Saturday, December 7, 2019

உபயகவி

படிப்பது, அறிவைத் திரட்டுவது, விளக்கங்களைத் தேடுவது என்பதெல்லாம் எவ்வளவு இடர்ப்பாடு உடையது என்பது அவ்வாறு உழைப்பவர்களுக்கே தெரியும். எத்துணை காலமாக எவ்வளவு அறிஞர்கள் வாழ்நாள் எல்லாம் உழைத்து அர்த்தங்களைச் சேகரித்து மக்களுக்கு உதவியிருக்கின்றனர் என்பதை நினைத்தால் நம் நெஞ்சம் நன்றியில் வணங்காமல் போகாது. இதை ஏன் சொல்கிறேன்? ஆம். ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளுக்குப் பின் பல ஆசாரியர்களின் பெயர்களைக் கேள்விப் படுகிறோம். அவர்களில் ஒருவர் உபயகவி அப்பா என்பதாகும். நம்மாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதி தாலாட்டு என்ற நூலை எழுதியவர். இந்தப் பெயர் என் நினைவில் படிந்துவிட்டது. அது என்ன உபயகவி? என்ன அர்த்தம்? விளக்கம் எங்கே தேடுவது?

ராஜசேகர பண்டிதர் எழுதிய காவிய மீமாம்ஸையைப் படிக்கும்போது இந்தச் சொற்றொடருக்கு விளக்கம் கிடைக்கிறது. காவிய மீமாம்ஸை கூறுகிறது -- ப்ரதிபா வ்யுத்பத்திமாம்ச கவி: கவி: இதி உச்யதே| ஸ ச த்ரிதா | சாஸ்த்ர கவி: காவ்ய கவி: உபயகவிச்ச| - பிரதிபையும், வியுத்பத்தியும் ஒருங்கே வாய்ந்த கவியே கவி எனப்படுவார். கவியில் மூன்று விதம். சாத்திரக் கவி, காவியக் கவி, உபய கவி. சாத்திரக் கருத்துகளைக் கவி சாமர்த்தியத்துடன் பாடுபவர் சாத்திரக்கவி என்றும், கவிதா சாமர்த்தியத்தால் நுட்பமான விஷயங்களிலும் ஒளி பாய்ச்சி விடக் கூடியவர் காவியக் கவி என்றும் கூறுகிறார் ராஜசேகர பண்டிதர். ஆனால் உபயகவி என்பவர் சாத்திரமும் வல்லவராய், கவிதையிலும் சாமர்த்தியம் கொண்டவராய் இருப்பதால் முதல் இருவரை விட உயர்ந்தவர் என்பது ராஜசேகர பண்டிதரின் கருத்து.

அப்பாடா... உபயகவி என்றால் என்ன என்ற தெளிவு கிடைத்ததா? அந்தக் காலத்தில் சிலருக்கு ‘உபயகவி’ என்ற விருது அளித்து கௌரவிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அத்தகையோர் சாத்திரம், கவிதைத் திறன் இரண்டிலும் சிறந்து விளங்கினார்கள் என்ற தகவலும் அறிய வருகிறது.

***

No comments:

Post a Comment