உலகில் பிறக்கும்போது இந்த உயிரை உலகியல் மயக்கம் என்னும் வாயு வந்து தீண்டும் என்பார்கள். அந்த வாயுவுக்கு ‘சடம்’ என்று பெயர். அந்தத் தீண்டலுக்கு ஆட்பட்ட ஜீவன் தன் இயல்பை முற்றிலும் மறந்து, வந்த நோக்கம், செல்ல வேண்டிய இலக்கு, செய்ய வேண்டிய பணி என்று அனைத்தையும் மறந்து தன்னை முற்றிலும் இவ்வுலகத்தின் பகுதியாக நம்பத் தொடங்கிவிடும் என்பது இந்தச் சடத்தின் கொடுமை என்பர். ஏதோ மிகச்சில உயிர்களே கருவிலே திருவும், உருவுகொள் பொருளும் துலங்க வருகின்றன. அந்த உயிர்களும் பிறந்து, வளர்ந்து ஒரு காலக் கட்டத்தில்தான் தம் உயர் உணர்வு மீட்டப் பெற்று உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகின்றன. ஆனால் உருவான நாள் முதலாய், தன்னில் உணர்வு என்று எழுந்த நாள் முதலாய்ச் சடத்தைக் கோபித்துச் சதா சர்வ காலமும் ஸ்ரீமந் நாராயணன் நினைவில் மூழ்கி இருந்த சேய், ‘நம்மாழ்வார்’ என்று ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் அன்போடும் ஆதுரத்தோடும் அழைத்த அந்த அதிசயக் குழந்தை சடகோபன்.
இற்றைக்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னர் பிள்ளை லோகார்ய ஜீயர் என்னும் முனிவரர் தாம் இயற்றிய உபதேசரத்தினமாலை உரையின்கண் ஒரு பாயிரச் செய்யுளின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார். அந்த வரிகள் வருகின்ற முழுச்செய்யுள் -
நஞ்சடகோபனைப் பாடினையோ என்று நம்பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்துரைத்த
செஞ்சொலந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே.
என்பதாகும். இஃது சடகோபரந்தாதியின் சிறப்புப் பாயிரங்களுள் ஒன்றாகத் திகழ்வது. ஆக பிள்ளை லோகார்ய ஜீயர் காலத்திலேயே நம்பெருமாள் விஞ்சிய ஆதரத்தால் அருளப்பாடாய் அழைத்தது, அதனால் கம்பர் சடகோபரந்தாதி பாடியது என்ற செய்திகள் பிரபலமாக இருந்தவை என்பது நாம் அறியவரும் செய்தியாகும். அதுமட்டுமின்றி நம்பெருமாள் ‘நம்மாழ்வார்’, ‘நம் சடகோபன்’ என்ற திருநாமங்களிட்டு உகந்தார் என்பதும் விளங்குகிறது. அது மட்டுமின்றி, நம்பெருமாள் சந்நிதியில் அருள் ஆணையாக எழுந்ததும் கம்பர் விரைந்து ஆசுகவியாக இயற்றியது ‘சடகோபரந்தாதி’ என்பதும் இன்று நேற்றைய செய்தியாக இல்லாமல் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தியே ஆன்றோர் மருங்கில் பிரபலமாக அறியப்பட்டப் பண்டைய வரலாறாய் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு பிரபந்தத்துக்கும் ஒவ்வொரு கர்த்தா, ச்ரோதா என்று ஆக்கியோன், விரும்பிக் கேட்கும் ரசிகன் என்று இருப்பார்கள். கீதைக்கு என்றால் பகவான் தானே வக்தா. அர்ச்சுனன் ச்ரோதா. அதன் பயனை அநுபவித்தோர் நன்மதியாளர்களான சுதீக்கள். கீதையின் மூல மூர்த்தமோ உபநிஷதங்கள். சடகோபரந்தாதிக்கோ கேட்டவன் நாதன் அரங்கன், சொன்னவனோ நற்கம்பன் என்று இருந்தாலும் அந்த நூற்றந்தாதியை மனத்தில் வாங்கி அதன் உட்பொருளை புந்தியில் ஓர்ந்து நெஞ்சிலே இருத்த வேண்டும் என்னில், அது ஒருவருடைய அருள் இருந்தால் மட்டுமே ஆகும். அது யாருடைய அருள்? அந்த மெய்ப்பொருளின் அருள். எந்த மெய்ப்பொருளின் அருள்? ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் அவன் புகழல்லால் பிறிதில்லை என்னும்படியான அந்த மெய்ப்பொருளை எந்த வேதம் அறியவொண்ணாதது என்று வாக்கோடு மனமும், அவற்றோடு தானும் பிற்காலித்ததோ அந்த ஓதரிய வேதத்தைத் தமிழில் செய்தது ஒரு மெய்ப்பொருள். அதுவும் அந்த மெய்ப்பொருளின் அம்சமே. ஓதரிய வேதம் தமிழ் செய்த மெய்ப்பொருளான நம்மாழ்வாரின் அருள் வேண்டும். எதற்கு?
நாதன் அரங்கன் நயந்து ‘உரை’ என்ன, நற்கம்பன் அந்த நம்மாழ்வாரின் பாதம் பரவித் தொழுது மிக்க பரிவுடன் பைந்தமிழ் நூறும் விரைந்து உரைத்த சடகோபரந்தாதியை ஓதி உணர்வதற்கு. எனவே வேதம் தமிழ் செய்த அந்த மெய்ப்பொருளினிடமே நாம் விண்ணப்பிக்க வேண்டும் நற்கம்பனின் சடகோபரந்தாதியைக் கற்பதற்கு. நம்மாழ்வாரிடம் விண்ணப்பித்தல் என்பது என்ன? அவருடைய திருவாய்மொழியை நானறக் கலந்து தோய்ந்து உணர்தல். அந்த உணர்வில் நிலை நின்று அதன் மயமாய் வாழ்தல். கிருஷ்ண த்வைபாயனரிடம் ஆவேசித்து அந்த மெய்ப்பொருள் வேதங்களை வியாசம் செய்தது. கிருஷ்ணத்ருஷ்ணா தத்துவத்தில் (நம்மாழ்வார்) அம்சமாகி அந்த மெய்ப்பொருளே வேதம் தமிழ் செய்தது.
’ஓதரிய வேதம் தமிழ் செய்த மெய்ப்பொருள்’ பரம்பொருளைத் தமிழ்பின் சென்ற பெருமாளாக ஆக்கியது. அந்த மெய்ப்பொருளைப் பாதம் பணிந்து பரவி நம்முடைய விண்ணப்பம் என்னவென்றால் நற்கம்பன் அளித்த பைந்தமிழ் நூறும் பரிவுடனே ஓதும்படியான உள்ளம். அவ்வாறு ஓதவே, நற்கம்பன் அரங்கன் ஏவ ஆசுகவியாய் உரைத்த சடகோபரந்தாதி நம்மை வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் கற்றவர் ஆக்கி நிலைபெறுத்தட்டும்.
’நாதன் அரங்கன் நயந்துரையென்ன நற்கம்பன் உன்றன்
பாதம் பரவிய பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும்படி யெனக்குஉள்ளந் தனை அருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப்பொருளே இதென் விண்ணப்பமே’.
(சிறப்புப் பாயிரம்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment