நகைச்சுவை இல்லாதவர் மனிதர் அன்று என்பதைவிட, நகைச்சுவையை ரசிக்காதவர் யார் என்று தெரியவில்லை என்று சொல்லலாம். அன்றாட வாழ்வின் அவசரத்திலும் சரி, ஆன்மிக வாழ்வின் உச்சத்திலும் சரி, நகைச்சுவை எங்குதான் இல்லை? கேசவ சந்திர சேன் என்னும் ப்ரம்ம சமாஜத்துத் தலைவரைப் பார்க்கப் போகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். தம் தோட்ட வீட்டில் இருக்கும் கேசவ், நண்பர்களுடன் இனிமையாகப் பொழுது போக்கிவிட்டு, குளத்தில் குளிப்பதற்காக இறங்குகிறார். ஒரு கால் தண்ணீரில். ஒரு கால் தரையில். அப்பொழுது உள்ளே நுழைந்த ஸ்ரீராமகிருஷ்ணர் சட்டென்று,
“ஆஹா! கேசவர்க்கு வால் விழுந்து விட்டது !” என்று கூறவும்,
அங்கிருந்தோரெல்லாம் ‘கொல்’ என்று சிரிப்பு. கேசவ் அனைவரையும் அமைதிப் படுத்திவிட்டு, ‘சிரிக்காதீர்கள். தாகுர் சொல்வதில் ஏதாவது பொருள் இருக்கும் கேட்போம்’ என்கிறார்.
பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் அதை விளக்கிச் சொல்லும் போது, ‘தவளையானது வால் விழும் வரையில் அதனால் தண்ணீரில் மட்டுமே இருக்க முடியும். வால் விழுந்துவிட்டால் அதனால் தரை, தண்ணீர் இரண்டிலும் வசிக்க முடியும். அது போல் மனிதனுக்கு அகங்காரமாகிய வால் இருக்கும் வரையில் அவனால் உலகிலேயேதான் உழல முடியும். அந்த அகங்காரமாகிய வால் விழுந்துவிட்டால் பின்னர் மனிதன் உலகம், ஆன்மிகம் இரண்டிலும் சிறக்க முடியும். அகங்காரம் இல்லாத காரணத்தால் உலகம் அவனைப் பந்தப் படுத்தாது. அகங்காரம் இல்லாததால் அவன் ஆன்மிகத்திற்குத் தகுதி வாய்ந்தவன் ஆகிவிடுகிறான். கேசவர்க்கு அகங்காரமாகிய வால் விழுந்து விட்டது. எனவே அவர் உலகம், ஆன்மிகம் இரண்டிலும் சிறக்க முடிகிறது’ என்று விளக்கியதும் அனைவரும் மகிழ்ந்து வியந்தனர்.
இருந்தாலும் அந்த முதன் முன்னம் வந்த நகைச்சுவை, எதேச்சையாக, திடீரென்று தோன்றிய அந்தச் சிரிப்பு -- அதற்கு விலை ஏது? எது அத்தகைய தன்னை மறந்த நகைச்சுவையை ஏற்படுத்துகிறது? மனிதனின் உளவியலில் அதற்கான ஊற்றுக்கால் எங்கே இருக்கிறது? மனிதன் சிரிக்கும் பொழுது ஏதோ ஒரு வெற்றியை அடைந்து விடுகிறான். அது என்ன? சிரிப்பு அனைத்து மனித குலத்துடன் மனிதனைக் கலந்துவிடுகிறது அது எப்படி? எனக்கு இந்தக் கேள்விகள் கூர்மைப் படுவது Comedy King Norman Wisdom அவர்களின் அற்புதமான நடிப்பையும், நகைச்சுவைக் கோவையையும் பார்க்கும் பொழுதுதான். எங்கோ spontaneity என்பதைப் பிடித்து நிரந்தரமாக்கிவிட்டாரோ என்று பிரமை தட்டுகிறது. அவருடைய படங்களான
A Stitch in Time,
Early Bird,
இன்னும் பற்பல இன்றும் நேரம் கெட்ட நேரத்தில் நினைவுக்கு வந்து குப்பென்று ஒரு சிரிப்பைத் தள்ளிவிட்டுப் போகிறது. 95 வயதில் காலமான நார்மன் கடைசி நாள் வரையில் நகைச்சுவை என்பது தம்முடன் கலந்த ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய குழந்தைப் பருவம் கொடியது. கடும் முரட்டுத் தனங்களைக் குழந்தையாக இருக்கும் போதே எதிர்கொள்ள வேண்டிய அவலம், அதுவும் சொந்த தகப்பனிடமிருந்தே, அவருடைய வாழ்வைத் தீய்த்திருக்க வேண்டியது. ஆனால் ஆத்மாவின் சக்திதான் என்ன ! அந்தக் கொடிய நினைவுகளை அவர் தம் நகைச்சுவைக் காட்சிகளாய் ஆக்கிக் காண்பிக்கும் பொழுது ‘ வாவ் ‘ தகப்பனால் கோபத்தில் தூக்கி எறியப்பட்டு உத்தரத்தில் பட்டுக் கீழே விழுந்த குழந்தை உலக மக்களின் உள்ளத்தில் என்றைக்குமாக வீற்றுவிட்டது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment