Friday, January 31, 2020

ஜ்யூயிஷ் அமெரிக்கக் கவிதை

ஜ்யூயிஷ் அமெரிக்கன் கவிதைகள் சிலவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹீப்ரு கவிஞர்களின் கவிதைகளில் ஒரு ப்ரத்யேகமான மூர்ச்சனை விழுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஜ்யூயிஷ் அமெரிக்கன் குரலிலும் அதே சாம்பர் வாய்ஸ் - நேம ஒலி எழுவதைப் பார்க்க முடிகிறது. லூஸில் லாங் டே என்னும் பெண்மணி. ஓக்லாந்தில் பிறந்து படித்து, ஆஸ்பத்திரியில் ஊழிய விஞ்ஞானியாகப் பணி புரிபவர். ரயில் வண்டி மாறுகிறோம் - என்னும் கவிதையில் அவர் காட்டும் ஆழக் காட்டு அமைதி வியக்கத்தக்கதாய் இருக்கிறது.

We are changing trains
in the middle of the night,
those of us who knew
it was time to get off.

என்று ஆரம்பிக்கும் கவிதையில் அவர் செய்யும் சொல் மாயங்கள் பல. போகும் இடம் புதிது. அந்நியம். அந்த அந்நியத்தனம் காற்றிலேயே அப்பிக் கொண்டு கிடக்கிறது என்கிறார். அந்த அந்நியத்தனத்திற்கு அமைந்த சேகண்டியாக ஒலிக்கிறது பூச்சிகளின் உலோகத்தனமான ஓசை!

the unfamiliar air grows thick
with insects that glisten metallically.

தொண்டை வறள்கிறது. உள்ளே பாலை விரிகிறது - என்று அவர் சொடுக்கும் சொல்லாட்சியில் மொத்த அனுபவமும் சூல் கொண்டு விடுகிறது.

My throat is dry,
a desert spreading inside me.

அதாவது இருட்டை ஏதோ பதார்த்தம் போல் தள்ளி நகர்த்தி ஒதுக்கி எல்லாம் செய்ய முடியுமா? முடியும் என்று சொன்னால் நம்ப முடியுமா? நம்ப முடியவில்லை என்றாலும் லூஸில் எழுதும் இந்த வரிகள் நன்கு புரிகிறதே?

Fingers of light from the coach
push back the darkness,
pulling me forward
toward a mapless country.

அந்த நாட்டிற்கு வரைபடம் இருக்கலாம். ஆனால் செல்பவருக்குச் சொந்தம் பந்தம் தொடர்புகள் இல்லா அந்நிய தேசத்தில் ரேகைகளால் ஆன வரைபடம் என்ன அர்த்தம் தர முடியும்? நான்கு திசைகளிலும் கைகளைப் பரப்பிக் கொண்டு கிடக்கும் ஒரு நிலப்பரப்பு தன்னை என்ன செய்யப் போகிறது என்பதை இனித்தானே அந்தப் புலம் பெயரும் ஜீவன் பார்க்க முடியும்? ஆம் மரணமும் இத்தகைய ஓர் அந்நியப் பயணம்தானே?

I climb on board. என்று முடிக்கிறார். இறுதிப் பயணத்தில் ஒரே வித்யாசம் - We have to climb on board.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment