Friday, January 31, 2020

அகத்தில் இருக்கும் பொருள்

கண்ணிற்கு முன்னால் ஒரு பொருள் இருக்கிறது. அது என்ன என்று அறியப் போனால் பல தகவல் வருகிறது. பல பகுதிகள் பொருந்திச் சேர்ந்த பொருள் என்றால் பிரித்தால் எப்படிச் சேர்ந்தது என்றும் அறிய முடிகிறது. அந்தப் பொருளை நான் விரும்ப வேண்டியதில்லை. அது சம்பந்தமில்லாத பொருளாக இருக்கலாம். நான் அது என்ன என்று அறிந்து பின்னர் என் வழியில் போகலாம். ஆனால் வேறு ஒரு பொருள் இருக்கிறது. அதை நான் அறிய வேண்டும் எனில் முதலில் அதை நான் விரும்ப வேண்டும். பிறகு அந்தப் பொருள் என்ன என்று அறிய அறிய நான் பழைய ஆளாய் இருக்க முடியாது. ஏனெனில் அந்தப் பொருள் இருப்பதே எனக்குள் என்றால் அந்தப் பொருளை அறிவது என்பதே என்னை நான் மேலும் மேலும் அறிவது என்பதுதான் என்று ஆகிவிடுகிறது. தன்னை அறிதல்தான் மனித வாழ்விற்கான இறுதி இலட்சியமாகப் பல பண்பாட்டு அறிஞர்களும் செல்கிறார்கள். சாக்கிரடீஸ் டெல்ஃபி அருள்வாக்கும் ‘உன்னையே நீ அறிவாயாக’ என்பதாம். வெளிப்பொருளில் நாட்டம் இருக்கும்வரையில் உள்முகமாகத் திரும்பி அறிய விரும்புதல் என்பது நிகழ்வதில்லை. ‘எனக்கு வெளியில்தான் நான் அறிய இருக்கிறது. எனக்குள் அறிய ஒன்றுமிலை’ என்றும் கூடத் தோன்றுகிறது. எனக்குள் என்பது இருக்கட்டும்; என்னை அறிந்துகொள்ள வேண்டும் என்பது பல துறைகள் ரீதியாகப் பார்த்தாலும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறையிலும் அவ்வாறு தன்னை அறிதல் என்பது வேறுபடுகிறது.


அருணகிரிநாதர் இப்படித்தான் ஒன்றைக் கூறுகிறார்: ‘அன்பைத் தா’ என்று கேட்கிறார். பிறகு ‘அறியும் அன்பைத் தா’ என்கிறார். அது என்னது? ‘உன்னை எனக்குள் அறியும் அன்பைத் தா’ என்று முருகனிடம் கேட்கிறார். அதற்கு ஏதோ ஒரு கடல் இருக்கிறதாம். இன்பக் கடலாம். அது உயர் கருணை புரியும் இன்பக் கடலாம். அந்த ‘உயர்கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே’ என்பது அவருடைய பிரார்த்தனை.

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை பொழியும் இன்பக் கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே!

அப்பொழுது தான் என்று அறிந்தால் அல்லவா தனக்குள் இருக்கும் அந்த ‘உனை’ அறிய முடியும்!

மயில்தகர் கல் இடையர் அந்தத் தினகாவல்
வனச குறமகளை வந்தித்து அணைவோனே!
கயிலைமலை அனைய செந்திற்பதி வாழ்வே!
கரிமுகவன் இளைய கந்தப்பெருமாளே!

என்று அருணகிரியார் பாடும்பொழுது அதில் முக்கியமான ஒரு கருத்தை அருமையாகச் சொல்லிவிடுகிறார். தன்னை அறிதல், தனக்குள் இருக்கும் அப்பொருளை அறிதல் எல்லாவற்றுக்கும் முன்னால் வேண்டுவது வெளிமுகமாகப் போகும் விழைவு மாறி உள்முகமாகச் செல்லும் விருப்பம், அன்பு என்பது வேண்டும். அது இருந்தால்தான் அடுத்து மற்றவை நிகழும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment