என்றோ ஒருவர் வெட்டிய கேணி வழிச்செல்வோர் தாகம் தணித்துக் கொண்டே இருக்கும். யாரோ ஒரு மகராசன் என்று பொது நன்றியாக மாறி தனிப் பெயர் மறைந்தாலும் அந்த நன்மை மறைவதில்லை. ஊருண் கேணியாக வாழ்ந்தவர்களையும் தனித்தனியாக நினைவு கொண்டு வாழ்த்த வேண்டும். விசிஷ்டாத்வைத தரிசனம் ஸ்ரீராமானுஜர் காலம் தொடங்கி எம்பெருமானார் தரிசனம் என்று கொண்டாடப்பட்டது. பின் வந்த பெரியோர்கள் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை 74 துறைகள் கொண்ட தொண்டனூர் ஏரி என்று உருவகமாகச் சொன்னார்கள். ஸ்ரீராமானுஜர் தொண்டனூரில் வெட்டிய ஏரிக்கு 74 படித்துறைகளாம். அதேபோல் 74 சிம்ஹாஸனாதிபதிகள் என்னும் ஆசாரியர்கள் மூலம் வழங்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவமும் ஊருக்குப் பொதுவில் வைத்த ஏரியாக உருவகித்தார்கள்.
திருவாய்மொழிக்கு வ்யாக்கியானமாக அமைந்த பகவத் விஷயத் தொகுதியும் பின் வரும் சந்ததிக்காக வைத்த ஊருண் கேணிதான். அதை அச்சில் ஏற்றிய ஆரம்பகாலத்து அரையர் பதிப்பு முதலியவையும் 1870ல் வந்த தெலுங்குலிபி பதிப்பு பகவத் விஷயம், 15நூல்கள் அடங்கியது மிகப் பெரிய ஊர் வாழும் நன்மைகள். 1925ல் ஸ்ரீ சே.கிருஷ்ணமாச்சாரியாராலும், ஸ்ரீ வை மு சடகோபராமானுஜாசாரியாராலும் பதிப்பிக்கப்பட்ட பகவத் விஷயம் பிரஸித்தியானது. ஊருண் கேணியான பதிப்பு. இதை எடுத்துக்கொள் என்று என் பெரியப்பா தந்தபொழுது நான் வாங்கிக் கொள்ளவில்லை. பின்னர் இதை நான் தேடி அலைந்தபோது அவரே அதைச் சொல்லிக் காட்டினார். அது கிடைப்பது கஷ்டம் என்றார். ஆம் அந்தக் காலத்தில் அந்த முழு செட் கஷ்டம்தான். ஆனாலும் முயன்றேன்.
இதைப் பெற நான் முயன்ற காலத்தில், எனது நண்பர் டி. ரமேஷ் தமது அத்தைவீட்டில் அந்த ஸெட் இருப்பதாகவும், அத்தையிடம் கேட்டுப் பெற்றுத் தருவதாகவும் சொல்லி அதன்படியே பெற்றுத் தந்தார். அந்த ஸெட் ஸ்ரீ வி. ஆர். எதிராஜுலு செட்டியார் அவர்களுடையது. ஸ்ரீ செட்டியார் அவர்கள் பேப்பர் கம்பெனியில் பெரிய பதவியில் இருந்தவர். உலகப் போர் காலங்களில் ஸ்ரீஅண்ணங்கராச்சாரியாருக்கு பேப்பர் தட்டுப்பாடு இல்லாமல் கவனித்துக் கொண்டவர். ஸ்ரீபகவத் விஷயம் காலக்ஷேப கோஷ்டிகளை 1940, 1950 களில் சைதாப்பேட்டை வட்டாரங்களில் நன்கு நடத்தி வைணவ உணர்வை வளர்த்தவர். என்றோ இவர் வாங்கிப் பயன் படுத்திய பகவத் விஷயம் நூல் தொகுதி எனக்குப் பயன்பட்டது, அதற்குக் காரணமான ரமேஷின் அத்தையை நினைக்கவேண்டும். ஸ்ரீ செட்டியார் அவர்களது மருமகள் ரமேஷின் அத்தை. நன்மை என்னும் ஜீவநதி என்றும் வற்றுவதில்லை. ரமேஷுக்குத்தான் பெரும் நன்றி உரித்தானது. ஆனாலும் அவருக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்திக்கொள்ள என் சுயநலம் விடவில்லை.
இவ்வாறு கிடைத்தது என்ற விவரத்தை என் பெரியப்பாவிடம் சொன்ன பொழுது அவர் சொன்னது நினைவில் இருக்கிறது: ‘உனக்குக் கிடைக்கும்..’ உலகியம் ரீதியில் கணக்கு பார்த்தால் என் வாழ்க்கை பிழைக்கத் தெரியாதவனின் வாழ்க்கை. ஆனால் நூல் உணர் வாழ்க்கை என்று பார்த்தால், பேரியல் வாழ்க்கையாகத்தான் என் கணக்கு சொல்கிறது. கணக்கில் மிஸ்டேக் என்று நீங்கள் சொன்னால் என் காதில் விழப்போவதில்லை.
***
No comments:
Post a Comment