Friday, January 24, 2020

காலம் தேசம் வர்த்தமானம்

ஹிந்து மதம் கூறுவதோ மிகவும் அறிவார்ந்த சமுதாய பரஸ்பர பரிமாற்றம். முதலில் உன் சுயம் என்ன என்று உணர். பின் அந்தச் சுயத்திற்கு என்ன நன்மை என்று சிந்தித்துத் தேர். அதற்குப் பின் நீயே உணர்வாய் உன் சுய நலம் பொது தர்மத்திற்கு முரணாகப் போகாமல் இருப்பதை. எனவேதான் ஹிந்து மதம் பொருள் ஈட்டுதல், இன்பம் துய்த்தல் என்ற இரண்டையும் சதுர்வித புருஷார்த்தங்களில் சேர்த்ததோடு அன்றி, இவை இரண்டையும் அறம் என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வைத்தது. ஆக உலக அணுகுமுறைகளிலேயே பல துறைகளிலும் paradigm shift என்னும் கருதுகோள் வாய்ப்பாடுகளிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்லன ஹிந்து மதத்தின் சாரமான கருத்துகள். காரணம் ஹிந்து மதம் உலகம் என்பதையே மிகவும் வித்யாசமான கோணத்தில் பார்க்கிறது. அந்தக் கோணத்திற்கு இனி எதிர்காலத்தில்தான் உலகின் அறிவார்ந்த சமுதாயம் வந்து சேரப் போகிறது. அத்தகைய ஆழமானதும், அகலமானதும், பன்முகக் கோணங்கள் கொண்டதும், இயற்கையின் நுட்பங்களுக்கு முற்றிலும் ஒவ்வியதுமான உலகப் பார்வை ஹிந்து மதம் காட்டும் உலகப் பார்வை. அந்தப் பார்வையில் உள்குருத்தான கருத்துகளாய் இருப்பவற்றில் ஒன்றுதான் காலம் என்ற கருத்து. ஹிந்து மதத்தில் காலம் என்பதற்கு வந்து சேர்ந்திருக்கும் நுட்பம் மிகவும் வியக்கத்தக்கது.

புராணங்களிலேயே மிகப் பழமையானதாக நம் ஆசார்யவர்யர்களால் கொண்டாடப் பட்டதும், ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் தம் சாரீரக மீமாஸா பாஷ்யத்தில் எடுத்தாண்டதுமான புராணம் ஸ்ரீ விஷ்ணு புராணம். அந்த ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் படி காலம் என்ற கருத்து - கண் இமைக்கும் நேரம் கொண்டது நிமிஷம். நிமிஷம் என்ற பெயரே அதிலிருந்துதான் வந்தது. (நிமி - இமை) அப்படிப் பதினைந்து நிமிஷங்கள் கொண்டது ஒரு 'காஷ்டை'. முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு 'கலை'. (art என்பதற்குச் சொல்லும் கலை வேறு இந்தக் கலை வேறு). முப்பது கலைகள் கொண்டது ஒரு 'முஹூர்த்தம்'. முப்பது முஹூர்த்தங்கள் கொண்டது ஓர் 'இராப்பகல்'. அதாவது இரவும் பகலும் சேர்ந்து ஒரு நாள். பதினைந்து நாள் கொண்டது ஒரு 'பக்ஷம்'. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் என்று பக்ஷங்கள் இரண்டு வகை. இரண்டு பக்ஷங்கள் கொண்டது ஒரு 'மாதம்'. ஆறு மாதங்கள் ஒரு 'அயநம்'. உத்தராயணம், தக்ஷிணாயனம் என்று அயநங்கள் இரண்டு வகை. இரண்டு அயநங்கள் கொண்டது ஒரு 'வருஷம்'. இது வரையில் மனுஷ்யமானம் என்னும் மானிடக் கால அளவு.

இதில் தக்ஷிணாயனம் என்று ஓர் அயநம் சொன்னோமே, அதாவது ஆறுமாதம், அந்த தக்ஷிணாயநம் என்பது தேவர்களின் கணக்கில் ஓர் இரவு. அதேபோல் தேவர்களுக்கு உத்தராயணம் என்பது பகல். இப்பொழுது ஓர் உத்தராயணமும், ஒரு தக்ஷிணாயனமும் சேர்ந்து தேவர்களுக்கு என்ன ஆகிறது? அவர்கள் கணக்கில் ஒரு நாள். அவர்கள் கணக்கில் ஒரு நாளாக இருப்பது மனிதக் கணக்கில் ஒரு வருஷம். அப்படியென்றால் தேவக் கணக்கில் ஒரு வருஷம் என்பது எவ்வளவு? மனிதக் கணக்கில் 365 வருஷங்கள் கொண்டது தேவக் கணக்கில் ஒரு வருஷம். இம்மாதிரி தேவ வருஷங்கள் 12000 கொண்டது ஒரு சதுர் யுகம். அதாவது ஒரு சதுர் யுகம் என்றால் அதில் ஒரு கிருத யுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலி யுகம் ஆகிய நான்கு யுகங்கள் கொண்டது சதுர் யுகம்.

இதில் கிருத யுகம் என்பதன் கால அளவு 4000 தேவ வருஷங்கள்.

த்ரேதா யுகம் -- 3000 தேவ வருஷங்கள்.

த்வாபர யுகம் -- 2000 தேவ வருஷங்கள்.

கலி யுகம் -- 1000 தேவ வருஷங்கள்.

ஆக ஒரு சதுர் யுகம் என்பதற்கு 12000 தேவ வருஷங்கள் என்றால், நான்கு யுகங்களின் கால அளவைகளைக் கூட்டினால் 10000 தேவ வருஷங்கள்தாம் வருகிறது. மீதம் இரண்டாயிரம் தேவ வருஷங்கள் என்ன ஆயிற்று?

ஒரு யுகம் மாறி அடுத்த யுகம் ஆரம்பிக்கும் இடைவெளிக்கு யுக சந்த்யை என்று பெயர். யுக சந்த்யையில், போகின்ற யுகத்தின் இயல்புகளும் இருக்கும், வருகின்ற யுகத்தின் இயல்பும் இருக்கும். அப்படி இருக்கும் நிலைக்குப் பெயர் யுக சந்தயை. யுக சந்திப்பு. ஆக கிருத த்ரேதா யுக சந்த்யை, த்ரேதா த்வாபர யுக சந்த்யை, த்வாபர கலி யுக சந்த்யை ஆகிய யுக சந்த்யா காலங்கள், சந்த்யா அம்ச காலங்கள் ஆகியவற்றின் கால அளவுகள் சேர்ந்தால் 2000 தேவ வருஷம். ஆக ஒரு சதுர் யுகம் என்பது 12000 தேவ வருஷம். அதாவது மனித மானத்தால் 12000 x 365 மனித வருஷங்கள். இதில் சந்த்யை, சந்த்யாம்சம் என்றால் என்ன? யுக சந்தயையின் முற்பகுதி சந்த்யை, பிற்பகுதி சந்த்யாம்சம். இப்படிப்பட்ட 1000 சதுர் யுகங்கள் பிரஹ்மாவிற்கு ஒரு பகல். பிரஹ்மாவின் இந்த ஒரு பகல் நேரத்திற்குள் பதினான்கு மனுக்களுக்கு அதிகாரம் ஏற்படுகிறது மாறி மாறி. இதே காலத்தில்தான் ஸப்த ரிஷிக்கள், தேவர்கள், இந்திரன், மனு, அவர்களின் புத்திரர்கள் ஆகிய யாவரும் அதிகாரம் பெற்றுப் பெற்று இழக்கின்றனர். இவர்களுடைய ஆயுட்காலம், அதிகார காலம் என்பது எல்லாம் மொத்தம் 71 சதுர் யுகங்களும் இன்னும் கொஞ்சம் கூடவும். அவ்வளவுதான். அதாவது பிரஹ்மாவின் பகல் காலத்தை, அதாவது ஆயிரம் சதுர் யுகங்களைப் பதினான்கு பாகங்களாகக் கணக்கிட்டால் ஒவ்வொரு பாகத்திற்கும் 71 சொச்சம் சதுர் யுகம் கணக்கு வருகிறது. அதுதான் ஒவ்வொரு மனுவின் ஆயுட்காலமான 'மந்வந்தரம்' எனப்படும். இவ்வாறு இரண்டாயிரம் சதுர்யுகங்கள் கொண்டது பிரஹ்மாவின் ஒரு நாள்.

பிரஹ்மா பகல் பொழுதில் படைக்கிறார். பகல் முடிந்து இரவு வந்ததும் பிரஹ்மா நித்திரை கொள்வதால் ஒரு 'பிரளயம்' வருகிறது. இது கடைசிப் பிரளயம் அன்று. பிரஹ்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும் வரும் சிறு பிரளயமான நைமித்திக பிரளயம்' என்பது. இந்தப் பிரளயத்தில் பூ லோகம், புவர் லோகம், ஸுவர் லோகம் ஆகிய மூன்றே அழிவு பெறுகிறது. மஹர் முதலிய மேல் வரிசை லோகங்கள் அழிவதில்லை. இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் பிரஹ்மாவின் நித்திரை. இரவு முடிந்து மீண்டும் பிரஹ்மாவின் பகல் ஆரம்பம். இப்படிப் பகல் இரவு சேர்ந்து 2000 சதுர் யுகங்கள் கொண்ட பிரஹ்மாவின் ஒரு நாள். இப்படி 365 நாள் பிரஹ்மாவின் ஒரு வருஷம்.
இப்படி பிரஹ்மாவின் கணக்கில் 100 வருஷங்கள் பிரஹ்மாவின் ஆயுசு. பிரஹ்மாவின் ஆயுட்காலமான இதற்கு 'பரம்' என்று பெயர். இதில் பாதிக்குப் பெயர் 'பரார்த்தம்'. இப்பொழுது பிரஹ்மாவின் இரண்டாவது பாதியாகிய த்விதீய பரார்த்தம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

நான்கு யுகங்கள் சேர்ந்து சதுர்யுகம். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம். இந்த நான்கு யுகங்கள் மாறி மாறிச் சுழன்று கொண்டேயிருக்கும். நல்ல நிலை எப்படி சீர் குலைந்து மோசமான நிலைக்குப் போகிறதோ அதைப் போலவே சீர் கெட்ட நிலை திருந்தி மீண்டும் நல்ல நிலைக்கு வரும் என்பது ஹிந்துமத சாத்திரம் சொல்வது. எனவே ஹிந்துவின் காலம் பற்றிய ப்ரக்ஞை தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு உயிரினங்களுக்கும் கால அளவை மாறுபடும் என்றும், நமது அளவுகோலின் படி காலம் முடிந்து விடவில்லை என்றும், காலமே ஒரு மிகப் பொறுமையான ஆசிரியர் போன்று உயிர்களைப் பயிற்றுவிக்கும் உவாத்தி என்றும் நினைப்பது ஹிந்துமதம்.

காலத்திற்கு அதீதமான ஆத்மாவே ஜீவனாகிய தான் என்ற நிச்சயம் ஹிந்து மதத்தில் அடிப்படை. எனவே காலமே, தான் என்ற ஆத்மாவின் அகமெய்மைக்கு அதீனமான தத்துவம் என்ற எண்ணமும், காலத்தின் வேலை அசித்தில் பரிணாமமும், ஜீவனில் பரிபக்குவமும் ஏற்படுத்துவதுதான் என்று உணர்ந்த நிதானமும் ஹிந்து மதத்தின் அணுகுமுறையின் த்வனியை நிர்ணயிக்கின்றன. நேற்று தோன்றி நாளை மறையும் நிலையில்லாப் பொருள் இல்லை ஜீவன் என்பது ஹிந்து மதத்தின் பால பாடம். ’காலேந ஆத்மனி விந்ததி’ -- காலக்கிரமத்தில் தனக்குள்ளேயே ஏற்படும் என்ற எண்ணம் ஹிந்துவிடம் உண்டு. காலம் பின்னாலும் இல்லை, முன்னாலும் இல்லை. சுற்றி எங்கும் சுழலாய் இருக்கிறது என்று நினைப்பது ஹிந்துவின் மனநிலை. சக்கரம் என்பது ஹிந்து மதத்தினுள் பயன் படுவது போல் மற்ற பண்பாடுகளில் பயன் கொள்ளப் படுகிறதா கருத்தாக்கத்தில் என்பது சந்தேகமே. காலம் என்பது ஒரு சக்கரம். காலத்திற்கும் நிகழ்வுகளுக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நிகழ்வுகள் நடந்த பின்னர் அவற்றின் இடைவெளிகளை நிரல் படுத்துங்கால் காலம் வெளிப்படுகிறது. இந்த நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற கிரமம் நியதியாகிக் காலத்துடன் ஒத்துழைக்கின்றது. காலமும், நியதியும் கர்மச் சுழல்களை ஜீவனின் அனுபவத்திற்குச் சித்தப்படுத்திக் கொணர்கின்றன.

தேசம் என்பதிலும் மிகத் தெளிந்த சிந்தை ஹிந்துவினுடையது. ஜீவனைப் போகி என்று கூறுகிறது ஹிந்து மதம். அவனுக்கு உரிய போக ஸ்தானம், போக உபகரணம் ஆகியவற்றைப் பேசுகிறது. போக ஸ்தானங்களாகப் புவனங்களைப் பற்றியும் பேசுகிறது. அணடங்களின் அளவைகள் அதாவது தேசத்தின் அளவை பற்றிய கருத்து ஸ்ரீமாதவ சிவஞான யோகிகளின் தொகுத்துரையின் படி --

சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றுக் கதிரில் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணுவெனப்படும். அதனுடைய எண்மடங்கு -- திரிசரேணு. திரிசரேணுவின் எண்மடங்கு கசாக்கிரம். கசாக்கிரம் X 8 = இலீக்கை.
இலீக்கை X 8 = யூகை. யூகை X 8 = இயவை நெல்லு.
யவை நெல்லகலம் X 8 = ஓர் அங்குலம். அங்குலம் 24 = முழம்; 4முழம் = வில்லு; 2வில்லு = தண்டம்; 2000 தண்டம் = 1 குரோசம்; 4குரோசம் = 1 யோசனை. புடவித் தத்துவமாகிய அண்டம் 100 கோடியோசனை ஆழ கலங்களை உடையது. இத்தகைய அண்டங்கள் ஆயிரம் கோடி உள்ளன.
இத்தகைய அளவைகளுக்கு உட்பட்ட கால தேசங்களிடையேதான் தன்னுடைய போக்கு வரத்துகள் செயல்கள் ஆகிய யாவும் நடை பெறுவதாக ஹிந்து கருதுகிறான். கால தேச வர்த்தமானங்களில் சிக்காத ஜீவன் தன்னைக் கால தேச வர்த்தமானங்களின் வசப்பட்டதுவாய் நினைத்து மயங்குவதை உணர்ந்து தெளிவதுவே உலக விளையாட்டின் பயன் என்பது ஹிந்து மதம் நன்கு பயிற்றிவைக்கும் பாடம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment