Thursday, May 2, 2019

மிஸ்டிகல் !

கவிதை உலகம் பித்தர்கள் பிறைசூடும் உலகம். சூடுகின்ற பிறையில் 
எதிரில் நிற்பவன் தெரிகிறானா என்று பார்த்தால் கவிதை காணாமல் போய்விடும். பிறகு தொலைத்துவிட்டு முழிக்கும் அம்மாஞ்சியை 
சுய நினைவு பீடித்தவர்களின் நனவுலக ஆஸ்பத்திரியில் 
கொண்டு போய்ப் போட வேண்டியதுதான். மூளைக்குள் முளைத்த சிறகுகள் 
அரிசி உப்புமா சாப்பிடும் சருகுகளாய் ஆகிவிடும். சூடப்படும் பிறையோ 
சொல்லில் கொளுத்திய அகல். சூடும் தலையோ கங்கை தாங்கும் சடை.. 

அக்னிக் குஞ்சைப் பொந்திடை வைத்து 
வெந்து தணிந்த காட்டின் 
வெண்ணீறு வரப்பிரசாதம். 

காடுடைய சுடலைப் பொடி பூசினால் 
உள்ளம் கவர் கள்வம் வெளிப்படும். 

மழை பொழிகிறது. 
முதல் சொட்டும் 
முடிவுச்சொட்டும் 
ஒரே மழைதான். 

தென்னை ஓலையின் நுனியில் தூங்கும் பனித்துளி. 
நள்ளிரவின் ஆழத்தில் உருளும் கண்ணீர்த்துளி. 
காய்ந்த நிலத்தின் வெளிறிய முருட்டில் அமர்ந்த மழைத்துளி. 
மூன்றிலும் தெரியும் வானம் ஒன்று. 

முக்காலம் ஊட்டுகின்ற மனம். 
எது பசு? 
எது கன்று? 

அஞ்சாதீர்கள்! 
பாஷோ, லோட்ஸே 
போன்ற ஜப்பானிய பெரிசுகள் 
சீன மூதுவர் ஏந்தும் கைப்பந்தத்தில் 
இனி 
ஹைகூ டீ க்குடுவையில் 
zஸென் கடுஞ்சாயா 
ஊற்றிக் குடிப்போம். 

வெளியே கடும் பவக் குளிர் 
விறைத்துப் போகிறது. 
காலம் நேர்க்கோடு அன்று 
சுழற்சி. 
எனவே நானும் வருவேன்.
நீங்களும்தான். 

ஹைகூ என்பது ஜப்பானிய கவிதை வடிவங்களில் ஒன்று. குறும்பா என்றெல்லாம் சொல்லும்படியாக அதன் வடிவச் சுருக்கம் பெரிய அளவிற்கு அதனை அடையாளப்படுத்தும் படியாக இருப்பது. உண்மையில் அதன் வடிவம், இலக்கணம் இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். முதல் பட்சமாக ஹைகூவில் இருக்க வேண்டியது இயற்கை, தனிமை, எளிமை. சொல்பெருக்கம் பெரிதும் சுயதம்பட்டத்திற்கே துணை போகிறது என்ற காரணத்தால், சுயத்தின் ஆழமான குருத்தின் நிர்வாணத்தை மறைக்கும் சொற்கூட்டங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது ஹைகூ. ஒற்றைச் சொல் உணர்த்தாத ஒன்றை ஓராயிரம் சொற்கள் விவரித்துவிட மாட்டா. ஒண்ட வந்த சொற்கள், உள்ள சொல்லின் உண்மைப் பொருளை விரட்டிவிட்டு அங்கு மயக்கத்தைக் குடியேற்றும். மயங்கிய மனம் பேய்களின் அந்தப்புரம். பிழையும் பீடையும் அவை தரும் குடக்கூலி. 
சொற்களின் எளிமையில் மன மயக்கத்தை விரட்ட வழிபார்க்கிறது ஹைகூ. 
சோற்றால் ஆன சுவர் மனிதனின் உடல். சொல்லால் ஆன கூடு மனிதனின் மனம். சொற்களின் தனிமையைக் கண்டு அஞ்சும் மனம் சொற்பெருக்கத்தின் இரைச்சலில் தன்னை ஏமாற்றிக் கொள்கிறது. 


சின்ன கப். 
அதைவிட குட்டி. 
அதுல ஊற்றும் கடுஞ்சாயா ஸென். 
சொன்னேனா? 
அது என்ன ஸென்? 
யார் கேட்டா? 
கேட்காத போனா யார் விட்டா? 
நான் விட்டாலும் 
அது விடுமா? 
தியானம் 
ஜப்பானிய கிமோனாவை 
மாட்டிக்கொண்டு 
ஸென் ஆகிவிட்டது. 
இது சும்மா கதை. 
இல்லை உண்மை. 
அத்தாட்சி -- ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள். 
சிவஞான மாபாடியம். 
மொட்டத்தலைக்கும் ...முழங்காலுக்கும்.... 
மொண மொணக்காதே கவனி. 

"கருட சானத்தில் தீர் விடம் போல்" 

*கருட சானம் -- கருட தியானம்; 
சானம் பாகதச் சிதைவு* 

தியானம்~~சானம்~~ஸென் 

சான்றைத் தேடி அலையாதே 
கட்பேஸ்ட் பண்டிதன் ஆகாதே 
விஷயத்தைப் பிடி. 
டீ குடி. 

ஸ்ரீரங்கத்தில் மொட்டை மாடி. 
நள்ளிரவு தாண்டி அரைக்கா யாமம். 
ஊர் உறங்கிற்று; 
இல்லை உளறிற்று; 
இல்லை உளறல் நின்று 
தன்னியல்பாய்ப் பேசியது. 
மன ஒருமைப்பாடு 
சித்தியானதுபோல் எனக்கே திருப்தி. 
இரண்டு தெரு தாண்டி 
தெருக்கட்டில் படுத்த கிழம் 
ஆற அமர வாயு பிரிக்கிறது. 
அடச்ச! 
மன ஒருமைப்பாட்டின் பலன் இதுவோ? 
சாதாரணமாய்க் கேட்காத ஒலிகள் 
துல்லியமாய்க் கேட்டுத் தொலைக்கின்றன. 
மனம் ஒடுங்கினாலும் தொல்லை; 
அலைந்தாலும் தொல்லை. 

அந்நேரம் பார்த்து ஒரு சீன முனி. 
கோட்டை முனிக்குத் தூரத்துச் சொந்தம். 
எங்கே ஏறிக் குதித்து 
எங்கிருந்து வந்து 
என்ன தேடித் தொலைக்கிறது. 
தேடித் தேடி 
ஒரு மின்மினிப் பூச்சியைப் பிடித்தது. 
அதன் வால் வெளிச்சத்தில் 
ஒரு சின்ன ஓலைச் சுருளைப் 
படிக்கத் தொடங்கியது. 
பிரமை! 
கண்ட நேரத்தில் கண்விழித்து 
கண்மூடித்தனமான யோகம் பயின்றால் 
புத்தி பிசகிப் பிரமை. 
பிரம்மம் கிடைப்பது துர்லபம். 
பிரமை ஒன்று வாங்கினால் 
ஒன்று இலவசம். 
ம் ம் பல. 

பேசலாம்...மொழி புரியுமா? 
பிரமைக்கு ஏது மொழி? 
அதாவது அனைத்து மொழிகளும் 
அங்கு அர்த்தமாகும். 
என்ன தேடுகிறாய்? 
ஓர் அசை. 
அசையா? ...
விளக்கம் சொன்னால் நானும் உதவலாம். 
அசைக்கு விளக்கம் கிடையாது. 
அசை சீரானால் விளக்கம் வரலாம். 
அந்த அசையா? 
அந்த என்பது அசை இல்லை 
ஈரசைச் சீர். 
நான் தேடுவது ஓரசை. 
காலை விட்டாயிற்று. 
கடைசி வரையில் போனால்தான் மீளலாம். 
சரி அசையை ஓலைத் துணுக்கில் 
மினிவால் பொறியில் 
தேடினால் கிடைக்குமா? 
தேடுபவன் இல்லையென்றால் 
தேடுவது கிடைக்கும். 
சரி இங்கே கொடு. 
தேடித் தருகிறேன். 
நீ கண்பொட்டை. 
உனக்குக் கிடைக்காது. 
அந்தக் கட்டில் கிழம் 
இந்த நேரம் பார்த்துக் 
கிண்டல் அடிக்க வேண்டாம். 
சரி எனக்குக் கண் வேண்டும் 
என்ன செய்ய? 
கண்ணை முடிக்கொண்டு 
என் பின்னே வா 
எங்கே? 
என் ஆசானிடம். 
யார்? 
பாஷோ. 
எங்கே இருக்கிறார்? 
பதினேழாம் நூற்றாண்டு. 

எவர் பின்னே தொடர்ந்தாலும் 
முதலில் கதவை மூடிக்கொள்வது 
பாஷோ 
இது உனக்குத் தெரியாதா? 
முதல் முறையாக அந்தச் சீனமுனி 
முகத்தை நிமிர்த்திக் 
கைகளைக் கண்ணுக்கு 
டெலஸ்கோப் வைத்து 
இருட்டில் என்னை உற்றுப் பார்க்க முனைந்தது. 
உன் காலம் என்ன? 
பத்துச் சுழலுக்கு முன்னே 
பின் நீ எப்படி பாஷோவின் சீடன் 
ஆகமுடியும்? 
நான் பாஷோவின் சீடன் இல்லை. 
பின் 'என் ஆசான் பாஷோ' என்றாய்? 
ஆம். ஆனால் நான் பாஷோவின் சீடன் என்றா உரைத்தேன். 
உன் ஆசான் பாஷோ 
ஆனால் நீ பாஷோவின் சீடன் இல்லை. 
இது நன்றாய் இருக்கிறது. 
நன்றாக இல்லையென்றாலும் உண்மை. 
சரி அசை கிடைத்ததா? 
அது கிடைத்தால் என்ன? 
கிடைக்காமல் போனால் என்ன? 
தேடுவது பயன் 
தேடுபவன் இருந்தால் 
கிடைத்தால் லாபம் 
கிடைக்காவிட்டால் நஷ்டம் 
என்ற வியாபாரம் நடக்கும் 
உன் தேட்டம் வியாபாரம் இல்லை 
என்கிறாய். 

நீ பாஷோவை முன்னமே சந்தித்திருக்கிறாயா? 

இல்லை. நான் பாஷோவின் சீடனும் அன்று 
பாஷோ என் ஆசானும் அன்று. 

சிரிப்புக்குள் சீன முனி ஒளிந்து கொண்டது. 
குடுமி வாலைப் பிடித்திருந்தால் பின் தொடர்ந்திருக்கலாம். 
சரியான நழுவொய்ங் சாங். 

சரி தியானத்தைத் தொடர வேண்டும். 
அப்பொழுது பார்த்து ஒரு மலையில் இருந்து 
அருவி மாலையாகிக் கொட்டத் தொடங்கியது. 
அந்த அருவி சலசல என்று இரையாமல் 
யிங் யாங் யிங் யாங் என்று சங்கீதமெழ 
எங்கும் நனைக்காமல் ஒரு குகையில் சென்று 
மறைந்தது. 

ஆவல் கொல்லும். 
அதனை முனைப்பு பின் செல்லும். 
மிக ஜாக்கிரதையாக 
அந்தக் குகையின் ஒட்டில் நின்று 
விளிம்பைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தேன். 
பின்னால் ஏதோ குறுகுறுப்பு 
என்னவென்று திரும்பிச் சுதாரிப்பதற்குள் 
சீனமுனி என்னைத் தள்ளிவிட்டது 
அந்தப் பேழ்வாயில். 
வாழ்க சீன முனி. 
என்ன சுகம்! 
இனிய நீருக்கு உயிருண்டு 
என்று அறிந்தேன். 
ஓராயிரம் கதைகள். 
ஒரே கணப்பொழுதில் சொல்ல 
அந்த அருவியில்தான் முடியும். 
அது தாயின் மடி 
தந்தையின் கை 
ஆசானின் பக்கம் 
தெய்வத் தண்ணருள்; 
ம் ம் ஈரும்பனியில் 
இருகை ஏந்திய 
துளிக் கடுஞ்சாயா. 

என் அனுபவம் 
முன்னோர் அனுபவம் 
உலக அனுபவம் 
அனைத்தும் கலந்து 
கதைப்புளிப்பின் காடியேறி 
நதியெனத் தெளிந்து 
நல்லுணர்வின் அமுதூறிப் 
புனல் மாறிப் போனாலும் 
அந்த அருவியின் இதம் 
மயங்கிச் சொருகி 
ஆழப்போகும் வேளையில் 

"மயங்காதே சுகத்தை எறி" 
"மயங்காதே சுகத்தை எறி" 
"மயங்காதே சுகத்தை எறி" 
என்று மூன்று முறை கத்தி 
என் முன் எகிறிக் குதித்தது 
துளி அழகும் இல்லாத 
அஷ்டகோணல் தவளை ஒன்று. 
சுகப்பாளங்கள் வெடித்து 
சுதாரித்தேன் 
சொக்கவைத்த மயக்கம் 
சுருண்டு நழுவி ஓடியது ஓரரவாய். 
'அரவு தீண்டன்ன கடுங்கள்' 
என்று அரற்றி 
விரைந்ததோர் 
இரவின் புள். 

அருவியில் உருண்டது போதும் என்று 
ஒதுங்கினேன். 
ஓராசிரமம். 
சீன முகங்கள், 
ஜப்பானிய குட்டைகள் 
அங்கும் இங்கும் அடித்து வைத்த 
சிலைபோல் விரைவு. 
இருப்பதில் என் கணிப்பில் 
குட்டிப்பயல் என்ற ஒரு ஜாப்பைப் 
பிடித்து நிறுத்தி 
பாஷோ யார் என்றேன் 
"முதலில் உள்ளே போ" 
என்று நழுவியது குள்ளம். 

உள்ளே போகும் பொழுது 
ஒரு பயம் பிடித்துக் கொண்டது 
"போய்விடு" போய்விடு" "போய்விடு" 
என்று காட்டுப்புள் ஒன்று 
அலறியவாறே 
ஏன் என்னைக் கடந்ததோ? 

உலகத்தில் உதவாக்கரை 
நமக்கு என்ன நடந்தால் என்ன? 
நாதியற்ற ஜன்மம் 
நலம் பெற்றால் என்ன? 
நாறும் பிணமாகிப் போனால்தான் என்ன? 
விரக்தி பெரும் பலம். 
வீரம் சாதிக்காததை விரக்தி செய்யும். 

என் உள்ளே 
நான் இதுவரை சந்திக்காத பேர்வழிகள் 
புதை குழியில் இருந்து எழுந்து கெஞ்சினர் 
திரும்பிவிடு. 

ஆமாம். இதுவரையில் 
என்ன---பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள்? 
எவ்வளவு முறை 
என் உள் நோக்கிக் கூக்குரல் இட்டிருப்பேன். 
அப்பொழுது கேளாத காதுகள் 
இப்பொழுது அலறும் வாய்களாக ஆயிற்றோ? 

இந்த பீதிக்காகவே போகிறேன் 
பீதி பெரும் போதை. 
முதலில் கடுக்கும். 
பின் பழக்கம் 

பயம். அதிக பட்ச நரம்புகளைச் சுண்டிவிட 
அதிசய லாகிரி. பழகுவது கடினம். 

உள்ளே நுழைந்ததும் யாரும் இல்லை. 
அமைதி என்று இல்லை. 
முதலில் ஓசை என்று இருந்தால்தானே 
அமைதி என்று ஒன்றும் இருக்கும். 
இரட்டையர் இல்லை. 

என் நினைவுகள் எழுந்து 
குரல் கொடுத்து என்னோடு 
வாதம் பண்ணத் தொடங்கிவிட்டன. 
நிசப்தம் 
என் நினைவுகளிடை சாய்ந்த நான்... 

திடீரென்று அந்த யாருமற்ற வெளியில் 
மகா ஆக்ரோஷமாய் ஒருவர் 
(எங்கிருந்தார்?) 
"ஏய் யாரங்கே? 
உன் ஒலி பெருக்கிச் சனியனை 
எடுத்துக்கொண்டு ஒழி இங்கிருந்து. 
போ போ போடா 
ஓலம் போடும் சனியனே! 
ஓடு இங்கிருந்து. 
ஒலி பெருக்கி! 
ஒழி ஒழி ஒழி. 
வெளியே போ 
சத்தம் போடும் கழுதையே !!" 
என்று எங்கோ அந்தரத்தைப் பார்த்து 
வெளியே உற்று நோக்கி 
பாழ்வெளியைப் பார்த்துக் 
கத்தத் தொடங்கினார். 

ஒன்றும் புரியவில்லை. 
யாருமற்ற இடத்தில் 
ஓசையில்லா வெளியில் 
அமைதிக்கும் இடமில்லாத 
நிசப்தத்தில் 
யாரைப் பார்த்து இந்தக் கிழம் 
இந்த விரட்டு விரட்டுகிறது? 

அப்பொழுதுதான் வெளியில் சென்ற 
என் நினைவுகள் 
அடித்துப் பிடித்துக்கொண்டு 
ஓடிவந்தன. 

"வா வா வா. கிழவன் அடிக்க வருகிறான். 
கண்டு பிடித்துவிட்டான். 
கொலையே செய்துவிடுவான். 
சொன்னோம் நீதான் கேட்கவில்லை. 
எழுந்திரு ஓடு ஓடு" 
என்று பரபரக்க என்னுள் வந்து ஒளிந்துகொண்டன. 
நானும் ஓர் அசப்பில் 
எழுந்து வந்துவிட்டேன். 
அவர்தான் பாஷோவோ? 


'என்ன சந்தித்தீரா?' -- ஒரு கிழவர். 

'யாரோ கத்து கத்து என்று கத்துகிறார். 
அவர்தாம் பாஷோவா?' 

இல்லை. அவர்தான் பாஷோவாக இருந்தவர். 

என்னது? அப்பொழுது..பாஷோ ஓர் ஆள் இல்லையா? 

ஆம் ஆள். ஆனால் கத்திய பொழுது 
அவர் பாஷோ இல்லை. 

சரி என்னாடா இது ஈரு பிளக்கும் வேலைகள்.. 

அப்படீன்னா அவரைச் சந்தித்துப் பேச முடியாதா? 

ஏன் போனவுடன் நீங்கள் அவரிடம் பேசியிருக்கலாமே! 

ஓர் ஆளும் ஒன்றும் அங்கு காணுமே. திடீர்னுதான் 
கிழம் கூச்சல் போட ஆரம்பித்தது. அதுக்குன்னே அங்க தோன்றினா மாதிரி. 

நீங்கள் புதிது. பரவாயில்லை. நினைவுகளை 
அகற்றிவிட்டுப் போங்கள். 

முதலில் நீங்கள் எனக்குத் தகவல் சிலவற்றைச் 
சொல்ல முடியுமா? இல்லையேல் நீங்களும் 
நீங்களாக இருந்தவர்தாமா? முதலில் 
நீங்கள் யார்? 

நான் கல்லறையின் காப்பாளர். 

கல்லறையா? 

