Saturday, January 25, 2020

தண்டியலங்காரம்

ஆசார்ய தண்டி என்பதை எங்கோ சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் படித்த நினைவு சிலருக்கு வரலாம். அலங்கார சாத்திரத்தில் தண்டி இயற்றிய நூல் மிகவும் பிரசித்தியானது மத்தியகால பாரதத்தில். காவ்யாதர்சம் - என்பது அந்நூலின் பெயர். காவ்யாதர்சத்தில் மூன்று பகுதிகள் உண்டு. காவ்யமார்க்க விபாகம், அர்த்தாலங்காரவிபாகம், சப்தாலங்காரதோஷ விபாகம் என்று மூன்று. நமது தமிழ் தண்டியலங்கார நூலிலும் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பகுதிகள்.

ஒரு சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறுகிறது -

'வடதிசை யிருந்து தென்மலைக் கேகி
மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை
இருந்தவன் தன்பால் அருந்தமிழ் உணர்ந்த
பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த
தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்
அணிபெறு மிலக்கணம் அரிதினில் தெரிந்து
வடநூல் வழிமுறை மரபினின் வழா அது
ஈரிரன் டெல்லையின் இகவா மும்மைப்
பாரத விலக்கணம் பண்புறத் தமீஇத்
திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத்து
அரும்பொருள் யாப்பி னமைவுற வகுத்தனன்
ஆடக மன்றத்து நாடக நவிற்றும்
வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன்
பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு
வம்பவிழ் தெரியல் அம்பி காபதி
மேவருந் தவத்தினிற் பயந்த
தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே.'

இந்த தண்டியலங்காரம் மூலமும் பழைய உரையும் ஸ்ரீவைமுகோ குறிப்புரைகளுடன் குவை பப்ளிகேஷன்ஸ் இரண்டாம் பதிப்பு 1976ல் போட்டார்கள்.

அலங்காரம் அலங்காரம் என்றால் என்ன? அலம் + காரம்; அதாவது அலம் - பொருத்தமாக கிருதம் - செய்தது. எதற்குப் பொருத்தமாக எதைச் செய்தது?
சொல்ல வந்த கருத்துக்குப் பொருத்தமாக மொழியைச் செய்தது. அதாவது சொல்ல வந்த கருத்து, பாவம், உணர்ச்சி, நோக்கு என்று அனைத்தும் கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் உள்ளத்தில் தோன்றும் படியாகச் சொல்ல எழுத வேண்டுமென்றால் அங்குதான் அலங்காரம் என்பது வருகிறது. அலங்காரம் என்று ஆபரணத்திற்கும் பெயர். ஏன்? நாம் நம்மைப் பற்றி வெளிப்படுத்த விழையும் அழகைப் பொருத்தமாகத் திருத்தி வெளியிடுவதால் அதற்கு அலங்காரம் என்று பெயர். அதை அப்படியே தமிழில் அணி என்று ஆக்கிவைத்து அணியியல் என்று அலங்கார சாத்திரத்தைக் கூறுவர். முகவுரை எழுதும் ஸ்ரீ வை மு சடகோபராமாநுஜாசாரியார் கூறுகிறார் -

“இவ்விலக்கணம் வடமொழியில், தர்க்கம், வியாகரணம், வேதாந்தம் முதலிய சாஸ்திரங்கள் போலவே, பல நூல்களாற் பலவேறுவகையாக விவரிக்கப்பட்டுக் கடல்போலப் பரப்புடைத்தாய் இருக்கின்றது. அந்நூல்களாவன - பாமஹசூத்ரம், வாமநசூத்ரம், காவ்யாதர்சம், ஸரஸவதீகண்டாபரணம், ச்ருங்காரதிலகம், காவ்யபிரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸதரங்கிணி, ரஸமஞ்சரி, த்வந்யாலோகம், ஸாஹித்யசிந்தாமணி, ஸாஹித்யசூடாமணி, ஸாஹித்யதர்ப்பணம், சமத்கார சந்திரிகை, ப்ரதாப ருத்ரீயம், ஸாஹித்யரத்நாகரம், சந்த்ராலோகம், சந்த்ராலோகத்தின் வ்யாக்யானமான குவலயாநந்தம், சித்ர மீமாம்சை, அலங்கார கௌஸ்துபம், ரஸகங்காதரம், ஏகாவளி, காவ்யதர்ப்பணம் முதலானவையும் அவற்றின் உரைகளுமாம்.”

பொதுவியலும், பொருளணியியலும் ஸ்ரீ வை மு கோ அவர்களது குறிப்புரையுடனும், சொல்லணியியல் அவரது மாணாக்கர் வித்வான் சி ஜகந்நாதாசாரியார் அவர்களது குறிப்புரையுடனும் (1962) சேர்த்து அச்சிட்டிருக்கிறார்கள். பொதுவாக அணியியல் என்னும் அலங்கார சாத்திரத்தில் செய்யுள் நெறி என்பது பற்றிப் பேசுவார்கள். அதாவது வடமொழ்யில் ’ரீதி’ என்று பெயர். செய்யுள் நெறி அல்லது ரீதியில் இரண்டு வகை உண்டு. வைதர்ப்ப நெறி, கௌட நெறி. எளிமை முக்கியம் என்று கூறும் வைதர்ப்பம் அதாவது விதர்ப்ப நாட்டு பந்தா. மறைமுகம்தான் காவியத்தின் அழகு என்னும் கௌட நெறி. ஒவ்வொரு ரீதியும் உள்ளடக்கமாக குணங்கள் பத்தினைப் பேசும். இவ்வாறு பத்து குணங்கள் இயலும் செய்யுள் நெறி இரண்டினில் ஒன்றைத் தேர்ந்து அதில் பனுவல் யாத்தல் புலவரது மரபு. அவ்வாறு யாக்கும் பொழுது பல அணிகளைப் பயன்படுத்துவர். தண்டியலங்காரம் 35 அணிகளைப் பேசுகிறது. மாறனலங்காரத்தில் 64 அணிகள் பேசப்பட்டுள்ளன.

தண்டியலங்காரம் - மூலமும் பழைய உரையும், வை மு கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றிய குறிப்புரையுடன். குவை பப்ளிகேஷன்ஸ், இரண்டாம் பதிப்பு, 1976.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment