நைமிசாரண்யம் என்னும் காடு சூழ்ந்த இடம். ஏன் அதற்கு நைமிசாரண்யம் என்னும் பெயர் வந்தது? தேவர்களால் அஸுர சேனை ஒரு நிமிஷத்தில் அழிக்கப்பட்ட இடம் என்பதால் அதற்கு நைமிசாரண்யம் என்று பெயர் வந்ததாக வராஹ புராணம் கூறுகிறது. சூரியனைப் போல் சுடர்விடும் சக்கிரமாக மனத்தைப் படைத்து அந்த மனமாகிய சக்கிரத்தின் முனையாகிய நேமி எந்த இடத்தில் தெறித்துப் போகுமோ அந்த இடம் தான் தவத்திற்கு ஏற்ற இடம் என்று பிரம்ம தேவர் சொல்ல, அவ்வாறே மனச்சக்கிரத்தின் நேமி தெறித்த இடம் என்பதால் நைமிசாரணியம் என்று வாயு புராணம் சொல்கிறது. அந்தக் காட்டில் சௌனகர் என்னும் குலபதியான ஒரு மஹரிஷியானவர் பன்னிரண்டு வருஷங்களில் செய்யும் யாகமான ஸத்ரம் என்ற யாகத்தைச் செய்தார். குலபதி என்றால் என்ன? யார் பதினாயிரம் ரிஷிகளை வைத்து அன்னபானாதிகளால் பராமரிக்கிராரோ அந்த மஹரிஷிக்குக் குலபதி என்று பெயர். ஸத்ரம் என்ற யாகத்தின் சிறப்பே அது ஒரு தனி மனிதரால் தனி மனிதருக்கான யாகம் இல்லை என்பதுதான். ஆம் பலபேருக்குத் தானங்கள் நடக்கும். கணக்கிறந்த பிராணிகளுக்குத் திருப்தி ஏற்படும். அதைச் செய்யும் கர்த்தாக்களும் அநேகமான பேர். அதில் யஜமானர்களே யாகம் செய்யும் ரித்விக்குகளாகவும் இருப்பார்கள். அத்தகையது ஸத்ர யாகம்.
அந்த யாகத்தில் ஓர் இடைவேளைப் பொழுதில் பெருந்தவம் மிக்க ரிஷிகள் ஓய்வாக வீற்ற தருணத்தில் உக்ரசிரவஸ் என்னும் புராணம் சொல்லுபவர் வந்து சேர்ந்தார். அவரோ புராணங்களில் பெரும்புகழ் வாய்ந்த ரோமஹர்ஷணர் என்பவருடைய புத்திரர். ரோமஹர்ஷணர் என்னும் பெயர் அவருடைய உண்மைப் பெயர் அன்று. காரணப் பெயர். தமது புராணப் பிரசங்கங்களால் அவர் கேட்பவர்களை மயிர்க்கூச்சல் (ரோமஹர்ஷணம்) அடைய வைத்ததால் மக்கள் அவருக்கு அளித்த சிறப்புப் பெயர் அதுவாம். அத்தகைய ரோமஹர்ஷணரின் புத்திரர் உக்கிரசுரவஸ் என்னும் பௌராணிகர் (புராணம் சொல்லுபவர்) என்றால் கேட்கவும் வேண்டுமோ!
யாக சாலையில் ஓய்வாக அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் அவரைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்தனர். கதை சொல்பவரைப் பார்த்தாலே உற்சாகம்தானே ஏற்படும்! உக்கிரசிரவஸோ அனைவரையும் வணங்கி, ரிஷிகளைப் பார்த்து, ‘வியாஸ பகவானால் சொல்லப்பட்ட தர்மமும் அர்த்தமும் நிறைந்த அனைத்து கதைகளையும் அறிந்திருக்கிறேன். அவற்றை உங்களுக்குச் சொல்லுகிறேன். தவத்தின் செல்வர்களாகிய நீங்கள் இப்போது கேட்க வேண்டும்’ என்றார். அவர்களும் வந்தவரை உபசரித்து, அமரச் செய்து நலன் விசாரிக்க ஆரம்பித்தனர். ‘எங்கிருந்து வருகிறீர்? இத்தனை காலம் எங்கு போயிருந்தீர்?’ என்று.
