Thursday, January 16, 2020

மார்கழி திருப்பாவை அனுபவம் 4

என்ன நுணுக்கமான சொல்லாராய்ச்சிகள் திருப்பாவை வியாக்கியானங்களில்! ’புள்ளின்வாய் கீண்டானை’ பாசுரத்தில் கீர்த்திமை பாடிப்போய் என்னும் இடத்தில் ’பாடிப்போய்’ என்பதை இரண்டு செயல்களாகப் பார்க்கிறார்கள். பாடுதல், போதல். போகும்பொழுது பாடுதல், பாடிக்கொண்டே போதல். காலால் நடந்து போகும் பொழுது கூடவே வழித்துணைப் பொருளாக நாம ஸங்கீர்த்தனம் பயன்படுகிறது. உடனே அதற்குப் பிரமாண வாக்கியம் அவர்கள் நெஞ்சிலே உதித்துவிடுகிறது. காருடபுராண வசனத்தை எடுத்தாள்கிறார்கள்.

கச்சதாம் தூரம் அத்வாநம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் |
பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருதம் ||

பொட்டல் வெளியாக இருப்பதில் வெகுதூரம் நடந்ததால் பசிதாகங்களால் மயக்கம் அடைந்த ஜீவனுக்குத் தாமரைக் கண்ணனின் திருநாம ஸங்கீர்த்தனமாகிற அமுதமே கட்டுச்சோறாகும்.

கட்டுச்சோறு என்பதற்கான பதம் பாதேயம். பதம் என்பது வழி. வழி சம்பந்தமானது என்னும் பொருளில் வந்து சிறப்பாக வழிநடைப் பயணத்தின் சோர்வை நீக்குவது ஆகையால் பாதேயம் என்பது கட்டுச்சோற்றைக் குறிக்கிறது. கட்டுச்சோற்றிற்கே அம்ருதம் உண்ணும் ஜீவன் இன்னும் போய்ச் சேர்ந்த பின் இலை போட்டு விருந்து என்று எதை உண்ணும் என்ற பிரமிப்பையும் உணர்த்துகிறது.

போதரிக் கண்ணினாய் - போது போன்ற கண், அரி போன்ற கண். போது என்றால் புஷ்பம். அரி என்றால் மான். மலர் போன்ற கண், மான் போன்ற கண்.

இன்னும் வேண்டுமா? அவளுடைய கண்களைப் பார்த்தால் மலரின் இதழ் போன்ற கண்ணில் கருவிழி வட்டமிடும் அன்றோ! அதைப் பார்த்தவுடன் ஒரு சித்திரம் தோன்றிவிடுகிறது. போது ஆகிய மலருக்கும், அதில் அமரும் வண்டு போன்று கருவிழிக்கும் உவமையாக போது அரிக் கண்ணினாய். அரி என்றால் வண்டு.

ம்..ம் அதோடு விடுவதா? போது என்றால் மலர். அரி என்றால் பகை. போதுக்கும் கண்ணிற்கும் பகை. போட்டா போட்டி. நீ அதிகமா? நான் அதிகமா? என்று. போது அரிக் கண்ணினாய். அரிக்கும் - ஹரிக்கும். - பகைக்கும்.

உடனே திருவாய்மொழி 6ஆம் பத்து 7ஆம் திருவாய்மொழி நெஞ்சில் வந்துவிடுகிறது பூர்வாசாரியர்களுக்கு. ‘நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய் அனைத்துலகும் உடைய அரவிந்தலோசனனை தினைத்தனையும் விடாள்’ என்ற வரி!. நெடுங்கண் இளமான் இவள், அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் அவன்! போட்டியிடும் இருவர் கண்களும்!

உண்மையில் பக்தி , இலக்கியம், ரஸனை, அனுபவம், கவிதை, கடவுள் உணர்வு எல்லாம் ஒன்றுற முயங்கி, இருக்கும் இடத்தை விண்ணாக்கும் தந்திரம்தான் திருப்பாவை வியாக்கியானங்கள். (தந்திரம் - நூல், உபாயம்)

***
சின்ன அரும்பத விளக்கத்தில் ’புள்ளின்வாய் கீண்டானை’ என்ற பாசுரத்திற்கு ஒரு ஸ்வாபதேசம் அருளிச்செய்கிறார்கள். அருமை!

ஆசைகள் என்பன, புலனிச்சைகள் என்பன தருவதோ லோகானுபவம். அது அனைவருக்கும் உள்ளது. அதனால்தான் பிரச்சனையெல்லாம். இலட்சியமோ பகவத் அநுபவம். பகவத் அநுபவம் ஜீவனுக்கு இறவா வாழ்வு தரும். பூர்ணமான ஞானம், நித்ய வாழ்வு, பகவத் கைங்கரியம் என்பதைத் தரும்.

