Saturday, January 25, 2020

திருவாதவூரர் சிவபோத வாழ்க்கை

திருவாதவூரர் சிவபோதவாழ்க்கை

ஆதீன வித்வான், கடலூர் தே ஆ ஸ்ரீநிவாஸாசாரியர்,
திருவாவடுதுறை ஆதீனம், வெளியீடு எண் 112, 3-10-1957. பக்கம் ௧௬ + 127

அளவில் சிறிய இந்நூல் தெளிவுதரும் விதத்தில் பெருமை பெற்று விளங்குகிறது. மிக ஆழமாகவும், மிக எளிமையாகவும் சித்தாந்த நுட்பங்களுடன் மாணிக்கவாசகர் வாழ்க்கையையும், நூல்களையும் திறமையாக ஆசிரியர் விளக்கியிருக்கும் திறம் வியக்கற்பாலது. நூலை மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார் ஆசிரியர். 1) சிவபோதப்பகுதி 2) வாழ்க்கைப் பகுதி 3) சிவபோதவாழ்க்கை. மூவகை ஞானங்கள் ஆகிய பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம்

உண்மைத் தவநெறிப்படிமுறைகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம்; கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை ஆகியவற்றைப் பற்றி ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப நூலாசிரியர் முதற்பகுதியுள் காட்டியுள்ளார். அடிகளின் வாழ்க்கை எப்படி ஞான நிலைக்கு மலர்ந்தது என்பதை இரண்டாம் பகுதி விவரிக்கிறது. மூன்றாம் பகுதி அடிகளின் நூல்களான திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது.

சதசத்து என்று கூறப்படும் ஆன்மா பளிங்கு போன்று சார்ந்ததன் வண்ணமாகத் திகழ்வது ஆதலினால் இறைவன் அருளால் ஆன்மாவைத் தன்னைச் சார்ந்து தலைப்பட வழிவகுப்பன் என்று கூறி ஆசிரியர் எப்படி அடிகளின் வாழ்க்கை ஞானத்துச் சரியை, ஞானத்துக் கிரியை, ஞானத்து யோகம், ஞானத்து ஞானம் என்ற படித்தரங்களில் மலர்ந்து நிறைந்தது என்று விவரிக்கும் பாங்கு சிறந்துள்ளது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment