Sunday, January 19, 2020

சிராத்தம்

சிராத்தம் என்றதுமே worship of the departed souls என்பதுதான் நம் நினைவுக்கு வரும். இது என்ன பெரிய சடங்கு? பல இனங்களிலும் இது போல் இறந்தவரைத் தொழுதல் என்பது இருக்கத்தான் போகிறது. வேத நெறியிலும் அப்படித்தானே சொல்கிறார்கள்? அதைத்தானே ஹிந்து மதம் போற்றி வைத்திருக்கிறது? சிராத்தம் என்பதை இவ்வாறு இறந்தோர் வழிபாடாக மட்டும் ஹிந்துமதம் கருதவில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இறந்தவர்களை நினைந்து தொழலாம். நான் என் வீட்டில், அவர் அவர் வீட்டில் -- இப்படி அவரவர் வீட்டுப் பிரச்சனையாக ஆகிவிடும் ஒன்று ஹிந்து மதத்தால் பொதுமைபடுத்தப் பட்டது. உயிரோடு இருக்கும் வரையில்தான் அவர்கள் உங்கள் சொந்தக்காரர்கள். இறந்தபின் உயிர்கள் உயிர்க்குல முழுமைக்கும் பொதுவான சொந்தம். உடல் சம்பந்தம் அற்றபின் ஜீவனானது எங்கும் பிறவி எடுக்கலாம். யார் வீட்டிலும் பிறக்கலாம். எந்தத் தேசத்திலும் பிறக்கலாம். அது மட்டுமன்று. எந்த உயிரினமாகவும் பிறக்கலாம். அதனதன் கர்ம விளைவுகளாலும், காலம், நியதி முதலிய தத்துவங்களாலும் தீர்மானம் ஆகவேண்டியவை அவை. அதற்கெல்லாம் அடிப்படையாக 'பித்ருக்கள்' (இறந்த உயிர்கள்) அனைத்து உயிர்க்குலப் பொதுமைக்கும் சொந்தமாக ஆன நிலையில் இருந்தால்தான் இந்த கர்ம கதிகள் இயங்கும். எனவேதான் யார் வீட்டு பித்ருக்களாய் இருந்தாலும் சரி அவர்கள் எல்லாம் பித்ரு தேவதைகள் என்ற நித்ய தேவதைகளின் லோகத்தை அடைந்துவிடுகின்றன என்கிறது ஹிந்து மதம்.

எனவேதான் மனிதர் ஈமக்கிரியைகள் வேண்டுமானால் தம் வீட்டுச் சொந்தக் காரர்களுக்கு என்று செய்துவிட முடியும். ஆனால் பக்ஷம் ஒரு முறை, மாசம் ஒரு முறை, பர்வத்திற்கு ஒரு முறை, அயநத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை நினைந்து தொழுதல் என்ற சிராத்தத்திற்கு இலக்காவோர் அவரவர் சொந்தங்கள் என்ற இறந்த ஆவிகள் என்பதையும் கடந்து பித்ரு லோகத்தில் பித்ரு தேவதைகளுடன் சேர்ந்துவிட்ட பித்ருக்களே சிராத்தத்தின் நோக்கம். (பக்ஷம் -- 15நாள்; பர்வம் --3மாதம்; அயநம் -- 6மாதம்). அந்த உயிர்கள் உடல், அதைச் சார்ந்த பிறவி, அதைச் சார்ந்த குடும்பம், பெயர் முதலியன நீங்கிய காரணத்தால் பொதுமை அடைந்துவிடுகின்றன. பித்ரு தேவதைகள் என்ற பொதுக்கணக்கில் பிரபஞ்சப் பொதுமையில் ஐக்கியம் ஆகின்றன. நமது சொந்தங்கள் என்று நினைத்துப் பார்க்கவும் ஒரு பரிமாணத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த இறந்த உயிர்களின் பொதுமையான நிலையான பித்ருக்கள் என்பதைக் குறித்துத்தான் சிராத்தம் என்பது வேத நெறியால் சொல்லப்படுகிறதும், ஹிந்து மதத்தால் போற்றப் படுவதும்.

அதாவது இந்த வாழ்க்கையும், உலகமும், அதன் ஆக்கங்களும், அனுகூலங்களும் அனைத்தும் நம்முன் வாழ்ந்து மறைந்த உயிர்க்குலம் அனைத்தும் சேர்ந்து இயற்றி, உருவாக்கி நம் கையில் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் விஷயங்கள். நம் கருத்துகள், பார்வைகள், நம் மொழியின் சொற்தொகைகள், ஏன் நம் கனவுகள் என்றபடி நாம் சென்ற காலத்து உயிர்களுக்குக் கடன்படாத ஒன்று கூட நம் வாழ்வில் இல்லை. என் முகவெட்டை எனக்குத் தந்தது எத்தனையோ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ காடுகளில் வாழ்ந்த மிருகம் போன்ற மூதாதையன். என் பேச்சில் என்றோ மறைந்த மூது உயிர்களின் ஒலி முயற்சிகளின் வெற்றிகள் அடங்கியிருக்கின்றன. என் இன்றைய எழுத்தின் வடிவம் துலங்குவதற்கு எததனையோ மூதாதையரின் முட்டிகள் நொந்தன. நான் நினைக்காமல் இருக்கலாம். ஆனால் என் உயிரின் ஒவ்வொரு கணத்திலும் ஆதிகால மூச்சுகள் வந்துபோன வண்ணம்தான் உள்ளன.

அதெற்கெல்லாம் எங்கே நேரம் என்று நான் கேட்பதால் காலம் என்னை மன்னித்து விடுவதில்லை. எள்ளையும், நெய்யையும் நீரிலும், நெருப்பிலும் சொரிந்துவிடுவது மனிதர் தாம் அறிந்த விதத்தில் தம் காலத்தில் இயற்றிய புறச் சடங்கு வடிவங்கள். ஆனால் சிராத்தம் என்பதன் மெய்க்கருத்தாவது யாது? என்று நம் ஒவ்வொரு நடவடிக்கையும் சென்ற கால உயிரினத்தின்பால் அர்த்தமுள்ள நன்றிக்கடனுடனும், ஆழ்ந்த புரிதல் உணர்வுடனும் நடைபெறுகிறதோ அன்றுதான் நம் வாழ்வில் சிராத்தம் ஒழுங்காக நடைபெறுகிறது. இங்கு அவர்களுக்காக ஜலத்தில் விட்டால் அது அங்கு போய்ச் சேருமா? சேராது. இது சொன்னவருக்கே நன்கு தெரியும். இங்கு நெருப்பில் இதையெல்லாம் போட்டால் அதெல்லாம் அங்கு அவர்களுக்குப் போய்ச் சேருமா? சேராது. இதுவும் அன்று செய்தவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் ஏன் சிராத்தம் என்று கொண்டுவந்தார்கள்? செய்தார்கள்? அவர்கள் கொண்டுவரவில்லை. வாழ்க்கையின் தன்மையே செம்பாதி சிராத்தமாக இருப்பதை உணர்ந்தார்கள். அதை உரைத்தார்கள். அவ்வளவே.

வாழும் ஒவ்வொரு கணமும் சென்ற கணத்திற்கு நன்றி கூறியவாறே முன்னேறிச் செல்கிறது. இனிவரும் கணமும் தன்பால் நன்றியுடன் இருக்கும் என்று ஏங்கித்தான் தானும் கடந்தகாலத்தில் போய் மறைகிறது. மறைந்த உயிர்கள் எங்கும் போய்விடவில்லை. நம் வாழ்க்கையின் சூழலாகி, நம் மனத்தின் கருத்துகளாகி, நாம் வாழ அனைத்துமாகி நம்மைத் தாங்கும் தாய்மையாய், நமக்காக ஏங்கும் தந்தைமையாய் ஸர்வ பூதங்களிலும் சாக்ஷியாகிச் சுற்றியெங்கும் தொடர்கின்றன. நாம் நம் அஹங்கார ஆடம்பரத்தில் அனைத்தையும் அழித்து, அழிவினால் களைத்து, அழிவின் விளைவுகளால் அலைந்து, அவதியுற்று ஆடுகின்ற பிள்ளை ஆட்டங்களைப் பரிதவிப்புடன் அவை தொட்டில் காக்கத்தான் செய்கின்றன. என்று நாம் இயற்கையின் அடிவேரான தர்மம் என்ற பொன்னிழையைத் தொடுகின்றோமோ அன்று அவை தம் கண்பனியை வழிக்கின்றன. இந்த உலகை நாம் சிருஷ்டிக்கவில்லை என்பதை என்று உணர்கிறோமோ அன்றே நம் வாழ்வில் சிராத்தம் வடிவு பெறுகிறது. நமக்கு வந்து சேர்ந்த உலகை இன்னும் சிறந்ததாக ஆக்கி இனிவரும் சந்ததிகளுக்கு அளிக்க நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சிராத்தச் சடங்கேயாகும். அனைத்து உயிரினங்களையும் போற்றும் பண்பை நாம் என்று அடைகிறோமோ அன்று நம் வாழ்வில் ச்ராத்தம் நடைபெறுகிறது. பண்டைய உயிர்கள் தந்து போன வளங்களை நன்றியுடன் என்று பேணத் தொடங்குவோமோ அன்றே நம் பித்ருக்கள் ஆனந்தத்தில் நம்மைச் சுற்றிப் பிரஸன்னர்களாய் வாழ்த்துகின்றனர். உயிர்க்குல முழுமையிலும், பொதுமையிலும், முக்காலமும் பயிலும் உயிர்க்குலத் தொடர்ச்சியிலும் நாம் நம்மைத் தகவுற நன்றியுடன் பொருத்திக்கொள்ளுதலே சிராததம் எனபதின் உள் கருத்து.

வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதிகள், இதிகாசம், புராணம், பாஷ்யங்கள், வியாக்யானங்கள், ஆகமங்கள் என்று ஒன்றும் மனிதனின் அறிவு நெறியைப் புறக்கணித்துப் பேசவில்லை. முதலில் நானும் சிறுவயதில் ஏதோ மதம் என்றால் மாய மந்திரம் வெவ்வேறு உலகங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அனைத்து சித்தாந்தத்து ஆசாரியர்களும் ஒருமிக்கச் சொல்லும் ஒரு கருத்து மோக்ஷம் என்பதற்கு முதலில் வேண்டியது, முதல் படியே சரியான கருத்து என்பதுதான். எனவே கருத்தியல் தெளிவு என்பதை எந்த மதம், எந்த தத்துவ அணுகுமுறை முக்கியம் என்று கருதுகிறதோ இல்லையோ ஹிந்து மத சாத்திரங்கள் கருதுகின்றன என்பது எனக்கு நிச்சயமான ஒன்று. ஆனால் நேரடியாகவே கருத்துகளை தத்துவ விரிவுரையாளர்கள் போன்று உயர்தள மொழித்தரத்திலேயே கூறியிருக்கலாமே. ஏன் பலவிதமாக நாம் நுணுகி ஆய்ந்து அதன் தாத்பர்யங்களைக் கண்டுபிடித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் குறியீடுகளான விவரணைகளாய்க் கொடுத்திருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் முன் நாம் நெடிய பண்பாட்டு வரலாற்று நிலைகளை யோசிக்க வேண்டும். இன்றே நுட்ப மெய்யியல் மொழியில் கூறினால் எவ்வளவு பேரால் புரிந்துகொண்டுவிட முடியும் என்னும் போது அன்றைய காலங்களில் மக்கள் புரிந்துகொள்ளும் சித்திரங்களாகத்தான் பெரும் கருத்துக்களையே கூறவும் முடியும். ஆயினும் அதையும் மீறிப் பல தத்வார்த்தமான நூல்கள் எழுந்து இன்று மட்டும் வந்து சேர்ந்திருப்பது ஆச்சரியமே.

மஹாபாரதம், அநுசாஸன பர்வம், சிராத்தம் என்பது எப்படி ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. முதலில் இப்படிபட்ட பழைமையான சடங்கு ஒன்றிற்கு தோற்றுவாய்க் கதைகள் நினைவில் வைத்துப் பதியப்பட்டிருப்பது மிகவும் வியப்பிற்குரியது. நிமி என்பவரால் ச்ராத்தம் என்பது உண்டாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிமி என்பவர் அத்திரி மகரிஷியின் வம்சத்தில் உதித்தவர். தத்தாத்ரேயர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். நிமியின் பிள்ளை ஸ்ரீமான் என்பவர் இறந்தபின்பு அந்த துக்கத்தை அகற்றவேண்டி சிராத்தம் என்ற இந்தச் சடங்கைச் செய்தார் என்று கூறுகிறது மஹாபாரதம். நிமி ச்ராத்தம் என்ற சடங்கைச் செய்தார் என்பதால் ஈமக் கிரியைகளைக் கண்டுபிடித்தார் என்று பொருள் அன்று. ஈமக்கிரியைகள் இறந்தநிலைக்கு நடத்தப்படுவது. அது இயற்கையிலேயே ஆதிகாலம் தொட்டு வருவது. ஆனால் நிமியின் மனத்தில் அதையும் தாண்டி ஏதோ சிந்தனை ஓடியிருக்கிறது. எனவேதான் பித்ருதேவதைகளை வழிபடும் சடங்கான ச்ராத்தம் என்பதைக் கண்டுபிடித்தார். மஹாபாரதத்தில் கூறப்படும் ஒரு வாக்கியம் மிக முக்கியமானது. "பிரம்மதேவர், புலஸ்தியர், வஸிஷ்டர், புலஹர், அங்கிரஸ், க்ரது, கச்யப மகரிஷி. இவர்கள்தான் பித்ருக்கள்....சிராத்தம் செய்து பிண்டங்களைச் சேர்ப்பதனால் இறந்தவர்கள் பிரேதத்தன்மையிலிருந்து விடப்படுகின்றனர்." அதாவது ஈமக்கிரியைகள் என்ற தனிப்பட்ட இறப்புச் சடங்குகள் பொதுமைப்படுத்தப் படுவதை இந்த வாக்கியம் குறிக்கின்றது. ஆனால் இவ்வாறு ஹிந்து மத பழம் நூல்களில் பொதிந்துள்ள உட்கருத்துகளைத் துலக்கி வெளிக்கொணர்தல் என்பது ஆக்கபூர்வமான பணியாகும். இந்த நிலையில்தான் விவேகாநந்தர் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

'Just as I am writing to you, every one of my bones is paining after last afternoon's long Sunday public lecture. Then you see, to put the Hindu ideas into English and then make out of dry philosophy and intricate mythology and queer startling psychology, a religion which shall be easy, simple, popular, and at the same time meet the requirements of the highest minds — is a task only those can understand who have attempted it. The dry, abstract Advaita must become living — poetic — in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology — and all this must be put in a form so that a child may grasp it. That is my life's work'. - Vivekananda

***

No comments:

Post a Comment