உக்கிரசிரவஸ் சொன்னார்: ‘ஐயா! பரிக்ஷித்து மஹாராஜாவின் புத்திரரும், மகாத்மாவுமாகிய ஜனமேஜயர் என்னும் ராஜரிஷியானவர் ஸர்ப்ப யாகம் செய்தார். அங்கு கிருஷ்ணத்வைபாயனர் ஆகிய வியாசர் செய்த மஹாபாரதக் கதைகளை வைசம்பாயனர் ராஜாவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதைகளையெல்லாம் நான் கேட்டிருந்துவிட்டுப் பின்னர் பல தீர்த்தங்களுக்கும், பாண்டவர்களும், கௌரவர்களும் யுத்தம் செய்த இடமாகிய ஸமந்த பஞ்சகம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்திற்குச் சென்றுவிட்டு, இங்கே நீங்கள் எல்லாம் ஸத்ர யாகம் செய்வதைக் காண வேண்டி வந்து சேர்ந்தேன். நீங்கள் எல்லாம் அரிய பெரிய தவங்களைச் செய்து முடித்து அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பார்த்தாலே அந்தப் பரப்பிரம்மத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. உங்களுக்கெல்லாம் நான் எந்தக் கதைகளைச் சொல்லட்டும்? புராணங்களிலுள்ள அறம் பொருள்களைப் பற்றிய கதைகளைச் சொல்லவா? அல்லது மகாத்மாக்களாகிய அரசர்கள், ரிஷிகள் இவர்களுடைய கதைகளைச் சொல்லவா? எதைச் சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.’
இவாறு கேட்டதும் ஏகோபித்த மனதாக வியாசர் செய்த மஹாபாரதத்தையே சொல்லுமாறு வேண்டினர். மிகப்பல பெரியோர்களால் கேட்டுக் கொண்டாடப் பட்டது மஹாபாரதம். மிகவும் பரந்த கட்டமைப்பு உடையதாயினும், சொல்லும் பொருளும் சிறந்தது. உட்கருத்துகளும், மனித வாழ்வின் ஒன்றிற்கொன்று தொடர்புடைய நியாயங்கள் பலவும் நிறைந்தது. நுட்பங்களும், வேதக் கருத்துகளும் அணிபெற மனிதர், உலகம், உயிர்கள், மறுமை, வாழ்வின் உறுதிப் பொருட்கள் என விரிந்து பரந்து ஆழ்ந்து வாழ்க்கையைப் பற்றிப் பேசுவது. பன்னிரண்டு வருஷங்கள் செல்லும் ஸத்ர யாகத்தில் நிச்சயம் அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் கேட்கப் போதிய அவகாசமும், மனப்பாங்கும் இருக்கிறதன்றோ! ஐந்தாம் வேதம் என்னும்படியான பெருமை மஹாபாரதத்திற்கன்றோ உண்டு! அந்தக் கதைளைக் கேட்டாலே பாவங்கள் அழியவும், புண்ணியங்கள் பெருகவும் செய்யும்.
உக்ரசிரவஸ் தொடங்கினார். எடுத்ததும் அவருக்கு ஞாபகம் வந்ததோ வியாசர் எழுத ஆள் தேடின கதைதான். ஆம். சுருக்கமாகவும், அதையே விரிவாகவும், மிதமாகவும் பல படிகளில் மனத்தில் முழுக் கதையையும், கருத்துகளையும் தியானத்தில் நன்கு கோவையாக இருத்திய முனிவருக்கு அதை எழுத்துப்படுத்தத்தான் ஆள் தேவைப் பட்டது. பண்டைய காலம் போல் வாயால் சொல்லி, மனத்தால் இருத்தி, பின்னர் வாயால் பிறருக்குச் சொல்லி நினைவில் கொண்டு அடுத்த தலைமுறைகளுக்குத் தந்து போக முடியாது. அந்தக் காலங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. நிம்மதி இழந்த வாழ்வாக எங்கு பார்த்தாலும் மன ஒருமைப்பாடு சிதறுவதாய்க் காணப்படுகிறது. எனவே எழுத்து இல்லாமல் ஆகாது. எழுதி எழுதிப் பிரதிகள் பெருக்கிக் காப்பாற்றிக் கொண்டு சென்றால்தான் நிம்மதியின்மையால் நினைவுகள் தடுமாறும் போது, வெறித்தோடும் போது கை கொடுக்கும்.
ஆனால் எழுதினால் பல இலட்சம் சுலோகங்கள் வரும் பெரும் படைப்பான ஒன்றை அந்த மகாமுனிவர் எப்படித்தான் முழுவதும் தம் மனத்திலேயே தேக்கிக் கண்டார்! அதுவும் பிரபஞ்சத்தின் ஆதி தொடங்கி, ஒவ்வொன்றும் நுணுக்கமாக ! ஆனால் அந்த வியாச முனிவர் நாம் எல்லாம் சொல்வது போல் இதை மஹாபாரதம் என்றா சொன்னார்? அல்லது கருதினார்? இல்லை. இல்லை. அவர் தாம் நாராயண கதையைச் சொல்வதாகத்தான் சொன்னார். ஆம் பதரிகாசிரமத்தில் தர்மர் என்பவருக்குப் பிறந்த பிள்ளைகள் நால்வர். நாராயணர், நரர், ஹரி, கிருஷ்ணர். நரநாராயணர்கள் என்று அண்ணன் தம்பிகளாய், குரு சீடர்களாய் வந்த அவதார புருஷர்கள்! மோக்ஷம் என்னும் வீடுபேற்றின் வாயில்களை அனைவருக்குமாகத் திறந்துவிட வந்த இரட்டை அவதாரமல்லவா! அவர்கள் பெயரைச் சொன்னாலே வியாச முனிவர் மயிர்க் கூச்செறிந்து நிஷ்டையில் ஆழ்ந்து விடுகிறாரே! நாராயணன் கதையல்லவா தாம் சொல்ல வேண்டும் என்று நாட்டு மானிடர் கதையெல்லாமும் சொல்லிக் கொண்டு வந்தது!
நாரணனைத் தாம் வணங்கி
நரன் என்னும் நரோத்தமர் தம்மையும் வணங்கி
தேவி சரஸ்வதியின் இன்னருளால்
வியாசர் யாத்தார் ஜயம் என்னும் மஹாபாரதம்.
எழுதுவதற்கு ஆள் தேவை. யாரைத் தேடுவது? சொன்னால் என்னது என்று பதிலுக்குக் கேட்டே சொல்லவந்ததை மறக்கடிக்கும் எழுத்தாளர் பலருண்டு. ஆனால் சொன்னதையும், சொல்லப் போவதையும், சொன்னவற்றின் உட்கருத்தையும் உணர்ந்து எழுத யாருண்டு? சிந்தனைக்கும் எழுதுதாளுக்கும் இடையில் எவ்வளவுதான் கடத்தல் தொல்லை! ஓலையும், எழுத்தாணியும் ஆண்ட அக்காலம் அதிலும் மிகத் தொல்லை!
எழுதுவதற்கு முன் எழுதுபவனின் மனத்தில் இருக்கிறது நூல். அரும் பெரும் பழம் சரித்திரங்களும், ஆன்மிக நீதிகளும் அடங்கிய நாராயண கதை வேத வியாசரின் தியானத்தில் குடி கொண்டது. ஆம். மஹாபாரதத்தை வேத வியாசர் மனத்தில் உருவெடுத்தது நாராயண கதை என்றுதான். அவருடைய மனத்தில் அந்த மூலக் கதையின் பிழம்பைப் பார்க்க வேண்டுமா முனிவர்களே? இதோ -
ஆதிகாலம். பிரபஞ்சத்தில் ஒளி இல்லை. அறிவு இல்லை. எங்கும் இருள், இருள், தமஸ்! பிரஜைகள் எல்லாம் உண்டாகும் பெரும் முட்டை ஒன்று உருவாயிற்று. அந்தப் பெரும் முட்டை, அந்தப் பெரும் அண்டத்தைத்தான் யுகங்களுக்கே ஆதி காரணம் என்று சொல்கிறார்கள். சத்தியமும், தேஜோமயமும், அழியாததும், ஆச்சரியமும், நினைவிற்கே எட்டாததும் ஆன அந்தப் பிரம்மம், அனைத்தினுள்ளும் உள்ளுறை உயிராய் இருக்கும் பிரம்மம், ஜடங்களும், ஜீவன்களும் தானாகவே இருக்கும் அந்தப் பிரம்மம், வேதங்களினால் மட்டுமே அறியப்படுகிறது. அந்த அண்டத்தில்தான் முதலில் பிறக்கிறார் பிரம்மா என்னும் நான்முகன். அனைத்து ஜீவர்களின் கூட்டத் தொகுதியாக இருப்பவருக்குப் பெயர் நான்முகன், பிரம்மா, விரிஞ்சி.
அவருக்குப் பின அந்த அண்டத்தில் சிருஷ்டி அதி விரைவாகப் பல்கியது. ஸ்தாணு, பிரம்மாவின் புத்திரரான ஸ்வாயம்புவ மனு, பிரசேதஸின் புத்திரர் ஆகிய தக்ஷர், தக்ஷரின் புத்திரர்கள் ஏழு பேர், மரீசி முதலிய ஏழு ரிஷிகள், பதினான்கு மனுக்கள். அறிவதற்கரிய விராட் புருஷன், விசுவேதேவர்கள், ஆதித்யர்கள், வஸுக்கள், அச்வினிதேவர்கள், யக்ஷர்கள், ஸாத்தியர்கள், பிசாசர்கள், யக்ஷர்களில் ஒருவகையான குஹ்யகர்கள், பிதிர்தேவதைகள் எல்லோரும் பிறந்தனர். அந்த அண்டம்! அனைத்தின் முழு உருவான அந்த அண்டம் விரிந்து கொண்டே சென்றது! பிறகு மக்களில் சிரேஷ்டர்கள், ரிஷிகள், அறிஞர்கள், அவர்கள் வாழும் இந்த உலகம், ஜலம், காடு, மலை, வாயு, இரவுபகல், காலங்கள் அனைத்தும் அனைத்தும் உலகில் பெருகின. ஸ்தாவரங்கள், ஜங்கமங்கள் பெருகின. ஜகங்கள் முடிவுக்கு வரும் போது அனைத்தும் முடிகின்றன. காலத்தின் ருதுக்கள் மீண்டும் மீண்டும் அதே அடையாளங்களுடன், மீண்டும் மீண்டும் அதே மாதிரியான உற்பத்திகளுடன் சுழன்று சுழன்று காலத்தில் வந்தவண்ணம் இருக்கின்றன. அதேபோல்தான் யுகங்களும் மீண்டும் மீண்டும் அதேமாதிரியான படைப்புகளுடனும், மக்களுடனும், தன்மைகளுடனும், பொருட்களுடனும், நிகழ்வுகளுடனும் மறுபடியும் மறுபடியும் திரும்பத் திரும்ப நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன!
ஆம் பஞ்சபூதங்களின் சேர்க்கை இவ்வண்ணம் காரணமே இல்லாமல் சேர்ந்து கூடிப் பிரிந்து இலயம் அடைந்து மீண்டும் உண்டாகிச் சேர்ந்து இந்தக் காலச்சக்கரம், பிரபஞ்சத்தைத் தோற்றியவண்ணம் உருண்டு கொண்டே இருக்கிறது. முப்பத்தி மூன்று மடங்காக தேவர்களின் சிருஷ்டிகள்.
திவஸ்புத்திரன், ப்ருஹத்பானு, சக்ஷு, ஆத்மா, விப்ரவஸு, ஸவிதா, ரிசீகன், அர்க்கன், பானு, ஆசாவஹன், ரவி என்னும் இவர்கள் எல்லாம் சூரியனின் புத்திரர்கள். மஹ்யர் என்னும் வைவஸ்வத மனு இவர்களுக்குப் பின் தோன்றியவர். அந்த மனுவின் புத்திரர் தேவப்ராட். தேவ ப்ராட்டின் புத்திரர் ஸுப்ராட். ஸுப்ராட்டின் புத்திரர்கள் மூன்றுபேர். - தசஜ்யோதி, சதஜ்யோதி, ஸஹஸ்ரஜ்யோதி. தசஜ்யோதிக்குப் புத்திரர்கள் பதினாயிரவர். அதனினும் பதின்மடங்கு சதஜ்யோதிக்கு; அதனினும் பதின்மடங்கு ஸஹஸ்ரஜ்யோதிக்கு.
அவர்களிடமிருந்துதான் இந்தக் குருவம்சமும், யதுவம்சமும், பரதவம்சமும், யயாதிவம்சமும், இக்ஷ்வாகுவம்சமும் இன்னும் அநேக ராஜரிஷி வம்சங்களும் உண்டாயின. இவ்வாறு வம்சங்களின் பூர்வங்கள், பிராணிகளின் சிருஷ்டிகள், அவற்றின் இடங்கள், முக்கியமாக மூன்றுவகை ரஹஸ்யங்களான ஜனனம், மரணம், வினைப்பயன் ஆகியவற்றைத் தம் தியானத்தில் கண்டறிந்தார் வேத வியாசர்.
ஆதி காரணமாகிய பிரம்மத்தைக் காணும் கண் என்று சொல்லப்படும் வேதங்கள், வேத போதனைகளை மனப்பயிற்சியால் காணும் யோகம், அதிலிருந்து விளையும் ஞானம், ஞானத்தால் விளங்கும் தர்மார்த்த காமங்கள், அவற்றைப் பற்றிய ஒழுக்க நியதிகள், அவற்றைப் போதிக்கும் சாத்திரங்கள், உலக நடையின் ஒழுங்குகள் ஆகிய அனைத்தையும் தம் தியானத்தால் அறிந்தார் வேத வியாசர். அவர் கண்ட சாரமான அந்த அனைத்து ஞானத்தையும் பொதிந்ததுதான் நாராயண கதை என்னும், ஜயம் என்னும் மஹாபாரதம். இவ்வாறு தம் தியானத்தினால் ஆதிமுதலான அறிவுகள் அனைத்தையும் கண்ட வேதவியாசர் பிரம்மாவை நினைத்தார். பிரம்மா அவருக்கு நேரே காட்சி கொடுத்து அவருடைய செயற்கரிய செயலைப் பாராட்டி ஆசீர்வதித்தார். ஆனால் வியாசரோ அனைத்து அறிவுகளும், சமுதாயச் செய்திகளும், மக்களுக்கான வழிவழிக் கதைகளும், உலகச் செய்திகளும், ஆன்மிக மார்க்கங்களைப் பற்றிய நுட்பங்களும் ஒருங்கே அடங்கிய பொக்கிஷமான தம் நூலான, இதிகாசமான நாராயண கதை என்னும் ஜயம் என்னும் மஹாபாரதத்தை எழுதுவதற்கு ஆள் கிடைக்கவில்லையே என்று தம் கவலயைத் தெரிவித்தார். பிரம்மதேவரோ அவரது கவலையைத் துடைப்பவராய்க் கூறினார்:
“வேதவியாசரே! நீர் வேதம் அனைத்தையும் அறிந்ததோடன்றியில் சூக்ஷ்மமான ஞானம் வாய்க்கப் பெற்றும் இருக்கின்றீர். ரிஷிச்ரேஷ்டராகிய வஸிஷ்டரினும் மிக்கவர் நீர் என்பது என் எண்ணம். உம்முடைய பொய்க்காத வாக்கால் நீர் இயற்றிய காவியமோ இந்த மஹாபாரதம். கிருஹஸ்தாச்ரமத்திற்கு மிஞ்சியது எந்த ஆசிரமும் இல்லை என்பார்கள். அதுபோல் உம்முடைய இந்தக் காவியத்திற்கு மிஞ்சி இனி எந்தக் காவியமும் எழப்போவதில்லை. உலகில் என்றுமே அஞ்ஞான இருள் மூடாதவண்ணம் ஞான தீபத்தை ஏற்றி வைத்துவிட்டீர். அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களைப் பற்றிய தெளிந்த மதியை மக்களுக்கு ஏற்படும்வண்ணம் இதிகாசத்தைச் செய்து விட்டீர். இந்த உமது புராணம் பூர்ணசந்திரன் போல் இனிமையான ஒளியைத் தருகிறது. அதனால் மக்கள் மிக்க விருப்புடன் வேத ஞானத்தில் தெளிவை அடைவார்கள். நிலவொளியில் மலரும் ஆம்பல் பூக்கள் போன்று அறிவாளிகளின் மதிகள் உமது இதிகாச ஒளியில் மலரும். உலகம் என்பது ஓர் வீடு என்றால் அதன் உட்புறம் ஏற்றி வைக்கப்பட்ட நந்தாவிளக்கம் உம்முடைய இதிகாசம். உம்முடைய மஹாபாரதம் ஒரு கனிமரம் என்றால் அதன் பழங்களாக இருப்பவை சாந்திபர்வம். மொத்தத்தில் பாரதமாகிய மரம் அனைத்தும் கவிகளுக்கும், சாதாரண ஜனங்களுக்கும் ஜீவிக்க உதவியாக இருக்கும். இந்தக் காவியத்தை யார் எழுதுவது என்பது உம்முடைய கவலை. கவலையை விடும் கணபதியைத் தியானம் செய்யுங்கள்.”
வேதவியாசர் தியானிக்க விக்நேச்வரராகிய கணபதி வந்தார். எழுதுவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனாலும் ஒரு நிபந்தனை என்றார். எழுதும் போது தம் எழுதுகோல் நிற்கக் கூடாது. தொடர்ந்து சொல்லியவண்ணம் இருக்க வேண்டும் என்பது அவர் போட்ட நிபந்தனை.
வேதவியாசரோ பதில் நிபந்தனை போட்டார். அவ்வண்ணம் தாம் சொல்வதற்குச் சம்மதம். ஆனால் விநாயகரோ தாம் எழுதும் எதையும் நன்கு புரிந்துகொண்டே எழுத வேண்டும்; வெறுமனே காதில் விழும் ஓசையை மட்டும் எழுதினால் பத்தாது என்று. எழுத ஆள் வேண்டும் என்று தேடினார் வேதவியாசர். கடைசியில் அது எழுதுவதைப் புரிந்து கொண்டு எழுதுகிறோமா இல்லை வெறும் ஒலிகளை எழுத்துப் படுத்துகிறோமா என்பதில் முடிந்து நிற்கிறது! என்ன விசித்திரம்!
***
No comments:
Post a Comment