எது ஜ்ஞானம்? எது பகவத் அநுபவத்தைத் தருமோ அதுவே ஞானம். எது வைராக்கியம்? எது பகவத் அநுபவத்திற்கு உதவி செய்யுமோ அதுவே வைராக்கியம். எது பக்தி? எது பகவத் அநுபவத்திற்குத் துணை நிற்குமோ அதுவே பக்தி. இந்த ஞானம், வைராக்கியம், பக்தி இவைகள் பூர்ணமாக வாய்க்கப் பெறுதல் என்பதே மிகப்பெரும் பேறு. ஞானம், வைராக்கியம், பக்தி ஆகியவை பூர்ணமாக வாய்க்கப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் விஷயத்தில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மிகுந்த பக்தியும், ஈடுபாடும், விட்டுப் பிரியவொண்ணாத பிரியமும் காட்ட வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறது இந்தப் பாசுரம் என்று கூறுகிறது சின்ன அரும்பத விளக்கம்.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசம் - பகவத் அநுபவ பரிகரமான ஜ்ஞான வைராக்கிய பக்திகளாலே பரிபூர்ணராயிருக்குமவர்கள் திறத்தில் ததர்த்தமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாபேக்ஷராயிருக்கை ஸ்வரூபம் என்று.

***
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய் - இதற்கு விளக்கம் சொல்லும் போது ஓர் அற்புதமான விஷயம் சொல்லுகிறார்கள். உள்ளே துயில்கின்றவர் எவ்வளவு சொல்லியும் எழுந்திராமையால் ஒரு வார்த்தை சொல்லுகிறார்கள். பகவத் விஷயத்தை ரஹஸ்யத்திலே அன்றோ அனுபவிக்க நினைத்தோம். பார் நீ எழுந்திராமல் அடம் பிடித்ததினால் என்ன ஆயிற்று? அனைத்தில்லத்தாரும் அறிந்தார்கள். எது போன்று என்றால் பகவத் விஷயத்தை எம்பெருமானார் திருஅவதாரம் செய்வதற்கு முன்னால் எல்லோரும் ரஹஸ்யத்தில் தங்களுக்குள் ஆறு செவி படாதே அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எம்பெருமானார் வந்த பின்பு அனைவரும் அறியும் விஷயம் ஆயிற்று பகவத் விஷயம். நீ ஒரு விதத்தில் எம்பெருமானார் போலேயோ? என்று கேட்பதாக வியாக்கியான அனுபவம். காலம் கலக்கிறதே என்று நினைக்காதீர்கள். காலத்தை வாணலியில் போட்டுக் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக மாற்றிப் போடுவதில் ஒரு ரஸம் இருக்கிறது. அது புரிந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் என்ற பாட்டில் சுத்த ஸத்வம் தொட்டாசாரியார் காட்டும் குறிப்பு அபாரம்! ’உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்!’ என்பது குறியீடு என்கிறார். அதனால் உணர்த்தப்படும் தத்வார்த்தப் பொருள் என்ன என்பதை அறியும் பொழுது கொஞ்சம் கைகால் உதறத்தான் செய்கிறது. ஏனெனில் என்ன மிஸ்டிஸிஸம், எத்தகைய அருள்வளப்பம் நிறைந்த நூல்! நிச்சயம் எம்பெருமானார் சொன்னது மிகச்சரி. திருப்பாவைக்கு ஆள் கிடையாது என்று அன்றே சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஞானம், வைராக்கியம், பக்தி இவற்றில் பூர்ணரான பாகவதரை எழுப்புகிற பாசுரம் இதுவாகும். ஞானம், பக்தி, வைராக்கியம் என்னும் ஆகாரத்ரயத்தாலும் விசிஷ்டரான அந்த பாகவதர்களின் விஹாரஸ்தாநம் திருமந்த்ரம் என்பதாம். அது தோட்டத்து வாவி என்பதால் குறிக்கப்படுகிறது. வாவியின் மத்தியில் செஞ்கழுநீர் வாய்நெகிழ்கிறது. ஆம்பல்வாய் கூம்புகிறது. திருமந்திரத்தின் மத்திம பதமாகிய நமஸ்ஸில் பாரதந்த்ர்யம் பிரகாசம் அடைந்து, ஸ்வாதந்த்ர்யம் தலை மடிவதை இந்த இரண்டு மலர்களின் மேல் வைத்து குறிப்புணர்த்தப் படுகிறது என்று ஸ்வாபதேச உரை கூறும் பொழுது கைகள் கூப்புவதல்லால் நாம் செயப்பாலது என்?

***
’உனக்கென்ன வேறுடையை’ என்பதற்குச் சொல்லும் பொருளின் உயர்வு அபாரம். பாகவதர்களின் சங்கத்தில், ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண்பயன் ஆவதே என்று அந்வயிக்காமல் ஒதுக்கிவிட்டுத் தனியே பகவானிடம் ஈடுபாடு என்பதும் கூடச் சிறப்பற்றது என்று சொல்லும் அளவிற்கு அடியவர்களின் பெருமையை எடுத்துரைக்கும் பாசுரம் எல்லே இளங்கிளியே. அடியார்களுடன் கலந்து ஈடுபடப் போவதோ அதே பகவத் விஷயம்தான். ஆனாலும் பகவத் விஷயத்திற்கு முதன்முன்னம் முக்கியமானது கூட்டம் என்கிறார்கள்.

வல்லானை கொன்றானை - ஓர் ஆனைக்கு அருள்புரிந்ததை விடவும் முக்கியமானது இது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை - என்றெல்லாம் பாடிவிட்டுப் பின்னர் மாயனை என்கிறார்கள். ஏன் இங்கே மாயனை என்கிறார்கள்? யுகம் ஆனாலும் நாம் கண்டுபிடிக்க முடியாது ஏன் என்று, உரைகளின் உதவியின்றி. பிறரை அவன் படுத்துவதையெல்லாம் நம் கையில் அவன் படும்படியாக நம்மோடு அவ்வளவு ஸௌலப்யமாகப் பழகும் குணத்தில் வியந்து மாயன் என்கிறார்கள். பிறர் அவனிடம் தோற்றதைப் போல் அவன் நம்மிடம் தோற்கப் போகிறான். அந்தத் தோல்விக்கு அன்றோ நாம் ஜயகீர்த்தி பாடவேண்டும்! நம்மிடம் தோற்றது ஆகப் பழகி நம்மை அந்தத் தோல்விக்கே எழுதி வாங்கிக் கொள்ளும் அவன் மாயன் இல்லாமல் என்ன? குழந்தையை நாம் செல்லமாகத் திட்டுகிறோம். அதுவோ நம் திட்டால் தான் வருந்துவதாய் வெறுமனே இதழைச் சுருக்கி அழுவதுபோல் செய்தால் போதும். நாம் நிலை குலைந்து அதற்குக் குற்றேவல் அன்றோ செய்யத் தொடங்கி விடுகிறோம்!

***
திருப்பாவைக்கு ஆறாயிரப்படி வியாக்கியானம் அருளிய ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் ‘எல்லே இளங்கிளியே’ என்னும் பாட்டைத் திருப்பாவையின் முக்கியமான கருத்தைக் கூறும் பாட்டு என்கிறார். பாகவத ஸமூஹத்தில், அடியார் திரளில் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண்பயன் ஆவதே என்று பெரும் பேறாகக் கருதி விச்வஸிக்கை வைஷ்ணவத்தின் சிறப்பு என்பதை 15 ஆம் பாட்டு சொல்கிறது என்கிறார்.

’நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய’ என்ற பாட்டில் நாலாயிரப்படியில் திருநாராயணபுரத்து ஆசிரியர் காட்டும் பொருள் மிகவும் முக்கியமானது. உள்ளே புகுகின்றவர்கள் ஏன் வாயில் காக்கும் முதலிகளையெல்லாம் பவ்யமாக இரங்கிக் கார்யம் கொள்கின்றார்கள் என்பதற்குக் காரணம் ’உகந்தருளின நிலங்களில் புகுவார்க்குத் திருவாசலில் முதலிகளை அநுமதி கொண்டு புகவேணுமென்று சாஸ்திரங்களிலே சொல்லுமது’ என்கிறார். பாஞ்சராத்திர சாஸ்திரங்களிலே சொல்லும் இந்தக் கருத்தை இவர்கள் எங்ஙனம் அறிந்தார்கள்? எப்படி இவர்களின் அனுஷ்டானம் அதன் ரீதியாக அமைந்தது? இவர்கள் எந்த சாஸ்திரத்தையும் அறிந்திருக்க வேண்டியது என்பது இல்லை. மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களின் செயல்களைச் சாஸ்திரங்கள் ஒப்பிநின்று ஆமோதிக்குமதாய் இருக்கும். சாஸ்திரத்தை வரியடைவே கற்றாலும் அதன் அர்த்ததை நிர்ணயம் செய்யவும், நிர்ணயித்த அர்த்தத்தை அனுஷ்டானம் செய்யவும் நெடுங்காலம் பிடிக்கும். ஆனால் பகவத் கிருபையால் மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஓர் அரைச்சந்தையால் சாஸ்திர தாத்பர்யத்தைச் சொல்லிவிடுவார்கள். இந்த வரிகளைப் படிக்கும் பொழுது ஸ்ரீராமகிருஷ்ணரின் சரிதம் படித்த நினைவே மனத்தில் நிறைந்திருக்கின்றது. தமக்கு எதுவும் தெரியாது என்றும், தம்முள் இருந்து அன்னை காளி அள்ளித்தரும் ஞான உபதேசங்களையே தாம் வெறுமனே வெளியில் வழங்கும் ஒருவராகச் செயல்படுவதாக அவர் தம்மைக் கூறிக்கொண்டதில் எவ்வளவு பொருள் இருக்கிறது! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment