பழம் பழைய இசை எப்படி இருக்கும் கேட்பதற்கு?
யாரேனும் வாசிப்பார்களா? சிலப்பதிகாரத்தில், சங்க இலக்கியத்தில் பாணர்கள் வாசித்த அந்தச் சீறியாழ் இசையைக் கேட்க முடியுமா? (விபுலாநந்த அடிகளே! எங்கு இருக்கீங்க...) இசைக் குறியீடு கொண்டு முழுமையாக ஒரு பழம் பாடல் மாட்டியிருக்கிறது முழுமையாக. கிரேக்க இசை.
ஸெயிக்லோஸ் என்பவர் தமது மனைவி.. காதலி?.. தெரியவில்லை.. அவளுக்குத் தெரிவிப்பதாக நான்கு வரி - கானல்வரி என்பது போல் இதைக் கிரேக்கவரி என்று சொல்லிவிடலாமா?
வாழும்வரை சுடராய்
வருந்தாதே திகழ்வாய்
வாழ்வதுவும் புன்கணமே
காலத்தின் துர்குணமே
இவ்வாறு இதை மொழிபெயர்த்துக் கொள்ளலாமா?
*
இந்தியா, ஐரோப்பா - இரண்டும் ஒன்றை ஒன்று, ஒன்றில் ஒன்றை கண்டு வியக்கும் கணங்கள் காலம் நெடுக இருந்து வந்துள்ளது. விஷ்ணு பக்தி தென் ரஷ்யாவின் கோடி அஸ்ட்ரகானில் 16ஆம் நூற்றாண்டு முதல் 300 வருஷங்கள் செழித்திருந்தது.
பிரான்ஸின் இலக்கிய மாமேதை விக்டர் ஹ்யூகோ ஸ்ரீராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் கண்டு வியந்தார்.
யூஜின் புர்னோஃப் கொடுத்த வகுப்பு உரைகள் நெடும் பாரதப் படிப்புகளுக்கு வழி வகுத்து, மாக்ஸ் முல்லரைத் தூண்டிவிட்டு ரிக் வேதம் சாயண பாஷ்யத்துடன் திறனாய்வுப் பதிப்பாக வெளிவர வழிவகுத்தது.
பதினெட்டாம் நூற் ரஷ்யாவிலிருந்து கப்பல் ஊழியராய் வந்தவர் சென்னையில் தங்கி இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டுப் பின்னர் கல்கத்தா சென்று அங்கு வங்காள மொழியை நன்கு கற்று புதுவிதமான நாடக இயக்கத்தையே தோற்றுவித்தார்.
மீண்டும் மீண்டும் இந்தியாவும் ஐரோப்பாவும் இதயப் பார்வைகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன பண்பாட்டின் மொழிகளில்.
*
கலையை மனிதன் உண்டாக்குகிறான். கலை மனிதனை உண்டாக்குகிறது. முதல் கலையின் அங்குரார்ப்பணத்தை அவன் மூளையின் இயக்கம் போடுகிறது. முடிந்த கலையின் முகையிலும் அவன் மூலக்கலையின் மணம் அவிழ்கிறது. படிந்து வந்த காலம் எல்லாம் அவன் பாவை விளக்காய் ஆகிறது. கடிந்துவிட்ட வடிவமெல்லாம் அவன் களிப்பின் மிகுதியைச் சொல்கிறது.
கலையின் மொழி அவன் பெருமிதத்தின் பிரதி. அலையும் அவன் ஆர்வப் புனல் பெருகி வந்த நதி. 35000 ஆண்டுகளுக்கு முந்தைய பேரெழில் இன்றைய பூசைப் புன்னடிக்குள்ளும் ஒளிந்து மயக்குகிறது. மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றைத்தான் காதலித்திருக்கிறான்.
கண்கள் மயங்க கருத்து தியங்க ஒன்றுதான் அவன் பித்து. மனித உடல். அன்றாடம் காணும் உடம்பு அன்று. என்னாளும் நின்று அவனை ஆளும் மனித உடல். தன்னிலும் விஞ்சி, தானதை விஞ்சி, தமரிலும் விஞ்சித் தளராமல் மனித குலம் வனையும், புனையும், வடிக்கும், எழுப்பும், நடிக்கும், தீட்டும், பாடும், இசைக்கும் அத்தனை அத்தனை கலை வடிவங்களின் ஒற்றை ஸ்டூடியோ - மனித உடல்.
*
குகை ஓவியங்களின் மர்மம் என்ன? ஏன் குகையில் வரைவதை நிறுத்தினர்? மூளையின் வண்ணத் திசுக்களைப் பற்றிய மன வைத்தியச் சோதனை தொழில் நுட்பங்களுக்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்ஸு, ஸ்பெயின் குகை ஓவியங்களுக்கும், ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆஃப்ரிக்க பழங்குடிகளின் ஓவியத்திற்கும் என்ன சம்பந்தம்? காட்டுக் கோதுமை அவிழ்க்கும் மர்மம் என்ன? பூமிக்குள் ராக்ஷஸ தூண்கள் சுழல் படிக்கட்டு போல் போகும் அமைப்பின் மர்மம் இரவில் வெளிச்சமாகும் விந்தை.
***
No comments:
Post a Comment