ஆம் நீங்கள் கேட்க நினைக்கும் தகவல்கள்...
வாருங்கள் அந்தக் கல்லறையின் உள்ளே சென்று பாருங்கள்.....ஒரு குறிப்பு...அந்தக் கல்லறையில் 
நீங்கள் எவ்வளவு சத்தமாக நினைவுகளை எழுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது. 
உள்ளே நடந்ததற்கு நேரெதிர். 
அங்கு போய் முழு அமைதி காத்துவிடாதீர்கள். 
அவற்றுக்கு அமைதி என்றால் அலர்ஜி. 

அவற்றுக்கா?....அப்படியானால் ...பெரியவரே... 

ஏதோ வந்த வேலை முடிந்ததுபோல் 
பெரிசு விறுவிறு என்று போய் மறைந்துவிட்டது. 

அவையா அவை என்றால் எவையோ? 
முதலில் எனக்குப் பைத்தியம் பிடிக்கும். 
பிறகு நான் பைத்தியத்தைப் பிடித்துக் கொள்வேன். 
அதற்கான நேரம் வந்தது போலும். 

*** 

"இதோ அங்க பாரு மீனு! அப்படியே பிடி" 

"மெதுவா மெதுவா மிருகம் பதுங்குது. ஒரே குத்து" 

.................................. 

"இதுதான் உண்மை. ஒத்துக்கிட்டா உருப்புடுவே. இல்லியா...நீ நாசமாப் போறதை யர் தடுக்க முடியும்?" 


மேலே காட்டிய மொத்த குரல்களின் ஒலிமாலையில் வேட்டை, காமம், குரோதம், வெறி, பாசம், அழுகை, மாச்சரியம், என்று பல்வேறு இதய தாபங்கள் பிசைந்து கிடந்தன. 

வினோதமான கல்லறையாக இருந்தது. விரையும் ஒலிகள் விழுந்து நொறுங்கின. அரைபடும் இதயங்கள் உமிழ்குருதிக் குழம்பில் வதங்கின. ஆனால் எல்லாம் ஒலிமயமாக இருந்ததுதான் விந்தை. ஆவிகள் ஒலி ரூபங்களாய்த்தான் இருக்கின்றார்களோ? என்ற ஐயம் எழுந்தது. 

குனிந்து பார்த்தேன். என் உருவும் மறைந்துவிட்டு நானும் ஒலி உருவாகத்தான் அலைந்துகொண்டிருந்தேன். 

அழுபவர்களோடு அழுதேன். சிரிப்புகளோடு சிரிப்பு. ஆற்றொணா வேதனையில் நொறுங்குவதும் இன்பமாகத்தான் இருந்தது. அப்பொழுதுதான் ஒரு விந்தை புரிந்தது. மனிதர், ஏன்? உயிரினங்கள், துன்பத்தைக் காதலிக்கின்றன. துயரைப் புணரவே துடிக்கின்றன. தூய இன்பம் அநேகமாக உயிர்க்குலத்தை மிரட்டும் என்றே தோன்றுகிறது. 

ஒலியற்ற ஒரு அடர் மௌனம் ஒலி கசந்த போதுகளில் நுண்செவி நுகர்வில் தெரிந்தது. அந்த மௌனத்தில் ஒலி உடல் ஓய்ந்து அடங்கினாலும் ஒரு கணம்தான்.... மீண்டும் சிலிர்த்து பயந்து...பேரோலம் இட்டுச் சுழல ஆரம்பித்துவிடுகிறது. இல்லையெனினும் குமபலான ஓசை வெள்ளம் அடித்துச் செல்லக் காணாமல் போகின்றன கணக்கற்ற உடல்கள். ஏதாவது நாம ஒலியாகிற வாக்குத் தூண்களைப் பிடித்துத்தான் தப்பிக்க வேண்டியிருக்கிறது. இல்லயெனில் நான் என்ற அசபையாய் ஆகிவிட்டால் இந்த பிரச்சனை இல்லை. 

"சரியான முடிவை நோக்கித்தான் செல்கிறாய்" என்றான் கிழவன். உருவம், தெரியாமல் உணர்வைக் கிழவன் என்று சொல்வது கொஞ்சம் வேடிக்கையாய்ப் பட்டது. 

"நீ யார்?" 

"நீ" 

"திருப்பிக் கேட்டே தள்ளிப் போடும் சாகசங்கள் நெடுங்காலம், புத்தருக்கும் முன்பிருந்தே, இருக்கத்தான் செய்கின்றன." 

"கேள்விகள் உண்மையில் இல்லை. பதில்தான் இருக்கிறது. கேள்விகளை விட்டால் பதில். ஆனால் கேள்விகளை விட்ட பின் பதில் மட்டும் எதற்கு என்று நினைத்தே வெறும் கேள்விகளைக் காதலிக்கின்றார்கள் மக்கள்." 

"ஆம் துன்பங்களை விரும்புவதைப் போல" 

"நீ யார்" 

புன்னகை. 

கண்ணுக்குத் தெரியாமல் எண்ணுக்கு மட்டும் புலப்படப் புன்னகைக்கக் கற்ற அந்தக் கிழவன் யார் என்ற எண்ணம் புவியின் பழைய அட்ச ரேகையில் என் வாழ்வின் குப்பைக்குள் மீண்டும் கொண்டு வந்து போட்டது. 

"சிரிப்பொன்று வாய் வேண்டாது 
தானே படர்ந்து உலகூடு ஊடாடி 
நமை நோக்கி வரத்தொடங்கும்
ஸ்தம்பித கணம்..........." 

என்றோ நான் எழுதியவை என்னைப் பார்த்துச் சிரித்தன. 


சில நாளாக அந்தக் கிழவன் நினைவாகவே இருந்தது. கன்னியை நினைத்துத் திரியும் வயதில் கிழவனை நினைத்துத் திரிய வைத்த வல்விதியை என்னென்பேன்? கிழவனும் கொஞ்சம் பொல்லாக் கிழவன் தான். அவ்வப்பொழுது மர்மப் புன்னைகையை அனுப்பி வேவு பார்ப்பான். அந்தப் புன்னகை வரும் போதெல்லாம் நானும் வேண்டுமென்றே முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வாழ்வின் அடிமட்டங்களில் ஈடுபட்டு உழல்வேன் ஆயினேன். 

ஆனாலும் காலங்கண்ட கிழம் ஆயிற்றே! There is way to become busy with laziness. Do you know that? என்று திடீரென்று ஒற்றைக் கேள்வியை வீசிவிட்டுப் போகும். எங்கிருந்து யார் என்னாமல் அங்கிருந்தது என்னும்படி இந்தக் கேள்வியின் வீச்சு என்னை நிலை குலைக்கும். கண்ணில் நீர் வரும் வரை சிரிப்பேன். அப்பொழுதும் விடாது அந்தக் கிழம் -- 

A Way To Weep by Laughing !!!  என்று கிளிங் கிளிங் கிளிங் என்று பீங்கான் சிரிப்பாய்ச் சிரித்துவிட்டுப் போகும். 

உருவம் இல்லை, உடல் இல்லை, பெயர் இல்லை, முகவரி கிடையாது, யார் அந்தக் கிழவன்? மண்டையைக் குடைய ஆரம்பித்தது. மாலை நேரம் மரக் கிளைகளினூடு அவன் கண்கள் உற்று நோக்குவன போல் ஒரு தயக்கம். இல்லை அவன் எங்கும் ஒளிபவன் அன்று. அவன் ரகசியமே வெட்ட வெளிதான். ஆம் வெட்ட வெளி! வெட்ட வெளி !! அதுதான் அதுதான் அவன் ஒளியும் இடம். கிழவா! இனி நீ தப்புவது எங்கு? போக்கா காட்டுகிறாய்? காலையும் மாலையும் நண்பகலும் நள்ளிருளும், எந்நேரமும் வான் வெளியை வெட்ட வெளியை இரு பொருட்களின் இடையில் தட்டுப் படும் இடைவெளிகளை உற்று உற்று நோக்கலானேன். 

கிழவன் மோப்பம் பிடித்திருப்பான் போல! ஒளிவிடத்தை மாற்றிக் கொண்டு விட்டானோ? 
வெட்ட வெளியை விட்டால் பட்டவர்த்தனம் ஆவதுதானே வழி? ஒரு பக்கம் ஐயோ பாவம் என்று இருந்தது. அருள் பூக்கும் நிலையில் நான் இல்லை; அவன் தான் இருக்கிறான். ஆனாலும் இது என்ன அகந்தை? அவனுக்கு நான் அருளாக எண்ணுவது? 

நான் -- அவன் 

இந்த நுகத்தடி விளையாட்டு தேவையா? அவனை விளையாடாமல் இருக்க சொல்ல முடியாது. ஆனால் நான் விளையாடாமல் இருந்துவிட்டால். முடியுமா? 

நான் -- இதன் இருப்பின் இயல்பே நுகத்தடிதானெ? நானே இல்லையாகி விட்டால்? ஆம் அது தோன்றிய கணத்தில் எதேச்சையாக வெட்ட வெளியில் பார்வை உற்றுக் குவிந்தது. 

கிழவன் ஓ என்று கத்திக்கொண்டு உள்ளே ஓடினான். "ஐயய்யோ! பிள்ளை பெத்துட்டான்; பிள்ளை பெத்துட்டான்" என்று. அவன் தெரியவில்லை பார்வையில். ஆனால் உள்ளே செல்லும் அவன் அங்கியின் நுனி கண்ணில் தட்டுப்பட்டது. அந்தர வெளியில் இவனுக்கு மட்டும் எங்கு வாசல் திறந்து வைத்திருக்கிறது!!!!! 

அசபையாய் அஹம் சிரித்தது. 


நட்ட நடுவெளியில் உருவின்றி, உடலின்றி, உணர்வுமயமாய், ஒரு புன்னைகையாய்ப் போந்த கிழவன். அவன் அங்கியின் நுனி மட்டும் தெரிந்து மறைந்த அந்த வாசல். அறையில்லா அறையின் நுழைவில்லா நுழைவில் புகாத ஒரு ப்ரவேசம். பைத்தியம் முற்றிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் சிந்தையில் ஓரமாக சைக்கிள் பெல் அடித்துக் கொண்டிருக்கிறது. 

நடுநிசி தாண்டி ஒரு ஜாமம். பூனை ஒன்று மொட்டை மாடியின் குட்டிச் சுவரினின்று பெருஞ்சுவருக்குப் பதவிசாய்த் தாண்டி பக்கமெங்கும் நோட்டம் விடுகிறது. இரண்டு பச்சை விளக்குகள் கண்கள். பாலுக்கழும் குழந்தை போன்று மிகாரம். நடுவானில் இருள் என்றும், ஒளிர் கருநீலம் என்றும் தெரியாமல் ஒரு பரப்பு. விண்மீன் இமைக்கும் விரிகதிர் மண்டிலத்து நாப்பண் நடுங்கி வீழும் ஓர் உடு அவிழ்க் கோடு. 

வாழ்க்கையில் முதல் முதலாகப் பார்த்த பிணம் இப்பொழுதுதான் நினைவில் பாடை கட்டிப் புறப்படுகிறது. பிணத்தை ஒருக்களிக்கச் சொல்லிவிட்டுப் படுத்து அதில் சவாரி செய்கிறான் கிழவன். என் நினவில் சலனமாகி நான் கத்துகிறேன்: 

"ஏய்! ஐயோ சே... போயும் போயும் போகுதுபார் புத்தி!" 

"ஏன்! நீ மட்டும் என்ன செய்கிறாய் தினம்?" 

"நான்?..." 

"நீ மட்டுமன்று. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் படுக்கும் பொழுது பிணத்தை ஒருக்களிக்கச் சொல்லிவிட்டுத்தான் படுக்கின்றனர்" 

"உளறாதே!.." 

"உள்ளத்தில் உறைக்கும் உண்மையை மறைக்க முயலாதே! .." 

"ஆனால்..." 

"படுக்கும் போது மட்டுமன்று. நடக்கும் போதும், நனவிலும், பிணம் சுமந்து அலையும் உயிரினம், பிறர் சுமக்க உடல் செல்லும் நாள் வரை" 

எங்கோ ஓர் எண்ணம் எழுந்துகொண்டு, 

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் 
அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" 

என்று கேட்டுவிட்டுப் படுத்துக்கொண்டது. 

பாடையில் கிடந்த பிணம் திடீரென்று சிரிக்கத் தொடங்கியது. கிழவன் அந்தப் பிணத்தை வெட்ட வெளியில் தள்ளிவிட்டுவிட்டுத் தான் முழுக்கவும் பாடையை ஆக்கிரமித்தபடி படுத்தான். பிணம் படுப்பதற்கு இடம் தேடியபடியே உருண்டு கொண்டு பாடையைப் பின் தொடர்ந்தது. 

திடீரென்று வானம் நொறுங்கியது. உச்சிவானில் தொங்கிய சாண்டலியர் விழுந்து நொறுங்கியது...தூள் தூள் தூள்...க்ளாங்ங்ங் 

பெருஞ்சுவரில் நின்ற பூனையோடு புணர சிறிய சுவரில் அதன் இணைப் பூனை வந்து ஒரே ஆக்ரோஷ லாவணி...மிகாரக் கலகம்....

*** 

ஒரு நாள் கிழவனை நேருக்கு நேர் கேட்டுவிட்டேன். 

"ஏன் எங்களைப் போல் சாதாரணமாக இரேன். ஏன் ஏதோ பேசுகிறாய்! எங்கோ ஓடுகிறாய்..." 

'சாதாரணமாக இல்லாதது நீயும் உலகமும். உணர வேண்டியவர்கள் உபதேசம் பண்ண ஆரம்பித்தால்...' 

"சரி. இங்கே பார். உடலும் உருவமும் கொண்டு நீ தெரிந்தால் என்ன? அது என்ன உருவிலாத ஒரு புழக்கம்?" 

'நீ மட்டும் உருவுடையவன் என்றா நினைக்கிறாய்?' 

"ஆம். இதோ கால்கள், கைகள், என் முகம், என் முதுகு, என் கண்...என் உடல்" 

'சரி உன் கால்கள் கைகள், உடல்.....ஆனால் நீ உருவுடையவனா?' 

"என்ன சொல்லுகிறாய்?" 

'அப்பா! நீயும் உருவத்தை உன் உருவம், உன் உடல் என்றுதான் சொல்லமுடியும். அந்த உருவாகவே நீ ஆகிவிடமுடியாது. அப்படி என்றால் உன் உடலும், உன் உருவும் யாருடையதோ அந்த நீ யார்? உனக்கு உருவம் உண்டா?' 

" சரி பழைய கேள்வி" 

'சில கேள்விகள் காலவயப் படுவதில்லை.' 

"அதுவும் சரி. ஆனால் இந்த உருவம் உடல் எல்லாம் சேர்ந்ததுதானே நான்?" 

'சேர்ந்ததுதான் நீ என்றால் பிரித்து எண்ணும் சாத்தியம் அற்றதுவாய் அன்றோ இருக்க வேண்டும்' 

"சரிதான். ஆனாலும்...." 

'உருவம் என்பது நீ என்று எண்ணும் முதல் எண்ணத்தில் உருவாகும் சூழ்நிலைகள்' 

"அப்பொழுது நான் உருவம் அற்றவன். அருவம். அப்படித்தானே?" 

'உருவம் என்பது நீ என்பதை மறுக்கும் மற்றொரு சூழல்தான் அருவம் என்பதும். நீ உருவமோ அருவமோ அன்று' 

"உருவமும் இல்லை; அருவமும் இல்லை என்றால் நான் இருக்கிறேனே! பின்னர்..." 

'நான் இருக்கிறேன் என்பதற்கும் உருவம் அருவம் என்பதற்கும் சிறிதும் சம்பந்தமில்லை' 

*** 

கிழவனிடம் நான் தெரிந்துகொண்ட பாடம் ஒன்று. எதையும் நேரே கேட்பது தேவையற்றது என்பது. ஒரு நாள் அலுப்புடன் கூறினேன்:- 

"இப்படியே நீ அவ்வப்பொழுது எட்டிப் பார்ப்பது. எதையாவது சூட்சுமப் பொறி போல் விட்டெறிந்துவிட்டுப் போவது. நான் அதை போட்டு உருட்டி உருட்டிப் பார்ப்பது. இதே விளையாட்டாய்ப் போய்விட்டது எப்பொழுதும்" 

'ஏன் நீ யாரிடமாவது எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறாய்? யாரோ உனக்குச் சொல்லி அதன்மூலம் தெரிந்து தெளிவடைய வேண்டும் என்பது நீ விளையாடும் விளையாட்டு. கேட்டால் நான் விளையாடுகிறேன் என்கிறாய்' 

"ஐயா! நான் அறிந்துகொள்ள விழைபவன். நீர் அறிந்தவர். உம்மைக் கேட்காமல் யாரைக் கேட்பது?" 

'இந்த விளையாட்டுதான் நானும் சொல்கிறேன். யார் கண்டு பிடித்தார்கள் இந்த விளையாட்டை?' 

எனக்கு அப்புறம் பல நாட்கள் அந்தக் கிழவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. கொஞ்சமேனும் தயை இருக்க வேண்டும். சும்மா குடுகுடு தமாஷிலேயே ஓடிக்கொண்டிருந்தால்? நானோ பல பிறவிகள் தடுமாறி இப்பொழுதுதான் உயர் சிந்தனைகள் பிறந்து உருப்பட நினைக்கும் ஒருவன். இந்தக் கிழம் என்னடா என்றால் அந்த அடிப்படையே ஏதோ விளையாட்டு என்று நக்கல் அடிக்கிறது. அதுசரி. உயர்வில் இருப்பவர்கள் கீழ்மட்டத்தில் உருண்டு பிரண்டு முன்னேறப் பாடுபடும் ஒருவரிடம் கருணை காட்ட வேண்டும் என்று என்ன விதி இருக்கிறது? சரி அப்படித்தான் முன்னேறி இங்கு என்ன கிழித்துவிடப் போகிறோம்? இவ்வளவு கஷ்டப் பட்டு முன்னேறி அடையும் எதுவும் ஒரு காலத்தில் இல்லாமல் பின்னொரு காலத்தில் அடையப் படுவதுதானே? அப்பொழுது அது எப்படி நிலைத்து நிற்கும்? மீண்டும் நழுவிவிழல்; மீண்டும் முன்னேறு; மீண்டும் சருக்காம்பாறை; மீண்டும் சிராய்ப்போடு முக்கி முனகி இப்படியே ஆயுசுக்கும் போகும். சரிதான் இலட்சியமாவது மண்ணாவது.. இதுவரையில் இல்லாததை இனிப் புதிதாக அடைந்து இங்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏதாவது ஆசிரமம் கட்டிக் கூத்தடிக்கத்தான் பயன்படும். 

'உள்ளது விலகாது; 
இல்லது வரினும் நிற்காது; 
நல்லது பெறினும் நீளாது; 
நாமாய் இருப்பது நலியாது' 

என்று பாடிக்கொண்டே ஒரு நாள் முழு வெறுப்பில் அத்தனையையும் தூக்கி எறிந்தேன். கிழவனாவது மண்ணாவது ! 

"சொந்த வீட்டுக்குள்ள வந்துட்டான் !!! 
சொந்த வீட்டுக்குள்ள வந்துட்டான் !!! " 

என்று கத்திக்கொண்டே எங்கோ ஓடினான் கிழவன். 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

No comments:

Post a Comment