Tuesday, January 14, 2020

சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கைப் பணி

சகோதரி நிவேதிதை ஒரு சொற்பொழிவில் கூறும்பொழுது சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கைப் பணி எத்தகையது, அதன் இயல்பு என்ன? அதன் முக்கியமான தன்மை யாது என்பதைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்:

“Man-making was his own stern brief summary of the work
that was worth doing. And laboriously, unflaggingly, day
after day, he set himself to man-making, playing the part
of Guru, of father, even of schoolmaster, by turns.”

மனித ஆளுமையை முழுமையாகப் பயிற்றிக் கொண்டுவருதல் என்பதுவே சுவாமி விவேகாநந்தர் தம்முடைய பணியைக் குறித்துத் தம் அபிப்ராயத்தை மிகவும் துல்லியமாக நிறுத்துச் சொன்ன வார்த்தை என்று சகோதரி நிவேதிதை கூறுகிறார். சுவாமி விவேகாநந்தரின் பணி எத்தகையது என்பதைக் குறித்து பலவித மனநிலைகளில் பலரும் பல சித்திரங்களைத் தீட்டலாம். அது இயல்பானதும் மட்டுமின்றி வேண்டியதும் ஆகும். ஆனால் எதிர்கால இந்தியா, இனி நாம் எதிர்கொள்ளும் உலகம் என்ற விதங்களில் எல்லாம் மிகவும் கவனம் கொண்டு நாம் சிந்திக்கும் பொழுது விவேகாநந்தரின் சிந்தனைகளைப் பலவிதங்களிலும் சிந்தித்து, விவாதித்துப் புரிந்து கொள்ள முயலுதல் தேவையாகும். ஏன் மனித ஆளுமையை முழுமையாகப் பயிற்ற வேண்டிய அவசியம் யாது? துறவி ஒருவர் இந்த உலக வாழ்வில் கவனம் கொள்ளாது அப்பாலைய வாழ்க்கைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் வலியுறுத்திச் சொல்லிவிட்டுப் போவதுதானே முறை? இந்த வாழ்க்கையை எவ்வளவு ஒருவர் கவனமாகக் கட்டமைத்தாலும் கடைசியில் நிலையாமையில்தானே முடியப் போகிறது? இத்தகைய ஒரு சிந்தனைப் போக்கில் பார்க்கும் பொழுது சுவாமி விவேகாநந்தரின் அக்கறை வித்யாசமானதாகத் தோன்றக் கூடும். ஆனால் ஹிந்துமதத்தின் முழுமையான இலட்சிய கருத்தாக்கம் என்ன என்பதை மனத்தில் கொண்டால் சுவாமி விவேகாநந்தரின் அக்கறை மிகுந்த சிந்தனை எவ்வளவு எதிர்கால கவனம் மிக்கது என்பது மட்டுமின்றி, எவ்வளவு பாரம்பரியமான ஒன்று என்பதும் புரியவரும்.

ஹிந்துமதத்தின் முழுமையான இலட்சியம் என்பது இரட்டை அம்சங்கள் அடங்கியது. ஆன்மிகச் சிறப்பு, சமுதாய உயர்வு அல்லது தத்துவச் செறிவு, நடைமுறை வாழ்வின் ஆக்கம், இக உலக உயர்வும் நன்மையும், பாரமார்த்திகச் சிறப்பும், செழுமையும் என்று சொல்லலாம். அதற்கான சொற்கள்தாம் அப்யுதயம், நிச்ரேயஸம் என்பன. நிச்ரேயஸம் என்பது ஆத்மிகச் சிறப்பு. அப்யுதயம் என்பது முழுமையான சமுதாய முன்னேற்றம். நாம் ஒன்றைக் கவனம் கொண்டு பிறிதொன்றை அலட்சியம் செய்வது நிலைத்த நன்மையைத் தராது. வாழ்வை முழுமையாகப் புரிந்து கொள்வதும், வாழ்வின் பிரச்சனகளை முழுமையாகக் கையாளத் தெரிந்து கொள்வதும் இன்றும் இனியும் நாம் நன்கு தேர்ச்சி பெற வேண்டியவையாகும். இதற்கு இன்றியமையாதவை மனித ஆளுமையின் முழுமையான வளர்ச்சியும், திகழ்ச்சியும் ஆகும்.

மனித ஆளுமையின் முழுமை என்பது ஆண் பெண் என்ற பேதம் கருதாது ஒன்றுபோல அடையப்படும் ஆளுமைப் பயிற்சி. மனித ஜீவன் முழுமையாக மலரப் பெறுவது அதன் நோக்கமாகும். அருட்பொழிவுரை என்று கருதப்படும் Inspired Talks என்னும் நூலில் சுவாமி விவேகாநந்தரின் வார்த்தைகள் இங்கு ஆழ்ந்து கருதத் தக்கவை:

”All progression is in the relative world. The human form is the highest and man the greatest being, because here and now we can get rid of the relative world entirely, can actually attain
freedom, and this is the goal. Not only we can, but some have reached perfection; so no matter what finer bodies come, they could only be on the relative plane and could do no more
than we, for to attain freedom is all that can be done.”

***

No comments:

Post a Comment