்றாம். அப்படி என்றால் அவ்வாறு நிர்ணயம் ஆவதற்கு முன் எப்படி இருந்தது என்று கேட்கக் கூடாது. இதற்குப் பெயர் தியாலஜியில் Ontological moments என்று பெயர். கால கிரமமாகப் பேசுவது போல் இருக்கும். ஆனால் காலம் சம்பந்தப்பட்ட விஷயம் அன்று அது. காலாதீதமான நித்யப் பொருள்களைப் பற்றி இயல்பு விசாரம் செய்யுங்கால் மொழியின் தன்மையில் காலம் தவிர்க்க முடியாமல் கட்டப்பட்டு இருப்பதால் அப்படிக் காலத்தன்மை காலாதீத வஸ்துக்களிலும் சாயை அடிக்கும். சரி அது இருக்கட்டும். அப்படி கூறு ஆனதில், ஜீவனின் கூறாக அதாவது இயல்பாக என்ன வந்தது என்றால் பகவானுக்கு உடைமையாக, பகவானுக்கு அடிமையாக இருத்தலே ஜீவனின் இயல்பு என்று வந்ததாம். பகவானின் இயல்பு சொத்தை உடையவனாக, இவனை அடிமை கொள்ளும் ஸ்வாமியாக வந்ததாம்.

அப்படி என்றால் கேட்கிறார் பூதத்தாழ்வார், ஐயா! இந்த ஜீவன் தனக்கு 'அடிமை' என்பதுதான் இயல்பாக வகுத்தது என்பதை அறியாது போனாலும் போகட்டும், அவனாக வந்து இவன் காது வழியாகவும், கருத்து வழியாகவும் இவன் மனத்துள் வந்தால், வந்தால் வந்து விட்டுப் போகட்டுமே என்று அப்படி ஓர் ஓரத்தில் போட்டு வைக்கத் தெரியாதா இந்த ஜீவனுக்கு? அதற்குக் கூட சாமர்த்தியம் கிடையாதா? தானாக உள்ளே வந்ததை இருந்து விட்டுப் போகட்டுமே என்று விடத் தெரியாதா?

ஐயா! உன்னை வானத்தில் ஏறி மழையாகப் பொழி என்று யாரும் சொல்லவில்லை. வனத்தில் அது பாட்டுக்கு வெள்ளமாக வந்து பாய்கிறது. அப்படி இருக்கும் போது இருக்கின்ற திடரை, அதாவது மேட்டு நிலத்தைப் பள்ளமாக ஆக்கி வைத்தாலே போதும், பிரம்மாண்டமான ஏரியாகத் தேங்கிப் போய் ஜீவராசிகள் எல்லாம் பயன்படும்படி பொலிந்து நிற்கும். மேட்டை இன்னும் மேடாக்கி, வருகின்ற நீரையும் ஆணை போட்டுத் தடுத்து நின்றால் அப்புறம் நீர் வளம் என்ன ஆகும்அது போல் ஜீவனை யாரும் அகோர தவம் செய்யச் சொல்லவில்லை. நாம ஜபம் கூட செய்யச் சொல்லவில்லை. யாரோ சொல்கிறார்கள் என்றால், எங்கோ காதில் விழுகிறது என்றால், ஏதோ ஒரு புத்தகம் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்து மனத்தில் பதிகிறது என்றால் அது பாட்டுக்கு நடந்து விட்டுப் போகட்டும் என்று இருக்கக் கூட முடியாத துர்பாக்கியத்திற்கு என்ன சொல்ல?

தனக்கு 'அடிமை' பட்டது
தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பதாம் மாலை;
வனத் திடரை
ஏரியாம் வண்ணம்
இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று
( தி 16)

நம்பிள்ளை சொல்கிறார்:

"இப்படி இருவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்திலனேயாகிலும், தனக்கு சேஷத்வஜ்ஞானம் இன்றிக்கே ஒழிந்ததேயாகிலும், ஸம்யக் ஜ்ஞானம் இன்றிக்கேயிருந்ததேயாகிலும், இப்படிப் பிரமாண பிரஸித்தியாலும், ஆசார்ய சேவையாலும் இருந்தபடிகள் எல்லாம் அறிய மாட்டானேயாகிலும்... இங்ஙனே இருக்கச் செய்தே இவனுடைய ஹ்ருதயத்திலே சர்வேச்வரன் தன்னுடைமையைப் பெறுவானாக வந்து புகுரப் புக்கால் விலக்காத மாத்ரம் உண்டாயிருப்பது....தானே வந்து மேல் விழப்புக்கால் அப்போது இடம் கொடுப்பது இவ்வளவேயிறே இவனுக்கு வேண்டுவது! இனி, மேலுள்ளது அவனுக்கே பரமாயிருக்குமிறே."

வடுக நம்பி இந்த இடத்தில் ஒரு விளக்கம் சொல்வாராம். அதை மேற்கோள் காட்டுகிறார் நம்பிள்ளை:

"வடுக நம்பி, 'எம்பெருமானைப் பெறுகைக்கு சாதனங்கள் ஒன்றும் தேட வேண்டா! அசலகத்திலே ஸ்ரீவைஷ்ணவன் திருநாமமிட சஹிக்க அமையும்!' என்றார்."

நாலு வீடு தள்ளி, எதிர் வீட்டில், மேல் ஃப்ளாட்டில் ஏதோ பகவந் நாம பஜனை என்றால் இவன் சகித்துக் கொண்டிருந்தால் போதாதோ, அவன் அருள் இவனிடம் வேலை செய்வதற்குஅதற்கும் இந்த அசத்து கடுவன் பூனையாகக் குதித்தால் யார் என்ன செய்ய முடியும்?

*** 

No comments:

Post a Comment