Thursday, May 2, 2019

வேணவா பற்றிய தொல்காப்பிய விளக்கம்

வேணவா பற்றிய தொல்காப்பிய விளக்கம் --

இந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம். அது என்ன வேணவா? அவா -- என்றால் புரிகிறது. வேணவா என்றால் வேண்டப்பட்ட அளவு அவா என்று பொருளோ? இந்த ‘வேணவா’ என்பதற்குத் தொல்காப்பியர் கூறும் பொருள் நயமுடைத்து. அது என்ன என்று பார்ப்போம். வேணவா -- பிரித்தால் வேண்+அவா. இதில் அவா என்றால் ஆசை என்பது பொருள் என்பது வெளிப்படை.

வேண் என்பது வந்து சேர்ந்த வடிவம். எதிலிருந்து? வேட்கை என்னும் சொல்லிலிருந்து. வேட்கையும் அவாவும் சேர்ந்தால் வேட்கை+அவா = 
மெய்யெழுத்தோடு சேர்ந்து ஐ என்பதும் போய்விடுமாம்,. அப்படி என்றால் க்+ஐ இரண்டும் அவுட்டு. அப்பொழுது மிஞ்சுவது வேட்+அவா
டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். எனவே வேட் = வேண் என்றாகி வேண்+அவா = வேணவா என்று வருகிறது. இது தொல்காப்பியர் ஒரு சூத்திரமாகவே பண்ணியிருக்கும் கருத்து.

எழுத்து 288

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐயென் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகார மாதல் வேண்டும்.

என்மனார் புலவர் -- என்று சொல்லிவிட்டாரா தொல்காப்பியரே, அப்பொழுது இந்தக் கருத்து அவருக்குமுன் சொன்ன புலவர்கள் உண்டு போலும். அவர்தம் கொள்கையை ஏற்றுத் தொல்காப்பியர் இந்த நூற்பாவைச் செய்துள்ளார். வேட்கை என்றாலும், அவா என்றாலும் பொருள் ஒன்றுதானே? இல்லை. ’வேட்கை என்பது பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம். அவா என்பது அப்பொருள்களைப் பெற வேண்டும் என்று மேன்மேல் நிகழும் ஆசை. எனவே வேட்கையால் உண்டாகிய அவா என மூன்றனுருபு விரிந்தது. அல்லது இதனை வேட்கையும், அவாவும் என அல்வழி என்பாரும் உளர்’. (நச்சினார்க்கினியர்).

***

No comments:

Post a Comment