பகவந் நாமங்கள்தாம் அநேகம் என்றும், அவற்றில் பூர்ணாவதாரத்தைக் குறிக்கும் நாமங்கள் எவை என்றும் ஒரு சிறப்பைக் கூறுகிறார் ஸ்வாமி பிள்ளைலோகாசாரியர். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யங்களில் ஆசாரியர்கள் ஒவ்வொரு விதமான வகைப்பாட்டை அருளிச்செய்கின்றனர். பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரர் தம்து பாஷ்யத்தின் அவதாரிகையில் கூறும் பொழுது அவன் என்று பால்குறிப்பு கொண்டது போல் வரும் நாமங்கள் ஸ்ரீவிஷ்ணுவைக் குறிப்பனவாகவும், அவள் என்னும் பால்குறிப்பு கொண்டவை தேவதா என்னும் பொருளிலும், அது என்னும் குறிப்பு உடையவை பிரம்மம் என்னும் பொருளுடையவை என்றும் ஒரு வகைப்பாடு காட்டுகிறார். ஸ்ரீபராசர பட்டர் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் ரீதியாக ஐந்து வியூஹங்கள் என்ற கோட்பாட்டின்படியும் பகவந் நாமங்களை வகைப்படுத்திக் காட்டுகின்றார்.
ஆனால் தூமணிமாடத்து என்னும் பாசுரத்தில் ஸ்ரீஆண்டாள் பகவந் நாமங்களை வகைப்படுத்திக் காட்டும் அழகே அலாதியானது. எங்கே இவ்வாறு வகைப்பாட்டைக் குறிப்பு காட்டுகிறாள் என்று பார்ப்போம்.
தம்மை பகவத் பரவசத்தில் இழந்து தோய்ந்திருக்கும் ஒருவரை உலகை உய்விக்கும்பணி கெட்டுப் போகுமே என்று எழுப்பும் போது திருத்தாயார் கூறியது ‘ஏன் இவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள்? பகவந் நாமங்களைச் சொல்லி எழுப்புவது அன்றோ வழக்கம்!’ என்று சொன்னாள். அதற்கு காத்திருக்கும் பக்தியின் திருவுருவங்கள் கூறியது - ‘எல்லா நாமங்களையும் சொல்லி விட்டோம். ஆயிரம் நாமங்களையுமே சொன்னோம்.’ இவ்வாறு கூற வேண்டிய இடத்தில் அவர்கள் சொன்னதோ ‘மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று’ என்பதாகும். இதற்கு உள்ளுறையும் ஆன்மிக உட்பொருளை பூர்வாசாரியார்கள் உதவியின்றி எங்ஙனம் நாம் அறிந்து கொள்ள முடியும்?
நாமங்கள் பலவும் நவின்று என்றார்கள். அப்படிச் சொல்லும் பொழுதே அந்த நாமங்களை மூன்று பிரிவாகப் பிரித்துக் காட்டுகிறார்கள் என்கின்றனர் உரைவளர்த்த உத்தமர்கள். என்ன பிரிவுகள்?
மாமாயன், மாதவன், வைகுந்தன் - இவைதாம் பிரிவுகள். மாமாயன் என்பது குறிப்பது எந்த நாமங்களை? மாதவன் என்பது குறிப்பது எந்த நாமங்களை? வைகுந்தன் என்பது குறிப்பது எந்த நாமங்களை? மாமாயன் என்றால் மஹா ஆச்சரியமான செயல்களை உடையவன். என்ன ஆச்சரியம்? அவன் மனிச்சாய்ப் பிறந்து நம்முடன் ஒரு ஜீவன் போலே நம்முடன் உழன்று, நாம் எப்பொழுது அவனிடத்தில் மனம் திரும்புவோம் என்று படுகாடு காத்து நம்மால் திட்டவும், ஏவிக் கூவிப் பணிகொள்ளவும், ஏதோ நாம் மதித்துப் போற்றுவதால்தான் அவனுக்கே பெருமிதம் வந்தால் போன்று நம்முடன் எளிமையாகப் பழகி, அப்படி அவன் எளிமையாகப் பழகுவதாலேயே நாம் அவனை அலட்சியம் செய்து இழந்து போகின்ற அளவிற்கு எளிமையாகப் பழகி நிற்கும் நிலை ஆச்சரியம். என்ன ஆச்சரியம்? அவனுக்கு ஆள் கிடைக்க வேண்டும் அல்லவா? நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம் என்று நாம் கருத முடியாது. ஏனெனில் அவனையே தங்கள் வாழ்வாகவும், கண்ணின் மணியாகவும் கொண்டு அவனையே கண்ணும் கருத்துமாய் அல்லது கருத்தே கண்ணாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் நித்யர்களான அமரர்களையே ஒரு நாடாக நித்ய விபூதி என்று கொண்டு தான் அங்கு செல்லப் பிள்ளையாக பேரின்பம் மயமானவன் அல்லவா இப்படி நம்மை ஒரு பொருட்டாக எண்ணி இங்கே நம்மிடம் வந்து திட்டும், அலட்சியமும், போனால் போகிறது என்று பாராட்டும் நாம் கொடுக்க அதில் மகிழ்ந்தவன் போன்று இருப்பது. இதுதான் அவனுடைய ஸௌலப்யம், எளிமைக் குணம் என்பது. இவ்வாறு எளிமைக் குணம் பற்றிச் சொல்லும் நாமங்கள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ், அதாவது மாமாயன் என்ற பிரிவின் கீழ் வருமாம்.
அடுத்து இப்படி ஒருவன் எளிமையாகப் பழகுகிறான் என்றால் அவன் மிகப்பெரியவனாக இருந்தால் மட்டுமே இந்த எளிமையானது குணமாக ஆகும். அவனோ ஸர்வஸ்மாத்பரன். அனைத்திற்கும் மிக்குயர்ந்தவன். உயர்வற உயர்நலம் உடையவன். அப்படி உயர்வே தம் மாறாத இயல்பாகக் கொண்டோரான நித்ய சூரிகள் புடைசூழ என்றும் அழியாத ஸ்ரீவைகுந்தத்து இருக்கும் பராத்பரன். அப்படி அவனுடைய மேன்மையைச் சொல்லும் நாமங்கள், பரத்வத்தைச் சொல்லும் நாமங்கள் அவையெல்லாம் சேர்ந்து ஒரு பிரிவாம். அந்தப் பிரிவிற்குப் பெயர் வைகுந்தன் என்பதாம்.
இவ்வாறு எளிமைக் குணம் சொல்லும் நாமங்கள், மேன்மைக் குணம் சொல்லும் நாமங்கள் இவை இரண்டுமே காரியப் படுவதோ, அர்த்தப் படுவதோ ஒரு காரணத்தால்தான். என்ன அந்த காரணம்? இப்படி மேன்மையானவன் நமக்கு எளிவந்தவனாக ஆவதற்கு யார் காரணம்? அவனை விட்டு என்றும் நீங்காமல் சங்க இலக்கியம் சொல்வது போல் திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பன் என்பதற்கேற்ப, அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி சொல்வது போல் ஸ்ரீமஹாலக்ஷ்மி என்றும் அவனை விட்டு நீங்குவதில்லை. பெரியபிராட்டியாரின் கருணையால்தான் அவன் எளிமைக் குணம் நமக்குப் பயன்படுகிறது. நம்மை உய்விப்பதற்காக அவன் படாதபாடு படுவதெல்லாம் தாயார் நம்மீது கொண்ட தயையே காரணம் ஆகும்.
அவன் மிக்குயர்ந்த மேன்மையன் என்பது எதனால்? அவன் ஸ்ரீயப்பதி என்பதால் அன்றோ! எனவே அவனுடைய மேன்மைக் குணங்களை, தான் ஸ்வரூப நிரூபக தர்மமாய் இருந்து பெரிய பிராட்டியார் விளங்கச் செய்கிறாள். எனவே அவனுடைய எளிமைக் குணங்கள் நமக்கு உதவுவது தாயாரின் கிருபையால். எளிமைக் குணங்களுக்கு ஏற்ற மேன்மைக் குணங்கள் அவனிடம் பொலிவதும் தாயாரால். எனவே அவன் திருஞெமர்ந்து அமர்ந்த மார்பினன், அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறைமார்பன் என்ற திருமால் என்னும் தத்துவத்தைச் சொல்லும் பெயர்களே எளிமைக் குணங்களைச் சொல்லும் நாமங்களையும், மேன்மைக் குணங்களைச் சொல்லும் நாமங்களையும் ஒருசேர பொருள் உடைத்தாயும், நமக்கு உதவியாயும் ஆக்குவதால் அத்தகைய திருமால் என்னும்படியான நாமங்கள் மாதவன் என்ற வகையைச் சார்ந்தவை என்கிறார்கள் வியாக்கியான ஆசிரியர்கள். இந்த வகைப்பாட்டிற்குப் பெயர் மாதவன் என்பது.
எனவே பகவானுடைய அனைத்து நாமங்களையும், எளிமைக்குணம், திருவைப் பிரியாத ஸ்ரீமத் என்னும் குணம், மேன்மைக் குணம் என்று வகைப்படுத்தி மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றோம் என்கிறார்கள் காத்திருப்போர் என்று உரை வரைந்து ஒரு பெரும் உலகத்தையே நமக்குக் குறிப்பு காட்டிவிடுகிறார்கள் வியாக்கியான பெரும் ஆசிரியர்கள்.
***
கடவுளை நாடுதல் இரண்டு வழி. ஒன்று ஜபம், தவம், பெரும் யோகசாதனம் எல்லாம். சாத்திரங்களைக் கற்று, அங்கு சொல்லும் வழிகளில் தீவிரமான முயற்சி. சமம், தமம், பிரத்யாகாரம் என்று கிரமமாக அப்பியாசம். இந்த வழி கடவுளை நாடும் உபாயம். பல நியமங்களை அனுஷ்டித்து, சாதனங்களை அப்பியாசம் செய்து அடைய வழிதேடுவதால் இதற்கு சாத்ய உபாயம். அதாவது சாதனங்களால் அடைய வேண்டி உபாயமாக அனுஷ்டிப்பதால் சாத்ய உபாயம்.
இன்னொன்று, முதலிலேயே ஜீவனாகிய தன் நிலைமை என்ன? தன்னைச் சுற்றியுள்ள சூழல்கள் என்ன? அடைய நினைக்கும் கடவுளின் இயல்பு யாது? கடவுளை நாடியிருக்கும் தான் அவரை அடைய முயன்றால் வழிமறிக்கும் தடைகளின் கடுமை எத்தகையது? தான் இருக்கும் இருப்பில் தன்னிடம் மண்டிக்கிடக்கும் தோஷங்கள் யாவை? இவ்வாறு நன்கு ஒரு ஜீவன் தன்னிலை உணர்ந்து நிற்கும் நிலையில் ஒரு தீர்மானமான முடிவிற்கு வரலாம். என்ன? கடவுளை நான் தீவிரமாக நாடுகிறேன். ஆனால் சுயநிலையை நன்கு உணரும் பொழுது என் இலட்சியத்தை நானாக ஒரு போதும் அடைய முடியாது என்றே நிச்சயமாகப் படுகிறது. பகவானோ மிகவும் பெரிய இலட்சியம். என் நிலைமையோ மிகவும் இழிந்தது. அவனே தன்னுடைய காரணமே அற்ற அருளால் எனக்கு, என் இடர்களைக் களைந்து, தானே எனக்கு உபாயமாக இருந்து, எனக்குத் தன்னை அடைதலாகிய பெரும் பேற்றைத் தந்தாலொழிய எனக்கு வேறு கதியில்லை என்று ஒருவன் தன் உள்ளத்திற்கு உண்மையாக நடந்து முடிவெடுத்து கடவுளிடமே முழுபாரத்தையும் போட்டு விடுதல் என்பதும் ஓர் உபாயமாகச் சாத்திரங்கள் கூறுகின்றன. இங்கு உபாயம் ஒரு சாதனத்தை எதிர்நோக்காமல் சித்தமாக அதாவது இனி உருவாக வேண்டிய அவசியமே இன்றி ஏற்கனவே நித்யமாக இருக்கும் உபாயமான கடவுளைப் பற்றியதாக இருப்பதால் இதற்கு சித்த உபாயம் என்று பெயர்.
அப்படி என்றால் சித்த உபாயத்தின் பால் தம்மை ஒப்படைத்தோர் எதுவும் செய்யாமல் வேலை சுலபமாக ஆகிவிட்டது; இனி நாம் ஓய்வாக இருக்கலாம் என்ற மனப்பான்மையில் இருக்கலாமா? என்ற கேள்வி வருகிறது. இந்தக் கேள்வி உண்மையில் உள்ளத்திற்குப் பொய்யின்றி அவ்வாறு சித்த உபாயத்தைப் பற்றிக்கொண்ட மனிதருக்கு வருவதில்லை. இப்படியா அப்படியா எது சுலபமான வழி என்று கடவுள் நாட்டம் பாதி தங்கள் சோம்பல் ஸ்மார்ட் புத்தி பாதி என்று யோசிக்கும் நம் போல்வாருக்குத் தோன்றலாம். ஆனாலும் இவ்வாறு தோன்றுவதைப் பொறுமையாக நாம் யோசித்துப் பார்த்தால் இதனுடைய பொருந்தாமை விளங்கும். இவ்வாறு தோன்றுவதையே நினைத்து நாம் வருந்துவதை விட பொறுமையாக யோசிக்கப் பழகினோம் என்றால் நம்முடைய வழி செம்மையாக ஆகும். யாருக்கு இந்த சித்தோபாயம்? யாருக்குக் கடவுள் என்ற விஷயத்தில் தீவிர நாட்டமும், தன்னுடைய நிலையைப் பற்றிய தீவிரப் பிரக்ஞையும், அடைவதில் உள்ள தடைகளைப் பற்றிய தீவிர ஆற்றாமையும் உண்டாகிறதோ அவர்களுக்கு உரிய பேச்சு இந்த சித்தோபாயம் என்பது. அப்படியென்றால் நமக்குச் சம்பந்தமே இல்லையா என்றால் உண்டு. நம் நிலை என்ன என்பதை உண்மைக்கு உள்ளபடி நாம் உணர்ந்தால் நம் நிலை பொறுமையாக உட்கருத்துகளை நன்கு உணரத் தலைப்படுவதே ஆகும்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நமக்குப் பல விஷயங்களில் அருள்துறையில் புரிந்துகொள்ள கைவிளக்காக இருக்கிறது. கிரீஷ்சந்திர கோஷ் என்னும் நாடக நிபுணர் மிகுந்த அறிவும், எதையும் மறுத்து யோசிக்கும் மேதைமையும், அதேநேரத்தில் உலக இன்பங்களில் தம்மை மிகவும் இழந்துவிட்டவராகவும் இருந்தார். அவருக்கு ஆன்மிக வழியில் நாட்டம் இருப்பினும் தன் நிலையைப் பற்றிய தீவிர உணர்த்தியும் கூடவே இருந்தது. பொய்மை என்பது அவரிடம் இல்லாத ஒன்று. ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் பகவந் நாமங்களை ஜபிக்குமாறு கூறியதற்குத் தம்மால் அவ்வண்ணம்கூட செய்ய இயலாது. செய்கிறேன் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அவ்வாறு செய்யாமல் இருப்பது தம்மால் முடியாது என்றார். ஸ்ரீராமகிருஷ்ணரோ அப்படியென்றால் அவரது முழுபொறுப்பையும் தம்மிடம் ஒப்படைத்து விடுமாறு கூறினார். அவரும் சரி தமக்குக் கவலை விட்டது என்று நினைத்து ஒப்புக்கொண்டு விட்டார். பிறகு தன் யதார்த்தமான வாழ்க்கை தொடரும் பொழுது மிகுந்த கஷ்டமாகப் போய்விட்டது. ஏனெனில் தம்முடைய இஷ்டத்திற்கு முன்போல் தாம் நினைத்தவாறு தம்மால் நடக்க முடியாது என்பதை உணர்ந்தார். எதைச் செய்ய நினைத்தாலும் தம் முழு பொறுப்பும் குருதேவரிடம் தந்துவிட்டோம் என்பதை நினைவு கொண்டவராய், தமக்கு என்று தனி எண்ணம், சங்கல்பம் முதலிய சுதந்திரம் தமக்கு இல்லை என்பது அவருக்கு நாளுக்குநாள் உணர்வில் வந்துவிட்டது. மீறித் தாம் தம் சுதந்திரத்திற்குச் செயல் பட்டால் தாம் பொய்மை இல்லாத தன்மை உடையவர் என்ற காரணத்தால் தம்மை நினைத்தே மிகவும் வெட்கமும், கோபமும் கொண்டவராய்த் தம்மைக் கடிந்துகொண்டே திரும்பிவிடும் தன்மையர் ஆனார். முன்னால் குருதேவரைப் பற்றி ஏதோ சில சமயம் மட்டும் நினைத்தவர் இப்பொழுது முழுவதும் தம்மை குருதேவரிடம் ஒப்படைத்துவிட்ட காரணத்தால் தம் முழு வாழ்க்கையும் குருதேவரின் நினைவாகவே உருமாறிவிட்டதை நாளடைவில் உணர்ந்தார். சித்தோபாயம் என்பதைக் கைக்கொண்டவருடைய நிலை எவ்வளவு கடுமையானது என்பதை நாம் இதிலிருந்து உணர முடியும்.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்னும் பாசுரத்தில் நமது வியாக்கியான ஆசிரியர்கள் சாத்யோபாயம், சித்தோபாயம் என்பதற்கிடையில் உள்ள சிறப்பை விளக்குகிறார்கள். சாத்யோபாயம் என்பதே எதன் அடிப்படையில் வருகிறது? ஒரு ஜீவனுக்கு மூன்று தன்மைகள் இருக்கின்றன. அவை ஞானம், கர்மம், இச்சை என்பன. அறிவுடையவன் அறிந்துகொள்ள வேண்டும். அறியவில்லை என்பது எக்ஸ்க்யூஸ் ஆகாது. செயல் உள்ளவன் செயலாற்ற வேண்டும். தன் முன்னேற்றத்திற்குத் தான் தான் உழைக்க வேண்டும். இச்சை என்னும் சக்தி இருப்பதால்தான் அவனுக்குக் கடவுள் நாட்டமே ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு தத்துவ நிலையின் காரணமாகத்தான் ஜபம், தவம், யோகம் என்ற ஆன்ம சாதனைகள் பயிலப்படுகின்றன.
இப்பொழுது சித்தோபாயம் கைக்கொண்டவரைப் பற்றிய பேச்சு வருகிறது? அப்படி என்றால் சித்தோபாய நிஷடர்க்கு ஞானம், கர்மம், இச்சை ஆகியன கிடையாதா? என்பது கேள்வி. உண்டு என்கிறார்கள் ஆசார்யவர்யர்கள். சித்த உபாயத்தில் நிலை நிற்கும் சித்தோபாய நிஷ்டர்களுக்கும் ஞானம் உண்டு. ஆனால் அவர்களின் ஞானம் தங்களுடைய உண்மையான ஸ்வரூபம் என்ன என்பதை விடாமல் உணர்வதில் நிலை நிற்கும். அவர்களுக்கும் கர்மம் உண்டு. அனால் அது கைங்கரியம் என்பதில் புகுந்துவிடும். அவர்களுக்கும் இச்சை என்பது உண்டு. ஆனால் அவர்களுடைய இச்சையோ கடவுள் என்பதை அடைவதற்கான அடங்காத தீவிர வேட்கையாக மாறிவிடும்.
ஸித்தோபாய நிஷடையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிற பாசுரம் ‘நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்’ என்பது வியாக்கியான ஆசிரியர்களின் கருத்து. சரி அப்படியென்றால் எழுப்புகின்றவர்களும் சித்தோபாய நிஷ்டர்கள் தாமே? அவர்கள் ஏன் பதற வேண்டும் இவளை எழுப்புவதற்கு? அதற்குக் காரணம் சொல்லும் பொழுது மேற்கூறியவாறு சித்தோபாய நிஷடர்க்கும் ஞானம், கர்மம், இச்சை ஆகியன உண்டு என்று சொல்கிறார்கள்.
“சித்தோபாய நிஷ்டர்க்கும் கர்ம ஜ்ஞான பக்திகள் உண்டு; இவர்களுடைய கிரியாகலாபம் கைங்கரியத்திலே அந்விதமாயிருக்கும்; ஜ்ஞானம் ஸ்வரூபத்திலே அந்விதம்; பக்தி ப்ராப்ய ருசியிலே அந்விதம்.”
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
ஆன்மிக அர்த்தங்களை இலக்கிய அழகினுள் மறைத்து வைத்த உபநிஷதமாக இருப்பது திருப்பாவை. உரைகள் என்னும் மந்திரக்கடவுச் சொல்லின்றி உள்ளே ஒருவர் புகவரிதான பெருநூல். சுத்தசத்வம் தொட்டாசாரியாரின் ஸ்வாபதேசம் அங்கங்கே காட்டுகின்ற அரும்பொருள் மிகவும் உயர்ந்தது. கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து என்னும் பாடலில் செல்வப் பெண்டாட்டி என்னும் விளி நிருபாதிக பாரதந்த்ரியம் கொண்ட அதிகாரியைச் சொல்கிறது என்னும் பொழுது முழுமையான பாடலும் புதிய கோணத்தில் புலனாகிறது.
ஒன்றைச் சார்ந்து நிலைபெற்றிருத்தல் தந்த்ரம். பிறிதொன்றைச் சார்ந்து நிலைபெறுதல் பரதந்த்ரம். அவ்வாறு பரதந்த்ரம் உடைய தன்மை பாரதந்த்ரியம். தன்னைச் சார்ந்தே ஒன்று நிலைபெறுமானால் அது ஸ்வதந்த்ரம். ஸ்வதந்த்ரம் என்னும் தன்மை ஸ்வாதந்த்ரியம். ஒரு காரணத்தை முன்னிட்டு விளையும் பாரதந்த்ரியம் உபாதியுடன் கூடிய பாரதந்த்ரியம். ஒரு காரணத்தையும் முன்னிடாமல் என்றும் இயல்பாகவே ஒன்று பிறிதொன்றைச் சார்ந்தே நிலைபெறுவதாய் இருந்தால் அந்தத் தன்மையானது நிருபாதிக பாரதந்த்ரியம் எனப்படும். இந்த ஜீவனுக்கு நிலைப்பேறு என்பது அது தன்னையே சார்ந்தோ அல்லது ஒரு காரணத்திற்காகத் தற்காலிகமாகவோ பரம்பொருளின்பால் ஏற்பட்ட சார்பினாலோ ஏற்படுவது அன்று. என்றென்றுமே இந்த ஜீவனின் உண்மையான இயல்பை நன்கு ஆராய்ந்தால் அது பரம்பொருளிடம் என்றைக்குமான இயல்பான பாரதந்த்ரியம் கொண்டதுதான் என்பது புலனாகும். அவ்வாறு ஜீவனின் நித்யமான நிஜ இயல்பைப் பாடலில் வரும் செல்வப் பெண்டாட்டி என்பது உணர்த்துகிறது என்பது சுத்த ஸத்வம் தொட்டாசாரியார் ஸ்வாமியின் அரும்பொருள். அத்தகைய நிருபாதிக பாரதந்த்ரியம் கொண்ட ஓர் அதிகாரியின் (தகுதி பெற்ற ஜீவன்) பக்தி, பரபக்தி, பரமபக்திகளைச் சொல்லுகிற பாசுரம் என்று இந்தப் பாசுரத்தை அடையாளம் காட்டுகிறார் தொட்டாசார் ஸ்வாமி. மேலும் இப்பாட்டில் தன்னுடைய ஸ்வதர்மத்தை வேறு எந்தக் காரணமுமின்றி கைங்கர்யம் என்ற புத்தியினால் மட்டுமே அனுஷ்டிக்கும் ஓர் ஜீவனும் குறிக்கப்படுவதாகக் காட்டுகிறார்.
பன்னிரண்டாம்பாட்டில் குறிக்கப்படும் அதிகாரியோ (தகுதி பெற்ற ஜீவன்) எந்தக் கவலையும் இன்றி பகவத் கைங்கரியமே தமக்கு அனைத்தும் என்று ஒருவர். பகவத் கைங்கரியம் என்ற சிந்தையோடு ஒருவர் ஸ்வதர்மத்தை அனுஷ்டிக்கிறார், பகவத் கைங்கரியமே அனைத்து தர்மமும் என்று ஒருவர் ஈடுபடுகிறார். திருப்பாவை நமக்கு உணர்த்துவது என்ன என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார். ‘அவர்களுடைய அனுஷ்டானமும், இவனுடைய அநனுஷ்டானமும் உபாயமன்று; யாதொன்று உபேயத்தைத் தரவற்று அதிறே உபாயம். விடச்சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்றிறே உபாயம்; விடுவித்துப் பற்றுவித்தவனிறே உபாயம்’ என்பது அவருடைய விளக்கம். இதில் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னவெனில் பகவத் விஷயத்தில் ஈடுபாடு என்பது மிக்குயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நடைமுறை சார்ந்த கவலைகளினால் நாம் ஒருகாலும் பகவத் விஷயத்தில் ஈடுபாடு என்பதை, கடவுளிடம் நாட்டம் என்பதைக் கைவிடலாகாது என்ற முக்கியமான கருத்தை உணர்த்துகிறார்கள். அனுஷ்டானம் நமக்கு நல்ல வழக்கங்களையும், நியமங்கள் நமக்கு நல்ல பண்பாட்டையும் ஏற்படுத்துகின்றன. கடவுளிடம் ஈடுபாடு என்பது பகவத் பக்தி. அந்த பக்தியின் முக்கியத்தை நாம் நன்கு உணர வேண்டும்.
***
No comments:
Post a Comment