Thursday, January 16, 2020

மார்கழி திருப்பாவை அனுபவம் 2

புள்ளும் சிலம்பின காண் - ஒவ்வொரு பாட்டிலும் உரையாசிரியர்கள் காட்டும் உன்னத அர்த்தங்களை இரசிக்க நாமும் ஒரு பக்குவத்திற்கு வரவேண்டும். தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறியிருக்கலாம். ஆனால் மென்மையான, அழகிய பண்பாட்டு உணர்வின் அதிர்வுகளில் நாம் கட்டைபாய்ந்து விட்டோமோ என்றுதான் தோன்றுகிறது.

மிகச்சிறந்த அனுபவம் கடவுளை உணர்ந்து பெறும் ஆனந்தம். அந்த பகவத் ஆனந்தத்தையே பூர்வ பக்ஷம் ஆக்கும் மனப்பக்குவமோ பாகவதர்களுடன் கூடி அந்தக் கூட்டமாக தெய்வத்தை அணுகுவதையே சிறந்ததாக நினைக்கிறது. நினைத்துப் பாருங்கள். சிருஷ்டி, பிறவி, பிறந்து பல அறியாமைகளில் உழன்று, பல அனுபவங்கள் நம் அகக்கண்ணைத் திறந்து, ஏதோ சன்னமாக இலட்சியத்தைப் பற்றிய மங்கலான உணர்வு தோன்றித் தோன்றி மறைய, அங்கும் அருளின் காரணமாக நமக்கு ஓர் தீரமான தாகம், ஏக்கம் பிறந்து, இன்னும் எவ்வளவோ நிலைகள் இருக்கின்றன அதையெல்லாம் கடந்து பின்னர் கடவுள் அனுபவம் என்று வரும்போது, ஒருவர் வந்து நின்று, ‘நீ இந்தத் துறைக்கே புதுசு போல இருக்கே!’. தெய்விக அனுபவம் என்பது நீ தனியாக இருந்து உனக்குள் அனுபவிப்பதா? உனக்குப் பக்குவம் போதவில்லை. கடவுளைத் தங்களுடைய எல்லாமுமாக பக்தி செய்யும் பாகவதர்களின் கூட்டம் அன்றோ முக்கியமான விஷயம். உலகியலில் அன்றோ ஒருவர் ‘இவ்வையம் தன்னொடும் கூடுவதில்லை யான்’ என்பது! பகவத் விஷயத்தில் வந்தால் ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?’ என்றும், ’பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’ என்றல்லவா உளத்தின் பாவம் இருக்க வேண்டும்! பிள்ளாய்! அதாவது அனுபவத்திற்குப் புதிதான ‘ப்ரொபேஷனர்’ என்று அர்த்தம்.

பிள்ளாய் எழுந்திராய் - என்று இவர்கள் தூக்கத்திலிருந்து அந்தப் புதியவரை எழுப்பவில்லை. எத்தனையோ பிறவி ஏங்கி அருளால் இப்பொழுது அப்பாடா என்று கடவுள் அனுபவத்தில் தான் தனியே தோயும் ஒருவரை எழுப்புகிறார்கள். எதற்கு? பகவத் விஷயத்திற்குத் தனிமை உதவாது. கூட்டம் வேண்டும். அடியார் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண்பயன் ஆவதே!

திருநாராயணபுரத்து ஆயி ஆச்சரியப்படுகிறார் தமது நாலாயிரப்படியில். இந்த மிக உன்னதமான ஆன்மிக அனுபவ நிலை இரண்டு இடத்தில் மட்டுமே உண்டு. ஒன்று ஸ்ரீஆண்டாளிடம் பார்க்கலாம். அதைவிட்டால் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளிடம் பார்க்கலாம். வேறு எங்கும் இதுபோல் தன்னுடைய தெய்விகப் பேற்றையும் தன்னளவிற்கென்று போற்றிக் கொள்ளாமல், ஊரனைத்தையும், உலகனைத்தையும், உயிர்கள் அனைத்தையும் அதற்கு உரியர் ஆக்கவேண்டும் என்ற இந்த ஆர்ஜவம் எங்கும் காணவரிது.

உலகத்தில் இருக்கும் ஸம்ஸாரிகள் தமஸினால் தூங்குவர்கள், விழிக்கும் காலம் வந்தால் விழிப்பர்கள். எம்பெருமானுடைய உறக்கமும், விழிப்பும் ஆவது என்ன? அடியார்களைக் காக்கும் உபாயத்தைச் சிந்தை செய்வது அவனுக்கு உறக்கம் என்று பெயர். அடியார்களின் ஆதுரமான குரல் கேட்டால் அதுவே அவனுக்கு விழிப்பு. ஆனால் ஸ்ரீஆண்டாளின் கூட்டத்தினருக்கு என்றால் உறக்கம் ஆவது என்ன? விழிப்பு என்பது எதனால்? விழித்தால் அவர்கள் ஈடுபடுவது எந்தச் செயலில்? எல்லாமே அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண குணங்களேயாகும் என்று அரும்பெரும் உரையிடுகிறார் திருநாராயண புரத்து ஆசாரியர்.

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் - தூங்கிய குழந்தையின் பக்கத்திலிருந்து மிகவும் பூப்போல் பக்குவமாய் எழுந்திருக்கும் தாயைப் போலே இதயத்தில் கோயில் கொண்ட ஹரிக்கு அலுங்காதபடி மெள்ள எழுந்து என்கிறார்கள். பிரஹ்லாதாழ்வானை மலையிலிருந்து கீழே தள்ளும் போதும் அவன் தன்னைப் பற்றிக் கவலைப் படாமல் தன் இதயத்தில் திகழும் ஹரியிடம் ‘பார்த்து’ ’பார்த்து’ என்று ஹரிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று வயிறு பிடித்தான் என்று கூடுதல் விளக்கம். இந்த நுட்பமான இதய உணர்வின் அதிர்வுகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் ஒரு காலத்தில் இருந்தார்கள்.

‘பேய்முலையின் நஞ்சுண்டு’ என்பதற்கு ஸ்வாபதேச உரை கூறுகிறது: ‘பேய் என்றால் பிரகிருதி, முலை என்றால் அஹங்கார மமகாரங்கள், அதன் நஞ்சு. இயற்கையில் நான் எனது என்னும் உலக ஆசை முற்றியவர்களாய் இருக்கும் நிலையையும் காட்டி, அதற்கு நேர் எதிர் நிலையில் ‘மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்’ என்பதைக் காட்டும் போதும் நம் உள்ளம் யோசிக்காமலா போகும்!

***
ஒரு முக்கியமான அர்த்தம் இந்த ‘கீசுகீசு என்னும் ஆனைச்சாத்தன் கலந்து’ என்னும் ஏழாம்பாட்டில் சொல்கிறார்கள். ஸ்ரீவைஷ்ணவம் என்பது என்ன? அதன் முக்கியமான அம்சம் எது? இந்தக் கேள்விக்கு ஊர்ஜிதமான விடையை இந்தப் பாசுரத்தின் உரைகளில் காணலாம்.

உலகமெங்கும் ஒரு வார்த்தை கேட்டிருப்போம். ‘தனக்கு மிஞ்சிதான் தானதருமம்’, ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’. அவரவர் தங்கள் குழந்தைகளை, தங்கள் சொந்தங்களைக் கவனித்தால் போதாதோ. அவருக்கு வாழ்ச்சி வந்தால் எனக்கு என்ன வந்தது? என்னதான் சொல்லுங்க யாருக்கோ நல்லது நடந்தா நமக்கு என்ன ஆச்சு? சும்மா இலட்சியவாதமா பேசாம நடைமுறையாகப் பேச வேண்டும். -- இப்படிப் பலவிதத்திலும் மக்களின் மனப்பான்மை கட்டப்பட்டு இயங்குகிறது. ஆனால் ஸ்ரீவைஷ்ணவம் இதைத்தான் மாற்றுகிறது.

‘ஒருவருக்கு தம் மனிதர்களுக்கு நடந்த நல்லதற்கு எப்படி மகிழ்ச்சி அடைவாரோ அதேபோல் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் யாருக்கு நல்லது நடந்தாலும் உள்ளத்திற்கு உண்மையாக யார் மகிழ்ச்சி அடைகிறாரோ அவருக்குத்தான் பகவத் சம்பந்தம் இருக்கிறது. கடவுளின் அருளும், தெய்வத் தொடர்பும் இருக்கிறது. மற்றபடி, வேறு என்ன உயர்வு ஒருவருக்கு இருந்தாலும் சரி, இந்த முக்கியமான அம்சம், இந்த பிரபஞ்சப் பொதுமையான இதயம், உலகம் தழுவிய உள்ளம் இல்லை என்றால் அங்கு பகவானின் தொடர்பே இல்லை என்கின்றனர் வியாக்கியான ஆசிரியர்கள்,

“பகவத் ஸம்பந்தம் மெய்யாகில் தன் வயிற்றில் பிறந்த ப்ரஜையினுடைய ஸம்ருத்திக்கு உகக்குமாபோலே, எல்லாருடைய ஸம்ருத்திக்கும் உகக்கவேணுமிறே.” (ஆறாயிரப்படி)

அதுவும் மற்றவருக்கு நன்மை உண்டானால் எப்படி மகிழ வேண்டும்? தன்னுடைய குழந்தைக்கு ஒரு நல்லது நடந்தால் பெற்றோர் எங்ஙனம் உகப்பர்களோ அப்படி உகப்போரிடம்தான் பகவத் ஸம்பந்தம் இருக்கிறது என்னும் ஆணிப்பொன் கருத்தை நமக்குத் தருகிறார்கள்.

இதுவே இப்படியிருக்க ஒரு திருமாலடியார் மற்ற பாகவதர்களைக் கண்டால் அவர்கள் உள்ளம் உவகையால் பொங்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டுமா?. அப்படி ஒரு பரஸ்பரம் தோன்றுமானால் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம், திருமால் தன் பைந்நாகப் பாயுடனும், அன்னையுடனும் வந்து அவர்கள் இதயத்தே வீற்றுவிட்டான் என்று. யாரையும் கேட்க வேண்டியதில்லை. பக்தர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அங்குதான் பகவான் மிகவும் விரும்பித் தானே வந்து அமர்வது என்பதைத்தான் முதலாழ்வார்களின் விருத்தாந்தம் நமக்குச் சொல்கிறது. ஆனால் இங்கோ பாகவதர்கள் என்று மட்டும் நிற்காமல் உலகம் அனைத்தையும் தழுவிய நன்மை விரும்பும் இதயத்தை முக்கிய அம்சமாக வைக்கின்றார்கள். எனவேதான் இது ஸ்ரீஆண்டாள் கோஷ்டி.

நன்மை செய்தவர்கள் ஒரு நாளும் நாசம் அடையார்கள் என்ற சர்வமங்களமான உத்தரவாதத்தைத் தந்தவன் ஸ்ரீகிருஷ்ணன். அவனுக்காக நோன்பு இருக்கும் ஸ்ரீஆண்டாள் குழாமோ ஸ்ரீகிருஷ்ணனையே மிஞ்சிவிடுவார்கள் போலும்! தன் குழந்தைக்கு ஏற்படும் நன்மைக்கு ஒருவர் எப்படிச் சந்தோஷப்படுவாரோ அப்படிச் சந்தோஷப்பட வேண்டும் மற்ற யாருக்கும் ஏற்படும் நன்மைக்கும் என்பதை அனுஷ்டித்துக் காட்டுகிற கோஷ்டி கோதையின் கோஷ்டி.

திருப்பாவை என்பதன் உள் மர்மமான கருத்துகளில் இது முக்கியமானது. அகில உலகின் நன்மைக்கும் வேண்டுதல், அனைவரின் வாழ்ச்சியில் தம்முடைய வாழ்ச்சி போன்றே மகிழ்தல். மற்ற பாகவதர்களைக் காண்பதும், அவர்களுடனான சங்கமும் பகவத் தரிசனத்தைப் போன்றும், அதைவிடவும் முக்கியமானதாக ஆகவேண்டும்.

இதை நன்றாக ஒருவர் உணர்ந்திருக்கலாம். ஆனாலும் அவ்வப்பொழுது பாகவத சங்கத்தின் மஹிமை மனத்தில் மங்கலாம், மறக்கலாம் அல்லது அவ்வளவு சொல்ல முடியுமா என்று சிறிதே மனம் தயங்கலாம். அப்படி ஒருவர் நன்கு அறிந்தும் வந்து கூட்டத்தில் கலவாமை உள்ளே இருந்தார், அவரை மற்ற சக தோழிகள் உணர்த்தி எழுப்பினர் என்னும் இந்த நாடக அம்சத்தால் நித்தியமான தத்துவம் ஒன்றை நமக்கெல்லாம் உணர்த்துகிறார்கள் திருவாய்ப்பாடிப் பெண்கள் ஆகிய ஸ்ரீஆண்டாள் குழாத்தினர். நாம் போன பாட்டைப் போல் தத்துவத்தின் உயர்நிலை அறியாத புதியரோ, அல்லது இப்பாட்டில் சொல்வது போல் அறிந்தும் மறந்த மதிகேடரோ இல்லையே.!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.

***
அரிய ஆன்மிகக் குறிப்புகளைக் கூறுகிறார்கள் ‘கீழ்வானம் வெள்ளென்று’ என்ற பாசுரத்தில். போன பாசுரத்தில் பாகவத சங்கம் என்பதன் உயர்த்தி தெரிந்தும் கொஞ்சம் தயங்கியவரை உணர்த்தினார்கள். இந்தப் பாட்டிலோ பாகவத சேஷத்வம் என்பதன் அருமை பெருமை நன்கு அறிந்து வைத்தும் ஒருவர் அனைத்துலகையும் கடவுள் உணர்வுக்கு எழுப்பும் உரிய காலம் இன்னும் வரவில்லை என்று கிடப்பாரை எழுப்புகிறார்கள். எது உரிய காலம்? எது காலம் கடந்தது? யார் முடிவு செய்வது?

ஸ்ரீகிருஷ்ண சைதன்யத்தில் தோய்ந்தவர்களோ பார்ப்பதையெல்லாம் விடிவுகாலம் விடிவுகாலம் என்பார்கள். பார்க்கப் போனால் ஒருவர் ஸ்ரீகிருஷ்ண சைதன்யம் ஆகிய இறை உணர்வு வாய்க்கப் பெற்றால் அவர் இருக்கின்ற இடத்தில் இருக்கும்வரை சுற்றியுள்ளோர் எல்லோருமே ஒரளவிற்கு ஸாத்விக குணம் எழுப்பப்பட்டவராய் கடவுள் உணர்வில் அப்பொழுதைக்குத் திளைப்பர். ஆனால் அந்த ஒருவர் நகர்ந்ததும் மறுபடியும் ஸம்ஸார இருள் கவிந்துவிடும். அது எப்படி உண்மையான விடிவு ஆகும்? நன்கு பகல் வந்துவிட்டாலோ ஊர் என்கிற உலக நினைவு விழித்துவிடும். பின்னர் தெய்விக நினைவு என்னதான் சொன்னாலும் டொமஸ்டிக் அவசரம் என்பதற்குப் பின்னாடிதான் என்று ஆகிவிடும். லௌகிகம் என்று ஒன்று இருக்கே! என்ற எண்ணம் ஓங்கிவிடும். அதனால்தான் விடியலுக்கு முந்தைய கருக்கல், பிரம்ம முகூர்த்தம் எழுந்த உணர்வு இன்னும் உலகியலால் கவ்வப்படாமல் இருக்கும் பொழுது இயல்பாகவே. அந்த நேரத்தில் காப்பி மட்டுமன்று, கிருஷ்ண ரஸமும் மிகவும் இனிக்கும், சுவையில் மனம் பொருந்தும்.

ஒரு சமுதாயத்திற்கும் தெய்விக முகூர்த்தம் என்பது உண்டு. அப்பொழுது எந்தக் கோணங்கியும் பேசாமல் மனித மனம் தெய்வத்தின் பிரஸன்னத்தைத் தேடும். அப்பொழுது வருகின்ற தெய்விக மனிதர்கள் சமுதாயத்தையே எழுப்பி விடுகின்றனர். அந்தச் சரியான சமயம் சிலருக்கு ஸ்புரிக்கிறது. ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் வருவதற்கு முன்னால் அத்வைத கோஸ்வாமிக்கு அது ஸ்புரித்தது. அவர் தொடர்ந்த பிரார்த்தனையில் உட்கார்ந்துவிட்டார். ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் பிறந்து வளர்ந்து தம் வாழ்க்கைப் பணியைத் தொடங்கிய பின் அத்வைத கோஸ்வாமியைப் போய் பார்க்கும் போதுதான் தெரிந்தது தன் பிரார்த்தனை செவிசாய்க்கப்பட்டது என்று.

கிழக்கிலிருந்து பாரதத்தின் ஞானம் அமெரிக்காவிற்கு வருகிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே வால்ட் விட்மன் பாடினார்; ரால்ஃப் வால்டோ எமர்ஸன் பேசினார்; பின்னால் எமர்ஸனின் வம்ச நபர் ஒருவர் சுவாமி விவேகாநந்தரின் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமி விவேகாநந்தர் வைத்திருந்த குருதேவரின் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்க மாது ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். ‘இவர் பல ஆண்டுகள் முன்னமேயே என் கனவில் வந்திருக்கிறார்’ என்று சொன்னதும் எல்லோருமே வாய்பேசாமல் சிந்தனை வயப்பட்டார்கள்.

மனித குலத்தின் வாழ்வில் பகல் என்னும் பொழுதும் இருக்கிறது. இரவு என்னும் பொழுதும் இருக்கிறது. பகல் எல்லாம் உண்டி உடை உறையுள் என்று ஓடி அலையும் ஜீவன் இரவில் அறிவு அழிந்து இருள் மூடி உறக்கத்தில் ஆழ்கிறது. கடவுள் உணர்வு எழப்பெற்றவர்களுக்கு இரவு என்பது கடவுள் போர்த்திய மேலாடை. மற்றவர்களுக்கு அதே கடவுள் உணர்வை எழப்பண்ண வேண்டும் என்று துடிக்கும் ஸ்ரீஆண்டாள் கோஷ்டிக்கு வாய்ப்பான நேரமே பகலும் தோன்றாது, இரவும் மறையாது சந்திக்கும் வேளை. உலகியலும் தோன்றாமல், அஞ்ஞானமும் மூடாமல் இயற்கையே ஒரு விரிசல் விட்ட நேரம் காலை வெள்வரைப்பதன் முன்னர் இருக்கும் யாமம். அந்த நேரத்தை நழுவ விடக் கூடாது என்று கூட்டாளியைக் கூப்பிடுகிறார்கள் எட்டாம் பாட்டில்.

இவர்களுக்கு என்ன வந்தது? யாருக்கு இறையுணர்வு வந்தால் என்ன வராவிட்டால் என்ன? தங்கள் வேலை முடிந்ததா போக வேண்டியதுதானே? அப்படிப் போயிருந்தால் உலகம் வெறும் வசதிகள் பெருகிய காட்டுமிருக வாழ்க்கையாய் போயிருக்கும். தாமாய் விழித்தவர் நாமாய் விழிக்க இயலாது நாம் படும் பாட்டைக் கண்டு நின்று காத்து புரியும் அருள்தான் திருப்பாவை. அதுவும் இந்தப் பாசுரம் கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு மேய்வான் பரந்தன காண். ஸ்வாபதேச உரை சொல்கிறது. இருட்டில் விலகிப் பரந்த எருமைகள் தெய்விக மனிதர்களின் சகவாசத்தினால் தற்காலிகமாக விலகிய அஞ்ஞானங்கள். அவர்கள் போன பின்னால் மீண்டும் வந்து கவிந்துவிடும். ஆம் நாம் பெற்ற வாய்ப்பை நம்மில் நிலைக்கச் செய்வது என்பது மிகவும் முக்கியம்.

போவான் போகின்றாரை --- போவதே பயனாய்ப் போவாரை. அர்ச்சிராதிகதியில், அக்ரூரர் பயணத்தில், திருவேங்கட யாத்திரையில் போலே போவதே பயனாய்ப் போவதுவாம். நாம் ஓரடி பகவானை நோக்கி நடந்தால் அவன் பல அடிகள் நம்மை நோக்கி ஓடிவந்து விடுகிறான். நம்முடைய ஆர்வம் அவனை நோக்கித் திரும்பியது என்பது அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல். திரும்ப மாட்டோமா என்று படுகாடு கிடக்கிறான் யுகம் யுகமாக. சந்திர புஷ்கரணிக் கரையில் ஏன் அரங்கன் படுத்திருக்கிறான் என்றால் நான் வரப் போகிறேன் என்று முன்னரே அவனுக்குத் தெரியும். என்னைப் பிடிப்பதற்காக வந்து படுத்துக்கொண்டு விட்டான் என்கிறார் பராசர பட்டர். சிறு குழந்தையாய் என்னை எந்தையார் கீழே சரணாகப் பெருமாள் சேவி! என்று சொல்லிக் காட்டியது ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை. ஆனால் நான் பிறகு வளர்ந்தவுடன் என்ன நினைத்தேன்... நானாக ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தில் ஈடுபட்டேன் என்று. பிடிக்கறதுக்குத்தான் முன்னாடியே வலை போட்டு உட்கார்ந்திருக்கிறதே ஓர் ஆள். அப்புறம் என்ன வீம்பு நான் செய்தேன் என்று பேசுவதற்கு?

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்

டபுள் கம்பளி போட்டுத் தூங்கப் போறோமா? இல்லை குரல் கொடுப்போமா? வாய்ப்பு நம் கதவைத் தட்டுகிறது!

***
தூமணிமாடத்தில் கடவுள் உணர்வில் தோய்ந்தவர், ஆனாலும் அடியார் குழாங்களோடு கலந்து அனைவரையும் பகவத் விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆர்த்தி மிகவும் உள்ளவர்; ஆனாலும் பகவானிடம் ஈடுபடும் பரவசத்தால் தம்மை மீறித் தம்மையே இழந்துவிடுபவர் அப்படிப்பட்ட ஒருவரை எழுப்புகிற பாசுரம் ‘தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய’ என்னும் பாசுரம்.

உலக ஆசைகளில் ஒரு ஜீவன் தன்னை இழத்தல் நமக்குப் பழக்கம். ஆனால் கடவுள் என்ற ஒன்று ஒருவருக்கு டெம்ப்டேஷன் என்ற இடத்தைப் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு பகவத் விஷயத்தில் ஈடுபாடு என்பது உண்மையில் நமக்குப் புரியாத ஒன்று. அப்படி ஒருவர் இருந்தால் நம் மனம் அதில் அவநம்பிக்கை கொள்ளும். புலனிச்சைகளுக்கு ஆட்படுதல் நமக்குப் பழகின விஷயம். ஆனால் பகவானுக்கு ஆட்படுதல் என்பது நமக்குச் சற்றும் புரியாத விஷயம். ஆனாலும் அதை ஒப்புக் கொள்ள மாட்டோம். நாமும் நெகிழ்ந்தது போல் பாவிப்போம். ஆனால் நம் கவனம் எல்லாம் எங்கிருக்கிறது என்பது நமக்கே தெரியும். யாராவது கொஞ்சம் பகவத் விஷயத்தில் சிறிது அளவிற்கு அதிகமாக ஈடுபட ஆரம்பித்து விட்டால் அவரைச் சுற்றியுள்ளோர் மிகவும் கவலைக்கு உள்ளாகிவிடுவர். அவரே கொஞ்சம் தெளிந்தவுடன் தன்னைத்தானே உஷார் படுத்திக் கொள்வார். ஆனால் மனித குலத்திற்கு ஆன்மிக போதம் அருள வருகின்ற அவதார புருஷர்களின் அன்றாடக் கவலையோ வேறு மாதிரியானது.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஒரு சின்ன விஷயம் போதும் அவருடைய மனம் பரவசமாகி பகவானிடம் ஆழ்ந்துவிடும். சமாதி நிலையில் ஆழ்ந்த அவருடைய மனம் இக உலக பிரக்ஞைக்கு வருவதற்குக் கொஞ்ச நேரம் பிடிக்கும். சில சமயம் வராமலேயே நெடுநேரம் ஆகிவிட்டது என்றால் அவருடைய அணுக்கச் சீடர்கள் அவருடைய காதில் பகவந் நாமங்களை உரக்கச் சொல்வார்கள். புற உலகிலிருந்து ஏற்படும் பகவந் நாம ஒலிகள் அவருடைய உணர்வைப் பசுவைப் புல்லைக் காட்டிக் கொண்டு வருவது போல் இக உலகிற்குக் கொண்டு வரும். சில சமயம் தாமே தம் நிலை இழக்கும் தருவாயில் பின் தலையில் வேகமாக அடித்துக் கொள்வார். ‘இப்பொழுது இல்லை; இப்பொழுது இல்லை. பேசாமல் இரு. அம்மா! கொஞ்சம் நேரம் கழித்து ஆகட்டும்’ என்றெல்லாம் அவர் மிக அக்கறையுடன் தமக்குள்ளேயே யாரிடமோ வாதம் பண்ணிக்கொண்டு இருப்பார். அவருக்கு அவருடைய கவலை. அவர் வந்த பணி மனிதர்களுக்கு நல்வழி காட்டி ஆன்மிக போதம் பெற வழிகாட்டுவது. மற்றவர்களைக் கவனிக்க வேண்டிய நேரத்தில் மனம் கடவுளிடம் தோய ஆரம்பித்தால் பின்னர் வந்த பணி என்னாவது?

இந்தச் சித்திரத்தைத்தான் நாம் ‘தூமணி மாடத்து’ என்ற பாசுரத்தில் பார்க்கிறோம். ‘உன் மகள்தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?’ என்றெல்லாம் ஏசிப் பேசி தர்க்கமிடுவதும், அதைக் கேட்டு உணர்ந்து எழுவதும் ஒரே ஜீவனின் உள்ளோடும் அவஸ்தைகள்தாம். அங்கு பலர் இருந்தாலும் அவர்கள் அனைவரிலும் இந்த அவஸ்தை படுவதும் ஒன்றேதான். ‘துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே’ என்று கூப்பிடுவது ஸ்ரீகிருஷ்ண போதத்தில் ஒன்றிப்போன ஜீவனை. ஏன்? நாம் நம்முடைய நலத்தையே கருதியபடி ஒன்றிப்போய்விட்டால் உலகை உணர்த்துவது யார்? ஊரைக் கூட்டுவது யார்? மற்றவர்கள் எல்லாம் பகவத் விஷயத்தை இழப்பார்களே!

ஸ்ரீவைஷ்ணவமே இதில்தானே ஆரம்பம்! ஊரை உலகியலில் முழுகி இறக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றாமல் நாம் மட்டும் யோகாவஸ்தையில் தோய்ந்து பரகதி அடைவதா என்ற உய்யக்கொண்டாருடைய கவலை அல்லவோ அஸ்திவாரம்? எல்லாரும் போந்தாரோ? போந்தார். போந்து எண்ணிக்கொள் - என்பதல்லவா அந்தப் பெரும் அக்கறை!

உணர்வில் தோய்ந்த தலைவியின் தாயார் ஏன் இவ்வளவு கஷ்டப் படுகிறீர்கள் எழுப்புவதற்கு? பகவந் நாமங்களைச் சொல்லுங்கோள்! என்கிறாள். அதற்கு எழுப்புபவர்கள், நாமமா? ஸஹஸ்ர நாமங்களையுமே கூப்பிட்டு முடித்து விட்டோம். அது என்ன தனித் தோய்வு? என்கிறார்கள்.

புரியவில்லை நமக்கு என்றாலும் ஏக்கத்துடன் பொறுமை காத்தல் நல்லது அல்லவா!

***

No comments:

Post a Comment