Wednesday, January 29, 2020

நம்மாழ்வார் மீது பழம் பாடல்கள்

ஆழ்வார் திருநகரி பெரியன் வெ நா ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரசுரித்தது என்று சொல்லிப் பழம் ஏட்டுச் சுவடியில் கண்டபடி ஒரு பிரபந்தம், மாறன் செந்தமிழ் மாநாடு சிறப்பு மலர்,, ஆழ்வார் திருநகரி, 17-2-68 என்னும் மலரில் அச்சிடப்பட்டிருக்கிறது. மிக இனிய தமிழ். விஷயம் நம்மாழ்வார் மீது பாடப்பட்ட காதல் பிரபந்தம். யார் பாடினார்கள் தெரியவில்லை. ஆரம்பமே களை கட்டுகிறது.

’சீரார் செழுங்கமலத் தேனே திருமகளே!
வாராழித் தெள்ளமுதின் வந்துதித்த மாமகளே !

மண்மகளாய்ப் பின்னை மடமகளாய் வாழ்சனகன்
பெண்மகளாய் வந்து பிறந்தகுலப் பெய்வளையே!

சிட்டர் மகிழ்ந் தேத்தத் திருப்பல்லாண் டோதியநற்
பட்டர்பிரான் பெற்றெடுத்த பைந்தொடியே ! பாமாலை

பாடிக் கொடுத்தவளே! பாரதியே! பைந்தாமம்
சூடிக் கொடுத்தவளே! தூண்டா மணிவிளக்கே !

தென்னரங் கேசற்கும் திருவேங் கடவற்கும்
மன்னற்கும் சோலை மலைவாழ் அழகற்கும்

ஆலவிடப் பாம்பின் அணைமீது கண் துயிலும்
கோல வடபெருங் கோயி லுடையாற்கும்

மாமால் எனும் பேர் வழுவாமலே யளித்த
பூமாதே! வாழ்வில்லி புத்தூர்க்கு நாயகமே !

மானனையார் தங்கள் வயிற்றில் பிறவாமல்
ஆனதுழாய் நீழல் அவதரித்த ஆரமிழ்தே !

பாமகளே ! ஆழ்வார் பதின்மருக்கும் நன்மகளே !
நாமகளே ! உன்னை நயந்து தொழுதேன் அடியேன்.’ ...

என்று ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பிரபந்தம். நம்மாழ்வாரைக் குறிப்பிடும் போது,

’நான்மறையும் செந்தமிழ் நூல் நாலாகவே விரித்துத்
தான் உலகிலே உரைத்துத் தாபித்த தாளாளன்,

நாவலர்கள் தம்பிரான், நாதமுனி தம்பிரான்,
பூவலயம் போற்று பெரும்பூதூரன் தம்பிரான்,

காமாதி வென்ற கருணேசன், கார்மேனி
மாமால் இதயம் மலக்குதிரு நாவுடையான்,

தக்கிலமே என்றுரைத்த தண் தமிழ்நூற் பாடலிலே
அக்கமலம் பாடவல்லான், ஆழ்வார்கள் தம்பிரான்,

வஞ்சப் பரசமய வாதியரை வென்றபிரான்,
செஞ்சொல் தமிழ்தேர் திருவாய்மொழிப் பெருமாள்

தண்ணார் மகிழ்வாசத் தாமம் அணி மார்பன்,
பண்ணார் தமிழ்ச் சீர்ப் பராங்குச மாமுனிவன்,

செங்கயல்கள் தாவும் திருச்சங்கணித் துறைசேர்
பொங்குதிரை வீசும் பொருநைத் துறையுடையான்,

நாதன், சடகோபன், நாவீறு டையபிரான்,
வேதம் தமிழாய் விரித்த கவிராசன்,

அன்னக் கொடியுடையான், அம்போருகா சனத்தான்,
செந்நெல் கழனித் திருவழுதி நாடுடையான்,

பொங்குமறைத் தமிழ்முனிவன், பொதியமலைக் காவலவன்,
கொங்கலர்பூத் தங்கும் குமரித் துறையுடையான்.. ’

என்று முழுதும் ஊற்றெழுந்த செழுந்தமிழின் உவகைப் பெருக்காய்ப் பாய்கிறது முழு பிரபந்தமும். எந்தக் காலம் தெரியவில்லை. யார் எழுதியது தெரியவில்லை. இது போல் மொத்தம் 155 கண்ணிகள். அததனையும் ஆழ்வார் மேல் அருங்காதலில் ஊறும் நறுந்தேன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment