Thursday, May 2, 2019

தமிழில் பாணினி -- அஷ்டாத்யாயியின் தமிழாக்கம்

சம்ஸ்க்ருத மொழியின் ஆகச்சிறந்த இலக்கண நூலாகக் கருதப் படுவது பாணினி என்பார் இயற்றிய அஷ்டாத்யாயி என்னும் நூலே ஆகும். சுமார் 4000 சூத்திரங்களால் ஆகிய அஷ்டாத்யாயி என்னும் நூலுக்கு, நூற்பா ஒவ்வொன்றுக்கும் சற்று விரிவாக அமைந்த காத்யாயனரின் விருத்தியும், இவை அடிப்படையில் பிறகு பதஞ்ஜலி என்பார் இயற்றிய மஹாபாஷ்யமும் அமைந்து அஷ்டாத்யாயி என்பதைத் தொடர்ந்து பயிலப்பட்டுச் செறிந்த இலக்கணப் பள்ளியாக ஆக்கிவைத்திருக்கிறதுநூற்பா ஆசிரியரை விட விளக்கம் விருத்திக்காரரிடமும், நூற்பா, விருத்தி இரண்டுக்குமான மிக விரிவான விளக்கம் மஹாபாஷ்யக்காரரிடமும் அமைந்திருப்பதால் அஷ்டாத்யாயி என்பதற்கே 'முனித்ரய வியாகரணம்' என்னும் பெயர் அமைந்தது. பாணினி முனிவர், காத்யாயன முனிவர், பதஞ்ஜலி முனிவர் ஆகியோரால் அடுத்தடுத்து விளக்கமுற்ற வியாகரணம் என்பது இதற்குப் பொருளாகும். Theodore Goldstucker பாணினியின் காலத்தை 8ஆம் நூற் கி மு என்கிறார். பல ஆய்வாளர்கள் பொதுவாக பாணினியின் காலம் கி மு 4 ஆம் நூற் என்கின்றனர்.

இத்தகைய இலக்கண நூல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜர்மன் என்று மேலைநாட்டு மொழிகளில் நெடுக மொழிபெயர்க்கப்பட்டு ஆய்வுக்கு நெடுங்காலமாகக் கொள்ளப்பட்டு வருகிறது. பாணினியின் காலத்தில் இந்தியா போன்ற தலைப்புகளில் நூல்கள் எழுந்து வெளி வந்துள்ளன. Otto Bohtlingk, Srisa Chandra Vasu, S M Katre, பாணினியும், பாணினி சார்ந்த இலக்கண மரபுகளும் என்ற ரீதியில் அமைந்த George Cardona அவர்களின் ஆய்வுகள் இத்துறையில் குறிப்பிடத் தக்கவை. Sri Ram Nath Sharma அவர்களின் மிக விரிவான ஆங்கில மொழிபெயர்ப்பு, அனைத்து துணை நூல்களையும் உள்ளடக்கிய விதமாக, இந்தத் துறையில் மிக முக்கியமான நூல் ஆகும்.

தமிழில் வடமொழி இலக்கணத்தைப் பற்றிய பிரக்ஞை நெடும் பழங்காலம் தொட்டே வருகிறது என்றாலும், வடமொழி இலக்கண நூலின் மொழிபெயர்ப்புகள், ஆழ்ந்த அலசல்கள் என்பன மிகவும் குறைவு. சொல்லதிகாரத்திற்கு உரை வரைந்த சேனாவரையர் பல குறிப்புகளைக் காட்டுகிறார். அதை விட்டால் பிரயோக விவேகத்தில்தான் இரு மொழி ஒப்பு அலசல் என்பதையே நாம் பார்க்கிறோம். இந்தத் தொடர்ச்சியில் திரு பி எஸ் சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் பதஞ்ஜலி மஹாபாஷ்யம் குறித்த உரைத் தொகுப்புகளும், இலக்கண வரலாறு நூல்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆயினும் தமிழில் ஏன் வடமொழி இலக்கண நூலுக்கான நேர் மொழிபெயர்ப்பு தோன்றவில்லை என்பது வியப்பேஇந்தக் காலம் காலமான குறையைக் களையும் அருமையான நூல்தான் முனைவர் கு மீனாட்சி அவர்களின் அஷ்டாத்யாயியின் தமிழாக்கமாக அமைந்த 'பாணினியின் அஷ்டாத்யாயி (தமிழாக்கம்), மூன்று பகுதிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998. சுமார் 4000 நூற்பாக்கள் அமைந்த முழுநூலும் தமிழாக்கம் செய்யப்பட்டு பாணினியைப் பற்றிய தெளிவான ஆய்வுகள் தமிழில் ஏற்பட வழிவகுத்துள்ளது. ஆசிரியர் தமது முகவுரையில் கூறுவதுபோல்

"பாணினியின் அஷ்டாத்யாயி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ... பல மேல்நாட்டு அறிஞர்களால் மிகவும் புகழப்பட்ட அஷ்டாத்யாயியை அதன் தமிழாக்கத்தையாவது படித்து அறிந்து கொள்வதற்குக் கூட இதுவரையில் அதன் தமிழாக்கம் தமிழறிஞர்களுக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய நூலின் தேவையைப் பல அறிஞர்கள் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்தக் குறையை நிறைவு செய்வதற்காக எடுத்துக்கொண்ட எனது எளிய முயற்சிதான் இந்தத் தமிழாக்கம்.'

தமிழாக்கத்தில் நூற்பாக்களில் வர்க்க எழுத்துகளைக் குறிக்க எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கையாளும் ஆசிரியர் தமது தமிழாக்கம் குறித்து மேலும் விளக்கும் போது -

"அஷ்டாத்யாயி என்ற பாணினி இலக்கணத்துடன் காத்தியாயனரின் வார்த்திகம், பதஞ்ஜலியின் மஹாபாஷ்யம், ஆகிய மூன்றையும் சேர்த்துத்தான் படிப்பது தொன்று தொட்ட வழக்கம். அஷ்டாத்யாயி சூத்திரப்பாடம் மட்டும் தனியாக மொழிபெயர்த்தால், அத்தமிழாக்கம் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. வடமொழி இலக்கணத்தை முனித்ரய வியாகரணம் அதாவது மூன்று முனிவர்களின் இலக்கணம் என்று கூறுவதுண்டு. ஆகவே இம்மொழிபெயர்ப்பில் முதலில் பாணினியின் சூத்திரங்களைத் தமிழில் கொடுத்து, தொடர்ந்து, மகாபாஷ்யம், வாமனர் ஜயாதித்தரின் காஸிகா என்ற நூல்களின் அடிப்படையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே, வார்த்திகங்களையும் தமிழில் கொடுத்து, தொடர்ந்து, அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது."

ஆனால் வேத மொழியில் உள்ள உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் ஆகிய சுரங்களைப் பற்றிப் பாணினி குறிப்பிடும் குறிப்புகளைச் சரியாகக் குறிப்பிட போதிய குறியீடுகள் இன்மையால் அவற்றைக் குறிப்பிட இயலவில்லை என்கிறார்சிவசூத்திரம், தாதுபாடம், கணபாடம், உணாதி சூத்திரங்கள், பிட் சூத்திரங்கள், லிங்கானுசாஸனம், சிக்ஷா ஆகிய துணை நூல்களுக்கான அருமையான விளக்கங்கள் ஆசிரியரின் முகவுரையை மிகவும் முக்கியமானதாக ஆக்குகின்றன. பாணினி சூத்திரங்களின் அமைப்பு குறித்து ஆசிரியர் எழுதும் போது, பிரத்தியாஹாரங்கள், அனுபந்தங்கள், கணங்கள், கலைச்சொற்கள், அனுவிருத்தி போன்ற அம்சங்களை நன்கு விளக்கிக் காட்டுகிறார். Metalanguage எனப்படும் பாணினியின் கருவி மொழி குறித்த விளக்கம் அருமை. அஷ்டாத்யாயி சூத்திரங்களில் எப்படிப் பொருள் காண வேண்டும் என்று சில விதிகளைப் பாணினி அமைத்திருக்கிறார். ஸம்க்ஞா விதி, பரிபாஷா விதி, விதி, நியம விதி, ப்ரதிஷேத விதி அல்லது நிஷேத விதி, விபாஷா விதி, நிபாதன விதி, அதிகார விதி, அதிதேச விதி போன்ற விதிகளைத் தகுந்த எடுத்துக் காட்டுகளுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது அரும் உதவி.

இத்தகைய ஆழ்ந்த இலக்கண ஒப்பாய்வியலுக்கான அடிப்படையை அமைத்த ஆசிரியரின் அரும் முயற்சியைத் தொடர்ந்து, காசிகா, பதஞ்ஜலியின் மஹாபாஷ்யம் போன்றவற்றுக்கும் துல்யமான மொழிபெயர்ப்புகள் தோன்றுமேயானால் மொழி ஆய்வுகளுக்கான தமிழ் மொழி முயற்சிகள் மிகவும் சிறந்து விளங்கும்.

*** 

No comments:

Post a Comment