Thursday, January 16, 2020

மார்கழி திருப்பாவை அநுபவம் 7

’மாலே மணிவண்ணா’ நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்கள். பரமாத்மாவிற்கு உள்ளான இயல்பு எது? எல்லையொன்றும் அற்றதான மேன்மையா? அல்லது இந்தச் சேதனனை எப்படியாவது தன்பக்கல் சேர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்ற வ்யாமோஹமா? ஸ்ரீராமாயணத்தில் கோதண்டபாணி என்னும் ராமர் இருக்கிறார். ராஜாராமன் இருக்கிறார். சக்கரவர்த்தித்திருமகன் இருக்கிறார். ஸ்ரீராமனுக்கு உள்ளார்ந்த இயல்பு என்ன? சீதாப் பிராட்டியின் முடிவு என்னவெனில் ஸ்ரீராமன் சரணாகத வத்ஸலர் என்பது. அது போல் இங்கே இவர்களின் முடிவு கிருஷ்ணனைப் பற்றி என்னவெனில் நம் பக்கல் பித்து பிடித்தது போன்ற அன்பே உருவானவன் (வ்யாமோஹம் - மால்) என்பதுதான் அவனுடைய உள்ளார்ந்த இயல்பு என்பது. அப்பொழுது நாராயணன் என்னும் நாமம் உணர்த்தும் அபரிச்சேத்யமான மேன்மை என்னாவது? அதுவா? மேன்மை என்பது இடுசிவப்பு என்கிறது ஆறாயிரப்படி.

ஞானம், பக்தி, வைராக்கியம் என்னும் ஆன்மிகச் சிறப்புகளை உடலழகு என்று உருவகப்படுத்தி ஜீவனுக்கு மலரும் இயல்பாகச் சொல்லும் பொழுது நமக்கு என்று ஞானம் உண்டாகும்? பக்தி மிளிரும்? வைராக்கியம் ஏற்படும்? ஏனெனில் இந்த ஜீவனின் மலர்த்திகள்தாம் பகவானை ஜீவன்பக்கல் மால் கொண்டவனாய் ஆக்குகிறது என்னும் போது ஒரு சமயம் பார்த்தால் கோயிலுக்குப் போய் நாம் அவன் முன்னால் நிற்காமல் இருப்பது நல்லது என்று தோன்றிவிடுகிறது. ஆம். ஞானம், பக்தி, வைராக்கியம் இவைதான் ஒரு ஜீவனின் அழகு என்றால் நாம் போய் நின்றால் அவலட்சணப் பிண்டமாகத்தானே அவனுக்குத் தோன்றும்படி நிற்போம். ஆயினும் நம்மையும் அவன் கனிந்து நோக்கும்படியாகச் செய்யும் அன்னை அங்கே கூடவே இருப்பதால் ஏதோ பிழைக்கிறோம் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. என்றுமே நான் தாயார் கட்சி என்று ஆனதற்கு அதுவே காரணமும்.

***
’கூடாரை வெல்லும் சீர்’ இதற்கு பூர்வாசாரியார்கள் தவிர யாரே அர்த்தம் சொல்லமுடியும்? அவன் கூடாரை வெல்லும் என்றால் என்ன பொருள்? கூடியவர்களிடம் தான் தோற்கும்.

கூடார்கள், கூடியவர்கள் இருவரையுமே குணத்தாலே ஜெயிக்கும். கூடாரை சௌர்யத்தாலே. கூடியவரை சீலத்தாலே.

தன்னுடைய வடிவழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான். தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே ஸர்வஸ்மாத்பரனான தன்னுடைய வைலக்ஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை வென்றான். இவை ஒன்றிலும் ஈடுபடாத நம்போல்வாரை எதைக் கொண்டு ஜெயித்தான்? இதற்கு விளக்கம் சுத்த ஸத்வம் ஸ்வாமி அன்றோ சொல்ல வேண்டும்! ’நம்போல்வாரை ஆழ்வார் ஸம்பந்தத்தை வ்யாஜீகரித்து ஜயிக்கும் அத்தனை’ என்கிறார்.

கோவிந்தனைப் பாடிப் பறைகொண்டு பெறும் சம்மானம் என்ன? சூடகம்; தோள்வளை; தோடு; செவிப்பூ; பாடகம். இந்தக் குறியீடுகள் உணர்த்தும் தத்வார்த்தங்கள் யாவை? சூடகம் - காப்பு; தோள்வளை - திரு இலச்சினை; தோடு - திருமந்திரம்; செவிப்பூ - த்வயம்; பாடகம் - சரம சுலோகம். ஜ்ஞானம், பக்தி, வைராக்கியம் ஆகியவை பகவத் ஸம்பந்தத்தோடு உண்டாக வேண்டும் என்பது குறிப்புப் பொருள்.

***
’கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்’ - இதற்கு நாம் ஒன்றும் எழுத முடியாது பார்க்கப்போனால். நம் கையிலெதுவுமில்லை. நாம் ஒரு பொருளுமில்லை. அவன் தந்தால் உண்டு. அவனைத் தா என்று கேட்க நமக்கு எந்தத் துப்பும் இல்லை. அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம் என்ற அடையாளம் தவிர எதுவும் இல்லை. - இதை எங்கே உங்கள் உள்ளத்துக்கு உண்மையாகச் சொல்லி பாருங்கள்! நமக்கு அறிவொன்றுமில்லை என்ற நிலையை உள்ளபடி உணர்ந்து பேசுவது இயலாத காரியம். நம் எல்லோருக்குமே நாம் ஏதோ ஒரு விதத்தில், அவ்வளவு இல்லையென்றாலும் ஏதோ நம்மால் முடிந்தமட்டும் கொஞ்சத்துக் கொஞ்சம், நம்மகிட்டயும் ஏதோ இருக்கு - இந்த எண்ணம்தான் நம் அனைவருக்கும். முற்ற முழுக்க நம்மிடம் எதுவுமில்லை என்று சாட்சாத்தாக நாம் நினைத்து விட்டோம் என்றால் அங்கு நம்முள் கண்ணன் வந்து நின்று விடுவான். நாம் பயப்படுவதே நம்முள் கண்ணன் வந்து விடப் போகிறான் என்றுதான். கடவுளைச் சந்திக்க அஞ்சுகிறோம். அப்புறம் சுருணைத் துணி மாதிரி இருக்கிற ‘நான்’ போய்விடுமே!

ஆனால் ஆயர்பாடியில் கண்ணன் வந்து பிறந்தான். ஆய்ச்சிகளோடு, கோபர்களோடும், கன்றுகாலிகளோடும் ஒன்றாகப் பழகி அவர்களே அறிவொன்றுமில்லாத ஆய்க்குலமாக இருப்பது எப்படி என்று கற்கும் பயிற்சிச்சாலை என்ற அளவிற்குத் தன்னை முழுக்க முழுக்க கோபாலன் என்று ஆக்கிக் கொண்டான். அவன் மாடு மேய்ப்பதில் இந்திரன், கோ இந்திரன் - கோவிந்தன் என்று வானுலகத்து இந்திரன் வந்து கோவிந்த பட்டாபிஷேகம் செய்து வைத்ததும் அதுவே தனக்குக் கிடைத்த அகில உலகச் சக்ரவர்த்தி போன்ற பட்டம் போல் மகிழ்ந்தான்.

அதையெல்லாம் பார்த்து விட்டு ஏதேதோ ரிஷிகள் எல்லாம் அவனை வேத மந்திரங்கள் சொல்லித் துதிக்கின்றனரே என்று வியந்து தாங்களும் காதில் கேட்ட பழக்கத்தால் ‘நாராயணனே’ என்று சொல்லி விட்டார்கள் ஆயர்கள், அதுவும் ஆயர் சிறுமியர். அவ்வளவுதான் உள்ளம் மிகவும் வருத்தம் பாய்ந்துவிட்டது. ஏதோ ஆறாத குற்றம் போல் இந்தப் பாட்டில் சொல்லிக் காண்பிக்கின்றான். ‘என்னை எதேதோ சொல்லி திட்டினீர்களே அந்நியப் படுத்தி ஒதுக்கினீர்களே! என்று அவன் கருத்தை அறிந்து மன்னிப்பு கேட்கிறார்கள். ‘அன்பினால் சொன்னோம்; உன்னை நாங்கள் வருத்துவோமா? நீ இவ்வளவு வருந்துவாய் என்பதை நாங்கள் அறிந்தோமா? மேலும் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் அல்லவா? இந்த நேரத்தில் இது பேச வேண்டும் என்று ஏதாவது அறிந்தோமா? ‘அன்பினால் உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’. எதற்கு இந்த மன்னிப்பு? அவனை ‘நாராயணன்’ என்று அழைத்த குற்றத்திற்கு. ஆம். எளிமை குணத்திற்கு மகுடாபிஷேகம் ஆனபிற்பாடு பரத்துவ நிலைக்கான பெயரைச் சொல்லி அழைக்கலாமா? ராஜகுமாரன் முடிசூடிய பின்பு அவனைச் சிறுவயதில் அழைத்த பெயரை யாரேனும் அழைத்தால் அது பெருங்குற்றமல்லவா?

நம்மால் இந்த எளிமையைப் புரிந்துகொள்ளுதல் ஒரு நாளும் முடியாது. பரத்துவம் கவலையில்லை. நமக்கே புரியாது. பின் என்ன என்றால் நாம் எல்லாம் ஏதோ சராசரி. இப்படியும் இல்லை. அப்படியும் இல்லை. இப்படி ஒரு நினைப்பில் இருக்கும் நம்மை அவன் கைதூக்கி விட்டால்தான் அவன் கோவிந்தா என்று சொல்லி வைப்போம். நமக்கு பரிந்துரைக்க அந்த ஆயர்சிறுமியரும் ஸ்ரீஆண்டாளும்தான் கதி.

***
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து - அடையவேண்டிய உயர்ந்த பேறாகிய ப்ராப்யத்தை முந்துற முன்னம் சொல்லிப் பின்னர் அதன் எல்லை நிலமாகிய பாகவத சேஷத்வத்தைச் சொன்னார் நம்மாழ்வார். ‘எம்மாவீட்டில்’ ஆரம்பித்து ‘நெடுமாற்கடிமையில்’ தலைக் காட்டியது நம்மாழ்வார். அவர் எங்கு முடித்தரோ அங்கு ஆரம்பித்து, பாகவதத்திரளை முந்துற முன்னம் கூட்டிப் பின்னர் ப்ராப்யத்தை இன்னது என்று அறுதியிடுகிறார்கள் திருப்பாவையில். ஒரே பார்வை இரண்டு விதமான கோணங்கள்.

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து - நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது, கோவிந்தா! கோவிந்தா என்றவுடன் என்ன நினைத்துக் கொண்டாய்? மஹாவராஹமாய் அவதரித்து இந்த பூமியை எடுத்த கோவிந்தன் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டாயா? இல்லையென்றால் பூமியை நீரேற்ற வாமநனாக நினைத்துக் கொண்டாயா? சப்தங்களையெல்லாம் பிரித்து வேதங்களை உருவெழப் பிரித்தெடுத்த ஹம்ஸரூபியான கோவிந்தன் என்று நினைப்பா? இல்லை அதை ப்ரகாசிப்பித்த ஹயக்ரீவன் என்று நினைப்பா? இல்லையென்றால் ஆதித்யனுள்ளே அந்தராத்மாவாய் இருக்கும் அந்த கோவிந்தன் என்று நினைப்பா? அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகனாய் வந்து பிறந்து, ஆய்ச்சியருக்கு உதவ வந்த பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தனை நாங்கள் சொல்கிறோம் புரிந்ததா? ஸ்ரீவைகுண்டத்தில் போனாலும் நீ உடனே சதாபச்யந்தி என்று இருக்கும் நிலையன்று அங்கும் நாங்கள் வேண்டுவது இதையேதான். அங்கும் நீ எங்களுக்கு என்ன அருளவேண்டும்? ‘நீ ஸ்ரீவைகுண்டத்திலே ஸூரிகளுக்கு முகம் கொடுத்திருக்கும் இருப்பிலே க்ரமத்திலே பெறும்படியிருக்கவொண்ணாது; நீயும் ’பெண்காள்’ என்றழைக்க நாங்களும் ‘கிருஷ்ணன்’ என்று சொன்ன பரிமாற்றமே நடக்கவேணும்...உன் திருவடிகளிலே நிலைநின்றவர்கள் நெஞ்சு ஸ்ரீவைகுண்டாதிகளால் கலங்காது காண்!’ மற்றை நம் காமங்கள் மாற்று.

நமக்குள் நாம் வெளிப்படையாய்ப் பேசிப்போமே. நமக்கு ஜ்ஞானம் கிடையாது. பக்தி கிடையாது. விவேகம் வைராக்கியம்...ம். அனுஷ்டானம் ம்ஹும்... ஏதாவது ஸ்திர புத்தி? நம்மை நோக்கினால் கிருஷ்ணன் மேய்த்த ஆவினம் எல்லாம் வஸிஷ்ட வாமதேவாதிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையையும், அதன் அர்த்த விசேஷங்களையும் படித்தோ கேட்டோ பார்த்தோ இல்லை யாரோ ரசிக்க ஒட்டுக் கேட்டோ ஒரு கணமாவது நெஞ்சு நெகிழ்ந்திருக்காதா? போதும். அங்கு கணக்கில் ஏறியிருக்கும்.

***
கன்றுக்கு இரங்கிக் கறக்கும் மாடு கன்று போன்ற தோற்கன்றுக்கும் இரக்க நினைவாலே கறக்கும் அது போல என்றோ திருவாய்ப்பாடியில் கிருஷ்ணானுபவம் அவதார காலத்தில் நிகழ்ந்தது. அதைக் கேள்விப்பட்ட ஸ்ரீஆண்டாள் தம் ஆற்றாமையாலே அநுகாரம் என்று உணர்ச்சியால் தம்மை ஆய்ச்சியர் சிறுமியராகவே பாவித்து அதனால் கிருஷ்ணானுபவம் பெற்றதை நம்மீது உள்ள கிருபையாலே திருப்பாவை முப்பது பாசுரங்களாகப் பாடினாள். நமக்கு இருக்கும் ஒரே வழி இந்தப் பாசுரங்கள்தாம். நம் நிலையோ தோற்கன்று போன்ற நிலை.

பகவானோ கன்றுக்கிரங்கும் மாதாவானவன். நாமும் அவனது குழந்தைகள்தாம். ஆனால் நம் பரிபாகமோ அவனை இல்லை என்று சொல்வதில்தான் முனையும். நம்பினாலும் ஸ்திரம் இல்லாத நிலை. பார்த்தால் பக்தி போன்ற தோற்றம். எனவே தோற்கன்று. ஆனால் நமக்குப் பரிபக்குவம் இல்லையே, பக்தி இல்லையே, உண்மையான ஜ்ஞானம் இல்லையே என்ற ஏக்கம் நம் நெஞ்சில் எழாது என்று சொல்ல முடியாது. எனவே அவனுடைய அருளைப் பெற நமக்கு நல்வாய்ப்பு முப்பது பாசுரங்களை மனப்பாடமாகக் கற்றல். அர்த்த விசேஷங்களை ஆழ்ந்து நினைத்தல். நம்மைப் போன்ற யாரோ பராசர பட்டரைக் கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. அதற்குப் பட்டர் சொன்னாராம்: ’விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அநுஸந்தித்தல், மாட்டிற்றிலனாகில் ‘சிற்றஞ்சிறுகாலே’ என்கிற பாட்டை அநுஸந்தித்தல், அதுவும் மாட்டிற்றிலனாகில் நாம் இருந்த இருப்பை நினைப்பது’ என்று அருளிச் செய்தாராம். எங்கு போனாலும் நம்ம பிழைப்பு ஸ்ரீராமராமராமேதிதான் போல இருக்கு.

கடைசியில் அவர் சொல்லுகிறாரே ‘நாம் இருந்த இருப்பை நினைப்பது’, என்ன ஒரு திவ்யமான வழி அது! அதுதானே பார்க்கப் போனால் நமக்குக் கைகொடுப்பதே! பெரியோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், மகான்கள் எப்படிப் பேசினார்கள், என்ன பேசினார்கள், இவ்வாறு அவர்களின் சரிதங்கள்தாமே நமக்குப் புகலாய் இருப்பது! பெரியோர்கள், சாதுக்கள், ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கையைப் படிப்பதும் சிந்திப்பதும் அளக்காலாகா பெருமை உடைய ஆத்ம சாதனம். ’ஜன்ம கர்ம ச மே திவ்யம்’ என்று ஸ்ரீகிருஷ்ணனும் சொல்கிறான். ஜ்நானி து ஆத்மைவ மே மதம் - ஞானி என்னுடைய ஆத்மாவே ஆவான் என்பது ஸ்ரீகிருஷ்ணனின் மதம், தீர்மானமான கருத்து.

இவ்வளவு நாள் ஸ்ரீஆண்டாளின் பெருமை மிக்க திருப்பாவையைச் சிந்தனம், மனனம் என்று சிந்திக்கவும், எழுதவும் பேசவும் மனத்தால் வாழ்வதற்கு உபகாரமாக இருந்த உங்களுக்கு நன்றி. பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணனாக பெற்றம் மேய்த்துண்ணும் கோபாலனாகப் பிறந்தது. பட்டர்பிரான் கோதையாகிய ஸ்ரீஆண்டாளோ அநுகாரத்தால் ஆயர்சிறுமியர் ஆனாள். மறைமுடியாகிய உபநிஷதங்களோ சங்கத்தமிழ் மாலையாக ஆயிற்று. பகவான், பக்தர், பிரமாண கிரந்தம் எல்லாமே இப்படி எளிமையாக மாறி வரும் பொழுது நாமும் நம் நிலைமையிலிருந்து கொஞ்சம் மாறலாமே அல்லவா!

‘வங்கக்கடல் கடைந்த’ என்பதற்கு ஜீவனைப் பெறுவதற்குத்தான் பரமாத்மா பல வியாஜங்களாகச் செயல்களைச் செய்கிறான் என்று வியாக்கியான ஆசிரியர் கூறுகிறார். பொருளில் அமிழ்ந்து போன சித்தாகிய ஜீவனைப் படிப்படியாக மேலேற்றிக் கொண்டுவரத்தான் பரிணாமம் ஆகிய பெரும் வேலையே வியாஜமாக நடக்கிறது என்று சொல்கிறார் பகவான் ஸ்ரீஅரவிந்தர்.

பாழிருந்தொரு சேதி கொண்டிவண்
பாய்ந்து வந்திடு தூதுவர்
தாழ்விலாதியல் அமரர் வாழ்வினைத்
தாமியற்றிடும் தாபதர்

ஆம் அவர் அழிவுற்றயர்ந்திடும்
அற்பமண்ணிடை ஆர்ந்தனர்
ஓம் எனும் குரல் ஓங்கியும் உளம்
தோயும் வெங்கனல் தாங்கியும்
நாமிருந்திடும் நானிலந்தனை
நாடுவார் நமர் நாடுவோம்.
(சாவித்ரி மொழிபெயர்ப்பு திருலோக சீதாராம்) 

*
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment