Friday, January 24, 2020

ஆரணத்தின் சிரமீது உறை சோதி

ஒரு சோதி என்று எதைச் சொல்வோம்? எது ஒன்று தன்னையும், பிற பொருட்களையும் ஒருங்கே விளக்குமோ அதைத்தானே சோதி என்று சொல்வோம். அதாவது ஒரு சோதி இருக்கிறது என்று எத்தைக்கொண்டு அறிகிறோம்? அந்தச் சோதியைக் கொண்டே அறிகிறோம். அந்தச் சோதியே பிற பொருட்கள் இருப்பதையும் அவற்றின் ரூபம், காட்சி, நிறம், இயக்கம் முதலியவற்றை விளக்குகிறது. அது போல் விலக்ஷணமான ஒரு சோதி இருக்கிறது. எங்கே என்னில் ஒரு காட்டில். மலையின் மீது சோதி இருந்தாலாவது நன்கு வெளியில் தெரியும். காட்டில் இருக்கின்றது என்றால்? அதுவும் காட்டின் தலைமீது ஒரு சோதி இருக்கின்றது. என்ன காடு அது? வேதத்தின் ஆரணம்தான் அந்தக் காடு.

லோகம், வேதம் என்று வழக்கு இரண்டு. சப்த ப்ரபஞ்சம், அர்த்த ப்ரபஞ்சம் என்று ப்ரபஞ்சத்தை இருவகையாகக் கூறுவார்கள் காவிய சாஸ்திரக்காரர்கள். வேதத்தில் பரம்பொருளை எப்படி ஆராதிப்பது என்பதை விவரிப்பது வேள்விகளைப் பற்றிக் கூறும் பகுதிகள். அப்படி ஆராதிக்கத் தகுந்த அந்தப் பரம்பொருள் யார் என்பதைப் பலபடியாகக் காட்டித்தரும் ஆரண்யகங்கள் என்னும் பகுதிகள். அதிலும் அவற்றின் உயர்ந்த முக்கியமான முடிவுகள் என்னும் முடிநிலமான சிரங்களாகிய உபநிஷதங்கள். அந்த ஆரணத்தின் சிரங்களில்தான் ஒரு சோதி உறைகின்றது. தன்னையும் விளக்கியபடி, தன்னால் உலகத்தையும் விளக்கித் தந்தபடி. ஆனால் உலகனைத்தையும், ப்ரபஞ்ச வஸ்துக்கள் அனைத்தையும் விளக்கும் அந்தச் சோதிக்கு, ஒரு விஷயத்தில் மட்டும் முழுமையாக விளக்கின திருப்தி ஏற்படாதவண்ணம் ஓர் ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது. அது என்னவெனில் தன்னுடைய மகிமையை விளக்கப் புகும் இடத்தே பரஞ்சோதி என்னும் தானும் போதுமோ போதாதோ என்னும் ஐயமே அஃது. வேதமே கூறுகிறது. தானும் தன் பெருமை அறிவானோ மாட்டானோ என்று வியக்கிறது.

அந்தப் பரம்பொருளின் ஸ்வரூபம், ரூபம், குணம், விபவம் ஆகிய இயல்பு, வடிவு, குணம், கீர்த்தி ஆகிய அனைத்தையும் உள்ளபடி விளக்குகிறேன் என்று முனைந்து சென்ற வேதமே ‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ’ என்னும் படித் தோற்றுப் பிற்காலித்தது என்றால் திருப்தியுற அந்தப் பரவஸ்துவின் தன்மையை எது போதிய அளவு விளக்கவல்லது? இவ்வாறு கவன்றுகொண்டிருந்த வேதாந்த விசாரத்திற்கு அந்தப் பரம்பொருளைப் போதிய திருப்தி உறும் வண்ணம், அந்த பரஞ்சோதியின் விஷயம் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி அனைத்தும் உள்ளடங்க, பிறவிஷயம் கலவாமல் நன்கு பாரணை செய்தது எது என்னில், திருப்தியுற விளக்கியது எது என்னில், பாடிப் பாடித் தானும் துய்த்து, அந்தப் பரம்பொருளையும் துய்க்கப் பண்ணி, பின்வந்தார் யாரும் இழவாதபடி துய்க்கப் பண்ணும் வல்லமை உடையது எது என்னில் தெய்வத்தமிழால், திருக்குருகூரன் செய்த திருவாய்மொழியன்றோ!

ஆரணத்தின் சிரம் மீது உறை சோதியை
அம் தமிழால்
பாரணம் செய்தவனைக் குருகூரனை

நாரணனைப் பாடியவர் நம்மாழ்வார். நாரணனோ நம்மாழ்வாரைத் தேடியவர். மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து இளைத்துப் போய்க் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் மீது எம்பெருமானின் கடாக்ஷம் பட்டவாறே அவர் நம்மாழ்வாராக ஆனார் என்று திருவிருத்த வியாக்கியானத்தில் ஒரு கருத்து கூறப்படுகிறது. அப்படி ஒரு பொலிவு, புஷ்கலம் ஏற்பட்டுவிடுமா நாராயணன் கடாக்ஷத்தில்? ஏன் இல்லை என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. வெறும் நெருஞ்சிக் காடாய் இருந்த வெற்று இடம் ஸ்ரீகிருஷ்ணனின் வீக்ஷண்யம் பட்டவாறே பசுகு பசுகு என்று அறுக்கத் தொலையாத புல் மண்டிப் போன வள பூமியாக மாறிவிட்டது என்றால் ஸ்ரீமந் நாராயண கடாக்ஷம் என்னதான் செய்யாது? பொருளில்லாத என்னைப் பொருளாக்கி உய்யக் கொண்ட நாதன் என்றுதானே பாடுகிறார்கள் ஆழ்வார்களும் ! அவன் கண்களை அமலமாக அருள் நோக்கில் விழிக்கவிலையேல் என்றுதான் இந்த ஜீவன் தன் கடைத்தேற்றத்தைப் பற்றிய உணர்வினையேனும் பெறக் கூடும்? ஒரு குருவிக் கூட்டைப் பிய்த்து எடுக்க வேண்டும் என்றாலும் அது நமக்கு இயலாத காரியமாய்த் தூக்கியெறிந்து விடுவோம். அப்படியிருக்க ஒரு ஸர்வ சக்தி வனைந்த மாயக் கூட்டை அவிழ்ப்பது ஜீவனால் இயலும் காரியமா? குருவி கட்டிய கூட்டை அவிழ்க்க இயலாத நாமா ஸர்வ சக்தி வனைந்த கூட்டை அவிழ்த்துவிடப் போகிறோம்? என்று கேட்கின்றார்கள் ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பெருமக்கள்.

மம மாயா துரத்யயா என்கிறான் கீதாசார்யன்.

ஆனால் அவனாகப் பார்த்து இது இவ்வண்ணம் ஆகுக என்றால் அது சத்திய சங்கல்பம் அன்றி வேறொன்றும் ஆகாதே ! தன் கடாக்ஷ மாத்திரத்தால் உய்யக் கொண்ட ஜீவன் என்பது பற்றித்தானே நம் ஆழ்வார் என்று அவன் கொண்டாடுவதும். ( ஆனால் நம்மை ஒரு காலும் அளியன் நம் பையல் என்னாரே அவ்வரங்கர் ! என்ன கொடுமை! )

நாரணனையன்றி வேறொன்றும் அறியாச் சிந்தையராய் அமர்ந்த நம்மாழ்வார் அந்தமிழால் அவனைப் பாரணை செய்தார். என்னவென்று? எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா ! என்று தொடங்கி நம்மாழ்வார் பாடியதெல்லாம்

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்!
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

என்பதுதானே. இதன் மருமம் உணர்ந்துதானே மதுரகவியாழ்வாரின் காலத்துப் புலவர்கள் நம்மாழ்வாரைத் தெய்வக் கவி என்று உணர்ந்ததும்.!
ஆனால் அந்த நாரணம் கூட நம்மிடத்தில் பலிக்கவில்லையே! அவனே முடியாது என்று கைவாங்கிய பெருமை அன்றோ நம்முடையது!
அப்படியிருக்க நம்மைத் திருத்த வேண்டி, நமக்காகப் பரிந்து, நாம் புரிந்து கொள்ளும் விதத்திலெல்லாம் பலவாறாகச் சொல்லி அவனுக்கு ஆளாய் நம்மையாக்கிய பிரத்யக்ஷ நாராயணன் நமக்கு நம்மாழ்வார் அல்லவோ! அதனால்தானே ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் என் அப்பனில் நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே’ என்று மதுரகவியாழ்வார் பாடியதும்! மதுர கவியின் வழியொற்றி விரித்துரைத்த கம்பநாட்டாழ்வாரும் தெய்வக் கவிஞருக்கு ஏற்ற நாவலவனாகப் பாடிய தம் சடகோபர் நூற்றந்தாதியில் நம்மாழ்வாரைப் பலபடியாகவும் நாராயணனாகக் காட்டிப் பாடி மகிழ்ந்தார். ஏதோ தம் பக்திப் பரவசத்தில் பாடிப் போனார் என்று இல்லாமல் பாத்ம புராணம் நம்மாழ்வாரைப் பகவானின் அம்சம் என்று விவரிப்பதற்கேற்பப் பாடினார் கம்பர்; எனவே பிரமாணங்களை அண்டைகொண்டு பாடினார் என்பது சிறப்பு என்று இரசிக்கிறார் தமது உரையில் ஸ்ரீ உ வே வை மு கோபாலகிருஷ்ணமாசாரியார் அவர்கள்.

புராணங்களில் நாம் படித்தறிந்தாலும் மனதார ஏத்தித் தொழும்படியாக அமுதம் பழிக்கும் தமிழில் நமக்குப் பாடித்தந்த கம்பரின் கொடைச் சிறப்புக்கு உவமை சொன்னால் அது அந்தக் கார்மேகத்தைத்தான் சொல்ல முடியும்.

கொடைக் கார் அணனை.

அணனை என்றால் போன்றவனை. அது மட்டுமா? மிகச்சிறந்த அருட் கொடையான நம்மாழ்வார், மனித குலத்திற்கு என்றும் பயனுறும் வகையைப் பாடி நாம் உணரக் காரணமாக இருப்பவர் கம்பர் ஆகையாலே காரணனை என்பதும் பொருத்தமன்றோ! அந்தக் கம்பநாட்டாழ்வாரை நினைப்போம் உட்களிப்புறவே. அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே என்றார் தென்குருகூர் நம்பியை நினைந்த மதுரகவியாழ்வார்.
மதுரகவியாழ்வாரின் விரிவுரையாகச் சடகோபனைப் பாடிய கம்பநாட்டாழ்வாரை நினைந்தால் உட்களிப்புறும். ஆத்மாவிற்கு இயல்பான ஆனந்தமானது எந்தத் தடையுமின்றி விளையும். ஏனெனில் ஆத்மா தனக்கு உள்ளுயிராய் நிற்கும் உத்தமன் தாளே தான் தொழத் தன்னை அவனிடத்தில் ஒப்படைத்து நிற்கப் பண்ணுகின்ற ஆழ்வாரின் பெருமைகளை நம் நெஞ்சில் நிறுத்தும் கவியாகையாலே.

பற்பலவா
நாரணனாம் என ஏத்தித்
தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை
நினைவாம் உட்களிப்புறவே.

’ஆரணத்தின் சிரமீதுறை
சோதியை யந்தமிழால்
பாரணம் செய்தவனைக்
குருகூரனைப் பற்பலவா
நாரணனாம் எனவேத்தித்
தொழக்கவி நல்குகொடைக்
காரணனைக் கம்பனை
நினைவாமுட் களிப்புறவே.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment