Thursday, January 30, 2020

யதிராஜ விம்சதி - இரண்டாம் பகுதி (11 -20)

பதினோராவது சுலோகம்

பாபே க்ருதேயதி பவந்தி பயாநுதாப
லஜ்ஜா: புந: கரணமஸ்யகதம் கடேத |
மோஹேநமேந பவதீஹ பயாதிலேச:
தஸ்மாத் புந: புந: அகம் யதிராஜ குர்வே ||

*
பாபம் செய்தால் அதனால் அநர்த்தமும் துக்கமும் வரும் என்ற பயமும், தீய வாசனையால் செய்தால் செய்து விட்டோமே என்ற லஜ்ஜையும், புத்தி பூர்வமாகச் செய்தால் பெரியோர்களின் தண்டனையைக் குறித்த அச்சமும் வருவதால் பாபம் செய்வது எப்படித் தொடரும், இயலாதன்றோ! ஆனால் ஈதொன்றையும் கணிசியாத அளவு அஞ்ஞானத்தில் மண்டியிருக்கும் நானோ மீண்டும் மீண்டும் பாபத்தையே அன்றோ செய்து போருகிறேன்! யதிராஜரே!

*

பன்னிரண்டாவது சுலோகம் 

அந்தர்பஹிஸ் ஸகலவஸ்துஷு ஸந்தம் ஈசம்
அந்த: புரஸ் ஸ்திதம் இவாஹம் அவீக்ஷமாண: |
கந்தர்ப்பவச்ய ஹ்ருதயஸ் ஸததம் பவாமி
ஹந்த த்வத் அக்ர கமநஸ்ய யதீந்த்ர நார்ஹ: ||

*
உள்ளும் புறமும் அனைத்துப் பொருளிலும் ஒழிவின்றிப் பரந்து நிற்கும் பகவானை, பிறவிக் குருடன் நேர் நிற்கும் மனிதனைக் காணமாட்டாதாப் போலெ, நானும் மன்மதனின் வேகமாகிய காமத்தில் நெஞ்சை இழந்தவனாய் ஒருபோதும் காண்பதில்லை. அதனால், யதிராஜரே! புலனடக்கமே இயல்பாக வாய்ந்தோர் அடிபணிந்து ஏற்றித் தொழும் தேவரீரின் திருமுன்பே வருவதற்கு நான் அருகதை உடையவன் இல்லை.

*
பதிமூன்றாவது சுலோகம்

தாபத்ரயாயீ ஜநித துக்க நிபாதிநோபி
தேஹஸ்திதௌ மமருசிஸ்து நதந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணம் அஹோ மம பாபம் ஏவ
நாத த்வம் ஏவ ஹரதத் யதிராஜ சீக்ரம் ||

*
ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்னும் மூன்று தாபங்களால் உண்டான துக்க பரம்பரைகளில் அழுந்தினவனாய் இருக்கச் செய்தேயும் எனக்கோ இந்த உடம்பில் ஈடுபாடான ரக்ஷணத்தில் ருசியானது உண்டாகி ஒழிவில்லாமல் நீள்கிறது. இதற்குக் காரணம் என்னுடைய பாபமே அன்றோ! அந்தோ கஷ்டம்! யதிராஜரே! என்னுடைய நாதரே! அந்த பாபத்தைத் தேவரீரேதான் சீக்கிரம் போக்கியருள வேண்டும்.

*
(குறிப்புகள்: அத்யாத்மம் - அகம் தழீஇயது; ஆதிபௌதிகம் - பூதங்கள் தழுவியது; அதிப்ரஜம் - மக்கள் தழுவியது அதாவது சமுதாயம் சார்ந்தது; அதிதைவதம் - த்ய: என்பது விண் அதாவது வானம் பற்றியது. அதாவது கோள்கள், வான நிலை சம்பந்தமானது. அதியஜ்ஞம் - வேள்வி சார்ந்தது.

கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் அதியஜ்ஞம், அத்யாத்மம் என்று ஒரு லிஸ்ட் தருகிறார். அதில் அதியஜ்ஞம் என்றால் அது தானே என்று சொல்லி விடுகிறார். எனவே வேதம், வேதாந்தம், தர்சனம் என்று துறைக்கேற்ப லிஸ்டுகளில் மாறுபாடுகள் இருக்கின்றன. முந்தைய பயன்பாடு, பிந்தைய பயன்பாடு என்றும் வேறுபாடுகள் உண்டு. சாதாரணமாக ஆதிபௌதிகம் என்பதையும் இயற்கை சார்ந்த என்று கூறலாம். அதிதைவதம் என்பது இன்றைய நம் காதுகளுக்கு தெய்வம் பற்றியது என்று ஒலிக்கும். அப்படியும் பொருள் கொண்டால் பெரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் பொதுவாக இந்த இடத்தில் த்ய: என்பது ஸ்கை ஃபினாமினன் என்ற பொருளில் வருகிறது. பொதுவாக க்லைமேட், சொஸைடி, உடல் ஆகிய மூன்று காரணங்களால் மனிதர்களுக்கு தாபம் ஆகிய நோவு வருகின்றன என்பது கருத்து. ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்பதை உடலில் எழும் துன்பங்கள், சூழலால் எழும் துன்பங்கள், வான் நிலையால் எழும் துன்பங்கள் என்று சொல்லலாம்.


அத்யாத்மம் என்பது ஆத்மிகமான விஷயங்கள் என்னும் பொருளில் வருவது வேறுவகையான பயன்பாடு.)



*
பதினான்காவது சுலோகம்

வாசாமகோசர மஹாகுண தேசிகாக்ரய
கூராதிநாத கதிதாகில நைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ நபுநர்ஜகதீத்ருசஸ்தத்
ராமாநுஜார்ய கருணைவது மத்கதிஸ்தே ||

*
மொழியைக் கடக்கும் பெரும் புகழார் மஹாகுணங்கள் நிரம்பிய கூரத்தாழ்வான் போன்ற தலைமை ஆசார்யவர்யர்கள் எல்லாம் தேவரீர் திருவடிகளிலே தெரிவித்திருப்பதான நைச்ய வார்த்தைகள் எல்லாம் பொருந்தும் முழு பாத்ரமாக இருப்பவன் நான் தான். இப்படிப்பட்ட என்னை ஒத்தாரை இந்த ஜகத்திலேயே எங்கும் பார்க்க முடியாது. எனவே மோக்ஷத்தை மட்டுமே தந்தே தீருமதான சதுரக்ஷரீ என்று கொண்டாடப்பட்ட ராமாநுஜ என்னும் திவ்ய நாமத்தை உடையவரே! தாங்கள் அனைத்தையும் அறிவீர் அன்றோ! இப்படிப்பட்ட எனக்கு உங்கள் கருணையை விட்டால் ஏது கதி?

*
பதினைந்தாவது சுலோகம்

சுத்தாத்ம யாமுந குரூத்தம கூரநாத
பட்டாக்ய தேசிகவரோக்த ஸமஸ்தநைச்யம் |
அத்யாஸ்தி அஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்த்ர கருணைவது மத்கதிஸ்தே ||

*
தூய மனமே வடிவாய்ப் பொலிந்த உத்தம ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர் போன்ற ஆசார்யவர்யர்கள் தமது கிரந்தங்களில் தமது நைச்யம் தோன்ற சொல்லியிருப்பவையெல்லாம் சிறிதும் பொருட் சுருக்கமே இன்றி முழுவதும் பொருந்துவது என்பது இந்த உலகத்தில் என்னொருவனிடத்தில் மட்டுமே. எனவேதான் யதீந்திரரே! தங்களுடைய கிருபை ஒன்றுதான் எனக்குப் புகலாவது.

*
பதினாறாவது சுலோகம்

சப்தாதி போக விஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டாபவத்விஹ பவத்தயயாயதீந்த்ர |
த்வத் தாஸ தாஸகண நாசரமாவதௌய:
தத்தாஸதைகரஸதா விரதாமமாஸ்து ||

*
யதீந்திரரே! சப்தாதி போக விஷயங்களில் உள்ள ருசியானது எனக்கு இந்தப் பிறவியிலேயே தேவரீருடைய திருவருளால் நசிக்க வேண்டும். அது மட்டுமன்று. தேவரீருடைய திருவடிகளில் அடியார்களுக்கு அடியார்களுக்கு அடியார்களாய் இருப்பவர்களின் பரம எல்லையில் நிற்பவர்களான அந்த அடியார்களிடத்து நான் சேஷத்துவம் பூண்டவனாக, அதிலேயே ருசி உடையவனாக நான் நடக்க வேணும். இதுவே பரம புருஷார்த்தம் என்று அறுதியிட்டிருக்கும் எனக்கு இது இடைவிடாமல் நடந்தேற வேண்டும். இது தேவரீருடைய தயையால் மட்டுமே கூடும்.

*
பதினேழாவது சுலோகம்

ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்யகுணஸ்வரூப:
ப்ரத்யக்ஷதாம் உபகதஸ்த்விஹரங்கராஜ: |
வச்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ்வகீயஜந பாப விமோசநேத்வம் ||

*
ச்ருதி சிரங்கள் என்னும் உபநிஷதங்களால் உள்ளபடி அறியத்தக்கதான தன்னுடைய திவ்யகுணங்கள், ஸ்வரூபம், ரூபம், விபூதிகள் ஆகியவற்றை இவ்வுலகில் உள்ளாரும் நேரே கண்டு அனுபவிக்கலாம்படி கண்ணுக்கு இலக்காக்கி வந்து எழுந்தருளி, பூலோக வைகுண்டம் என்னலாம்படியான திருவரங்கத்திற்கு ராஜாவாகிய ரங்கராஜர், யதிராஜரே!, தம்முடைய செல்வம், அரசு, அதிகாரம் முழுவதும் உமக்கே ஆக்கி ‘உடையவர்’ என்று தேவரீரையே தம்முடைய மிகுந்த வாத்சல்யத்தால் முற்றிலும் சார்ந்து, தேவரீர் என்ன சொன்னாலும் அதை உடன்பட்டு உடனே நடத்தி வைக்கக் காத்திருப்பவராய் இருக்கின்றார். அதனால் தேவரீருக்கோ, உம்மைச் சார்ந்த இராமானுசனுடையார்களை பாபங்களிலிருந்து விடுவித்தல் என்பது இயலுவதாய் இருக்கிறது.

*
பதினெட்டாவது சுலோகம்

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாபக்ரியஸ்ய சரணம் பகவத்க்ஷமைவ |
ஸாசத்வயைவ கமலாரமணேர்த்திதாயத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்ர பவச்ஸ்ரீதாநாம் ||

*
கடந்த காலம் நிகழ்காலம் இனிவருங்காலம் என்னும் முக்காலத்தும், மனம், சொல், சரீரம் என்னும் மூன்றுவழியாலும் செய்பாபங்களான பழித்தன செய்தல், பகவதபசாரம், பொறுக்கொணா குற்றங்கள் என்பனவற்றை உடையோருக்கு அந்த பகவானின் குணமான ‘குற்றங்களைப் பொறுத்தல்’ என்னும் க்ஷமை என்னும் அருங்குணம் அல்லவோ ரக்ஷணமாக இருப்பது! அந்த க்ஷமை அல்லவோ தேவரீராலே திருமகள் கொழுநனிடத்தில் ‘மநோவாக்காயை:..’ என்னும் வாக்கியங்களாலே ப்ரார்த்திக்கப்பட்டதும் என்ற இந்த யாதொன்று உண்டோ அதுதான் தேவரீரைப் புகலாக அண்டியவர்களுக்கு, கவலையெல்லாம் விட்டு நிம்மதியாக இருக்கத்தக்கக் காப்பு ஆக இருப்பது!

*
பத்தொன்பதாவது சுலோகம்

நிறைவு செய்யும் இரண்டு சுலோகங்களான 19,20 ஆல் எம்பெருமானார் திருவடிகளில் ஸேவையாகிற பரமப்ராப்யம் தினம் வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்றும், அதற்குத் தடையான உலக விஷயப் பற்று முதலியவை நசிக்க வேண்டும் என்றும், இந்த ப்ரார்த்தனை ரூபமான தமது பிரபந்தத்தை ஆதரத்துடன் யதிராஜர் அங்கீகரித்தருள வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து யதிராஜ விம்சதியைத் தலைக்கட்டுகிறார் பெரிய ஜீயர் என்று போற்றப்படும் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்.

ஸ்ரீமந்யதீந்த்ர தவதிவ்ய பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீசைலநாத கருணா பரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தய நாததஸ்யா:
காமம் விருத்தம் அகிலஞ்ச நிவர்த்தயத்வம் ||

*
பகவத் கைங்கரியமாகிற செல்வம் மன்னும் யதீந்த்ரரே! தேவரீருடைய திவ்யமான பதகமலங்களில் தொண்டு செய்தல் ஆகிய பாக்கியத்தை அடியேனுடைய குருநாதரான ஸ்ரீசைலநாதர் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையானவர் தாமே உகந்து தமது கருணையினால் அன்றோ எனக்கு உபதேசம் செய்து உள்ளத்தில் பதிய வைத்து அனுக்ரஹித்தார். அந்த குருகிருபையால் கிடைத்த தங்கள் திருவடிகளில் தொண்டு என்பது எனக்கு நித்யம் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அதற்குத் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினைகளைத் தேவரீர்தான் போக்கியருள வேண்டும்.

*
இருபதாவது சுலோகம்

விஜ்ஞாபநம் யதிதம் அத்யது மாமகீநம்
அங்கீகுருஷ்வ யதிராஜ தயாம்பு ராசே |
அஜ்ஞோயம் ஆத்மகுணலேச விவர்ஜிதச்ச
தஸ்மாத் அநந்யசரணோ பவதீதிமத்வா ||

பிறர் துக்கம் கண்டு துக்கித்தல் ஆகிய தயை என்னும் அருங்குணத்துக்குக் கடலாக இருப்பவரே! யதிராஜரே! இதுகால் அடியேன் தேவரீர் திருவடிகளிலே பிரார்த்தித்துக்கொண்ட இந்த ஹ்ருதய பூர்வமான வேண்டுகோளை அங்கீகரித்தருள வேண்டும். ’தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள ஞானம் இல்லாதவன், சாதுக்கள் இவனை ஏற்றுக்கொள்ளத் தக்க ஆத்மகுணங்கள் ஏதும் இல்லாதவன்; அதனாலேயே நம்முடைய அடைக்கலம் தவிர புகல் வேறு எதுவும் அற்றவன்’ என்று என்பால் கிருபை கொண்டு அங்கீகரித்தருள வேண்டும், கருணையங்கடலே!

***

இத்துடன் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் அருளிச்செய்ததான யதிராஜ விம்சதி என்னும் அருமையான சுலோக ரத்தினம் முடிவுற்றது. இருபதே சுலோகங்களில் என்னைப் போன்ற முருடு பாறையான, குயுக்திகள் நிறைந்த, வன்மங்கள் சூழ்ந்த நெஞ்சையும் நீராய்க் கரைக்கவல்லது இந்த பிரபந்தம். காரணம், பெரிய ஜீயரின் வித்வத் மேன்மை அன்று. பெரும் வித்வத் பெருமைகள் கொண்டவர் தாம் எனினும், இங்கு தம்மை ‘கெட்டொழிந்த ஜீவன் ஒன்று மீண்டும் உய்வதற்கு வேட்கும் நிலையில்’தான் தம்முடைய கவிதாபாவத்தை இங்கு கொண்டுள்ளார். அதுவும் ஏதோ பிரபந்தம் இயற்ற வேண்டிச் செய்தது என்றிராமல், அவருடைய இதயம் தம்பால் உள்ள அத்தனை சிறப்புகளையும் மறந்து, எதையும் இருப்பதாகவே கருதாமல், அத்தனை துர்குணங்களுக்கும் இடமாகத் தம்மை எண்ணி, நெஞ்சம் அயிர்த்து அந்த நடுக்கத்தில் எழும் இதய அலறலாகத்தான் எழுதியிருக்கிறார்.

இப்படி ஆன்மிக வழியில் பெரும் நிலையடைந்த மகான்கள் தம்மை இவ்வாறு மிகவும் தண்ணியவர்களாகக் கருதிப் பாடுவது என்பது ஒரு நிலையாகும். நற்கதி அடையத் துடிக்கும் ஜீவர்கள் அனைவருடைய ஏக்கக் குரலும் அதுகால் அவர்களின் ஹ்ருதய தாபத்தோடு சேர்ந்து கொண்டு வெளிப்படும். அவர்களிடம் கேட்டால் தாம் பிறருக்காகச் சொன்ன வார்த்தைகள் அல்ல அவை; தம்முடைய தண்ணிய நிலையைத்தான் பாடியதாகக் கூறுவர். ஆனால் அவர்களிடத்தே அரும் பெரும் ஆத்ம குணங்கள் அன்றி வேறு எதுவும் இரா. இருந்தாலும் இத்தகைய தன்னிரங்கல் மனநிலை ஏன் அருளாளர்களிடத்தில் ஏற்படுகிறது, தம்மிடம் இல்லாத தோஷங்களை ஏன் இவ்வாறு தம்மிடம் உள்ளதாகப் பாட வேண்டும் என்பது ஒருவகையில் புதிர்தான்.

ஆனால் ஆன்மிக வழியில் போகும் வாழ்வு என்பது உலகியல் வாழ்வைப் போன்ற காரணிகளால் இயங்குவதன்று. உலகியல் வாழ்வு இயங்குவதற்கான நோக்கங்கள் மட்டுமே அறிந்த நாம் ஆன்மிக வாழ்வு இயங்குவதற்கும் அதேதான் நோக்கங்கள் என்று மயங்கித் தவறான பல கருத்தாக்கங்களைக் கொள்கிறோம். ஆன்மிக வாழ்வு என்பது இருக்கட்டும். சாதாரணமான நாம் அறிந்த வாழ்விலேயே, மனநிலை பிறழ்ந்தவர்களின் இயங்கு காரணங்களே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு ஒரு பெரும் விஞ்ஞானத் துறையே வேண்டியிருக்கிறது ‘பிதிர்மனநிலை உள இயல்’ என்று. அந்தத் துறையில் கூறும் கருத்துகள் சாதாரண நிலையில் உள்ளவர்களால் உண்மை என்று கூட நம்ப முடியாது. ஆனால் அந்தக் கருத்துகள்தாம் விஞ்ஞான பூர்வமான சத்யங்கள். இதை நாம் நன்கு நினைவில் கொண்டால், அன்றாட வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான ஆன்மிக வாழ்வு என்பதனுடைய அவஸ்தைகள் நம் கணக்குகளில் வராத ஒன்று என்பதாவது புரியும். ஆன்மிக மனநிலை என்பது ஒரு தனி வாழ்முறை. அதை ‘பிறழ்ந்த மனநிலை’ என்று கொண்டாலும், அது சரியில்லை என்ற போதிலும், சாதாரண வாழ்க்கை முறையின் கணக்கில் வராத ஒன்று என்ற அளவிற்காவது புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆன்மிக ஈடுபாடுகள் கொண்டவர்களுக்கு ஓரளவு இது புரியும். மற்றவர்கள் இப்படி ஒன்று இருக்கிறது என்று புரிந்து கொண்டாலே ஆன்மிகம் புரியத் தொடங்கும்.

எவ்வாறு ஆயினும் இத்தகைய அருள் நிலை சுய இரங்கல் என்னும் நைச்சியாநுசந்தானம் என்பதை இந்த அளவிற்கு உள்ளத்துணர்ச்சிகளை எல்லாம் பெய்து எழுதப்பட்ட பாடல்கள் மிக மிக அரிதே எனலாம். நான் பார்த்தவற்றில் இதைத்தவிர இந்த அளவிற்கு இன்னும் ஒன்றைக் கண்டிலேன். பெரிய ஜீயரின் பெருமை விளங்குவதாகுக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment