Wednesday, January 29, 2020

கல்வியும் மரணமின்மையும்

உயிர்கள் பிறப்பதும், ஜீவர்கள் இறந்து போவதும் உலகில் கணம்தொறும் நடந்தவண்ணம் இருக்கிற விஷயம். பிறப்பிலிருந்து இறப்புவரை அனைத்து செயல்களும் நம் இச்சையில்தான் நடக்கிறது என்று யாரும் சொல்லத் துணியோம். இதில் கல்வி, உணர்வு என்பது நன்கு முதிரும் நிலை என்பது பொதுவாக மனித உயிர்களில் சிறப்பாகத் திகழ்கிறது என்று நம்புகிறோம். அதிலும் மிகவும் கருத்துடன் தம் வாழ்க்கையைக் கல்வியினாலும், உணர்வின் பெருக்கத்தினாலும் விழுப்பம் கொண்டதுவாகச் செய்பவர்கள், வாழ்க்கையைப் பொருள் நிறைந்ததாகச் செய்துகொள்கின்றனர் எனலாம்.

உயர்ந்த வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பது என்பது மனிதரிடையே பொதுவாகக் கல்வி, படிப்பு, சிந்தனை, தியானம் என்ற சாதனங்களின் வழியாக நடக்கிறது. இதையே வேதாந்தம் ச்ரவணம், மனனம், சிந்தனம், நிதித்யாஸனம் என்ற படித்தரங்களாகக் கூறுகிறது. எளிமையாக உரைக்குமிடத்து, இதனையே படித்தல், கற்றல், ஆழ்ந்து சிந்தித்தல், மனம் குவிந்து தியானம் புரிதல் என்று கூறலாம். இத்தகைய ஆன்மிக உயர்வுக்கான பயிற்சியையே போதாயன தர்ம ஸூத்ரம் வேறொரு விதமாகக் காட்டுகிறது. ஸமிதை என்பது அக்காலத்தில் தீமூட்டி அமர்ந்து வேள்விகள் புரிதலும், பிரம்மத்தைப் பற்றிய விசாரங்கள் புரிதலும், சீடர்கள் குருவை அண்டித் தம் ஐயங்களை நீக்கிக் கொள்ளும் கற்றலும் நடைபெறுவதற்கான ஒரு குறியீடாகச் சுட்டப் படுகிறது. ஏனெனில் ஸமிதை என்னும் சுள்ளிகள் மிகவும் தேவை தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொள்ள. எனவே ஒரு சீடர் குருவிடம் போகும் பொழுது அவருக்கு மிகவும் வேண்டியதான ஸமிதைகள் என்பனவற்றைச் சேகரித்துக் கொண்டு செல்லுதல் உரிய கிரமமாகக் கருதப்பட்டது. ஒரு குருவை அண்டிக் கற்றல் என்பதுவே ஸமித்பாணியாகச் செல்லுதல் எனப்பட்டது. கல்வியின் பயன் பிரம்மத்தை அறிதல். அந்தப் பிரம்மத்தை அறிந்துகொள்ள வழியாக இருக்கும் கல்வியே ஒரு விதத்தில் பார்த்தால் பிரம்மம் என்று கருதப்பட்டது. வேதம் என்பதை பிரம்மம் என்ற பெயராலும் குறிப்பதுண்டு. குறிப்பாக சப்த ப்ரம்மம் என்றும் சொல்வதுண்டு. கடவுளை அறிந்து தொழுதலே கல்வியினால் ஆய பயன் என்பதால்தான் திருவள்ளுவரும் ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்’ என்றார்.

போதாயன தர்ம ஸூத்ரத்தில் வருகின்ற ஒரு கருத்து கடவுளைக் காட்டும் கல்வியின் முக்கியத்தையும், சிறப்பையும் கூறுகிறது. உலகைப் படைத்த ஆதிகாரணமாகிய பிரஹ்மம் உயிர்களை முடிவுக் காலத்தில் மரணத்திடம் கொடுத்ததாம். ஆனால் வேதத்தைக் கற்கும் பிரஹ்மசாரியை மரணத்திடம் கொடுக்கவில்லையாம். ஏன்? பிரஹ்மத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால். அதாவது பிரஹ்மம் என்றாலே கடவுளைக் காட்டும் படிப்பின் உருவம். மரணம் பிரஹ்மத்திடம் கேட்டதாம் - பிரஹ்மசாரியிடமும் தனக்கு உரிமை வேண்டும் என்று. அதற்கு பிரஹ்மம் சொல்லிற்றாம் - எந்த இரவில் படிப்பிற்காக, கற்பவர் விளக்கு ஏற்றவில்லையோ அந்த இரவில் உனக்கு உரிமை உண்டு.

”ப்ரஹ்ம வை ம்ருத்யவே ப்ரஜா: ப்ராயச்சத் தஸ்மை ப்ரஹ்மசாரிணம் ஏவ ந ப்ராயச்சத்; ஸோ அப்ரவீத் அஸ்து மஹ்யம் அபி ஏதஸ்மிந் பாக இதி யாமேவ ராத்ரிம் ஸமிதம் நா~~ஹராதா இதி’ (போதாயன தர்ம ஸூத்ரம்)

படிக்கிறவர்கள், பகவானை அடைய தவம் மேற்கொள்பவர்கள் மரணம் அடைவதில்லையா என்பது அல்ல பொருள். வாழ்வின் உயர்ந்த பொருள் என்னவோ அதை நாம் நன்கு உணர்ந்துகொண்டு விட்டால் பின்னர் இந்தப் பிறவியால் ஆய பயனைப் பெற்று விடுகிறோம். தோன்றிமறையும் உடல் அன்று நாம் என்பதை உணர்ந்து உணர்வே வடிவான மரணமற்ற நிலையை எய்துகிறோம் என்பது இதன் உட்பொருள். அந்த உயர்நிலையை எய்தப் பெற்றவர்கள் மட்டுமன்று, அந்த உயர்நிலைக்காகக் கடவுளை அறியும் ஆத்ம சாதனத்தில் முயல்பவரும் கூட மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் என்பது எத்தகைய உயர்ந்த ஒரு சித்திரம்! கல்வியின் பயன் என்ன, அதன் சிறப்பு யாது என்பதை நாம் உணர வேண்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment