Friday, January 31, 2020

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நரேன் பாடிய முதல் பாடல்

புதிய இந்தியாவின் பொன்னொளியாம் சுவாமி விவேகாநந்தர் தம் கல்லூரி நாட்களில் நரேந்திரநாதராக தக்ஷிணேஸ்வரத்துப் பேரொளியாம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரைக் கண்டதும், அவர் கேட்டதற்கிணங்க பாடிய முதல் பாடல். அற்புதமான பொருள் பொதிந்த பாடல். என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பைத் தருகிறேன். முதன் முதலில் சுவாமி விவேகாநந்தர் தக்ஷிணேச்வரத்து ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்த பொழுது ப்ரம்ம சமாஜத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்டதும் பரமஹம்ஸருக்கு இளைஞன் நரேந்திரனின் ஆன்மிக ஜீவிதமே புரிந்துவிட்டது.

‘மனமே! ஏன் நீ அந்நிய இடம் இங்கு திரிகின்றாய்?
நம் சொந்த நிலயத்திற்குப் போவோம் வா’

என்று ஆரம்பிக்கும் ‘மொனொ சொலொ நிஜொ நிகொதொனெ’ என்ற பாடல்.

மனமே நம் நிஜ
வசிப்பிடம் செல்வோமே !
ஸம்ஸாரமாகிய இவ்வன்னிய பூமியில்
அயல்நாட்டினன் போலே வேடமிட்டே
லட்சியம் அற்றே அலைவதுமேன்?

சுற்றியுள்ளவரும்
சூழ்ந்துள பஞ்ச பூதங்களும்
உன்னுடையர் அல்லவே
ஒரு நாளும்
உனக்கு உரியவை அல்லவே
உன் சொந்தமென
எவருமே இங்கில்லையே
அந்நியமாம் இவற்றினில்
பற்று வைத்தே ஏன் நீ
அறிவிழந்தே போனாய்
என் மனமே?
உன் சொந்தம் எது என
மறந்தும் போனாய் மனமே !

சத்தியப் பாதையில்
முன்னேறு என் மனமே !
சலித்து விடாமல் நீ அனுதினமே !
அன்பு என்பதை உன் வழிவிளக்காக
ஏந்திச் செல் நீ என் மனமே!

வழிநடைத் தேவைக்காக
நற்குணங்கள் தமையே
போற்றிப் பாதுகாப்பாகக்
கொணர்ந்திடு என் மனமே !
ஏனெனில் வழியினில்
ஆறலைக் களவர்கள் இருவர்
அறிவு மயக்கம், பேராசையென்பார்
உன் அருந்தனம் அனைத்தையும்
கொள்ளையடிக்கவே காத்துக் கிடப்பார்

ஆபத்துகளில் உன் தற்காப்புக்கென
எப்பொழுதும் நீ அண்டைகொள் மனமே!
மனச் சாந்தி என்பது ஒன்றும்
புலனடக்கம் என்பது ஒன்றும்
என்றும் உனக்கரண் ஆகிடுமே

சாதுசங்கமே நீ வழி இளைப்பாறத்
தகுந்த புகலிடம் ஆகும் என் மனமே !
அவ்விடம் நீ தங்கி
அலுப்புற்ற அங்கத் தளர்வுகள் நீங்கி
மேற்கொண்டு செல்லும் வழியினைப் பற்றி
ஏற்ற நல் உபதேசம் கேட்பாய் !
என்றும் உனைக் கண்வைத்துக் காக்கும்
அவன் உண்டோ என ஐயுற்றுப் பார்க்கும்
உன் சந்தேகம் தீர்ந்திடக் கேட்பாய் !

வழியினில் பயமெனில்
மொழிந்திடும் அவன் நாமத்தை
உரக்கச் சொல் மனமே !
ஏனெனில் அவனே அந்தப்
பாதைக்கெல்லாம் தலைவன்;
அவன் பேரைச் சொன்னாலே
மரணமும் தலை தாழ்த்தி வண்ங்கிடுமே.

மனமே என் மனமே !
மனமே நம் நிஜ
வசிப்பிடம் செல்வோமே !
(மொழிபெயர்ப்பு -- ஸ்ரீரங்கம் மோகனரங்கன் )

***

No comments:

Post a Comment