நோக்கமும், திசையும், நசையும் முன்னிடு பொருளாய்க் கொண்டு முனையும் மானத வியாபாரம் தவம்.
இலக்கை நோக்கி வளைத்த வில் விடுத்த கணையாய் தைப்பது தவம்.
இனிவருங்காலம், இயலுமிக்காலம், கரந்துசெல் காலம் எனப்படு மூன்றையும் கணத்தினில் நிறுத்தி, காரண காரிய உருளையின் அச்சில், கற்பனை ஆணி கொண்டடித்திடும் வல்லமை தவம்.
கணம் ஒன்றில் கட்டுண்ட முப்புரி காலம், கணக்கெடுத்தால் காட்சி கடந்த கற்பனையே என்ற கொள்கை புரிவது தவத்தின் விளைவு.
தன்மயமாய் நிற்கும் ஒன்று தானடையத் தகுந்தது எது என்று தேடி தள்ளும் கோலங்கள் குவியும் களத்து மேடாகித் தோற்றுகிறது உலகம்.
தேடித் திரிந்த சிற்றுயிர், நாடி நயந்த நோக்கமும், அதற்கு ஆடிச் சுமந்த கோலமும், ஆதிப் புள்ளியில், தான் நின்றவாறே இயற்றும் கற்பனை என்று புரிந்து கொள்ளும் கணத்தின் அகநிலை ஞானமென்றால், புறநிலை சொல்கதுவிச்சூழா சுகமென்னும் இலக்கியத்தின் விதைப்பற்று. அந்த சொல்லொணா மர்மம் அவிழ்ந்ததில் விளைந்த ஆதி நகையில் முகிழ்த்த ஹாஸ்யத்தின் விரிவாய்ப் பெருகுவன இலக்கியங்கள்.
ஞானம் செயல் மடிந்து சையோகித்த மௌனம் விளைநிலமாய் முப்போகம் காண்பது கலை. ' பேசாப் பொருளைப் பேச நான்துணிந்தேன்' என்று கவி கூறுவதும் அப்பொழுதே.
படைப்பின் தத்துவத்தில் பட்டு, புறநிலையில் கொண்ட தாக்கம் மறைய, மனத்தடத்தில் மடங்கா கற்பனையில் ஒரு படைப்பே நிகழ, முத்தியும் வேண்டா முனைப்பில் ஒரு கணமே காலமாய்க் கோலம் கொள்ள, கலை விரித்த சொல்லரங்கில் வட்டாடிப் பொழுதயரும் கடைவாயின் அடைக்காயில் ஏறிய செம்மை விளக்கும் சிருஷ்டியின் மர்மம் தவத்தின் ஆணிவேர்.
போகியன்று போனது போக வந்தவரை பற்றில் வை. அது போதும்.
'தவம்' என்ற திருலோக சீதாராமின் பாடல் கடைவாய் மெல்ல இதோ:
கோலம் மிகுந்து ஒளிகூட்டி
மயக்கமும் காட்டிஎழும்
காலம் என்றே பெருங் கற்பனைக்கே
மயலாகி நின்று
சாலப் பலபல நாடகஞ் சார்ந்து சதாசிவமாய்
ஞாலத்திசை வெளியே
படர்ந்தேங்கும் உயிரினமே!!!
கூட்டிப் பெருக்கிக் கழித்து வகுத்தும்
கணக்கறியாப் பாட்டில்
படுதுயராயின ஏதும் பகுத்தறியாது
ஏட்டில் பெருக்கி எழுதிய எல்லாம்
ஏட்டில் பெருக்கி எழுதிய எல்லாம்
இலக்கியமாய்ப் போட்டுவைப்போம்.
இது போதும்.இதே நாம் புரிதவமே!
***
இது போதும்.இதே நாம் புரிதவமே!
***
No comments:
Post a Comment