Friday, January 17, 2020

அருளிச்செயல் ரஹஸ்யம்

அருளிச்செயல் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களான திவ்ய ப்ரபந்தம். ரஹஸ்யம் என்பது திருமந்திர, சரமசுலோக, த்வய மந்திரங்கள். ரஹஸ்ய த்ரயம் என்பது இவை மூன்று.

அருளிச்செயலில் ஆழ்வார்களின் பாசுரங்களின் வார்த்தைகள், சொற்கோவைகள், வரிகள் இவற்றைக் கொண்டே யாத்து மூன்று ரஹஸ்யங்களைப் பற்றிய ஒரு நூல் ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்தது. அதற்குப் பெயர் ‘அருளிச்செயல் ரஹஸ்யம்’.

ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் திருப்பாவைக்கு ஆறாயிரப்படி, ஆசார்ய ஹ்ருதயம் போன்ற நூல்களையும் அருளி உபகரித்தவர். ஆசார்ய ஹ்ருதயம் முழுவதுமே அருளிச்செயல், ஆசார்யர்களின் கிரந்தங்கள் ஆகியவற்றிலிருந்து சொற்கள், சொற்கோவைகள் ஆகியன கொண்டு மிடைந்த கிரந்தமாக அருளிச் செய்திருக்கிறார். அதைப் போன்றே மூன்று ரஹஸ்யங்களைப் பற்றியும் விவரித்து இந்த நூலையும் அருளிச்செயல் சந்தைகளைக் கொண்டே அருளிச் செய்திருப்பதால் இதற்குப் பெயர் ‘அருளிச்செயல் ரஹஸ்யம்.’ இதைக் கற்போர் ஒரே சமயத்தில் திவ்ய ப்ரபந்த சந்தைகளையும் நினைவில் கொள்ளவும், அந்த அருளிச்செயல் சொற்கள், சொற்கோவைகள் ரீதியாகவே ரஹஸ்யங்கள் மூன்றின் அர்த்தங்களையும் கற்கவும் மிகவும் வாய்ப்பாக இந்த நூலை அமைத்துள்ளார்.

இதற்கு ஏற்றாற்போல் ஓர் உரை. பூர்வாசாரியர்களின் வியாக்கியான சொற்றொடர்கள் கொண்டே மூல நூலின் கருத்துகளை விளக்கு முகத்தான் அமைத்து மிகவும் அழகாக இந்த உரையை எழுதியிருப்பவர் ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாசார்யார் ஸ்வாமி. இந்த உரையில் வரிகளையும், சொற்றொடர்களையும் எந்த எந்த பூர்வாசாரிய கிரந்தங்களிலிருந்து, எந்த இடங்களிலிருந்து எடுத்துக் கோக்கப் பட்டன என்பதற்கான விவரப்பட்டியும் தந்து ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமி செய்திருக்கும் கிருபை அபாரம். இந்த நூலை 1972ல் ஸ்ரீ உ வே ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள் ஸ்ரீநிவாஸம் பிரஸ், திருச்சியில் வெளியிட்டிருக்கிறார். அன்றைய விலை இரண்டரை ரூபாய். எத்தனை உயரிய நூல், தமிழ் தத்துவ உலகிற்கு எத்தகைய பெருங்கொடை, அதற்கு உரை எழுதிய மாண்பு, எல்லாம் சேர்த்து அனைவரும் வாங்க வேண்டி விலை கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்க வேண்டும்படியான மலிவு.

ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் நூலைத் தொடங்கும் விதமே அலாதி:

“ஒரு கடல்துறையிலே படுகிற முத்து மாணிக்கங்களிலே சில ஒளியை உடையவாய், சில கொத்தை பற்றி அவற்றிலே சிலவற்றைக் கடைந்து சேர்த்தவாறே நல்லவற்றோடே ஒரு கோவையாமாபோலே பெரும்புறக்கடலான நாராயணனுடைய ஸங்கல்பத்தாலே ஸத்தையைப் பெறுகிற ஆத்மாக்களிலே சிலர் ‘துலங்கொளிசேர் தோற்றத்து நல்லமரர்’ என்னும்படி நித்யராய், சிலர் வன்சேற்றள்ளலிலே அழுந்தியழுக்கேறி ஆப்புண்டு ப3த்3த4ராய் அவர்களிலே சிலர் மலமறக்கழுவி மாசறுக்கப்பட்டு ஒளிக்கொண்ட சோதியோடே வானத்தணியமரராக்குவிக்க வானவர்க்கு நற்கோவையாம்படி முக்தராகக் கடவர்கள். நற்சரக்குக்கு ஒளியுனுடைய மிகுதி குறைவாலுள்ள
பெருமை சிறுமை ஒண்பொருளான ஆத்மாவுக்கும் இந்த ஞானத்தினுடைய ஏற்றச்சுருக்கத்தாலே உண்டாகக் கடவது.”

இந்தப் பகுதியிலேயே எவ்வளவு அருளிச்செயல் சொற்றொடர்கள் வருகின்றன என்று பார்ப்போம்.

1) பெரும்புறக்கடல் - பெரிய திருமொழி
2) துலங்கொளிசேர் தோற்றத்து நல்லமரர் - இரண்டாம் திருவந்தாதி
3) வன்சேற்றள்ளலிலே - திருவிருத்தம்
4) ஆப்புண்டு - திருவிருத்தம்
5) மலமறக்கழுவி - திருவாய்மொழி
6) ஒளிக்கொண்ட சோதியோடே - திருவாய்மொழி
7) வானத்தணியமரராக்குவிக்க - இரண்டாம் திருவந்தாதி
8) வானவர்க்கு நற்கோவையாம்படி - திருவாய்மொழி
9) ஒண்பொருளான - திருவாய்மொழி

இரண்டு வாக்கியங்கள் கொண்ட ஒரு சின்ன பாரா. அதில் இவ்வளவு அருளிச்செயல் சொற்றொடர்களே ஆன வாக்கிய அமைப்பு. இந்த மேற்கோள்கள் எங்கு வருகின்றனவோ அந்த அருளிச்செயல் இடங்களுக்கு அருளப்பட்ட உரை விசேஷங்களைப் பொருத்தம் நோக்கித் தொகுத்துப் பார்த்தால் அஃது ஒரு விதத்தில் அர்த்த விசேஷமாக இருக்கும்.

(இப்படி ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தொகுத்தருளிய பாசுரப்படி ராமாயணத்தின் சுந்தரகாண்டப் பகுதிக்கு மட்டும் வியாக்கியானங்களின் சொற்றொடர்களைத் தொகுத்து வியாக்கியானப்படி, சுந்தரகாண்டம் என்று ஒரு முறை செய்தேன். அதை ஒரு கோவில் (நவநீத கிருஷ்ணன் கோவில் என்று நினைக்கிறேன்) மலரில் போட்டார்கள். இரண்டு காப்பி கொடுத்தார்கள். இரண்டுமே இல்லை கையில். எப்பொழுது கிடைக்குமோ அறியேன்.)

நம் முன்னோர்கள் நமக்கு அருளியவைதாம் என்ன என்ன நூல்கள்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment